இதயத் துடிப்பாய்க் காதல் 12 – 1

அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காதுக்குக் கொடுத்து, தூக்கம் முற்றிலும் கலையாத குரலில், “ஹலோ..” என்றான்.

“ஹாய் சூர்யா.. கூற்றன் மோர்கன்..” என்றாள் சனா காலை நேரத்துக்கே உரிய உற்சாகக் குரலில்.

இப்போதெல்லாம் இது வழக்கமான ஒன்றாகி விட்டிருந்தது. அவன் எத்தனை மணிக்கு எழுவான், அதன் பிறகு என்ன செய்வான், எத்தனை மணிக்கு வேலைக்குச் செல்வான் என்பதெல்லாம் லட்சனாவுக்கு அத்துப்படி.

அது மட்டும் இல்லாமல் இப்போதெல்லாம் அவனின் அலாரமாக அவள் மாறிப்போனாள் என்பதுதான் உண்மை.

அவளின் காலை வணக்கத்துக்கு அவனிடம் பதில் இல்லாமல் போகவே, “சூர்யா…” என்று இதமாக அழைத்தாள்.

“ம்….”

“இன்னும் எழுந்துகொள்ளவில்லையா. எழுந்திருங்கள். வேலைக்கு நேரமாகிவிட்டது…”

“என்ன லட்டு நீ. இரவு உனக்கு நான் ‘தூங்கப்போகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பும் போதே பன்னிரண்டு மணியாகிவிட்டது. என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவிடேன்…” என்றான் அப்போதும் தூக்கம் கலையாத குரலில்.

“நீங்கள் இப்படித் தூங்கினால் பாட்டியை யார் கண் வைத்தியரிடம் கூட்டிச் செல்வது சூர்யா? வேலைக்குப் போக முதல் அங்கு போகவேண்டும் என்றீர்களே?” என்று அவன் செய்ய வேண்டியதை நினைவு படுத்தினாள்.

“ஹேய்.. ஆமாமில்லையா! நல்லகாலம்! நினைவுபடுத்தினாய் லட்டு. இல்லாவிட்டால் மறந்திருப்பேன்..” என்றவன் விழுந்தடித்துக்கொண்டு எழுகிறான் என்று அவன் பேச்சிலிருந்தே புரிந்தது.

“நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் சூர்யா. இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் வேலையைப் பாருங்கள்.” என்று இதமாகச் சொன்னவள், “நேற்று நான் சொன்னது நினைவிருக்கிறது தானே…?” என்று கேட்டாள்.

“ம்ம்.. ஆனால் முழுதாகச் சவரம் செய்தால் தான் என் முகத்தையே என்னால் பார்க்கமுடியும் லட்டு..” என்றான் அவள் எதைக் கேட்கிறாள் என்பதை உணர்ந்து.

“நீங்களாகவே ஏன் அப்படி நினைக்கிறீகள் சூர்யா. நான் சொல்கிறேன். உங்களுக்கு மீசை மிக நன்றாக இருக்கும். ஒரு தடவை வைத்துப் பாருங்களேன். பிடிக்காவிட்டால் எடுத்துவிடலாம்…”

“எனக்கு அது பழக்கமில்லையே. இதுவரை நான் மீசை வைத்தது இல்லை.” என்றவனிடம், “எதையும் பழகினால் தான் அது பழக்கத்துக்கு வரும் சூர்யா.” என்று விடாமல் வற்புறுத்தினாள்.

ஆண்களுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுப்பது மீசை என்பது அவளுடைய அசைக்கமுடியாத எண்ணம். அதனால் அவனை மீசையோடு பார்க்க ஆசைப்பட்டாள்.

அவனோ அது முகத்தில் இருக்கும் ஒரு அழுக்கு என்பவன். அதனாலேயே தினமும் சவரம் செய்வான்.

“ஒரு நாள் சவரம் செய்யாவிட்டாலே எனக்குக் கடிக்கும் லட்டு..”

“ஏதோ மீசையை வளர்த்துப் பின்னிக் கட்டச் சொன்னதுபோல் பெரும் எடுப்பு எடுக்கிறீர்களே. எனக்கு என் சூர்யாவை மீசையோடு பார்க்க விருப்பம். இதற்கு மேல் உங்கள் விருப்பம்..” என்றவள், “உங்களுக்கு நேரமாகிறது. அதனால் வைக்கிறேன்.” என்றுவிட்டு கைபேசியை வைத்தும் விட்டிருந்தாள்.

எதைச் சொன்னாலும் செய்யமாட்டேன் என்கிறானே என்று ஆதங்கமாக இருந்தது அவளுக்கு.

அப்போதும் வைத்தியரிடம் சென்றுவர ஆகும் நேரத்தை ஓரளவுக்குக் கணித்து, அது கடந்தபிறகு, ‘பாட்டியை வைத்தியரிடம் காட்டி விட்டீர்களா…?’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்ப மறக்கவில்லை அவள்.

அழைப்பாக இருந்திருக்க வேண்டியது, அவன் மீது இருந்த கோபத்தில் மேசேஜாகச் சென்றது.

அவனிடமிருந்து பதிலில்லை என்றதும், ‘சூர்யா, எங்கே இருக்கிறீர்கள்..?’ என்கிற கேள்வியைத் தாங்கி அடுத்த மெசேஜ் பறந்தது.

ம்கூம்.. அதற்கும் பதில் இல்லை.

‘சூர்யா, வேலைக்குப் போகவில்லையா..?’ என்று அடுத்த மெசேஜ் சென்றது.

இப்படி அவள் அனுப்பிய பல மெசேஜ்களுக்கு பதில் வரவே இல்லை.
கோபமாக இருக்கிறானா அல்லது அவனுக்கு ஏதுமா என்று புரியாமல் குழம்பினாள். அவன் கோபிக்கும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அப்படியானால் அவனுக்கு ஏதுமோ என்று நினைத்த மாத்திரத்தில் உள்ளம் நடுங்க, உடனேயே அவனுக்கு அழைத்தாள்.

அந்தப் புறம் அழைப்பு எடுக்கப்படவில்லை.

இப்போது அவனுக்கு வேலை நேரம். அப்படி வேலையில் இருந்தாலும் அவன் எடுப்பது இல்லைதான். வீதிகளை அமைக்கும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருப்பவன். எட்டு மணித்தியால வேலைதான் என்றாலும், பெரும்பாலும் யாருடனாவது மீட்டிங்கில் இருப்பேன் என்று அவனே சொல்லியிருக்கிறான். அதனால் அவன் வேலை நேரங்களில் மெசேஜ் மட்டுமே அனுப்புவாள்.

இன்று இவ்வளவு நேரமும் அவனோடு பேசாததில் பயந்து, ‘வேலை நேரத்தில் எனக்கு அழைக்காதே..’ என்று அவன் சொன்னதையும் மறந்து மீண்டும் அழைத்தாள்.

அந்தப்பக்கம் எடுக்கப்பட்டதும், “சூர்யா, எங்கே இருக்கிறீர்கள்?” என்று பதட்டத்தோடு கேட்ட அவள் கேள்வியைக் கவனிக்காது, “அறிவில்லை உனக்கு? வேலை நேரத்தில் அழைக்காதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.” என்றான் கடுங் கோபத்தோடு.

அவன் காட்டிய அந்தக் கடுமையில் தொண்டை அடைத்தது அவளுக்கு. “இல்லை.. நீங்கள் இவ்வளவு நேரமாக எடுக்கவில்லை என்றதும், உங்களுக்கு.. ஏதுமோ என்று பயந்துவிட்டேன். அதுதான்…” என்று அடைத்த குரலில் சொன்னாள்.

“எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கண்ட நேரத்திலும் எடுக்காமல் இப்போது வை!” என்று சிடுசிடுத்தவன் அவளின் பதிலை எதிர்பாராது கைபேசியை வைத்தே விட்டிருந்தான்.

அவள் கண்கள் கலங்கியது. ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறான். அவளின் பயத்தை அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா. இனிமேல் அவனுக்கு நானாக எடுப்பதில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

உற்சாகமாக ஆரம்பித்த அன்றைய தினத்தை மனதில் பாரத்தோடு முற்பகல் வரை தன் அறைக்குள்ளேயே கழித்தாள். மதியம் அவளுக்கும் வேலை என்பதால், அங்கு போனாலாவது காலையில் நடந்ததை மறக்கலாம் என்று நினைத்தால், அதிலும் தோல்வியே கிட்டியது.

மனதின் உள்ளே மெல்லிய வேதனை ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது.

வேலை நேரத்தில் அழைத்தது என் பிழைதானே என்று தன்னையே சமாதானம் செய்தவளின் மனதோ, அவனுக்கு அழைத்துக் கதைப்போமா என்று தவிக்கத் தொடங்கியது.

‘இனி நானாக அவனுக்கு எடுப்பதில்லை..’ என்று எடுத்த முடிவு மறந்துவிட்டதா அல்லது அவனளவில் அவளது உறுதிகள் அனைத்தும் உறுதியற்றவையா?

ஏதோ ஒன்று! ஆனால் அவனோடு கதைக்காமல் அவளால் இருக்கமுடியாது என்பதுதான் உண்மை.

அவனுக்கு அழைக்கலாம் என்று பார்த்தால், அன்றென்று பார்த்து அவளுக்கும் வேலை அதிகமாக இருந்தது.

ஒரு வழியாக வேலை முடியும் நேரம் வரவும், ‘இதுவும் நல்லதுதான். அவனும் வேலை முடிந்து வீட்டுக்குப் போயிருப்பான். இனி எடுத்தாலும் திட்டமாட்டான்..’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கையில், “லஷி, அந்த மேசையில் இருப்பவருக்கு இரண்டு கப் கபே கொடுக்கிறாயா..?” என்றபடி வந்தாள் அவளோடு வேலை செய்யும் லிண்டா.

என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கபே’ யை இரண்டு கப்புக்களில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

அங்கே அமர்ந்திருந்த சூர்யாவைக் கண்டதும், இதுவரை சோர்ந்திருந்த அவள் முகம் சட்டென்று பளீரிட்டது.

“சூர்யா, நீங்களா..?” என்று அவன் திட்டியதை மறந்து, தன்னைத் தேடி வந்துவிட்டான் என்பதில் முகம் மலர்ந்து அவனருகில் விரைந்தாள்.

புன்னகையோடு அவன் அவளையே பார்த்திருக்க, “இரண்டு கபே ஏன் சூர்யா…?” என்று கேட்டவளுக்கு, அவன் வேறு யாரோடும் வந்திருப்பானோ என்று தோன்ற உள்ளம் சோர்ந்தது.

“உனக்கும் எனக்கும்.” என்றான் அவன் இள முறுவலோடு. சோர்ந்த அவளது உள்ளம் மீண்டும் துள்ளியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock