“நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. வருகிறேன்…” என்றவள் எழுந்து வேக எட்டுக்களை எடுத்துவைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
மிக இலகுவாக நான்கடியில் அவளை எட்டியவன், “காரிலா வந்தாய்..?” என்று கேட்டான்.
“நடந்து.” என்றாள் சுருக்கமாக.
“அப்படியானால் என்னுடன் காரில் வா. உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன்…”
“தேவையில்லை. என்னால் நடந்துபோக முடியும். கேட்டதற்கு நன்றி.” என்றவள் நடையின் வேகத்தைக் கூட்டினாள். அவளுக்கு ஒரு நண்பனைப் பிடி என்று அவன் சொன்னதில் மிகுந்த கோபம் உண்டாகியிருந்தது.
அவனோ தன் இலகு நடையிலேயே அவளுடன் சேர்ந்தே இன்னும் நடந்தான்.
“உன் அப்பாவின் பெயர் என்ன..?” மீண்டும் அவனிடமிருந்து கேள்வி.
சினம் வந்தபோதும், “எதற்கு..?” என்று இப்போது அவளும் கேள்வி கேட்டாள்.
“இந்த ஊரில் கிட்டத்தட்ட பதினைந்து தமிழ்க் குடும்பங்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எனக்கு எல்லோரையும் தெரியும். அதுதான் நீ யார் வீட்டுப்பெண் என்று அறிந்துகொள்ளக் கேட்டேன்.” என்றான் விளக்கமாக.
“நீங்கள் தமிழா…?” அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது இதுவரை இருந்த பெரும் சந்தேகத்தைக் கேட்டாள் அவள்.
நடந்துகொண்டிருந்தவன் நின்றுவிட்டான். நின்றவன் இப்போது அவளை ஒருவிதமாகப் பார்த்தான்.
இவளுக்கு மறை ஏதும் கழன்றுவிட்டதா என்கிற சந்தேகம் இருந்தது அவன் பார்வையில். பின்னே, அழகான தமிழில் அழகாய்ப் பேசுபவனிடம் நீ தமிழனா என்று கேட்டால் வேறு என்னதான் நினைப்பது.
“என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது…?” என்று கேட்டவனின் விழிகளில், அவளின் எண்ணத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருந்தது.
“இந்த நாட்டுக்காரனைப்போல் இருக்கிறீர்கள்…” என்றவளுக்கு, அவன் மேல் இருந்த கோபம் மறைந்துவிட்டதா அல்லது மறந்துவிட்டதா?
“எதை வைத்துச் சொல்கிறாய்..?” கேள்வி கேட்பதை அவன் விட்ட பாடாக இல்லை.
“உங்கள் முகத்தில் மீசையைக் காணோம்..” என்றாள், நம்மவர்களின் அடையாளமே அதுதான் என்கிற தொனியோடு.
அதைச் சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருந்தபோதும் அவன் தானே கேட்டான் என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
அவன் விழிகளில் சிரிப்பு வந்தது.
அதைக் காட்டாது, “ஏன், தமிழர்கள் எல்லோரும் இப்போது மீசையோடுதான் இருக்கிறார்களா..?” என்று கேட்டான்.
“இல்லைதான். ஆனாலும் பெரும்பாலானவர்கள் மீசை வைத்திருப்பார்கள். அதோடு உங்கள் முடிவேறு செம்பட்டையாக இருக்கிறதே…” என்று தன் கருத்துக்கு வலு சேர்த்தாள் அவள்.
“செம்பட்டை…? அப்படி என்றால்…” அவனுக்குப் புரியவில்லை.
“அதுதான், இந்த நாட்டுக்காரர்களின் பூனை முடியைப்போல் உங்கள் முடியும் மஞ்சள் கலரில் இருக்கிறதே…”
விழிகளில் தேங்கியிருந்த சிரிப்பு முகமெல்லாம் பரவ, வெண்பற்கள் பளீரிட வாய்விட்டுச் சிரித்தான் அவன்.
பின்னே சில நூறு யூரோக்களைக் கொடுத்து, அவனின் கரிய அடர்ந்த சிகைக்கு கோல்ட் மற்றும் மெல்லிய பிரவுன் நிறங்களை கலந்த டையை அடித்து, கறுப்பு, பிரவுன், கோல்ட் என்று அலையலையாக மின்னும்படி அவன் விரும்பிச் செய்த சிகையலங்காரத்தை ‘செம்பட்டை’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாளே அவள்.
போதாக்குறைக்கு ‘பூனைமுடி’, ‘மஞ்சள் கலர்’ என்று வேறு சொல்லிவிட்டாள். அவன் தமிழன் இல்லை என்பதற்குச் சான்றாகவும் அல்லவா அதைக் காட்டிவிட்டாள்.
பல பெண் தோழிகளைப் புதிதாகத் தேடிக்கொடுத்த அவனின் சிலையலங்காரத்துக்கு இந்த நிலையா?
“எதற்காகச் சிரிக்கிறீர்கள்..?” அவனின் சிரிப்பின் அர்த்தம் புரியாதவளின் முகத்தில் மெல்லிய ரோசம் வந்திருந்தது.
“உன் அருமையான விளக்கத்தைக் கேட்டு அதிசயித்துச் சிரிக்கிறேன்…” என்றான் அப்போதும் நகை மாறா முகத்துடன்.
“அப்படியானால் நான் சொன்னது சரிதானே…?” ஆவலோடு கேட்டாள் அவள்.
“நீ கேட்கும் விதத்துக்கு ஆம் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மை அதுவல்லவே…” என்றான் அவன் கைகளை விரித்து.
“அப்போ.. உங்கள் அம்மா இந்த நாட்டுக்காரியா…?” அவளும் விடுவதாக இல்லை.
“இல்லையே. அவர்கள் தமிழ்தான்..” என்றான் வாடாத புன்னகையோடு.
“உங்கள் அப்பா இந்த நாட்டுக்காரர் தானே..?” விடை கண்டு பிடித்துவிட்ட குதூகலத்தோடு அவள் கேட்க,
“அம்மாடியோ! இதோடு உன் கற்பனையை நிறுத்திவிடு. என் வீடும் தாங்காது. நானும் தாங்கமாட்டேன். நான் தமிழன்தான். என் அம்மா அப்பாவும் தமிழர்கள் தான். ஏன், என்னுடைய தாத்தா பாட்டி கூடத் தமிழர்கள் தான்..” என்றான் அவன் வேகமாக.
“ஓ….” என்றவளின் பார்வை, நீ சொல்வது உண்மையா என்கிற ரீதியில் அவனை ஆராய்ந்தது.
அவளின் பார்வையில் விரிந்த புன்னகையோடு, “நடந்துகொண்டே கதைக்கலாமே…” என்றவன், அவளோடு சேர்ந்து நடந்தான்.
‘இவ்வளவு நிறமாக வேறு இருக்கிறானே… இவனானால் தான் தமிழன் என்கிறான்…’ என்று ஓடிய அவளின் சிந்தனையை,
“உன் அப்பாவின் பெயரை நீ இன்னுமே சொல்லவில்லையே..:?” என்கிற அவன் கேள்வி தடுத்தது.
நெஞ்சடைத்தது அவளுக்கு. சற்றுத் தூரம் அமைதியாக நடந்தவள், “அவரை உங்களுக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அத்தான் சிவபாலனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.” என்றாள்.
“யார்..? சைந்தவியின் அப்பாவையா சொல்கிறாய்..?”
“ஆமாம். உங்களுக்கு சைந்துக்குட்டியைத் தெரியுமா..?”
“ம். அவளின் தோழி திபிகாவின் சித்தப்பாதான் நான்..” என்றவன், “நீ…?” என்று இழுக்க,
“என் அக்கா சுலக்சனாவின் மகள்தான் சைந்து. அக்கா கணவர் சிவபாலன்.” என்று சொன்னாள் அவள்.
கதைத்துக்கொண்டே அவனது கார் நின்ற இடத்துக்கு அவர்கள் வந்துவிடவும், கையில் இருந்த கார்த்திறப்பின் பட்டனை அழுத்திக் காரின் லொக்கை அகற்றினான் அவன்.
“இப்போதுதான் நாம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டோமே. போதாக்குறைக்கு நான் தமிழன்தான் என்றும் தெரிந்துகொண்டாய். வருகிறாயா, உன் அக்கா வீட்டில் இறக்கிவிடுகிறேன்..” என்று புன்னகையோடு கேட்டான் அவன்.
அவள் முகத்திலும் அந்தப் புன்னையின் எதிரொலி தெரிந்தது.
“நான் நடந்தே போகிறேன். எனக்கு நடக்கத்தான் விருப்பம். அதோடு வீடும் கிட்டத்தானே…” என்று தன்மையாகவே தன் மறுப்பைச் சொன்னாள் லட்சனா.
உன் விருப்பம் என்பதாகத் தோளைத் தூக்கியவன், ஒரு “வருகிறேன்..” உடன் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.