இதயத் துடிப்பாய்க் காதல் 6 – 2

சுலோவாலும் மறுக்க முடியவில்லை. அவர்களின் குடும்பத்தைப் பற்றி அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஒழுக்கத்தைப் பெரிதாக மதிப்பவர்கள். அதோடு ஒரு படத்துக்குப் போவதைக் குறுகிய மனவோட்டத்தில் பார்க்கும் இயல்பு அவளுக்கும் இல்லாததில், “அதெற்கென்ன தாத்தா. போய்விட்டு வரட்டும்.” என்றாள் சிரித்த முகமாகவே.

“பிறகு என்ன? உன் அக்காவே சம்மதித்து விட்டாள். போடாம்மா போ. போய் சந்தோசமா படம் பார்த்துவிட்டு வா…” என்று அனுப்பிவைத்தார்.

பின்னால் இவள் வருகிறாள் என்கிற எண்ணம் இல்லாது வேகநடை போட்டவனை மனம் வலிக்கப் பின்தொடர்ந்தாள் லட்சனா.

அவளுக்காக காரின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டபோதும் சரி, அவள் ஏறி சீட் பெல்ட் போடும்வரை காத்திருந்து காரை எடுத்தபோதிலும் சரி அவளோடு ஒரு வார்த்தை கதைக்கவில்லை அவன்.

இதோ.. அவனோடு அவள் சென்றுகொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அவன் வாயைத் திறக்கவும் இல்லை! அவள் முகத்தைப் பார்க்கவும் இல்லை!

நெஞ்சம் கனக்கக் கார்க் கதவில் தலையை சாய்த்துக் கொண்டவளின் உள்ளம் குழம்பித்தவித்தது.

தாத்தா அவனுக்குத் திருமணம் என்றார். அப்படியானால் பெண் யார்? அவன் என்னிடம் தன் காதலைச் சொன்னானா அல்லது என் ஆசை கொண்ட மனதின் கற்பனையா அது? அப்படியே திருமணத்திற்குப் பெண் பார்க்கப்பட்டு இருந்தால், என்னுடனான அவனின் பழக்கத்தின் பெயர் என்ன? நட்பா…?

முத்தமிடுவது கூட நட்பில் சேர்த்தியா? இந்த நாட்டில் தான் எதற்கும் எல்லையே இல்லையே என்று சலித்தது அவள் மனது.

இங்கு பிறந்து வளர்ந்த ஒருவன் அப்படிச் சொல்வதற்கும் சந்தர்ப்பம் உண்டே! அப்படி எதையும் அவன் சொல்லிவிட்டால்? தாங்க முடியுமா? அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நெஞ்சு கிடந்து அடித்தது. கைகால்களில் ஒரு நடுக்கம். கண்களில் இதோ இதோ என்று கண்ணீர் துளிர்த்தது.

காரணமேயின்றி அவன்மேல் காதல் கொண்டுவிட்ட அவளின் மனம், அவன் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ளப் பெரும்பாடு பட்டது.

முடிவு தெரியாமல் படும் அந்தப்பாட்டை அதற்கு மேலும் தாங்க முடியும்போல் தோன்றவில்லை அவளுக்கு. அவனின் முடிவைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற உத்வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ஒரு முடிவோடு அவன் புறமாகத் திரும்பினாள்.

அப்போதும் சாலையிலேயே பார்வையைப் பதித்திருந்தான் சூர்யா.

“உங்களுக்குப் பெண் பார்த்துவிட்டார்களா?” நினைத்ததை என்னவோ பிசிர் தட்டாமல் கேட்டுவிட்டாள் தான். ஆனால் பதில் வராமல் கடந்த அந்த நொடிகளைத்தான் கடக்கவே முடியவில்லை. நெஞ்சுக்குள் இருக்கும் இதயம் பந்தயக் குதிரையாய்க் கிடந்து அடித்துக்கொண்டது.

அவன் பதிலுக்காய் அவள் காத்திருக்க, அவனோ அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பழையபடி சாலையில் பார்வையைப் பதித்தான்.

அவனையே பார்த்திருந்தவளுக்கு இதுவரை இருந்த பயம் போய் இப்போது ஒருவிதப் பிடிவாதம் தோன்றியது. தன் மனதிலிருக்கும் அத்தனை கேள்விக்கும் பதில் தெரிந்தே ஆகவேண்டும் என்கிற எண்ணம் ஆணித்தரமாய்த் தோன்றியது.

“நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை…?!” என்றவளின் குரலிலும் பிடிவாதம் தெரிந்தது.

காதே கேளாதவனைப் போல் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான் அவன். அவளுக்கோ இப்போது கோபமும் எட்டிப்பார்த்தது.

“சூர்யா! என்ன இது? இங்கே நான் விசரி மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களானால் உங்கள் பாட்டுக்கு காரை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் என் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள்.” என்று சற்றுக் காட்டமாகவே கேட்டாள்.

முதன் முறையாக அவன் பெயரை உச்சரித்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட அவளுக்கில்லை! நிதானமாகக் காரைக் கொண்டுபோய் ஓரிடத்தில் நிறுத்தினான் அவன். அப்போதுதான் வெளிப்புறத்தை ஆராயந்தவளுக்கு தியேட்டரின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கார் வந்து நின்றிருப்பது புரிந்தது.

அவள் மனதில் போராடிக்கொண்டிருக்க, அவன் நிதானமாகத் தான் நினைத்த மாதிரிப் படம் பார்க்க வந்திருக்கிறான். கோபத்தோடு அவன் புறமாக திரும்ப அவனும் அவளையே பார்த்திருந்தான்.

அவன் பார்வையை தளராது எதிர்கொண்டு, “என் கேள்விக்குப் பதில் வேண்டும்..” என்று தைரியமாகவே கேட்டாள்.

“ஆமாம்! என் திருமணத்திற்குப் பெண் பார்த்துவிட்டார்கள் தான்! அதற்கென்ன இப்போது?” என்று, நீண்ட அமைதிக்குப் பிறகு வாயைத் திறந்தான் அவன்.

அவளுக்கு நெஞ்சில் இடியே இறங்கியது போலிருந்ததில், “என்னது?” என்றவளின் விழிகள் அவனை வெறிக்க, கண்ணீர் தன்பாட்டுக்குக் கன்னங்களில் வழியத் துவங்கியிருந்தது.

அதுவரை நேரமும் இருந்த நிதானம், நிமிர்வு, கோபம் எல்லாம் பறந்தோட, “நீங்கள் பொய்.. பொய்தானே சொல்கிறீர்கள்?” என்று உயிரைக் கையில் பிடித்தபடி உதடுகள் நடுங்கக் கேட்டாள்.

விழிகளை அகற்றாது அவளையே பார்த்தான் சூர்யா. கடந்தது நொடிப்பொழுதுதான். அடுத்தநொடி அவனின் இறுக்கமான கையணைப்புக்குள் கிடந்தாள் அவள் .

அது எப்படி நடந்தது என்பதை அவளறியாள்! ஆனால் அவன் அணைப்புக்குள் கிடப்பதே போதும் என்றாகிவிட, அப்படியே அவனுக்குள் அடங்கிப்போனாள். கண்மூடித் தன் கைவளைவில் கிடந்தவளின் கலைந்திருந்த நெற்றி முடிகளை விலக்கிவிட்டவனின் உதடுகள் அந்தப் பட்டு நெற்றியில் பதிந்தது.

“உன் மீது நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன்.” என்றவனின் உதடுகள் இப்போது அவள் கன்னத்துக்குத் தாவின.

கோபத்தில் இருப்பவனின் செயலா இது என்று யோதித்த மாத்திரத்தில் சிரிப்பு வந்துவிட, அவளின் செவ்விதழ்கள் புன்னகையில் விரிய, விழிகளோ அவனைப் பார்த்து நகைத்தன.

“என்ன சிரிப்பு? சேலையில் தேவதை மாதிரி அழகாய் இருக்கிறாயே என்று ஆசையாக அணைத்தவனைத் தள்ளி விட்டுவிட்டு இப்போது சிரிக்கிறாயா?” என்றவன், அவளின் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு, விழிகளின் மேல் தன் இதழ்களைப் பதித்தான்.

அவளுக்கு அவன் கேள்விக்குப் பதிலோ விளக்கமோ சொல்லத் தோன்றவில்லை. அதேபோல் அவனிடமிருந்து விலகவேண்டும் என்கிற எண்ணமும் வரவில்லை.

வெட்கத்தில் மலர்ந்த இதழ்களும், சிவந்துவிட்ட கன்னங்களுமாக அவன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் காதோரம் குனிந்து, “என்னை மணந்துகொள்கிறாயா லட்சனா?” என்று காதல் பொங்கக் கேட்டான் சூர்யா.

மூடியிருந்த அவள் விழிகள் சட்டென்று திறந்துகொள்ள, அந்த விழிகளில்தான் எத்தனை மகிழ்ச்சி! அவை ஆனந்தக் கண்ணீரைச் சிந்த, தன்னை மறந்து அவன் கழுத்தைக் கைகளால் சுற்றி வளைத்துத் தன்னோடு இறுக்கி, “நிச்சயமாக சூர்யா! நிச்சயமாக! உங்களை மட்டும்தான் என்னால் மணந்துகொள்ள முடியும்.” என்றவள், அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஆழப்பதித்தாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock