இதயத் துடிப்பாய்க் காதல் 2 – 1

தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா.

அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுலக்சனா தங்கையைக் கண்டதும் புன்னகைத்து, “வா சனா, உன்னை இன்னும் காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்…” என்றாள்.

தானும் புன்னகைத்து, “பள்ளிக்கூடத்தில் இருந்த மரத்தடி நிழலைப் பார்த்ததும் அதன் கீழ் கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் போல் இருந்ததக்கா. அதான் இருந்துவிட்டு வந்தேன். எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா…” என்றாள் சனா.

“நானும் இவ்வளவு நேரமும் சைந்துவுடன் பூங்காவில் இருந்துவிட்டுத்தான் வந்தேன். இங்கே வீட்டுக்குள்ளும் ஏசி இல்லாமல் இருக்கவே முடியவில்லை. உனக்கு குடிக்க குளிராக ஏதாவது தரவா?”

“தாங்கக்கா. எதையாவது தொண்டைக்குள் குளிராக விட்டால்தான் சரியாக இருக்கும். அவ்வளவு தாகமாக இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டிருந்தவள், அப்போதுதான் அங்கே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருந்த சைந்தவியைக் கண்டாள்.

“ஹேய் சைந்துக்குட்டி, என்ன நீ சித்தியைக் கண்டும் காணததுபோல் இருக்கிறாய்..?” என்று கேட்டுக்கொண்டே கையிலிருந்த புத்தகத்தை டீபாயின்மேல் வைத்துவிட்டு, அவளருகில் போய் அமர்ந்தாள்.

“இந்தா குடி…” குளிர்பானத்தை சனாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நாடகத்தில் மூழ்கினாள் சுலோ.

சனாவிடமிருந்து தள்ளி அமர்ந்த சைந்தவி, “நான் உங்களோடு கோபமாக இருக்கிறேன் சித்தி.” என்றாள் அறிவிப்பாக.

அப்போதுதான் கிளாசை வாயில் சரித்தவள், ஒரு மிடரை வேகமாக விழுங்கிவிட்டு, அவள் புறமாகத் திரும்பி, “என்னது, கோபமாக இருக்கிறாயா…? ஏன்டா? சித்தி என்ன செய்தேன். ம்… நீ காலையில் வரையச் சொன்ன முயல் படத்தை வரைந்து வைத்துவிட்டுத் தானே வகுப்புக்குப் போனேன்…” என்று சொன்னாள்.

“அதற்கு நான் கோபிக்கவில்லை. நீங்களும் திபியின் சித்தப்பாவும் நண்பர்களாமே. அவள் இப்போது கைபேசியில் அழைத்துச் சொன்னாள். எனக்கு இது தெரியாது என்றதும் சிரிக்கிறாள். அவளின் சித்தப்பா அவளோடு நிரம்பவும் பாசமாம். நீங்கள் என்னுடன் அப்படி இல்லையாம். அதனால்தான் இதை நீங்கள் என்னிடம் சொல்லவில்லை என்கிறாள் அவள்.” என்றாள் அந்த ஏழு வயதுச் சுட்டிப்பெண். அவள் முகத்திலோ கோபம் நிரம்பி வழிந்தது.

பின்னே அவளின் ஆசைச் சித்தி, மிக முக்கியமான விஷயத்தை அவளிடம் சொல்லவில்லையே. அதனால் தோழியின் முன்னால் அவளுக்குப் பெரும் தலைகுனிவு வந்துவிட்டதே.

சனா சற்றே அதிர்ந்துதான் போனாள். சைந்து சொல்லும் விதத்தைப் பார்த்தால் திபியின் சித்தப்பாவுக்கும் அவளுக்கும் நீண்ட நாட்களாக நட்பு போலவும், அதை அவள் சொல்லாமல் மறைத்தது போலவும் அல்லவா இருக்கிறது. அக்கா வேறு பக்கத்தில் இருக்கிறார்.

அந்தப் பெருச்சாளிக்குப் பிறந்தவன் வீட்டுக்குப் போனதும் போகாததுமாய் திபியிடம் ஏதோ தலைப்புச் செய்தி மாதிரி இதைச் சொல்லி இருக்கிறானே, அவனை!!!!

தமக்கையைத் திரும்பிப் பார்த்தாள். சுலக்சனா நாடகத்தில் மூழ்கிவிட்டது தெரிந்தது. ஆனாலும் நெஞ்சுப் படபடப்பு அடங்கவில்லை அவளுக்கு.

அக்கா மகளைத் திரும்பிப் பார்த்தாள். அதுவரை இவளையே பார்த்திருந்த அந்தப் பெரியமனுசி இவள் திரும்புவதைக் கண்டதும் தொலைக்காட்சியில் கண்ணைப் புதைத்துக் கொண்டாள். இல்லை இல்லை, அப்படிக் காட்டிக்கொண்டாள்.

அதைப் பார்த்ததும் உண்டான புன்னகையோடு, அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்துக்கொண்டாள் சனா.

“சைந்துக்குட்டியிடம் சித்தி எதையும் மறைப்பேனா…?”

“……” கோபமாக இருக்கிறாளாம்.

சனாவுக்கு அவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

“உனக்கு என்ன கோபம் இப்போது? திபியின் சித்தப்பா என் நண்பர் என்பதை நான் உன்னிடம் சொல்லவில்லை என்பதுதானே..?” என்று கேட்டாள்.

இப்போது சனாவின் கண்களைப் பார்த்து ஆமென்பதாகத் தலையை அசைத்தாள் சைந்து.

“அவர் என் நண்பரே இல்லை. பிறகு எதையென்று உன்னிடம் சொல்லச் சொல்கிறாய்?” என்றதும், பளீரென்று மலர்ந்தது சைந்துவின் முகம். தோழியின் கூற்றையே பொய்யாக்கி விட்டாளே சித்தி!

ஆனாலும் சிறு சந்தேகத்தோடு சனாவின் கண்களையே கூர்ந்தாள். அந்தக் குட்டிக் கண்கள் ‘நீங்கள் பொய் சொல்லவில்லையே..’ என்று அவளிடம் கேட்டது.

“அவரை இன்றுதான் அதுவும் இப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன் சைந்துக்குட்டி. அவர், தான் திபியின் சித்தப்பா என்று சொன்னபிறகுதான் அவருடனேயே நான் கதைத்தேன். அப்படியிருக்க, அவர் எப்படி என் நண்பராவார்? அதோடு இப்போதுதான் வீட்டுக்குள் வரும் சித்தி இதை எப்படி உன்னிடம் முதலே சொல்லமுடியும்..?” இதைக் கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள் அவள். அக்காவின் காதிலும் விழட்டும் என்பதற்காக.

“உண்மையாகவா சித்தி…” என்று கேட்ட சைந்தவி, மகிழ்ச்சியோடு தன் சித்தியைக் கட்டிக்கொண்டாள்.

பிறந்த குழந்தை கூட கைபேசியை வைத்து விளையாடும் காலமல்லவா இது. தன் பக்கத்திலேயே இருந்த தன்னுடைய கைபேசியை எடுத்து திபிக்கு அழைத்தாள் சைந்தவி.

அங்கே அழைப்பு எடுக்கப்பட்டதும், “திபி, உன் சித்தப்பா என் சித்தியின் நண்பரில்லையாம்…” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.

அவள் பேச ஆரம்பித்ததும் சிறு சிரிப்போடு அவளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய அறைக்குள் எழுந்து சென்றாள் லட்சனா.

உடலைக்கழுவி, உடலுக்கு இதமாக வீட்டு உடையை அணிந்துகொண்டாள்.

அவளின் அறையின் ஒரு மூளையில் இருந்த சிறிய மேசையில் வைக்கப்பட்டிருந்த சுவாமிப்படங்களின் முன்னால் போய் நின்றாள். அங்கே இருந்ததோ அவளின் அம்மா, அப்பா மற்றும் அண்ணனின் படங்கள்!

அவளின் கண்கண்ட தெய்வங்கள் அவர்களே! அவர்களைத் தவிர்த்து வேறொரு தெய்வம் இருப்பதாய் இப்போதெல்லாம் அவள் நம்புவதில்லை. அப்படி இருந்திருக்க அவர்களை அந்தத் தெய்வம் அவளிடமிருந்து பிரித்திருக்காதே!

அதுவும் அவளின் அண்ணன், நொடிப்பொழுது கூட அவளை விட்டுப் பிரியாத பாசத்தின் மறு உருவம். இன்று நிரந்தரமாகவல்லவோ அவளை விட்டுப் பிரிந்துவிட்டான்.

சும்மாவல்ல! தன்னுயிரைக் கொடுத்து தன் தங்கையைக் காத்துச் சென்றுவிட்டான்.

பிரேமிட்ட கண்ணாடிக்குள்ளிருந்து சிரித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கையில் அவளுக்கு அழுகை வந்தது.

கண்களில் இருந்து வழிந்த நீர்முத்துக்களை சரமாக்கி அவர்களுக்கே காணிக்கையாக்கியவள், அதைத் துடைக்க மறந்து அவர்களையே பாத்திருந்தாள்.

அதுவும் அவளின் அண்ணா இனியவன், பெயரின் பொருள் அறிந்து அவனுக்கு அந்தப் பெயரை வைத்தார்களா அல்லது அவனின் குணம் அறிந்து வைத்தார்களா தெரியாது. ஆனால், அவனுக்கும் அந்தப் பெயருக்கும் அவ்வளவு பொருத்தம்!

இனிமையே நிறைந்தவன் அன்றொருநாள் இரத்தவெள்ளத்தில் மிதந்தது கண்களில் ஆடியது. கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்டபோதும் இறந்துவிட்டவனின் இறப்பை அவளின் இறப்புவரை மறக்கமுடியாது. நெஞ்சம் குலுங்க கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது.

நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும், நடந்துவிட்டவைகளை இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை அவளால்.

‘ஏன்ணா என்னை விட்டுவிட்டுப் போனீர்கள்? எனக்கு நீங்கள் எல்லோரும் வேண்டும். உங்க மடியில் தலை வைத்துப் படுக்க ஏக்கமாக இருக்கிறதே அண்ணா. உங்களோடு திரும்பவும் எப்போதண்ணா விளையாடப்போறேன்…’ என்று தமையனோடு ஊமையாய் உறவாடிக் கொண்டிருந்தவளை,

“ஹேய், சைந்துக்குட்டி….” என்கிற சிவபாலனின் உற்சாகக் குரலும், அதைத்தொடர்ந்த சைந்துவின் ஆர்ப்பாட்டமான சந்தோசக் கூச்சலும் நினைவுலகுக்குத் திருப்பியது.

என் அண்ணாவும் இப்படித்தானே என்னோடு விளையாடுவார் என்று எண்ணியவளின் நினைவுகள் முற்றாக அறுபட மறுத்தன.

“சனா வந்துவிட்டாளா…?” என்று சிவபாலன் கேட்பதும், “வந்துவிட்டாள். அறைக்குள் இருக்கிறாள்..” என்கிற சுலக்சனாவின் பதிலும் கேட்டது.

அவர்கள் மூவரும் அவளோடு மிகுந்த பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவளால் அவர்களோடு ஒன்ற முடிகிறதா என்றால்..? இல்லை என்பதுதான் பதில்.

அதன் காரணத்தை அவளே அறியாள்!

ஒரு பெருமூச்சோடு கட்டிலில் சாய்ந்து கொண்டாள் லட்சனா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock