இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே வடிவான மாதாவின் கருணை முகத்தில் பார்வையைப் பதித்திருந்தாள்.
குடும்பம் எனும் பாசக் கூட்டுக்குள் பத்திரமாக வளர்பவளுக்கு குறை என்று எதுவும் இல்லாதபோதும், ‘எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்’ என்று அவள் உள்ளம் வேண்டியது.
சைவசமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவள் வீட்டில் எல்லோருமே வாரத்தில் ஒருமுறை நிச்சயம் அங்கு வருவர். சிறு வயது முதலே வந்து பழகியவளுக்கு அந்த மாதாவும் மற்றொரு தாயே!
பொழுது மெல்ல மங்கத் தொடங்கவும், ‘அண்ணா தேடப்போகிறார்..’ என்று நினைத்தபடி வீடு நோக்கி நடையைக் கட்டினாள். இரண்டு நிமிட நடைத் தூரத்தில் இருந்த வீட்டுக்குள் நுழையும் போதே, “சின்னத்தங்கா, வாவா.. உன்னிடம் அம்மா ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டுமாம்…” என்று ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான், அவளுடைய அண்ணன் இனியவன்.
“அப்படி என்ன அண்ணா முக்கியமான விஷயம்? நான் கேட்ட அந்தப் பிங்க் சுடிதார் வாங்கித் தருகிறாராமா..?” விழிகள் இரண்டும் ஆர்வத்தில் மின்னக் கேட்ட தங்கையைப் பார்த்து சிரித்தான் அவன்.
“உனக்கு அதுதான் முக்கியமான விசயமோ..?” என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன், “அதைவிட முக்கியமான, உனக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை அம்மா உனக்குத் தரப் போகிறாராம்…” என்று புதிர் போட்டான்.
“எனக்கு மட்டுமே சொந்தமானதா? அப்படி என்ன அண்ணா?” என்று புருவம் சுருக்கி யோசித்தவள், தமையனின் விழிகளில் இருந்த குறும்பில் மலர்ந்து, “புதிர் போடாமல் நீங்களே சொல்லுங்களேன் அண்ணா…” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
தங்கையை ஆதுரத்தோடும் பாசத்தோடும் நோக்கி, “அம்மாவே சொல்வார் தங்கா. உள்ளே வா..” என்றபடி வீட்டுக்குள் சென்றான் இனியவன்.
“ஏன் நீங்கள் சொன்னால் ஆகாதா..?” என்று அவனோடு வழக்காடியபடி அவனைத் தொடர்ந்தவள், அங்கே விறாந்தையில்(ஹாலில்) அமர்ந்திருந்த தந்தையை கண்டதும், “அப்பா, அது என்ன ஏதோ முக்கியமான விசயமாம்? அண்ணா பெரிதாகப் புதிர் போடுகிறார்..” என்று தந்தையிடம் ஓடிச் சென்று கேட்டாள்.
மகளின் கேள்விக்குப் பதில் சொல்லாது, “கோவிலுக்கு போய் வந்துவிட்டாயா லச்சும்மா?” என்று வாஞ்சையோடு அவர் கேட்கவும், “அப்பா! என் கேள்விக்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள்..” என்றாள் அடம்பிடிக்கும் குழந்தையாய் மாறி.
“அம்மா சொல்வாள். கொஞ்சம் பொறும்மா. அம்மா எங்கே இனியா? இங்கே தானே இவ்வளவு நேரமும் இருந்தாள்..” என்று மகளிடம் ஆரம்பித்து மகனிடம் கேட்டார் அவர்.
“இங்கேதான் இருந்தார்..”என்றபடி சுற்றுமுற்றும் தாயைத் தேடியவன், “இதோ.. அம்மாவே வந்துவிட்டார்…” என்றான் காய்ந்த உடைகளோடு வந்துகொண்டிருந்த தாயைக் காட்டி.
உள்ளே வந்த சரஸ்வதி மகளைக் கண்டுவிட்டு, “வந்ததும் உடை மாற்றாமல் இங்கே என்ன செய்கிறாய். போ.. போய் வீட்டுடையை மாற்றிக்கொண்டு வா. உன்னோடு கதைக்கவேண்டும்..” என்றார்.
“முதலில் அந்த முக்கியமான விஷயத்தை சொல்லுங்கள். எனக்கு மண்டையே வெடித்துவிடும் போல் இருக்கும்மா. பிறகு உடை மாற்றுகிறேன்..” என்றாள் இருந்த இடத்திலிருந்து அசையாது.
“முதலில் சொன்னதைச் செய் லச்சு!” என்று அதட்டியவர் உடைகளோடு அறைக்குள் சென்றுவிட்டார். முகத்தில் கோபச் சிணுங்கலோடு விசுக்கென்று எழுந்து சென்றவளைப் பார்த்து அப்பா, மகன் இருவரின் முகத்திலும் புன்னகை.
மின்னலென உடை மாற்றிக்கொண்டு வந்தவள், “நான் உடை மாற்றிவிட்டேன். இனியாவது யாராவது சொல்கிறீர்களா, அந்த ‘முக்கியமான’ விஷயத்தை..” என்று யார் முகத்தையும் பாராது சத்தமாக அறிவித்தாள்.
“அட! என் செல்லத் தங்காவுக்கு கோபம் வந்துவிட்டது போலவே..” என்ற தமையனிடம், “என்னோடு யாரும் கதைக்கத் தேவையில்லை…” என்றாள் முறைத்துக்கொண்டு.
“உன்னோடு கதைக்காமல் எப்படி விசயத்தைச் சொல்வதாம்…” என்று சீண்டினான் அவன்.
தகப்பனின் புறம் திரும்பி, “அப்பா! அண்ணாவை என்னோடு விளையாட வேண்டாம் என்று சொல்லுங்கள். நான் கோபமாக இருக்கிறேன்!” என்று முறையிட்டாள்.
“இப்படிச் சின்னப் பிள்ளை போல் எதற்கெடுத்தாலும் கோபப்படும் பழக்கத்தை முதலில் நிற்பாட்டு.” என்று, உடைகளை எடுத்து வைத்துவிட்டு வந்த சரஸ்வதி மகளைக் கடிந்தார்.
‘உன்னால்தான்’ என்பதாக தமையனை அவள் முறைக்க, “அம்மா, அவள் எனக்கு என்றுமே சின்னப் பிள்ளைதான். அவளைக் குறை சொல்லாதீர்கள்..” என்றான் இனியவன்.
“அவளைக் கெடுப்பதே நீதான் இனியன். இனியாவது அளவுக்கதிகமாக இடம் கொடுக்காதே…” என்றவரிடம், “விடுங்கள் அம்மா. இடத்துக்கு ஏற்ற மாதிரி நடக்க அவளுக்கு தெரியும். முதலில் நீங்கள் விஷயத்தை சொல்லுங்கள்…” என்று தங்கையைத் தாயிடமே தாங்கிப் பேசினான் அவன்.
“உன்னையும் திருத்த முடியாது. உன் தங்கையையும் திருத்த முடியாது.” என்றவர், மகளுக்கு அருகில் சென்று அமர்ந்தார்.
அவளின் தலையைத் தடவியவாறே, “உனக்கு நம் ஜெயனைத் தெரியும் தானே லச்சு…” என்று அவர் கேட்க,
“தெரியும். அத்தானின் தம்பி. அவருக்கு என்னம்மா..?” என்று பதிலுக்குக் கேட்டாள் அவள்.
“அவர்கள் வீட்டில் அவருக்கு உன்னைக் கேட்கிறார்கள்…” என்ற தாயைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“திருமணத்துக்கு கேட்கிறார்கள்..”
“எனக்கா? இப்போதா? என்னம்மா, முதலில் அண்ணாக்கு திருமணம் செய்ய வேண்டாமா…?” அதிர்ச்சியோடு அவள் கேட்க,
“உனக்குச் செய்யாமல் எப்படிமா அண்ணாக்குச் செய்ய முடியும்?” என்ற தாயிடம், “என்னம்மா நீங்கள். எனக்கு இப்போதுதானே பத்தொன்பது வயது. கொஞ்ச நாள் போகட்டுமே..” என்றாள் அவள்.
“அக்காவுக்கும் இருபது வயதில் முடித்துவிட்டோமே லச்சு. அதோடு உனக்கு முடிந்தால் தானே அண்ணாக்கும் செய்யலாம்…” பொறுமையாக விளக்கினார் சரஸ்வதி.
“இதென்ன கதை?” என்று தாயிடம் கேட்டவள், தமையனின் பக்கம் திரும்பி, “உங்களுக்காக என்னை இந்த வீட்டில் இருந்து துரத்திவிடப் பார்க்கிறீர்களா அண்ணா…?” என்று அவனிடம் பாய்ந்தாள்.
மறையாத புன்னகையோடு அவளை அவன் பார்த்திருக்க, “இதென்ன பேச்சு லச்சு, துரத்தி விடுவது, அது இதென்று…” என்று மகளைக் கடிந்தார் சரஸ்வதி.
“ப்ச்! போங்கம்மா. எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்…”
“ஏன்மா? யாரையாவது… விரும்புகிறாயா…?” அவளை ஆராயும் பார்வையோடு கேட்டார்.
“அம்மா..? இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்..?” அதிர்ச்சியோடு அவள் கேட்க, இனியனோ விழுந்து விழுந்து சிரித்தான்.
அவனை அவள் முறைக்க, அவனோ, “இதைப் போய்த் தங்காவிடம் கேட்கிறீர்களே அம்மா. அதெல்லாம் வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரிந்த விஷயங்கள்.” என்றான் தாயிடம்.
“அப்போ அதை உங்களிடம் கேட்க வேண்டுமோ? பார்த்தீர்களா அம்மா அண்ணாவை! முதலில் அவரை விசாரியுங்கள்..” என்று தாயிடம் தமையனைப் போட்டுக்கொடுத்தாள்.
சரஸ்வதி அவனைப் பார்க்க, வாடாத புன்னகையோடு தாயின் பார்வையை எதிர்கொண்டான் அவன்.
“அவனை விட்டுவிட்டு நீ சொல். ஏன் இப்போது வேண்டாம்…?” என்று மகனிடமிருந்து திருப்பிய பார்வையை மகளின் மேல் பதித்துக் கேட்டார்.
“அது.. தெரியாதும்மா. ஆனால் நாட்டில் பிரச்சினை அது இதென்று சொல்லி என்னை மேலே படிக்கத்தான் விடவில்லை. கொஞ்ச நாட்கள் உங்களோடு இருக்கவாவது விடுங்களேன்…” என்றாள் அவள் கெஞ்சலாக.
“அல்லது.. உனக்கு ஜெயனை பிடிக்கவில்லையா லச்சு?”
“நீங்கள் யாரைக் காட்டினாலும் எனக்குச் சம்மதம்மா. நான் சொல்வது இப்போது திருமணம் வேண்டாம் என்றுதான்.” என்ற மகளைப் பெருமையோடும் பாசத்தோடும் அணைத்துக் கொண்டார் சரஸ்வதி.
இதுவரை மனைவி மகளுக்கு இடையில் நடந்த சம்பாசனையை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நடராஜனுக்கும் பெருமையாக இருந்தது. அவரின் மூன்று பிள்ளைகளும் தங்கக் கட்டிகள்!
“கல்யாணம் பேசினால் உடனேயே நடந்துவிடுமா லச்சு. ஜெயனும் ஜெர்மனி போகப் போகிறானாம். திருமணத்தை முடித்துவிட்டு அனுப்பலாம் என்கிறார்கள் அவர்கள். அவன் ஜெர்மனி போய் உன்னைக் கூப்பிடும் வரை நீ எங்களுடனேயே இருக்கலாம் லச்சு…” என்றார் இப்போது நடராஜன்.
“என்னது? நான் ஜெர்மனி போவதா? நான் மாட்டேன். உங்களை எல்லாம் விட்டுவிட்டு நான் எங்கும் போகமாட்டேன்…” என்றாள் லட்சனா இப்போது பிடிவாதமாக.