அவளோடு, “எல்லோருமாகச் சேர்ந்து என்ன அரட்டை அடிக்கிறீர்கள்..?” என்றபடி திபியின் தாய் சுமித்ராவும் வந்து சேர்ந்தாள்.
“அதுதான் நீயே சொல்லிவிட்டாயே அரட்டை என்று… அதுசரி எங்கே ஆன்ட்டி அங்கிள், தாத்தா பாட்டி ஒருவரையும் காணோம்…” என்று விசாரித்தாள் சுலோ.
“மாமாவும் மாமியும் சுவிஸ் போய்விட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் இனித்தான் வருவார்கள். அவர்களைக் கூட்டிவர சூர்யா போய்விட்டான்…” என்றாள் சுமித்ரா.
இதைக் கேட்டதும் சனாவின் உள்ளம் துள்ளிக்குதித்தது. அவள் நினைத்ததுபோல் அவன் வரப்போகிறான்! இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்கப்போகிறாள்!
சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது.
இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழிகள் மண்டபத்தின் வாசலுக்குத் தாவியது. அவளை நீண்ட நேரம் காத்திருக்க விடாமல், ஒரு பக்கம் தாத்தாவும் மறுபக்கம் பாட்டியுமாக கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் சூர்யா.
கருப்பு ஜீன்ஸும், பட்டர் கலர் சேர்ட்டும் அவனை இன்னும் அழகனாய்க் காட்ட, அன்று ‘செம்பட்டை’யாகத் தெரிந்த அவனின் அடர்ந்த கேசம் இன்று அவன் முகத்துக்குத் தனிக் களையைக் கொடுத்தது.
தன்னை மறந்து விழியகற்றாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சனா. யாரையோ தேடிச் சுழன்ற அவன் விழிகள் அவளைக் கண்டதும், அதுவும் அவள் ஆவலுடன் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் மின்னியது.
போதாக்குறைக்கு ரசனையோடும், ஆசையோடும் மேலிருந்து கீழ்வரை அவளை அவன் விழிகள் ரசனையுடன் பருகியதில், அவள் மேனி முழுவதும் வெட்கத்தில் சிவந்தது.
ஒரு பார்வையிலேயே தன்னைப் பெண்ணாக உணர வைக்கும் அவனின் ஆளுமையில் தடுமாறி, இதயம் தடம்புரள பார்வையைத் திருப்பியவளுக்கு நொடியளவு கூட அவனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
மீண்டும் அவன் புறமாக அவள் பார்வையை திருப்பியபோது, உதட்டில் நெளிந்த புன்னகையோடு தாத்தாவின் பக்கமாக் குனிந்து எதுவோ அவன் சொல்வதும், அவர் மெதுவாக பார்வையைச் சுழற்றுவதும் தெரிந்தது.
அவரின் ஆராயும் பார்வை தன்னில் நிலைப்பதைக் கண்டவள் தடதடத்த நெஞ்சத்தோடு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அதோ சூர்யாவோடு தாத்தா பாட்டி வருகிறார்கள்…” என்று சுமி சொன்னதும் அங்கிருந்தவர்கள் அந்த முதிய தம்பதியினரைச் சூழ்ந்துகொண்டனர்.
அந்த ஊரில் வாழும் தமிழ் குடும்பங்களிலேயே பெரியவர்கள் அவர்கள் என்பதாலும், வயது கிட்டத்தட்ட எழுபதைத் தாண்டிய அவர்களைக் காண்பது அரிது என்பதாலும், அவர்களோடு உரையாடுவதில் எல்லோரும் ஆர்வம் காட்டினார்கள்.
அவளுக்கும் ஆர்வம் இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கத் தனித்து நின்றாள் சனா. அப்படி நின்றவளை விரிந்த புன்னகையோடு நெருங்கிய சூர்யா, “ஹாய் மைன் ஷட்ஸ்.. ” என்றபடி அவளின் இடையைத் தன் கைகொண்டு வளைத்தான்.
அவள் காதருகில் குனிந்து, “இவ்வளவு அழகாக இருக்கிறாயே.. என் நிலையைக் கொஞ்சமாவது நினைத்துப்பார்த்தாயா…” என்றான் தொடர்ந்து மயக்கும் குரலில்.
மயங்க வேண்டியவளோ அவனின் செயலில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் பதறிப்போய், “கையை எடுங்கள்…” என்றாள் நடுங்கும் குரலில்.
யாராவது பார்த்துவிட்டால்? கடவுளே..!
அவன் அவளின் மனம் கவர்ந்தவன்தான்! அவனின் அருகாமையை அவளின் மனதும் பெரிதும் நாடுகிறதுதான்! அதற்காக அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் அவன் நடந்துகொள்ளும் முறை சரியல்லவே!
அவள் சொல்லியும் எடுக்காத அவன் கையைத் தள்ளிவிட்டு வேகமாக விலகி நின்றவள், நடந்ததை யாராவது பார்த்தார்களா என்று பதட்டத்தோடு சுற்றிப் பார்த்தாள்.
அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, அவளுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற கண்கள் கலங்கியது.
அவளின் செய்கைகளின் அர்த்தம் புரியாது பார்த்தவன், “இப்போது என்ன நடந்துவிட்டது என்று இந்தப் பாடுபடுகிறாய்..?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வியில் சுள்ளென்று ஏறிய கோபத்தோடு, “இவ்வளவு பேர் இருக்குமிடத்தில் இப்படி நீங்கள் கையைப் போடலாமா…?” என்று சீறினாள் லட்சனா.
“அப்போ யாருமில்லாத இடமென்றால் கை போடலாமா…?”
இதென்ன கேள்வி? என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று புரியவில்லை அவளுக்கு.
ஆனாலும் அவன் தவறை உணர்த்திவிடும் எண்ணத்தோடு, “எங்கானாலும் ஒரு பெண்ணைத் தொடுவது தவறு!” என்றாள் அழுத்தமான குரலில்.
“நீ சொன்ன அந்த ‘ஒரு பெண்’ நீயாக இருந்தால் எங்கு வைத்தும் தொடும் உரிமை எனக்கிருக்கிறது!” என்றான் அவன் அவளை விட அழுத்தமாக.
பதட்டத்தில் இருந்தவளுக்கு அவன் சொன்னதன் பொருள் புரியவில்லை.
அதேபோல மனதை அவனிடம் பறிகொடுத்திருந்த அவளும் அவனுக்குத் தோதான பதிலைச் சொன்னாள் தன்னை அறியாமலேயே.
“அதற்காக? எல்லோர் முன்னிலையிலும் இப்படியா நடந்து கொள்வீர்கள்? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அக்காவோ அத்தானோ பார்த்திருந்தால்…?” அதைச் சொல்லவே அவள் குரல் நடுங்கியது.
“அவர்கள் பார்த்தால் என்ன, விரைவாக நம் திருமணம் நடக்கும்.” என்றான் அவன் அப்போதும் அழுத்தமான குரலில், அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி!
என்னது..? இவன் இப்போது என்ன சொன்னான்… நம் திருமணமா? குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் அவன் பேச்சின் பொருள் மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.
என்னைத் தொடும் உரிமை தனக்கு உண்டு என்றல்லவா சொன்னான். அப்படி உரிமையோடு ஒரு பெண்ணைத் தொடும் உரிமையுள்ளவன் கணவனாக மட்டும்தானே இருக்கமுடியும்!
ஆக அவன் காதலைச் சொல்லியிருக்கிறான். அதைப் புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ கதைத்துக் கொண்டிருந்திருக்கிறாள் அவள். இதில் வேடிக்கை என்னவென்றால், அவன் காதலை ஏற்றுக்கொண்டு காதலியாகப் பதிலை வேறு அவள் சொல்லியிருக்கிறாள் தன்னை அறியாமலேயே!
ஆக அவள் மனதும் அவன் மேல் காதல் கொண்டிருந்திருக்கிறது!
அப்படி இல்லாமல் இருந்திருக்க உத்தரவின்றி உள்ளே நுழைந்தவனை அவள் உள்ளம் உருகி உருகி நினைத்திருக்காதே! தூக்கம் தூரப்போய் இரவில் அவனுடனான கனவுகள் மட்டுமே அவளுக்குச் சொந்தமாக இருந்ததே, அதன் பெயர் காதலன்றி வேறேது?
இதழ் வழி நுழைந்தவன் அவளின் இதயத்தைக் களவாடிச் சென்றிருக்கிறான். களவாடிச்சென்ற இதயத்துக்குப் பதிலாய் காதலைப் பரிசளித்திருக்கிறான்! கண்களும் முகமும் மலர அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் முகமோ இறுக்கத்தில் இருந்தது.
அவனோடு கதைக்க எந்தளவுக்கு அவளுக்கு ஆர்வம் இருந்ததோ அந்தளவுக்குத் தயக்கமும் இருந்தது.
அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, “ம்க்கும்…” என்றாள் அவள் ஆரம்பமாக.
அவளைத் திரும்பிப் பார்த்த அவன் பார்வையில் இருந்த கூர்மையில் திகைத்து விழித்தாள் சனா. கோபமாக இருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால் அந்தக் கோபத்தில் எந்த அர்த்தமும் இல்லையே! நியாயமாகப் பார்த்தால் கோபத்தில் முகத்தைத் திருப்ப வேண்டியவள் அவளல்லவா?
ஆனாலும் அவன் கோபத்தைத் தாங்கமுடியாது, “கோபமா…?” என்று மெல்லக் கேட்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், கையால் தன் தலையைக் கோதியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவனின் அந்த நிராகரிப்பில் அவளின் நெஞ்சில் வலியொன்று எழுந்தது. அவன் கைகளைப் பிடித்து ‘நான் செய்ததுதான் பிழை. இனி இப்படிச் செய்யமாட்டேன்… என்னோடு கதையுங்களேன்..’ என்று அவனைச் சமாதானப்படுத்த உள்ளம் துடித்தது.
ஆனால் வாயைத் திறந்தாள் அழுதுவிடுவோம் என்று தெரிந்ததில் கலங்கிய கண்களை அவனுக்குக் காட்டாது மறுபுறம் திருப்பிக்கொண்டாள்.
அவன் ஒரு பக்கம் அவள் ஒரு பக்கம் என்று முகத்தைத் திருப்பி நின்ற இருவருக்கும் இடையே காதலைப் பரிமாறிக்கொண்ட அந்த நொடியே கருத்து வேறுபாடும் தோன்றியிருந்தது!