இதயத் துடிப்பாய்க் காதல் 9 – 1

அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்யா…?” என்று கேட்டாள்.

கருப்புநிற ஜீன்சும் வெள்ளையும் சிவப்பும் கோடுபோட்ட ‘டாப்’உம் அணிந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தவளை ரசித்துக்கொண்டே, “காதலிக்க…” என்றான் சூர்யா.

அதைச் சொல்லும்போதே அவன் முகம் புன்னகையில் விரிய அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“இந்தப் பேச்சை விடவே மாட்டீர்களா…?”

“ஏன் விடவேண்டும்?” என்று அவன் வம்பை வளர்க்க,

“கடவுளே…! தெரியாத்தனமாக உங்களிடம் வாயை விட்டுவிட்டு நான் படும் பாடு இருக்கே…!” என்று சலுகையோடு சலித்துக்கொண்டாள் அவள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் குறும்பில் மின்னியது. அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோதும் வில்லங்கமாக ஏதோ ஒன்றைச் சொல்லப்போகிறான் என்று தோன்ற, “என்ன…?” என்று கேட்டாள்.

“இல்லை.. உன் வாயை என்னிடம் விட்டுவிட்டதாக சொல்கிறாயே..” என்று அவன் நகைப்போடு இழுக்க, “உங்களை…!” என்றவள் சிவந்துவிட்ட முகத்தை எங்கே மறைப்பது என்று தெரியாமல் தடுமாறி, “என்னவெல்லாம் சொல்கிறீர்கள். சுத்த மோசம் நீங்கள்..!”என்றபடி அவன் தோளில் அடிக்க, அப்போதும் அடக்கமாட்டாமல் நகைத்தான் சூர்யா.

“சிரிக்காதீர்கள் சூர்யா…” என்று சொன்னவளுக்குமே சிரிப்பு வந்துவிட அந்தக் காரில் சிறிது நேரத்திற்கு அவர்கள் இருவரினதும் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்டது.

“விளையாடாமல் சொல்லுங்கள் சூர்யா! நாம் இப்போது எங்கே போகிறோம்..?”

“உன்னுடைய இந்த சோடாபுட்டிக் கண்ணாடியை தூக்கிவிட்டு லென்ஸ் வைப்போமா?” அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கேட்டான் சூர்யா.

“ஏன், கண்ணாடி எனக்கு நன்றாக இல்லையா?” சாதரணமாகத்தான் கேட்க நினைத்தாள். ஆனாலும் அவளையும் மீறி முகம் வாடியது. கண்ணாடியில் தான் அழகில்லையோ, அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்று தோன்றியதும் நெஞ்சில் வலியொன்று எழுந்தது.

“அழகாய் இல்லாத என்னை எதற்குக் காதலிக்கிறீர்கள்..?” அவனின் பதிலைக் கேட்கும் பொறுமையைக் கூட இழந்து படபடத்தாள்.

“இப்படிப் படபடக்கிறாயே.. பொறுமையே இல்லையா உனக்கு..?” என்று கடிந்தவன், “நீ அழகில்லை என்று எந்த மடையன் சொன்னது…?” என்று பதில்கேள்வி கேட்டான்.

“உண்மையாகவா? நான் அழகா? என்னைப் பிடிக்குமா உங்களுக்கு…?” முகம் மலர அடுக்கடுக்காய் கேள்வி கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.

“பிடிக்காமல் தான், உன்னை நினைத்துத் தலையணைக்கு முத்தம் கொடுக்கிறேனாக்கும்.”

முகத்தில் நாணத்தின் சாயல் தோன்றியபோதும், “பிறகு எதற்கு லென்ஸ் வைக்கச் சொல்கிறீர்கள்..?” என்று கேட்டாள் அவள்.

“எனக்கு கண்ணாடி தொந்தரவாக இருக்கிறது…”

“தொந்தரவா..?” புரியாமல் அவள் அவனைப் பார்த்துப் புருவங்களைச் சுருக்கினாள்.

காரை ஓட்டியபடி அவள் பக்கமாகச் சரிந்துகொண்டே, “பார்.. நான் உன்னை முத்தமிட நெருங்கினால், ஏதோ சீனச்சுவர் போல் அது எனக்குத் தடையாக இருக்கிறது..” என்றான் கண்ணடித்து.

அவனின் செய்கையில் புன்னகை வந்தபோதும், தன்னை நெருங்கியவனை இரு கைகளையும் நீட்டித் தடுத்துத் தள்ளியவள், “கார் ஓடும்போது இது என்ன விளையாட்டுச் சூர்யா…? ஒழுங்காகக் காரை ஓட்டுங்கள்…” என்றாள் பதற்றம் தொற்றிக்கொள்ள.

“இல்லை.. உனக்குச் செயல்முறையில் விளக்கம் தரலாம் என்று பார்த்தேன்.” என்றவன் அவள் முறைக்கவும், “சரி சரி விடு. லென்ஸ் உனக்குக் கண்ணாடியை விட வசதி..” என்றான் விளையாட்டை விட்டுவிட்டு.

“ம்ம்ம்.. அக்காவும் சொன்னார்கள் தான். நான்தான் லென்ஸை கண்ணுக்குள் வைக்கும் போது வலிக்குமே என்று பயந்து விட்டுவிட்டேன்.”

“வலிக்காது லட்டு. எதற்கும் முதலில் நாம் வைத்துப்பார்க்கலாம். வலித்தால் விட்டுவிடலாம்..” என்றான் மென்மையாக.

அப்போதும் அவள் அரைமனதாக, “ம்ம்…” என்று இழுக்க,

“உனக்கு விருப்பம் இல்லையென்றால் வேண்டாம்…” என்றான் அவன்.

சாலையில் பார்வையை பதித்து காரோட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு இன்னும் காதல் பொங்கியது. ஏதோ ஒருவிதத்தில் அவள் கண்ணாடி அணிவதை அவன் ரசிக்கவில்லை. ஆனால் அவளுக்கு அவ்வளவாக விருப்பத்தைக் காணோம் என்றதும் விட்டுக்கொடுக்கிறான். ஆனால் அவன் ரசிக்கத்தானே அவள்! இது புரியவில்லையா அவனுக்கு!

‘உனக்கு லென்ஸ் தான் அழகாக இருக்கும். மாற்று..’ என்றால் மாற்றிவிட்டுப் போகிறாள். அவனுக்காக அவள் எதுவும் செய்வாளே! அப்படியிருக்க இதைச் செய்ய மாட்டாளா..

“நாம் போகலாம் சூர்யா..” என்றாள் லட்சனா.

அவன் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “உங்களுக்குப் பிடித்தமாதிரி இருக்கத்தான் எனக்குப் பிடிகிறது.” என்றவள், அவன் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டாள்.

“உனக்குப் பிடிக்காமல் செய்ய..” என்றவனை சொல்லிமுடிக்க விடாது,

“போகலாம் சூர்யா…!” என்று மீண்டும் அவள் அழுத்திச் சொல்லவும், “உனக்கு நன்றாக இருக்கும் லட்டு…” என்றான் அவன் முகம் மலர.

மூக்குக் கண்ணாடி மற்றும் லென்ஸ் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்யும் கடைக்கு அவளை அழைத்துச் சென்றான் சூர்யா.

அவளின் கண்களையும் கண்ணாடியையும் பரிசோதித்து, அவளுக்குப் பொருத்தமான லென்ஸ் எடுத்துவர அங்கே பணிபுரியும் பெண் உள்ளே சென்றுவிட, சனாவோ சூர்யாவின் கையை இறுகப் பற்றினாள்.

‘இதெற்கெல்லாம் பயப்படுவாயா?’ என்று கேலிசெய்ய வாயெடுத்தவன், அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து நிஜமாகவே பயப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்.

“இதில் பயப்பட ஒன்றுமே இல்லை லட்டு. கண் ஆபரேஷனையே இப்போதெல்லாம் மிக இலகுவாகச் செய்கிறார்கள். இது சும்மா கண்ணுக்குள் வைப்பதுதான்.” அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டே சொன்னான்.

“அப்படி வலித்தால் சொல்லு நாம் மறுத்துவிடலாம். சரியா?” என்றான் மீண்டும்.

“ம்ம்..” என்று அவள் தலையாட்டவும், அங்கே பணிபுரிபவள் ‘லென்ஸ்’ உடன் வரவும் சரியாக இருந்தது.

“லென்ஸ் வைப்பது மிக இலகுவானது. நான் கூட வைத்திருக்கிறேன். இதைப் பழகிவிட்டாய் என்றால் பிறகு உனக்குக் கண்ணாடி பிடிக்காமல் போய்விடும்…” என்று விளக்கிய அந்தப் பெண்,

“இங்கே பார்…” என்று தன்னுடைய கண்களில் இருந்து லென்ஸை மிக இலகுவாக எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் பொருத்திக் கொள்ளவும் சனாவுக்கு வியப்பாக இருந்தது.

“இப்போது உனக்கு வைத்துப் பார்க்கலாமா..?” என்று அவள் கேட்க, சரியென்பதாக தலையை அசைத்தவளுக்கு இருந்த தயக்கம் பெரும்பாலும் அகன்றிருந்தது.

எப்படி லென்ஸை விழிகளுக்குள் வைக்கவேண்டும் என்று அவள் காட்டிக்கொடுக்க, புரியாதவற்றை சூர்யா விளக்க, மனதில் மெல்லிய பயரேகைகள் ஓட, அதைத் தன் ஒருபக்கக் கருவிழிக்குள் மெல்ல மெல்லப் பொருத்தினாள் சனா.

லென்ஸை உள்வாங்கிய விழி கலங்கினாலும் சிறிது நேரத்தில் பழைய படிக்குத் திரும்ப பார்வை மிகத் தெளிவாகத் தெரிந்தது.

முகம் ஒளிர, “இப்போது எனக்கு ஒன்றும் செய்யவில்லை சூர்யா. ” என்றாள் மகிழ்ச்சியுடன்.

மற்றக் கண்ணுக்கும் லென்ஸை வைக்கையில் முதலில் இருந்த பயம் நீங்கியிருந்தது அவளுக்கு.

“இதை மூன்று வாரங்கள் பாவி. அப்போது தலைவலி, கண்களில் சிவப்பு அல்லது எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இப்படி ஏதாவது மாற்றம் தெரிந்தால் வா. அப்படி எதுவும் இல்லை என்றால் மூன்று வாரங்கள் கழித்து வா.” என்றவளிடம் தங்களுடைய சிறு சிறு சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

காரில் ஏறியதும் அவன் கையோடு தன் கையைக் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது தெரியுமா? நீங்கள் வற்புறுத்தியிருக்கா விட்டால் நான் வைத்திருக்கமாட்டேன். என்னை இங்கு கூட்டி வந்ததற்கு நன்றி சூர்யா..!” என்றாள் மகிழ்ச்சியோடு.

“இனி இப்படி எதற்காவது எனக்கு நன்றி சொன்னாயானால் அடிதான் வாங்குவாய்.” என்றான் மிரட்டலாக.

“நன்றி சொல்லத் தோன்றினால் சொல்லத்தானே வேண்டும்..” முத்துச்சிரிப்பை முகத்தில் சிந்தியபடி சொன்னவளை அவன் விழிகள் விழுங்கியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock