“இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் அன்பையோ, முத்தத்தையோ, அணைப்பையோ அந்த நொடியில் வெளிக்காட்டித்தான் நான் பார்த்திருக்கிறேன். நானுமே அப்படித்தான். மனதில் தோன்றுவதைப் பேசி, அதையே செய்து பழக்கப்பட்டவன். அங்கே மண்டபத்தில் உன்னைப் பார்த்ததும் அழகாய் இருக்கிறாய் என்று தோன்றியது. உன்னை அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. அதைச் செய்தேன்.. நீ கோபப்பட்டாய்..” என்றான் மண்டபத்தில் அவன் நடந்துகொண்டதுக்கு விளக்கமாக.
அவள் கண்களையே பார்த்து, “முடிந்தவரை உனக்காக நீ சொன்னதை நினைவில் வைத்திருக்க முயற்சிக்கிறேன். மற்றும்படி என்னுடைய இயல்பைத் தாண்டி என்னால் பொய்யாக இருக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை..” என்றான் தெளிவாக.
அவளுக்கு அவன் அப்படிச் சொன்னதே போதுமானதாக இருந்தது. உடனேயே எல்லாவற்றையும் மாற்ற முடியாதே! மெல்ல மெல்ல அவனுக்குச் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
எனவே மகிழ்ச்சியோடு சரியென்பதாகத் தலையாட்டினாள் லட்சனா. அவளின் அந்தச் செய்கையில் அவன் முகத்தில் புன்னகை பூத்தது.
“இனியாவது தியேட்டருக்குள் போவோமா? அல்லது இப்படியே பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போகலாமா?” என்று கேலியாக அவன் கேட்க,
“அது… என்னை வீட்டில் விட்டுவிடுங்களேன் சூர்யா.” என்றாள் அவள் மெல்லிய தயக்கத்தோடு.
“என்ன விளையாடுகிறாயா? சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டால், நீயும் வீட்டுக்குப் போகலாம் என்கிறாய். என்னதான் பிரச்சினை உனக்கு?”
“ம்ஹூம்.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை..” என்று அவசரமாக மறுத்துவிட்டு, தன்னையே குனிந்து பார்த்தபடி, “நான் சேலையோடு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்..?” என்றாள் தொடர்ந்து.
“முதலில் எதற்கெடுத்தாலும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிப்பதை நிறுத்து!” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.
“சேலையோடு இருந்தால் என்ன? அதுவும் ஒரு ஆடைதானே. அழகாக இருக்கிறது என்று பார்ப்பார்களே தவிர இதென்ன உடை என்று இங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் வா!” என்றவன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான்.
அதற்கு மேலும் அவனோடு வாதாடி அவன் கோபத்துக்கு ஆளாகும் தைரியம் அற்றவளாக அவளும் இறங்கினாள். மெல்லிய கூச்சம் ஒன்று ஆட்கொள்ள, கண்களைச் சுழற்றி யாராவது தன்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்று ஆராய்ந்தாள்.
அதை உணர்ந்து அவளை அழுத்தமாகப் பார்த்தவன், அவளின் கையைப் பிடித்து தியேட்டரின் உள்ளே அழைத்துச் சென்றான்.
டிக்கெட் எடுத்து, படியேறித் தியேட்டரின் உள்ளே சென்று, இருவர் அமரும் சோபா போன்ற இருக்கைகளில் அமரும் வரை அவளின் கையை அவன் விடவேயில்லை.
இருக்கையில் அமர்ந்ததும் தான், நடந்துவருகையில் எல்லோருக்கும் காட்சிப்பொருளாக இருக்கிறோமோ என்றிருந்த சங்கடம் அகன்று அப்பாடி என்றிருந்தது அவளுக்கு. எனவே நிம்மதியாக அமர்ந்துகொண்டாள். டிக்கெட் வாங்குகையிலேயே வாங்கிவந்த கோக்குகளில் ஒன்றை அவளுக்கு உடைத்துக் கொடுத்தவன் தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.
சற்று நேரத்தில் விளக்குகள் அணைந்து, படமும் தொடங்கியது.
அந்தோ பரிதாபம்! வேகமாக நகரும் பேச்சுவழக்கு டொச் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மொழியறியா மனுஷியாய் காட்சிகளைப் பார்த்தாவது கதையைப் புரிந்துகொள்வோம் என்று முயன்றவளுக்கு அதுகூட முடியாமல் போனது. சற்று நேரத்திலேயே சலிப்புத் தட்ட அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் படத்திலேயே முழுதாக மூழ்கிவிட்டது தெரிந்தது.
அவனுக்காகவாவது பொறுத்திருப்போம் என்று அவள் நினைக்கையில், அவள் புறமாகக் குனிந்து, “என்ன..?” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கேட்டான் சூர்யா.
ஆசையாகப் பார்க்க வந்த அவனாவது ரசித்துப் பார்க்கட்டும் என்று நினைத்து, ஒன்றுமில்லை என்பதாகத் தலையை ஆட்டினாள்.
அவன் அவளையே கூர்ந்து பார்க்க, ‘இவனொருத்தன் பிடிவாதத்துக்குப் பிறந்தவன்..’ என்று மனதில் நினைத்துக்கொண்டே, “ஒன்றுமே புரியவில்லை…” என்றாள் அவள் உதட்டைப் பிதுக்கியபடி.
அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு மலர்ந்தது அவன் முகத்தில்.
“இதற்குத்தான் இந்த நாட்டுக்காரன் ஒருத்தனை நண்பனாக்கு என்று அன்று சொன்னேன்.” என்றான் அவன், கேலி இழையோடிய குரலில்.
அவள் அவனைப் பார்த்து முறைக்க, விரிந்த புன்னகையோடு, “அருகில் வா. நான் தமிழில் சொல்கிறேன்.” என்றான் இதமாக.
ஆர்வமாகப் பார்க்கிறவனையும் குழப்ப வேண்டாம் என்று எண்ணி, “இ.. இல்லை வேண்டாம். நீங்கள் பாருங்கள்..” என்றாள் சனா. அதோடு, அவனுக்கு அருகே நகர வெட்கமாகவும் இருந்ததில் மறுத்தாள்.
“எது சொன்னாலும் கேட்டுவிடாதே..” என்றவன், அவள் புறமாக நகர்ந்து, படத்தில் நடப்பவற்றை முடிந்தவரை மெல்லிய குரலில் சாராம்சமாக தமிழில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன் சொல்வதையும் படத்தில் நடப்பதையும் வைத்து படத்தைப் புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தவளின் நாசியை ஒருவித நெடி தீண்ட, முகத்தைத் திருப்பி அவளுக்கு அடுத்த பக்கம் இருந்தவனைப் பார்த்தாள்.
அவன் கையில் பியர் டின்னைக் கண்டதும் அவள் விழிகளில் மெல்லிய அச்சம் பரவியது.
“இப்போது என்ன..?” என்று கேட்டான் சூர்யா மீண்டும்.
‘இவன் என்ன படத்தைப் பார்க்கிறானா அல்லது என்னையே பார்க்கிறானா..’ என்று மனதில் தோன்றியபோதும், “பக்கத்தில் இருப்பவன் சாராயம்.. பியர் குடிக்கிறான்.” என்றாள், விழிகளில் தெரிந்த பயம் குரலிலும் தெரிய.
‘அவன் பியர் குடித்தால் உனக்கென்ன..?’ என்கிற கேள்வியைத் தாங்கிவந்த அவன் விழிகளில் குறும்புதான் கூத்தாடியது.
அதை உணர்ந்து, “சூர்யா..!” என்று, மெல்லிய குரலில் சிணுங்கினாள் லட்சனா.
“பயமாக இருக்கிறது.” என்றாள் மீண்டும்.
“உன்னை…!” என்று செல்லமாகப் பல்லைக் கடித்தவன், அவளின் இடையில் கையைக் கொடுத்து தன்னருகே இழுத்து, அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“அச்சோ! விடுங்கள்! யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்.” பதட்டத்தில் படபடத்தவளின் பேச்சை அவன் காதிலேயே வாங்கவில்லை.
மாறாக, “இதற்கு மேலே நாம் போனாலும் இங்கே யாரும் பார்க்கமாட்டார்கள். அதனால் பேசாமல் படத்தைப் பார்!” என்றான் திரையில் பார்வையைப் பதித்து.
“என்னது…!?” என்றவளின் வாயிலிருந்து சத்தமே வரவில்லை.
‘இதற்கு மேலே போனாலும்…’ என்றதின் பொருளாக விபரீதமாக பலதை யோசித்தவள், அதையெல்லாம் அவன் செய்தாலும் செய்வான் என்று தோன்றவே, அவன் தோளிலேயே ஒன்றிக்கொண்டாள்.
அவளின் செய்கையில் அவனுடல் மௌனச்சிரிப்பில் குலுங்கியது. அதை உணர்ந்தவள் வெட்கத்தோடு அவன் கையைக் கிள்ளினாள்.
காதலோடு மென்மையையும் கலந்து ஆசையோடு அவன் அவளைக் குனிந்து பார்க்க, அவளும் அவனைத்தான் விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.
மோதிக்கொண்ட விழிகள் நான்கும் பேசிக்கொண்ட மொழி காதல் மட்டுமே!