அத்தியாயம்-1
மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதினொரு மணிக்கு முதல் அவன் ஓய்வு எடுக்கமாட்டான் என்பதைச் சொல்லின!
அந்தச் சாலையின் இருமருங்கிலும் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு மற்றும் ஆரெஞ்ச் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருந்த கட்டிடங்கள், சூரிய ஒளியைத் தாங்கி தங்கள் அழகை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டு நிமிர்ந்து நின்றன.
அந்த அழகு போதாது என்று அவற்றைச் சுற்றி நின்ற மரங்கள் சோலையாக மாறி, அந்தச் சாலைக்குத் தனிச் சோபையைக் கொடுத்தன. அந்தச் சாலையின் ஆரம்பித்திலேயே பெயர்ப்பலகை ஒன்று நடப்பட்டு, வரிசையாக பாடசாலைகளின் பெயர்களைத் தாங்கி நின்றது.
‘அட! இந்தக் கண்கவர் கட்டிடங்கள் அனைத்தும் பாடசாலைகளோ…!’ என்று எண்ண வைப்பது மட்டுமல்லாமல் ‘சும்மாவாவது அதற்குள் புகுந்துவிட்டு வருவோமா..’ என்கிற ஆசையையும் எல்லோர் மனதிலும் தோற்றுவிக்கும் வண்ணம் மிளிர்ந்தது அந்த இடம்.
அந்தச் சாலையின் ஒரு பக்கமாக இருந்த நீலம் மற்றும் சிவப்புக் கட்டிடங்களுக்கு இடையில் பச்சைப்பசேல் என்றிருந்த காற்பந்து மைதானத்தில், ஆண்கள் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விளையாடுவதைப் பார்ப்பதற்கும், தங்களுக்குப் பிடித்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் மைதானத்தைச் சுற்றிக் கூடியிருந்த ஆண்களும் பெண்களும் அங்கே அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வாங்கில்களில் அமர்ந்தும், அதிலே இடமில்லாதவர்கள் நின்றபடியும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அந்தக் கூட்டத்தில் இருந்து விலகி வந்துகொண்டிருந்தான் ஒருவன். இவ்வளவு நேரமும் காற்பந்து விளையாடியிருக்கிறான் என்று அவன் உடலில் இருந்து வடிந்துகொண்டிருந்த வியர்வையே சொல்லியது.
அவன் அணிந்திருந்த வெள்ளை நிற அரைக்கை ‘டி-ஷர்ட் ‘ வியர்வையில் முற்றாக நனைந்திருந்ததில் அவனின் உடற்கட்டை அது வெட்ட வெளிச்சமாகக் காட்ட, அதே வெள்ளை நிறத்தில் முழங்காலுக்கு சற்று மேலே மட்டுமான ‘சோர்ட்ஸ்’ அணிந்து, வெள்ளை நிறத்திலேயே சொக்ஸ் மற்றும் காற்பந்து ஷூவும் அணிந்திருந்தான்.
அவனது ‘டி-ஷர்ட்’ இன் நெஞ்சுப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து சென்றிமீட்டார் அகலத்துக்கு புத்தகத்தை விரித்து வைத்தது போன்ற அமைப்பில், சிவப்பு நிறமும் அதன்மேல் மெல்லிய கறுப்புக் கோடுகளும் அதன் முடிவாக பொன்மஞ்சள் நிறக் கோடும் தீட்டப்பட்டு இருந்தது. அதைப்பார்க்கையில் முதலில் கறுப்பு பின்னர் சிவப்பு கடைசியாக பொன்மஞ்சள் நிறம் என்று அவன் வாழும் நாட்டின் கொடியை நினைவு படுத்தியது.
அந்தச் சிவப்புப் பகுதியின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிறத்தில் ‘அடிடாஸ்’ என்றும் இன்னொரு பக்கத்தில் கறுப்பு வட்டத்துக்குள் வெள்ளை நிறத்தில் கழுகின் படமும் பொறிக்கப்பட்டு அதற்கு மேலே ‘டொச்லாந்து’ என்று ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டு இருந்தது.
நடந்து வந்து கொண்டிருந்தவனின் ஒரு கையின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் எரிந்துகொண்டிருந்த சிகரட்டினைப் பற்றியிருக்க, மற்றக்கையில் ‘க்ரொம்பஹர்’ பியர் டின் இருக்க, அவனின் கைபேசி காற்சட்டைக்குள் இருந்து என்னைக் கவனி என்று கதறியது.
பியர் டின்னை சிகரட்டை பற்றியிருந்த கைக்கு மாற்றிவிட்டு கைபேசியை எடுக்கவும் அங்கே இருந்த மரத்தடிக்கு அவன் வந்துசேரவும் சரியாக இருந்தது. இவ்வளவு நேரமும் உடலைத்தாக்கிய வெயிலுக்கு அந்த மரநிழல் சுகமாய் இருக்கவே, அந்த இடத்திலேயே நின்றபடி கைபேசியைக் காதுக்குக் கொடுத்தவன், “ம்மா…” என்றான், அழைத்தது யார் என்று அறிந்து.
அந்த மரத்தின் அந்தப்பக்கமாக அமைக்கப் பட்டிருந்த வாங்கிலில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தியின் காதிலும் இவனின் அழைப்பு விழுந்தது.
‘என்னது..? ‘ம்மே’ யா.. ஆடு கத்துவது மாதிரியே இருக்கிறதே.. இங்கு ஆடு கூட இருக்கிறதா..?’ என்று யோசித்தபடி எட்டிப் பார்த்தவளுக்கு கத்தியது ஆடல்ல ஒரு ஆடவன் என்பது தெரிந்தது.
அருகில் மிருகம் எதுவுமில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதியானவள், அவன் கைபேசியில் கதைப்பதில் கவனமாக இருப்பதை அறிந்து அவனை சுவாரசியத்தோடு அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தாள்.
கண்கள் அவனை அளவெடுத்தபோதும், ‘இவன் என்ன எங்கள் ஊரில் கிணறு வெட்டுபவர்களை விட மோசமாக வியர்த்துப்போய் நிற்கிறான். எதையும் யாரிடமும் களவெடுத்துக்கொண்டு ஓடி வந்திருப்பானோ அல்லது நாய் துரத்தியதில் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடி வந்திருப்பானோ…’ என்று தாறுமாறாக ஓடியது அவளின் சிந்தனை.
‘இல்லையே.. இந்த நாட்டில் நாயெல்லாம் துரத்தாதே.. அதெல்லாம் எங்கள் நாட்டில் தானே நடக்கும்..’ என்று நினைத்தபடி பார்வையைத் திருப்பியவளின் விழிகளில், அவனின் மற்றக்கையின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் சிகரட்டை தாங்கியிருக்க, மற்றைய மூன்று விரல்களும் பியர் டின்னை தாங்கி இருப்பது படவே, அவள் முகம் கோணல் மாணலாகச் சுருங்கியது.
“சேக்! அம்மாவுடன் கதைத்துக்கொண்டே சாராயம் குடிக்கிறான், குடிகாரன்! உவ்வே…” மனதுக்குள் சொல்வதாக நினைத்தவளின் உதடுகள் அவற்றை சத்தமாக உச்சரித்திருந்தன, அவளின் உத்தரவு இல்லாமலேயே!
கதைப்பதை நிறுத்திவிட்டு அவனின் பார்வை வேகமாகத் தன்புறம் திரும்புவதை உணர்ந்தவள், அதைவிட வேகமாகத் தன்னை மறைத்துக்கொண்டாள்.
‘அப்பாடி.. நல்லகாலம் அந்தக் குடிகாரனின் கண்ணில் படமுதலேயே திரும்பிக்கொண்டேன்..’ என்று நெஞ்சில் கைவைத்து ஆறுதலடைந்தாள் அவள்.
ஆனால், அந்த ஆறுதலுக்கு ஆயுசு குறைவு என்பதற்குச் சான்றாக அவளின் முன்னால் வந்து நின்றான் அவன்.
தன் முன்னால் நின்றவனைப் பார்த்து, திடுக்கிட்டு எழுந்து நின்றவளின் மடியிலிருந்த புத்தகம் கீழே விழுந்தது. அதைக்கூட உணராது திகைத்து விழித்தவளின் விழிகளோ அவள் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை விடப் பெரிதாக விரிய, அதில் மெல்ல மெல்லப் பயப் படபடப்பு குடிபுகுந்தது.
“உன் பெயர் என்ன?” கூர் விழிகள் அவளைத் துளைக்க நிதானமாகக் கேட்டவன், கையில் இருந்த சிகரெட்டினை வாயில் பொருத்தி புகையை இழுத்தான்.
“ம.. மைன் ந.. நாம இஸ்ட் ல.. லட்சனா..” அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு இவள் டொச்சில் திக்கித் திணறிப் பதில் சொன்னாள்.
மனதிலோ, ‘உள்ளுக்கு இழுத்த புகையை என்ன செய்தான்? அப்படியே விழுங்கிவிட்டானோ…’ என்று எண்ணம் ஓடியது.
அவளின் பதிலில் அவன் விழிகளில் ஒருவித சுவாரசியம் தோன்றியபோதும் முகம் சாதரணமாகவே இருந்தது.
“இங்கே யார் வீட்டுக்கு வந்திருக்கிறாய்..?” அவள் முகத்தையே பார்த்தபடி கேட்டவன், வாயைக் குவித்து வளையம் வளையமாக புகையை வெளியே விட்டான்.
‘இவ்வளவு நேரமும் இந்தப் புகை எங்கே இருந்தது? வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு கதைக்கமுடியுமா…’ அவனிடம் தன் சந்தேகத்தைக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது.
எனவே சந்தேகத்தை தள்ளி வைத்தவள் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல நினைத்தாள்.
“மைன ஸ்..” என்று ஆரம்பித்தவள் அப்போதுதான் உணர்ந்தவளாய், “உங்களுக்குத் தமிழ் தெரியுமா…?” என்று விழிகளில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.
அவளையே சில நொடிகள் கூர்ந்தவனின் முகத்தில் அதுவரை இருந்த ஆராயும் பார்வை அகன்று ஓர் இலகுத்தன்மை குடிபுகுந்தது.
“தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.” என்றவன், அவள் சற்று முன்வரை அமர்ந்திருந்த வாங்கிலில் ஒரு பக்கமாக அமர்ந்தான்.
வாங்கிலின் அருகிலேயே நின்றவள் விழுந்தடித்துக்கொண்டு நகர்ந்தாள். நகர்ந்தவளின் காலை நிலத்தில் கிடந்த அவளின் புத்தகமே தடுக்கியது.
அவன்தான் தன் காலைப் பிடித்து இழுக்கிறானோ என்று பயந்தவள், “அம்மா…!” என்கிற ஒரு கூவலுடன் பல அடிகளை வேகமாகப் பாய்ந்து சென்று நின்றுகொண்டு, அவனைப் பயத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
“உன் புத்தகம்தான் உன் காலைத் தட்டியது. அதற்கு இவ்வளவு பயப்படுவாயா..?” என்று, அவளின் அவனைப் பற்றிய எண்ணம் அறியாது கேட்டான் அவன்.
அவன் அப்படிக் கேட்ட பிறகுதான் நடந்தது புரிந்தது அவளுக்கு. மனதில் இருந்த பயம் மொத்தமாக விலகாமலேயே மெல்ல நடந்துவந்து புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள். அப்போதும் ஓரக்கண்ணால் அவனைக் கவனிக்கத் தவறவில்லை.
அப்படியே மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரப் பார்த்தவளிடம், “அப்போது என்ன சொன்னாய்..?” என்று சாதாரணமாகக் கேட்டான் அவன்.
அவளுக்குத்தான் பயத்தில் உதறல் எடுத்தது. அவள் சொன்னதைக் கேட்டால் என்ன சொல்வானோ?
“ஒ.. ஒன்றுமில்லையே…” அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்வதற்கே மிகவும் தடுமாறினாள்.