பயந்துபோனாள் ஆரபி. அவமானத்தில் அழுகை வந்தது. தான் என்ன தவறு செய்தோம் என்று மனம் குமுறிற்று. இங்கு வந்ததே பிழை என்று நினைத்தாள். அவள் கண்ணீரையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டு நிற்க, முதல் வேலையாகக் கிரியை அங்கிருந்து அகற்றினான் சகாயன்.
அவன் போனதும் வந்து தொப்பென்று நாற்காலியில் அமர்ந்து தலையைப் பற்றிக்கொண்டவனுக்கு ஆரபி மீது அவ்வளவு ஆத்திரம். அந்த ஆத்திரத்தில் வாயை விட்டுவிடக் கூடாது என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்க முயன்றுகொண்டிருந்தான். ஆனால், ஆரபிக்கு அங்கே நிற்கத் துளியும் விருப்பமில்லை.
“நான் போப்போறன்!” என்றாள் அறிவிப்புப் போன்று.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சகாயன். முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். “பயந்தவள் மாதிரிக் காட்டுறது எல்லாம் நடிப்பு என்ன? என்ன வாய் உனக்கு.” என்றான் கோபமும் சினமுமாக.
நடிப்பா? நடித்து யாரை ஏமாற்றினாளாம்? அதைவிட அவன் கேட்ட விதம் அவளை மட்டமாக நினைத்துக் கேட்டதுபோல் காட்டியது.
அது கொடுத்த சினத்தில், “உங்கட நண்பர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவார். கேட்டுக்கொண்டு நிக்க நான் என்ன புழுவா?” என்று அவனிடமும் சீறினாள்.
கலங்கிச் சிவந்துவிட்ட அவள் முகத்தையே பார்த்தான் சகாயன். அவள் அழுகையை அடக்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அர்த்தமே இல்லாதவற்றுக்காகத் தாம் இருவரும் இப்படி முட்டிக்கொண்டு நிற்பது மிகுந்த வருத்தமளித்தது.
அவன் பார்வை தன் முகத்திலேயே தங்கியிருப்பது பிடிக்காமல், “நான் போகோணும்!” என்று முறுக்கினாள் அவள்.
அவன் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல். இருந்த கோபம் எல்லாம் தேநீருக்கும் விழுந்த சீனியாகக் கரைந்து காணாமல் போயிற்று. இவளைப் பிடித்துவைப்பதற்கு என்ன பாடெல்லாம் படுகிறான். அவளானால்… ஏன் இவளை இந்தளவில் பிடித்துத் தொலைக்கிறது என்னு அவனுக்குப் புரியவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் தலையைக் கோதிக் கொடுத்தான்.
“நடந்தத விட்டுட்டு வேலையைப் பார்.” என்றான் தன்மையாக.
“இல்ல. எனக்குப் போகோணும்.” அவளிடம் ஒரு பிடிவாதம். அவளை மதிக்காதவனுக்கு அவளை மட்டமாக நினைப்பவனுக்கு இனியும் உதவி செய்வதா என்று கொதித்தாள்.
“வேலையப் பார் ஆரபி. இதக் கெதியா முடிக்கோணும்.”
அவள் பதில் சொல்லாமல் நின்று தன் பிடிவாதத்தைக் காட்டினாள்.
‘ஓ அந்தளவுக்குத் தைரியமா உனக்கு?’ கால்களை நீட்டிக்கொண்டு கையையும் மார்போடு கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு அவளையே பார்த்தான்.
அவளுக்கு அவன் செய்கை இன்னுமே மனத்தைக் குமுற வைத்தது. நண்பர்கள் இருவரும் அபாண்டமாக அவள் மீது பழியைப் போடுவார்கள். அவள் அதற்குக் கோபப்படக்கூடாதாம். அதுவும் இவன் நண்பனைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்லவில்லையே.
நீ நாள் முழுக்க இருந்து நன்றாகப் பார் என்று எண்ணிக்கொண்டு அவள் இரண்டு அடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள். மின்னல் விரைவில் வந்து அவள் முன்னே நின்றிருந்தான் சகாயன். திடுக்குற்று இரண்டடி பின்னால் வைத்துப் பயத்துடன் பார்த்தாள் பார்த்தாள்.
“நடந்த பிரச்சினை வேற, நாங்க பாத்துக்கொண்டு இருக்கிற வேலை வேற ஆரபி.” என்றான் அவன் இறுக்கமான குரலில்.
“எனக்கு வீட்டுக்குப் போகோணும்.” எனும்போதே அவள் குரல் உடைகிறேன் என்று நின்றது.
இவ்வளவுக்குப் பிறகு அவளால் வேலை பார்க்க முடியாது என்று புரிந்தது. அந்த மனநிலை இருக்காது. ஆனால், அவளை விட்டால் பிடிக்க முடியாதே.
“நாளைக்கு வருவியா?” தன்மையாகவே கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் நின்ற விதமே பதிலைச் சொல்லிற்று.
“அவன் வரமாட்டான். நீ வா.”
நீதானேடா எனக்குப் பிரச்சினையே.
“இன்னும் ரெண்டு நாள் வேலைதான் ஆரபி.”
“ஆரபி!”
அவன் அதட்டலில் வேகமாக நிமிர்ந்து, “நான் வீட்டுக்குப் போகோணும். விடுங்க ப்ளீஸ்!” என்று சொன்னவளின் குரலோடு சேர்ந்து விழிகளும் கலங்கியிருக்கவும் அவன் பதறிப்போனார். “ஏய் என்ன?” என்றுகொண்டு கிட்ட வர முயல, “ப்ளீஸ் நான் போய்ட்டா?” என்றாள் கண்ணீருடன்.
அவள் மீது பரிதாபம் எழுந்த அதேவேளை கோபமும் உண்டாயிற்று. அதில் அவளுக்கு வழிவிட்டு நின்றுகொண்டு, “இப்ப போ. நாளைக்கு வருவாய் எண்டு நம்புறன். முதல் சொன்னதுதான். இந்த வேலை ஊருக்காக நாங்க செய்றது. உனக்கு இத எப்பிடி எப்பிடிச் செய்றது எண்டு தெரியும். அதைவிட நீ செய்ற வேலை எப்பவும் நீற்றா இருக்கும். அதாலதான் திரும்ப திரும்ப உன்னை வற்புறுத்துறன். அதே மாதிரி நடந்த பிரச்சினை வேற, இந்த வேலை வேற. இதுக்கு மேல உன்னை நான் வற்புறுத்த மாட்டன். நாளைக்கு நீ வராட்டி அதுக்குப் பிறகு எப்பவும் நீ வர வேணாம். இந்த லைப்ரரி இயங்கவும் இயங்காது.” என்று சொல்லித்தான் விட்டான்.

