இதயத் துடிப்பாய்க் காதல் 8 – 1

அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே!

உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட, இதழ்களில் புன்னகையைப் பூசிக்கொண்டே கட்டிலில் புரண்டவள் அருகிலிருந்த தன்னுடைய கைபேசியை எட்டி எடுத்து நேரத்தைப் பார்க்க, காலை ஆறு மணியை இன்னும் எட்டவில்லை என்றது அது.

உடனேயே சூர்யா எழுந்திருப்பானா என்று அவளின் எண்ணம் அவனை நோக்கிப் பாய்ந்தது.

அப்படியே அவன் எழாவிட்டால் என்ன, நாமே எழுப்பிவிட்டால் ஆயிற்று என்று எண்ணியபடி, நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதிந்துபோன அவன் இலக்கங்களை வேகமாகத் தட்டினாள்.

அங்கே ஆழ்ந்த துயிலில் இருந்தவன், அலாரம் அடிக்க முதலே அழைப்பது யார் என்று யோசித்தபடி கைபேசியை சோம்பலோடு எடுத்துப் பார்க்க, ‘லட்டு’ என்று மின்னியது.

“ஹாய் லட்டு! கூற்றன் மோர்கன்!” என்றான் தூக்கம் முற்றிலும் கலையாத கரகரத்த குரலில். செவிகளில் பாய்ந்த அந்தக் குரலே அவளை என்னவோ செய்ய, உடல் சிலிர்த்தது.

“என்னது…? லட்டா?” அவன் கூறிய காலை வணக்கத்துக்குப் பதில் வணக்கம் கூடச் சொல்ல மறந்து, மகிழ்ச்சியில் குழைந்தது அவள் குரல்.

“ஆமாம்! என்னுடைய லட்டு!” என்றான் ஆசையோடு.

“சூர்யா…!” உள்ளம் நெகிழ்ந்திருந்ததில் பேச வார்த்தைகளற்று அவன் பெயரையே வார்த்தையாக்கினாள் அவள். நெஞ்சில் ஒருவித பரவசம். இதுவரை அவளை யாருமே இப்படி அழைத்ததில்லை, அவளின் அண்ணா உட்பட!

“ஆமாம்! இந்தப் பக்கம் உன் சூர்யா. அந்தப் பக்கம் யாரோ?” என்றவனின் குரலில் தூக்கம் விடுபட்டுக் குறும்பு சேர்ந்திருந்தது.

“ம்.. அதுவா.. இந்தப்பக்கம் திருமதி சூர்யபிரகாஷ்…” இப்போது அவளுக்கும் அவன் குறும்பு தொற்றியிருந்தது. அதைக் கேட்டவன் மகிழ்ச்சி பொங்க வாய்விட்டுச் சிரித்தான்.

“என் திருமதி என் வீட்டில்தானே இருக்கவேண்டும். அதனால் என் வீட்டுக்கு வந்துவிடு!” என்றான் அவன் கொஞ்சலாய்.

அவன் வீட்டில், அவன் திருமதியாக வாழும் நாட்களை எண்ணியதுமே அவள் விழிகள் கனவில் மிதந்தன. அவன் சொன்னதுபோல இப்போதே அவனிடம் சென்றுவிட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். உள்ளம் ஏங்கியபோதும், இப்போது அவளால் அவன் திருமதியாக முடியாதே!

தன் ஏக்கத்தை மறைத்து, “அதற்கு காலநேரம் வரட்டும். உங்கள் திருமதி உங்களிடமே வருவாள்.” என்றாள், அந்தப் பொன்னான தருணத்தின் நினைவுகளைச் சுமந்தபடி.

“காலமாவது நேரமாவது. அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ சரியென்று ஒருவார்த்தை சொல். நான் இன்றே தாத்தாவை உங்கள் வீட்டுக்கு வந்து கதைக்கச் சொல்கிறேன்.” என்றான் அவன் தீவிரமான குரலில்.

“சூர்யா.. இப்போதே திருமணத்திற்கு என்ன அவசரம்? கொஞ்ச நாட்கள் நாம் காதலர்களாக இருக்கலாமே.” என்றவள், “இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்..?” என்று பேச்சை மாற்றினாள்.

ஒரு வாக்குவாதத்தை ஆரம்பித்து இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அவள்.

“என்ன செய்வேன்? கட்டிலில் படுத்திருக்கிறேன். உன்னை நினைத்துத் தலையணையை அணைத்துக்கொண்டு! அதற்கு முத்தம் வேறு கொடுத்துக்கொண்டு.” அந்தக் குரலே அவளை என்னவோ செய்தது!

அவளுக்குப் பதிலாக தலையணையா? அதற்கு முத்தம் வேறா? அந்தத் தலையணையாக அவள் மாறக்கூடாதா? நெஞ்சம் ஏங்கியது.

“அச்சோ.. என்னதிது? தலையணைக்கு யாராவது முத்தம் கொடுப்பார்களா..?” என்று மனதை மறைத்துக் கேட்டாள் சனா.

“யார் தலையணைக்கு கொடுத்தது. நான் உனக்குத்தான் கொடுத்தேன். கிடைத்ததா..?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்க, அவளுக்கு அந்த நொடியே அவன் கைகளுக்குள் அடங்கிட மாட்டோமா என்றிருந்தது.

மனதின் எண்ணங்களை எல்லாம் வெளியே சொல்லிவிட முடிகிறதா என்ன? தன் மனதின் ஆசைகளை மறைத்துக்கொண்டு சாதரணமாக கதைக்க முயன்றாள்.

“விடியற்காலையில் பேசும் பேச்சா இது…?” அவள் என்னவோ அதை கோபமாகத்தான் கேட்க நினைத்தாள். ஆனால் குரலோ குழைந்து, சிணுங்கி முணுமுணுப்பாக வந்தது.

அவளின் முணுமுணுப்பு அவன் காதில் தெளிவாக விழ, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சிவனே என்று தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பியது யார்? ஆசையாகப் பேசியது யார்? செய்வதையெல்லாம் நீ செய்துவிட்டு பிழையை என் மேல் போடுகிறாயா?” என்று அவளிடமே பிழை கண்டான் அவளின் பொல்லாத காதலன்!

எந்தப் பக்கம் பேச்சைத் திருப்பினாலும் மூச்சடைக்க வைக்கிறானே என்றிருந்தது அவளுக்கு.

“காலையில் விழித்ததுமே உங்கள் நினைவுதான் வந்தது. அதுதான் அழைத்தேன். அது தப்பா?” என்றவளுக்கு, இனியும் பேச்சை மாற்றும் விதம் தெரியவில்லை. அல்லது அவன் காதல் பேச்சுக்களில் உறைந்துவிட்ட மூளையால் சிந்திக்க முடியவில்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமோ..

“நீ அழைத்ததும் எனக்கும் நீயும் உன் அருகாமையும் வேண்டும்போல் இருந்தது. அது தப்பா..?” என்றான் அவனும் சிரிப்புடன்.

“ஐயோ சாமி! எதுவுமே தப்பில்லைப்பா. என்னை விட்டுவிடுங்கள்! இதுக்குமேல் என்னால் உங்களோடு மல்லுக்கட்ட முடியாது.” என்று அவனிடமே சரணடைந்தாள் அவன் காதலி!

அதைக்கேட்டுப் பெரிதாகச் சிரித்தவன், “அது! அந்தப் பயம் இருக்கட்டும்!” என்றான் பொய் மிரட்டலாக.

“நான் என்ன செய்யட்டும்? கனவிலும் நினைவிலும் நீங்கள்தான் வருகிறீர்கள். இரவு முழுக்க நான் தூங்கவே இல்லை தெரியுமா! கண் விழித்ததும் உங்களைத்தான் மனம் தேடுகிறது. உங்கள் குரலைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற ஆசையில்தான் அழைத்தேன்…” என்றாள் சலுகையுடன் அவள்.

“இதற்குத்தான் சொல்கிறேன். வா நாம் உடனே திருமணம் செய்துகொள்ளலாம்!” கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் கேட்டான் அவன்.

“போங்கள் சூர்யா. இப்போதே திருமணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். நானும் கொஞ்சம் மொழியைப் படிக்கவேண்டும். அதோடு ‘டிரைவிங்’ உம் பழகவேண்டும்…”

“அதற்கும் திருமணத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகும் அதைச் செய்யலாம். ஆனாலும்… ஓகே! உன் விருப்பம் போல் கொஞ்ச நாட்கள் போகட்டும். ஒரு மூன்றுமாதம்?” என்று இலகு குரலிலேயே விட்டுக் கொடுத்தான் அவன்.

“மூன்று மாதம் பாத்துக்கொண்டிருக்க ஓடிவிடும் சூர்யா. ஒரு.. ஒரு வருடம் போகட்டுமே..”

“முடியாது!” என்று உறுதியாக மறுத்தவன், “வேண்டுமானால் ஒரு ஆறுமாதம் பொறுக்கிறேன்!” என்றான்.

சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறானே என்று மனம் சிணுங்க அமைதியாக இருந்தாள் அவள். அவனும் பிடிவாதத்தில் குறைந்தவன் அல்லவே. அமைதியாகவே இருந்தான்.

தொடர்ந்த அமைதியைத் தாளமுடியாமல், “சூர்யா…?” என்று அழைத்தாள் லட்சனா.

கைபேசி அணைக்கபடாதபோதும் அவன் பேசவில்லை.

“சரி. நீங்கள் சொன்னதுபோலவே ஆறுமாதத்தில் வீட்டில் பேசலாம்…” என்று அவள்தான் இறங்கி வந்தாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock