“உங்களோடு வந்து லென்ஸ் வைத்ததற்கு அக்காவிடம் என்ன காரணம் சொல்ல முடியும் சூர்யா? ‘அவர் என் காதலன், அதனால் அவரோடு போனேன்’ என்றா..?” அவன் வாயை அடைத்துவிடும் இடக்கோடு கேட்டாள் லட்சனா.
“அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதோடு சொல்ல மறுப்பவளும் நீதான். இதிலே எனக்குப் புரியாதது என்னவென்றால், நீ சொன்ன பொய்க்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான்.” என்று அவன் கேட்க, அவளுக்கோ தன் தலையை எங்காவது சுவரில் முட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது.
பின்னே, அவன் குணம் தெரிந்தும், இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்வான் என்று அனுபவ ரீதியாக அறிந்திருந்தும் அவனிடம் ஏறுப்பட்டது அவள் தவறுதானே.
“ஐயோ சாமி! உங்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. நான் மட்டும்தான் காரணம். தெரியாமல் கேட்டுவிட்டேன். விட்டுவிடுங்கள். என்னால் முடியவில்லை சூர்யா…” கோபமாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கையில் ஓய்ந்திருந்தது.
அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டும்தானே அவளால் சொல்லவும் முடியும்.
என்ன, அவள் மீதே அவளுக்கிருந்த கோபத்தை அவனிடம் காட்டினாள். அதுதான் அவள் செய்த பிழை! அதற்காக எப்போது பார்த்தாலும் அவளையே குற்றம் சாட்ட வேண்டுமா? ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனுசரணையாகத் தன்னும் அவன் எதுவும் பேசவில்லையே!
அவனின் ஆதரவும் தனக்கில்லை என்று நினைத்தவளுக்கு சுயவிரக்கத்தில் தொண்டை அடைத்தது.
அவளின் ஓய்ந்த குரலில் எதை உணர்ந்தானோ, “லட்டு…?!” என்று மிக மிக மென்மையாக அழைத்தான் சூர்யா.
“ம்ம்…”
“இதெல்லாம் பெரிய விசயமே இல்லை லட்டு. காதல் என்கிற பெயரில் அடுத்தவரின் இதயத்தையே திருடுகிறோமாம். திருட்டோடு ஒப்பிடுகையில் பொய் சொல்வது சின்ன விஷயம் தான். அதோடு காதலில் பொய் சொல்வதற்கு அனுமதி உண்டு.” என்று புதுவித நியாயம் சொன்னான் அவளின் அடாவடிக் காதலன். அதைக் கேட்டவளுக்கு கவலை அகன்று சிரிப்பு வந்தது.
“சூர்யா! உங்களை என்ன செய்தால் தகும்…” என்றவள் இயல்பு நிலைக்கு மீண்டிருந்தாள். இதை வேண்டித்தானே அவள் அவனை அழைத்தது.
“அதை நானும் முதலே சொல்லிவிட்டேன்…” என்றான் அவனும் மலர்ந்த புன்னகையோடு.
“சித்தி.. இவ்வளவு நேரம் உள்ளே இருந்து என்ன செய்கிறீர்கள்..?” என்று சைந்துவின் குரல் கேட்கவும், “ஐயோ சூர்யா.. சைந்து வருகிறாள். வைக்கிறேன். நாளை பார்க்கலாம். பாய்!” என்றவள் அவன் பதிலுக்காகக் கூடக் காத்திராமல் கைபேசியை அணைத்தாள்.
“இதோ வருகிறேன் சைந்து..” என்று சைந்துவுக்கு குரல் கொடுத்துவிட்டு, வேகவேகமாக உடையை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.
சூர்யாவுடனான சந்திப்புக்களும், சின்னச்சின்ன கருத்து மோதல்களும், அதன் பின்னான சமாளிப்புக்களும் என்று இனிதாகவே லட்சனாவின் நாட்கள் நகர்ந்தது.
மனதுக்குள் டிரைவிங் பழகப் போவதைப் பற்றி அக்கா அத்தானிடம் எப்படிச் சொல்வது என்கிற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. ஆனாலும், மறந்தும் அதைச் சூர்யாவிடம் சொல்லவில்லை. சொன்னால் என்ன சொல்வான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?
டிரைவிங் பழகுவதற்கான வகுப்புக்களுக்குப் போகவில்லையா என்று அவ்வப்போது கேட்ட சூர்யாவிடம், தமிழில் கொஞ்சம் படித்துவிட்டுப் போகிறேனே என்று சமாளித்தாள்.
அன்று வேலைக்கும் போய்விட்டு சூர்யாவோடும் நேரத்தைக் கழித்துவிட்டு வந்தவள், எப்படியாவது அக்கா அத்தானிடம் டிரைவிங் பழகுவது பற்றி இன்று சொல்லியே ஆகவேண்டும் என்கிற நிலையில் இருந்தாள்.
காரணம், அன்று சூர்யாவுக்கும் அவளுக்கும் மீண்டும் வாக்குவாதம் வந்திருந்தது.
எப்போதும் போல், “எப்போது வகுப்புக்கு போகப் போகிறாய்..?” என்று அவன் கேட்க, “கொஞ்ச நாட்கள் போகட்டும்.” என்று அவள் சொல்ல, அவனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன, என் பணத்தில் பழகுவதில்லை என்று முடிவேதும் எடுத்திருக்கிறாயா?’” என்று கேட்டான் அவன்.
மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல், “அடுத்த வாரத்தில் இருந்து போகிறேன்..” என்று சொல்லிவிட்டாள்.
இனி அவன் விடவும் மாட்டான். அதோடு பணத்தைக் கட்டிப் பதிந்துவிட்டுப் படிக்கப் போகாமல் இருந்தால் கட்டிய பணமும் கிடைக்காது என்கிற நிலை. ஆக, வீட்டில் சொல்லியே ஆகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, சிவபாலன் சாதரணமாக ஆரம்பித்த பேச்சு பேருதவி செய்தது.
“ஜெயன் இங்கே வரும்போது, அவனிடம் அங்கு எடுத்த டிரைவிங் ‘லைசென்ஸ்’ஐக் கொண்டு வரச் சொல்ல வேண்டும் சுலோ. அவனோடு கதைக்கும்போது எனக்கு நியாபகப் படுத்து. இல்லாவிட்டால் நான் மறந்துவிடுவேன். அதைக் காட்டினால், இங்கு மற்றவர்கள் போல் முதலில் இருந்து பழகத் தேவை இல்லை. எழுத்துப் பரீட்சை எழுதிவிட்டு, நேரடியாக ஓடிக் காட்டினால் போதும்..” என்றார் சிவபாலன் மாலைத் தேநீர் அருந்தியபடி.
“ம்ம்.. எப்படியும் அவன் வர இன்னும் ஒரு மாதம் செல்லும் தானே. நீங்கள் மறந்தாலும் நான் அவனிடம் சொல்லிவிடுகிறேன்..” என்றாள் சுலோ.
இதைக் கேட்டிருந்த சனா, “அத்தான், நானும் டிரைவிங் பழகட்டுமா..?” என்று மெல்லக் கேட்டாள்.
“இதென்ன கேள்வி சனா. கட்டாயம் நீயும் பழகத்தான் வேண்டும். இந்த நாட்டில் லைசென்ஸ் இல்லாமல் வாழ்வது கஷ்டம். நீ கொஞ்சம் மொழியைப் பழகியதும் பழகச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஜெயனுக்கு அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் இருப்பதால் பெரிதாகப் படிக்கவேண்டிய அவசியம் வராது..” என்றார் அவர்.
“அத்தான், அந்தக் கேள்விகள் தமிழிலும் இருக்கிறது. அதனால் டொச் நன்றாகத் தெரியவேண்டும் என்று கட்டாயமில்லை.” ஆர்வத்தில் வாயை விட்டாள் சனா.
“ஓ.. எனக்கு இந்த விஷயம் தெரியாதே..” என்றவர் அவளிடம் திரும்பி, “உனக்கெப்படித் தெரியும்..?” என்று கேட்டார்.
பதில் சொல்ல முடியாமல் திரு திரு என்று முழித்தாள் சனா. தமக்கையிடம் இலகுவாகப் பொய்யைச் சொல்ல முடிந்தவளுக்கு அவரிடம் அது முடியவில்லை. பெரும் சிரமப்பட்டாள்.
அவர்கள் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து, “அன்று.. அன்று லென்ஸ் வைக்கப் போன அன்று சூர்யா சொன்னார். அது.. அது.. ஏதோ இணையத்தில் தேடியபோது பார்த்தாராம்..” என்றாள் திக்கித் திணறி. நானே இணையத்தில் பார்த்தேன் என்று சொல்லியிருக்கலாம்தான். முடிந்தவரை உண்மையைச் சொல்ல நினைத்தாள்.
“ஓ.. தமிழில் இருப்பது நல்லதுதான். அப்படியானால் உனக்கும் பதிந்துவிட்டால் நீயும் பழகிவிடுவாய்.” என்றார் அவர்.
அவரிடம் ஏற்கனவே பதிந்துவிட்டேன் என்பதை எப்படிச் சொல்வது?
“அத்தான், நானாகப் பதியவா..?” எழும்பாத குரலில், உள்ளம் நடுங்க மெல்லக் கேட்டாள்.
“அப்படி என்றால்… புரியவில்லை சனா..”
“இல்லை.. இப்போது நான் கொஞ்சம் டொச் கதைப்பேன் தானே.. அதுதான் நானாகவே போய்ப் பதியவா என்று கேட்டேன்…”
“அட..! பார் சுலோ, நம் சனாவுக்கு அந்தளவுக்கு டொச் தெரியுமாம்…” என்று அவர் கேலி பேச,
“என் தங்கையும் என்னைப் போலக் கெட்டிகாரியாக்கும். உங்களுக்கு எப்போது பார்த்தாலும் அவளைக் கேலி செய்வதுதான் வேலை. உங்கள் தம்பியும் வருவான் தானே. அவன் என்ன செய்கிறான் என்று நானும் பார்கிறேன்.” என்று கணவரிடம் தங்கையை விட்டுக் கொடுக்காது சொன்னாள் சுலோ.
குன்றிப் போனாள் சனா. அவளை எவ்வளவு நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு அவள் தகுதியற்றவள் ஆகிவிட்டாளே. அவள் செய்யும் பித்தலாட்டங்கள் எல்லாம் தெரியும் நிலை வந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதைவிட, எவ்வளவு வேதனைப் படுவார்கள். அதுவும் அத்தான் என்ன நினைப்பார் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்கு உடலும் உள்ளமும் நடுங்கியது.
சூர்யா சொன்னான் என்று அன்று பதிந்துவிட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிந்தது. காதலனுக்கும் அவன் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்த நீ உன் வீட்டினரைப் பற்றி யோசிக்க மறந்தாயே என்று அவள் உள்ளமே அவளைக் குத்தியது.
கண்கள் கலங்கியது. பெரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஆனால் சனா, எதற்கும் நீ அத்தானோடு போ. எதையாவது பிழையாகச் செய்துவிட்டாய் என்றால் என்ன செய்வாய்…” என்ற சுலோவை மறித்தார் சிவபாலன்.
“தைரியமாக இருப்பவளை நீ பயப்படுத்தாதே சுலோ. மொழியை எழுதிப் படிப்பதை விட, பலரோடு பலதையும் வாய்விட்டுக் கதைத்தால் தான் வேகமாகப் பழகமுடியும். அதனால் நீயே போய்ப் பதி சனா.” என்று தவித்துக்கொண்டிருந்தவளின் மனதில் பாலை வார்த்தார் அவர்.
இனி நாளை மறுநாள் வேலை முடிந்து வந்து பதிந்துவிட்டேன் என்று சொன்னால் இந்தப் பிரச்சினை முடிந்தது என்று எண்ணம் ஓடியது.
பதிந்த துண்டைக் காட்டு என்றால் என்ன சொல்வது என்று யோசனை ஓட, அதற்கும் எதையாவது சொல்லிச் சமாளிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு பக்கம் இந்தப் பிரச்சினைக்கு வழி கிடைத்துவிட்டது என்று நிம்மதியாக உணர்ந்தாலும், அதற்காக எவ்வளவு பொய்கள், எவ்வளவு சமாளிப்புக்கள் என்று நினைக்க மனம் கனத்தது. எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு!
இது கேட்பார்கள், அது கேட்பார்கள், பயப்படாமல் கதை, பிழையாகக் கதைத்தாலும் பரவாயில்லை என்று ஒவ்வொரு சின்ன விசயத்தையும் தவறவிடாது, சிவபாலன் சொல்லச் சொல்ல அவள் உள்ளுக்குள் குன்றிக்கொண்டே போனாள்.
“பணம் அக்காவிடம் வாங்கிக்கொள்..” என்றபோதும், அவளால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
வாயைத் திறந்து எதையும் கதைக்க முடியாமல் தலையை மட்டுமே ஆட்டி எல்லாவற்றிற்கும் சரி என்றாள் லட்சனா.