அவள் அவனையே பார்த்தாள்.
“என்னைப் பற்றி உனக்குத் தெரிஞ்ச நாலு நல்லது சொல்லு பாப்பம் என்றதும்
ஊரைச் சுத்துவான். தொட்டத்துக்கும் கைய நீட்டுவான். கோபம் மட்டும்தான் அவனுக்கு வரும். அடிதடி எல்லாம் அவனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் என்று அவளுக்குள் அவனைப் பற்றி வந்த ‘நாலு நல்லதில்’ அவளுக்கே பயம் பிடித்துக்கொண்டது. விக்கித்துப்போய் அவள் நிற்க, “என்ர பெயர் என்ன?” என்றான் அவன்.
‘நீ என்ன லூசாடா?’
“வயசு?”
இவனுக்கு மறை ஏதும் கழன்றுவிட்டதா என்று பார்த்தாள் அவள்.
“எதிர்காலத்தில எனக்கு என்னவா வர விருப்பம் எண்டு தெரியுமா உனக்கு?”
தெரியும் என்பதுபோல் தலையசைத்தாள்.
“பத்துப் பதினஞ்சு பெட்டையளக் காதலிச்சிருக்கிறன். அது தெரியுமா?”
சத்தியமாக இவனுக்கு என்னவோ நடந்துவிட்டது. அவள் பயந்துபோய்ப் பார்க்க, “சில பல கில்மாக்களும் நடந்திருக்கு.” என்றதும் அவள் இருக்கையால் இருந்து எழுந்திருந்தாள்.
“நான் போகோணும். நேரமாயிற்றுது.”
“இந்த இடத்தை விட்டு அசஞ்சியோ, கொன்றுவன் ராஸ்கல்! இரு மரியாதையா!” என்றதும் பொத்தென்று இருக்கையில் விழுந்தாள்.
“நீ பாக்கிற பார்வையைப் பாத்தா அப்பிடித்தான் இருக்கு. வினோட்ட என்னைத் தெருப்பொறுக்கி எண்டு சொன்னியா இல்லையா?” என்றவனின் கேள்வியில் அவளுக்குச் சுவாசமே நின்றுபோயிற்று.
“நான் உனக்குத் தெருப்பொறுக்கியா? அரசியலுக்கு வரோணும் எண்டா தெருவுல இறங்கோணும். எங்க, எந்த இடத்தில, என்ன பிரச்சினை இருக்கு எண்டு தெரிஞ்சிருக்கோணும். தெரிஞ்சாத்தான் மக்களின்ர பிரச்சினைகள் என்ன, தேவைகள் என்ன எண்டு தெரிய வரும். அப்பதான் அதைப் பற்றி நான் கதைக்கலாம். அதுக்கான தீர்வு என்ன எண்டு பாக்கலாம். ஆனா நீ சிம்பிளா தெருவுல குந்திக்கொண்டு இருக்கிறன் எண்டு சொல்லுறாய். கோவம் வருமா இல்லையா?” என்றவனின் கேள்வியில் இருந்த நியாயத்தில் அவள் முகம் கன்றிப் போயிற்று.
“அண்டைக்கு வினோட்ட நீ சொன்னதக் கேட்டனான். அந்தக் கோவத்திலதான் கைய விசுக்கினனான்.” என்றான் அவன் முறைத்துக்கண்டு.
இப்போது ஏதோ கொஞ்சம் புரிவது போலிருக்க, “சொறி!” என்றாள் தன்னை மீறி.
அவனாலும் அதற்குமேல் அவளிடம் கோபப்பட முடியவில்லை. ஆனால், தனக்குப் பிடித்த ஒரு பெண் தன்னை அப்படிச் சொன்ன பாதிப்பிலிருந்து அவன் மனம் முற்றிலுமாக வெளியில் வரவில்லை.
“அந்த ஆத்திரம் எப்பவும் எனக்கு இருந்தது. அதுதான்…” அதன் பின்னான அவன் நடத்தைகளுக்கான காரணம் சொல்கிறான். முதல் தவறு அவளதுதான் என்கிறானா? முகம் கன்றி விழிகள் கலங்கிவிட பார்வையைத் தழைத்தாள் அவள்.
“அடியேய் லூசு! உன்ன அழவைக்கிறதுக்காக இதச் சொல்லேல்ல.” என்றதும் படக்கென்று நிமிர்ந்து முறைத்தாள் அவள்.
மயங்கிப்போனான் சகாயன். இமைகள் கூடக் கண்ணீரில் நனைந்திருக்க, கலங்கியிருந்த விழிகள் அவனை முறைப்பது அவன் நெஞ்சையே என்னவோ செய்தன. “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. என்ன செய்வம்?” என்றான் சட்டென்று.
அவள் திரும்பவும் எழுந்துவிட்டாள். நெஞ்சு படார் படார் என்று அடித்துக்கொண்டது.
“எப்பவும் என்னட்ட இருந்து தப்பி ஓடுறதிலேயே குறியா இருப்பியா நீ? இரு ஆரு, உன்னோட கதைக்கோணும் எண்டுதான் இந்த வேலைய நான் ஆரம்பிச்சதே.” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள். இதில் ஆருவாம். அவளுக்கு வியர்த்தது.
அவள் கலக்கத்துடன் பார்க்க, “இரு ப்ளீஸ்!” என்றான். இப்படித் தயவாகப் பேசுவது அவன் இல்லை. அதுவே அவளை மறுபடியும் அமர வைத்தது.
நெற்றி, உதட்டின் மேலே, மூக்கு நுனி எல்லாம் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன அவளுக்கு.
“டென்க்ஷனா இருக்கோ?” என்றான் அவள் நிலையை ரசிக்கும் சிரிப்புடன்.
டென்க்ஷனா? அவள் இதயம் துடிக்கிற துடிப்பில் இதய நோய் எதுவும் வராமல் இருந்தாலே ஆச்சரியம்.
“பயப்பிடாத ஆரு. நான் நல்லவன்தான். உன்னைக் கண் கலங்காம வச்சுப் பாப்பன்.” என்றவனிடம், ‘முதல் எனக்கு ஹார்ட் அட்டாக் வராம பாரடா’ என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அவனுக்கும் அவன் பேச்சுச் சிரிப்பு மூட்டிற்று. அவனே அவனுக்கு விளம்பரம் செய்யும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாளே.
“நான் போகவா?” என்றாள் அவள் அழும் குரலில்.
“இரு, என்ன அவசரம்?”
“இல்ல ஆறு மணியாச்சு.”
“ஓ!”
“போகவா?”
“இந்தப் போகவாவ தவிர வேற ஒண்டும் உன்ர வாயில வராதா?” பழையபடி அதட்டினான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் பர்ஸ், கைப்பேசிகளை சேகரித்துக்கொண்டாள். அதாவது புறப்படப்போகிறாளாம்.
“நான் சொன்னதுக்கு நீ ஒண்டும் சொல்லேல்ல.” என்றான் அவன்.
“இல்ல…” என்று ஆரம்பித்தவள் அவன் முகம் மாறிய வேகத்தில் வேகமாக நிறுத்திக்கொண்டாள்.
“சொல்லு!”
“இல்ல அது எனக்கு… அப்பிடி விருப்பம் இல்ல.”
“ஏன்?”
“நான் படிக்கோணும்.”
“இப்ப ஆர் உன்னப் படிக்க வேணாம் எண்டு சொன்னது?”
“வீட்டுல விடாயினம்.”
“என்ர வீட்டில மட்டும் தெரு தெருவா போய்க் காதலிச்சுக்கொண்டு வா எண்டா விட்டிருக்கினம்?”
“எனக்கு அந்த மாதிரி விருப்பம் இல்ல.”
“வேற எப்பிடி விருப்பமே எண்டு சொல்லு?”
“நான் போகோணும்.” திரும்பவும் அவள் பழைய பல்லவில் வந்து நின்றாள்.
தான் அவளை நெருக்குகிறோம் என்று புரிந்தது. அதுவே தனக்குப் பாதகமாகத் திரும்பலாம் என்று விளங்காமல் இல்லை. ஆனால், அவள் விலகி ஓட ஓட இழுத்துப் பிடித்துக் கைகளுக்குள் வைத்துக்கொள் என்று துடிக்கும் மனத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யா?
தலையைக் கோதிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். விட்டால் ஓடிவிடும் நிலையில் இருந்தாள். சும்மாவே பயந்த சுபாவம் அவள். தான் படுத்தும் பாட்டுக்கு ஊரை விட்டே ஓடிவிடுவாள் போலிருக்கவும் இலேசாகப் பற்கள் தெரியச் சிரித்தான் அவன்.
பிரமித்துப்போனாள் ஆரபி. அவனின் இறுக்கமான முகம் பார்த்தே பழக்கப்பட்டவள். இப்போது நம்ப முடியாமல் பார்க்க, என்ன என்றான் புருவம் உயர்த்தி. அவளுக்கு முகம் சிவந்து போயிற்று. சட்டென்று பார்வையைத் தளைத்துக்கொண்டாள். சிறகில்லாமலே வானத்தில் பறந்தான் சகாயன்.
“ஆரு!” அவன் குரல் குலைந்தது.
“பிடிச்சிருக்காடி?” பட்டுப்போன்ற அந்தக் குரல் அவளை வசியம் செய்ய முயன்றது.
புதிதாய் ஒரு பயம் தொற்றிக்கொள்ள அவள் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. இன்னும் அதிகமாக வியர்த்தது. உள்ளங்கையாலேயே நெற்றியையும் மேலுதட்டையும் அழுத்தித் துடைத்தாள். பார்வையை அகற்ற முடியாமல் நின்றான் சகாயன்.
அப்போதும் அவள் பதில் சொல்லாதது சின்ன ஏமாற்றம்தான். ஆனால் இன்றுதானே மனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்.
“கோபம் எனக்கு மைனஸ்தான். ஆனா, அது மட்டுமே நான் இல்ல. எனக்காகக் கொஞ்சம் யோசி.” என்றுவிட்டு அவளை அனுப்பிவைத்தான்.

