ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது.
அவன் தன்னைக் கண்டுவிடப்போகிறானே என்று எண்ணி அந்த இடத்திலிருந்து வேகமாக நடந்தாள். நெருங்கிய மோட்டார் வண்டியின் சத்தம், அவள் நடக்கும் பக்கமாகவே அவனும் வருவதைச் சொல்ல நெஞ்சு மீண்டும் தடதடக்கத் தொடங்கியது.
‘திரும்பிப் பார்க்காதே… பார்க்காதே..’ என்று சொல்லிய மனதின் கூற்றைக் கேட்காமல் அவளின் தலை தானாகவே திரும்பிப் பார்த்தது. அவனும் அவளைக் கண்டுவிட்டான். அதற்கு மேல் அவளால் நடக்கமுடியவில்லை. நிலத்தில் வேரோடிவிட்ட கால்களை அசைக்க முடியாது அவனையே பார்த்தபடி நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள்.
இப்போது, பார்வையை நேராக வீதியில் பதித்தபடி வண்டியில் வந்துகொண்டிருந்தான் சூர்யா. அவளைக் கண்டும் காணாததுபோல் செல்லப் போகிறான் என்பதை உணர்ந்த அந்த நொடியில், இன்னொருமுறை அவனின் புறக்கணிப்பைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டாள் சனா.
அவன் அவளைக் கடந்துவிட முதல், இரண்டடிகள் முன்னேவைத்து கையை நீட்டி அவனின் வண்டியை மறித்தாள்.
அவளருகில் வண்டியை நிறுத்திய சூர்யா, அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை கழட்டி ‘டி-ஷர்ட்’ன் கழுத்தில் கொழுவிவிட்டு, ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றியபடி நின்றான். வாய் திறந்து எதுவுமே கதைக்கவில்லை. அவன் விழிகள் மட்டும் கூர்மையுடன் அவளையே ஊடுருவியது.
அவனாக எதையும் கதைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து, “ஹா.. ஹாய்..” என்று இவளே மெல்ல ஆரம்பித்தாள்.
அப்போதும் எதுவும் பேசாது அவளையே கூர்ந்தான் அவன்.
“கோ..பமா?” அவன் விழிகளைப் பார்த்துக் கேட்க முயன்றும் முடியாமல், முகத்தைச் சற்றே தாழ்த்திக் கேட்டவளின் கைகளோ பதட்டத்தில் கைபேசியைச் சுழற்றிச் சுழற்றிப் பிடித்தது.
அவனோ மீண்டும் அவளின் கைபேசியையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான்.
“சாரி..” அவன் பார்வையின் பொருள் புரிந்து மன்னிப்புக் கேட்டாள் சனா.
ம்ஹூம், அதற்கும் எதுவுமே சொல்லவில்லை அவன்.
அதற்கு மேலும் அவனுடைய மௌனவிரதத்தை தாங்க முடியாது, “அதுதான் சாரி சொல்லிவிட்டேனே. பிறகும் எதற்குச் சும்மா சும்மா முறைக்கிறீர்கள்..?” என்று கேட்டவளின் குரலில் மெல்லிய அதட்டல் இருந்தது.
அதில் அவன் விழிகளில் ஆச்சரியப் பாவனை வந்தபோதும், வாய் திறந்து பேசவில்லை அவன்.
“இன்னும் எத்தனை தடவை நான் மன்னிப்புக் கேட்டால் நீங்கள் என்னோடு கதைப்பீர்கள்..?” அவனின் அமைதி பொறுக்கமுடியாமல் அவள் கேட்க,
“ஏன் அப்படிச் செய்தாய்…?” என்று நேரடியாகவே கேட்டான் சூர்யா.
“தெரியாது…” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில். உண்மையும் அதுதானே!
அவன் விழிகளில் கேள்வியை உணர்ந்து, “உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஏன் நான் உங்களின் அழைப்பை எடுக்கவில்லை என்று…” என்றாள் தவிப்போடு.
“நான் உன்னோடு கதைப்பதில் உனக்கு விருப்பம் இல்லையா அல்லது ஏதும் பிரச்சினையா…?” என்று அவன் கேட்டபோது, உண்மையைச் சொல்ல முடியாமல், “இல்லை. அப்படி எதுவும் இல்லை…” என்றாள் சனா.
“பிறகு…”
“அதுதான், ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டேனே. பிறகு எதற்கு அதையே திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்? வேண்டுமானால் இப்போது அழையுங்கள். நான் பேசுகிறேன்…” என்றாள் கைபேசியைக் காட்டி.
அவன் முகத்தில் முறுவல் மலர்ந்தது.
“இப்போது தேவையில்லை. ஆனால், இனி நான் அழைத்தால் எடுக்கவேண்டும். சரி, சொல்லு. இப்போது எங்கே போகிறாய்..?” என்று கேட்டான் அவன்.
“சைந்துவைக் கூட்டிவரப் போகிறேன்..” என்றவளின் முகமும், கோபத்தை விடுத்து அவன் இலகுவாகப் பேசியதில் மலர்ந்தது.
“வா.. நான் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுகிறேன்…”
‘கார் என்றாலும் ஓரளவுக்கு பரவாயில்லை. இந்தக் குதிரை வண்டியில் எப்படி ஏறுவது… ஏறினாலும் அவனுக்கு மிக அருகில் அல்லவா அமரவேண்டும்..’ என்று சிந்தனை ஓடியபோதும் மறுக்கத் தயக்கமாக இருந்தது அவளுக்கு.
பின்னே மீண்டும் மலையேறி விட்டான் என்றால் அவளால் தாங்கமுடியாதே!
“ஏறு..” என்றான் அவன், தன் கறுப்புக் கண்ணாடியை அணிந்தபடி.
வண்டிக்கு அருகில் வந்தவள் தயங்கி நிற்க, அவளின் நிலையை நொடியில் கணித்தவன், “வருகிறாயா அல்லது நான் போகவா..?” என்று கேட்டான் கோபக் குரலில்.
“இல்லையில்லை, வருகிறேன்.” என்றவள் ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள்.
அவள் ஏறியதை உறுதிப்படுத்தத் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“இப்படி இருந்தாயானால் நான் வண்டியை எடுத்ததும் நீ வீதியில் தான் கிடப்பாய். இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்துகொள்..” என்றான் இலகுவான குரலில்.
அவளுக்கு அப்படி அமரச் சங்கடமாக இருந்தது. அதைவிட, அதை அவனிடம் சொல்வது இன்னும் சங்கடமாக இருந்தது.
“இப்படியே இருக்கிறேனே…” என்றாள் மெல்ல.
“சொல்வதைக் கேள் லட்சனா. இப்படி அமர்வது ஆபத்து. மாறி இரு…” என்றவனின் குரலில் அழுத்தம் வந்திருந்தது.
அதற்கு மேலும் மறுக்கமுடியாமல் கால்களை இரண்டுபக்கமும் போட்டு, முடிந்தவரை அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து, கைகள் இரண்டாலும் வண்டியைப் பிடித்துக்கொண்டாள்.
“ம். இதுதான் சரி…” என்றபடி அவன் வண்டியை எடுக்க, அது ஒருதடவை உறுமிவிட்டுப் பாய்ந்தது. அந்தப் பாய்ச்சலில் அவள் மேனி அவனோடு மோதப்பார்க்கவே அதைத் தவிர்ப்பதற்கு சட்டென்று அவனின் தோள்களைப் பற்றிக்கொண்டாள்.
முதன் முதலில் அவளாக அவனைத் தொட்டிருக்கிறாள். நெஞ்சு படபடத்தது. அவனைப் பற்றியிருந்த கைவிரல்கள் நடுங்கியது. அவன் தோள்களை அழுத்திப் பிடிக்கவும் முடியாமல் கைகளை அகற்றவும் முடியாமல் தடுமாறினாள்.
அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போலும். “நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்.” என்றவன், இலகுவாக வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.
விழுந்துவிடுவோமா என்று பயமாக இருந்தது அவளுக்கு. “மெல்லப் போங்களேன்…” என்றவள், அவளை அறியாமலேயே அவனருகில் நகர்ந்திருந்தாள்.