இணைபிரியா நிலை பெறவே 7 – 2

“நான் போகோணும் அண்ணா.” என்றாள் அவள் தயக்கத்துடன். அவனுக்கும் அவள் சூழ்நிலை தெரியுமே. “சரி கவனமா போகோணும்.” என்று சொல்லி அனுப்பிவைத்தவனுக்கு கிரியை இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டாமோ என்று இப்போது தோன்றிற்று.

ஆனால், அவனும்தான் புதுப் புத்தகங்கள் வாங்குவது தொடங்கி அத்தனையிலும் கூட இருந்தான். இங்கே மட்டும் வராதே என்று தவிர்த்தால் தானே அவனை ஒதுக்குவது போலாகும் என்றுதான் அழைத்துவந்தான்.

அதைவிட கிரியே இது சரி வராது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டது அவனுக்குத் தெரியும். அதுவே அனைத்தையும் முடிந்ததாக எண்ணி கடப்பதுதான் சரி என்று அவனை எண்ண வைத்திருந்தது. அதைவிட அவர்கள் எல்லோரும் ஒரே ஊருக்குள் இருப்பவர்கள். ஒருவர் மற்றவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், முந்திரிக்கொட்டைத் தனமாக ஆரபி பார்த்த வேலை?

“அப்ப நானும் போகவா?” என்றாள் வினோதினி. மௌனமாக இங்கே நடந்தவற்றைப் பார்த்தவளுக்கு கிரி, அகிரா பிரச்னையால்தான் இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டிருக்கிறார்கள் போலும் என்று தோன்றிற்று.

ஆனால் இதை எதிர்பாராத ஆரபி, எட்டி அவள் தொடையில் கிள்ளிவிட்டாள்.

“ஐயோ அம்மா என்னத்துக்கடி நுள்ளுறாய்(கிள்ளுதல்)?” தொடையைத் தேய்த்துவிட்டபடி சீறினாள் வினோதினி.

“இஞ்ச இவ்வளவு வேல இருக்கு. நீ போனா நான் தனியா எப்பிடி முடிக்கிறது?” என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே என்று சகாயன் முன் சொல்ல முடியாதே.

“ஏன் அண்ணா இருக்கிறான்தானே. அவனோட சேர்ந்து செய். போனமுறை நீயும் அண்ணாவும்தானே செய்தனீங்க!” சகாயனின் முன்னேயே அவள் அப்படிச் சொல்லவும் என்ன சொல்வது என்று தெரியாது தடுமாறினாள் ஆரபி. இவள் இருப்பாள் என்று நம்பித்தானே அகிராவை அனுப்பினாள். ப்ளீஸ்டி நில்லு என்று கண்ணால் கெஞ்சியவளை மற்றவள் சட்டை செய்யவில்லை.

இதையெல்லாம் கவனித்த சகாயன், “உன்ர ஃபிரெண்ட்ட நாங்க என்ன கடிச்சுத் திண்டுடுவம் எண்டு பயப்பிடுறாளா?” என்று தங்கையிடம் பாய்ந்தான்.

“ஓம் போல அண்ணா. நீ நிக்கிற பக்கமே வரமாட்டன் எண்டு நிக்கிறாள் அவள். என்ன எண்டு கேளு!” என்று மாட்டிவிட்டு ஓடியே இருந்தாள் வினோதினி.

அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத வேலை இது. தெரியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியவள் சந்தர்ப்பம் கிடைத்ததும் தப்பித்துக்கொண்டாள்.

ஆரபிக்கு மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டது. “நானும் போயிற்று நாளைக்கு வரட்டா?” என்றாள் மெல்ல.

“ஏன், அதே வேலைய இண்டைக்குப் பாத்தா பேய் பிசாசு ஏதும் பிடிச்சிடுமா உன்னை?”

அதற்குப் பதிலாகத்தான் அவன் வந்து நிற்கிறானே. இதைச் சொல்லவா முடியும் அவளால்? பேசாமல் பயத்தில் மிடறு விழுங்கினாள் அவள்.

“இண்டைக்கு எத்தின மணி வரைக்கும் வேலை செய்ய பிளான் பண்ணி இருந்தனீங்க?”

“ஆறு மணி வரைக்கும்.”

கையைத் திருப்பி நேரம் பார்த்தான். அப்போதுதான் மாலை ஐந்து பத்து. “பிறகு என்ன?” என்றான் அவளிடம்.

“ஒழுங்கா வேலையப் பாக்கச் சொல்லு மச்சான். என்னவோ நான் ஏதோ செய்திடுவன் எண்டமாதிரி அகிராவை போகச் சொன்னவள் எல்லா. தனியா இருந்து செய்யச் சொல்லு!” என்றான் கிரியும் ஆத்திரத்தில் முகம் சிவக்க.

“இன்னும் என்ன செய்யக் கிடக்கு?” என்று சீறினாள் அவள்.

“அப்பிடி என்ன செய்தனான் எண்டு சொல்லு? விரும்பின பெட்டையிட்ட விருப்பத்தைச் சொல்லாம உன்னட்டயா வந்து சொல்லோணும்?” என்று பதிலுக்குச் சீறினான் அவன்.

“அப்பிடி வந்து சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும்.” ஆரம்பத்தில் இருந்தே கிரியை அவளுக்குப் பிடிக்காது. அவனால்தான் சகாயனும் சண்டை சச்சரவு என்று இருக்கிறான் என்று நினைப்பாள். அகிராவோடு அவன் நடந்த விதத்திலிருந்து அறவே அவனை வெறுத்தாள். அதனாலோ என்னவோ அவனிடம் அவளால் அமைதியாகப் போக முடிவதில்லை. சகாயன் இருக்கிறான் என்பதையும் மறந்து பதிலுக்குப் பதில் என்று நின்றாள்.

ஆனால், அவள் அப்படிச் சொன்னது கிரியைச் சீண்டிவிட்டது. “சொன்னா என்ன செய்வாய்? உன்னால என்ன செய்யேலும்?” என்றுகொண்டு வந்தான்.

“மச்சான் விடு!” என்று அவனை அடக்க முயன்றான் சகாயன்.

அதற்குள், “சொல்லியிருந்தா பல்லை உடைச்சுக் கைல தந்திருப்பன்!” என்றிருந்தாள் ஆரபி. உன்னால் என்ன செய்ய முடியும் என்றால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதானே அதன் பொருள். அந்த ஆத்திரம் அவளுக்கு.

“பாத்தியாடா இவளின்ர வாயை.” என்று பல்லைக் கடித்த கிரியிடம், “மச்சான், நீ போ முதல்!” என்றான் சகாயன்.

“என்னை என்னத்துக்கடா போகச் சொல்லுறாய்? உனக்கு முன்னாலேயே என்ன எல்லாம் கதைக்கிறாள் எண்டு பாத்தனிதானே. இவளாலதான் அகிராவும் எனக்கு இல்லாம போயிற்றாள். நான் அவமானப்பட்டுக் கேவலப்பட்டதும் இவளால். ஆனாலும் அடங்குகிறாள் இல்ல பாத்தியா.”

அந்த விடயத்தில் சகாயனுக்கும் கோபமே. கிரி செய்தது தவறுதான். ஆனால், அது முடிந்துபோன ஒன்று. அவன் திரும்பவும் மோசமாக நடந்துவிடுவான் என்று தானாகவே நினைத்துக்கொண்டு, அவன் முன்னாலேயே அகிராவை அங்கிருந்து அகற்றிய அவள் செய்கைஅவனுக்கும் பிடிக்கவில்லை.

“நான் என்னத்துக்கு அடங்கோணும்? அடங்கிற அளவுக்கு நானா கேவலமான வேலை எல்லாம் பாத்தனான்?” என்றவளை, “இப்ப நீ பேசாம இருக்கப் போறியா இல்லையா நீ?” என்று அதட்டினான் சகாயன்.

அவனை ஆத்திரத்துடன் முறைத்தவள், “நான் போறன்!” என்றுகொண்டு எழுந்துகொள்ள, “போனியோ வீண் பிரச்சினை வரும் ஆரபி. நீ ஓவரா போறாய்.” என்று எச்சரித்தான் சகாயன்.

“என்ன ஓவரா போ…” என்றவளை, “வாயை மூடு!” என்று குரலை உயர்த்தி அடக்கினான் சகாயன்.

error: Alert: Content selection is disabled!!