இதயத் துடிப்பாய்க் காதல் 14 – 1

அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா.

அதோடு திருமணம் என்பது தனக்கு நடந்தே ஆகும் என்பதும், தன் குடும்பத்துடனான பிரிவு வந்தே ஆகும் என்றும் புரிந்ததில், வேதனையாக இருந்தாலும் அதைத் தவிர்க்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

எனவே திருமணம் நடக்கும்போது நடக்கட்டும் என்று அதைத் தள்ளி வைத்தவள், எப்போதும் போல் அண்ணனுடன் சண்டையும் சமாதானமுமாய் நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள் சந்தோசமாக.

அதற்கும் முடிவு கட்டும் விதமாக, “நாம் ஒரு முறை கொழும்பு சென்று வரலாம்..” என்றார் அவளின் தந்தை நடராஜன்.

அவள் கேள்வியாக அவரை ஏறிட, “அண்ணாவுக்கும் ஏதோ அலுவல் இருக்கிறதாம் கொழும்பில். அப்படியே நாமும் சம்மந்தி வீட்டுக்கு போய்விட்டு வரலாம்..” என்றார்.

“அண்ணாவுக்கு கொழும்பில் வேலை என்றால் அவர் மட்டும் போய்வரட்டுமே அப்பா. நாமெதற்கு?” ஏனோ அவளுக்கு அந்தப் பயணத்தில் ஆர்வம் தோன்ற மறுத்தது. உள் மனது உணர்த்தும் என்பது இதைத் தானோ..

அவளின் விருப்பமின்மையை உணர்ந்துகொண்ட சரஸ்வதி, “அவர்கள் உன் அத்தானின் குடும்பம் என்பதையும் மறவாதே லச்சு..” என்றார் கண்டிக்கும் குரலில்.

மனம் சுணங்கிய போதும் அம்மா சொல்வதில் உள்ள உண்மையும் புரிய அமைதியாக நின்றாள் லட்சனா.

அவளருகில் வந்த இனியவன், “வேறு எதுவும் நினைக்காமல், அத்தான் வீட்டுக்குப் போகிறோம் என்று மட்டும் நினைத்துக்கொள் தங்கா.” என்றான் அன்பாக.

அவள் சரியென்பதாக தலையை அசைக்கவும், “அதோடு நீயும் ஒருதடவை ஜெயனை நன்றாகப் பார்க்கலாமே.. பிறகு அவனுக்கு தலையில் மொட்டை, கால் கட்டை என்று குறை சொல்லக் கூடாது…” என்று அவளை வம்புக்கும் இழுத்தான்.

எப்போதும் அவள்தான் அவனுடன் சண்டையிடுவாள். இப்போதெல்லாம் அவன்தான் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

எப்போதெல்லாம் அவள் முகம் வாடுகிறதோ அப்போதெல்லாம் அவளைச் சீண்டிவிட்டு மனதை மாற்றிக்கொண்டிருந்தான். செல்லத் தங்கையின் மனமறிந்த தமையன் அல்லவா!

“அப்படிக் குறை இருந்தாலும் என்ன அண்ணா.. என் அண்ணன் எந்தக் குறையையும் நிறைவாக்கித் தருவார் என்று எனக்குத் தெரியும்..” என்றாள் உள்ளம் நெகிழ. ஏனோ அன்று அவளால் அவனோடு சண்டை பிடிக்க முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. அது என்ன என்பதையும் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

“நிச்சயம் தங்கா! இந்த அண்ணா இருக்கும் வரை நீ எதற்கும் கலங்கக் கூடாது..” என்று உறுதியோடு சொன்னவன், தகப்பனிடம் திரும்பி, “எப்போது போகிறோம் அப்பா..?” என்று கேள்வி எழுப்பினான்.

“உனக்கு வசதிப்படும் என்றால் இந்த வெள்ளியிரவு போனால், சனிக்கிழமை நீ உன் வேலையைப் பார்க்கலாம். ஞாயிரும் அங்கு நின்றுவிட்டு, அன்று மதியமே திரும்பலாம்..” என்றார் அவர்.

“இந்த வெள்ளியா? என்ன நீங்கள், முதலே சொல்ல வேண்டாமா. இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கிறது. நான் கொஞ்சம் பலகாரமாவது செய்ய வேண்டாமா..?” என்று கணவனிடம் ஆதங்கப் பட்டார் சரஸ்வதி.

ஏற்கனவே சம்மந்திவீடு, அதோடு அடுத்த மகளையும் அந்த வீட்டுக்கே கொடுக்கப் போகிறோம். அங்கே சும்மா செல்ல முடியுமா என்கிற ஆதங்கம் அவருக்கு.

“அம்மா, சின்னத்தங்கா சாப்பிட்டுச் சாப்பிட்டு சும்மா தானே இருக்கிறாள். அவளை இந்த இரண்டு நாட்களுக்காவது உதவி செய்யச் சொல்லுங்கள்.” என்ற இனியவனிடம், “யார்? உன் தங்கை? உதவி செய்வாளா? உபத்திரவம் தான் செய்வாள்.” என்றார் அவர்.

தாயின் முறைப்பில் தமையனை முறைத்தவள், “இப்போ உங்களிடம் இதைப் பற்றி யாராவது கேட்டார்களா? பாருங்கள், இதற்கெல்லாம் சேர்த்து வைத்து, நானில்லாதபோது கிடந்து அழுவீர்கள்..” என்றவளுக்கு, அவர்களை இழந்துவிட்டுத் தான்தான் கதறப்போகிறோம் என்று தெரியாமல் போனது. இதைத்தான் விதி என்பர் போலும்!

“நானெதற்கு அழப்போகிறேன். அதன் பிறகாவது நிம்மதியாக இருக்கிறேன்..” என்றான் இனியவன் சிரித்துக்கொண்டே.

“இருப்பீர்கள்! இருப்பீர்கள். எப்படி இருக்கிறீர்கள் என்று நானும் பார்கிறேன்..” என்றவளை, “கொஞ்சம் பேசாமல் இரு லச்சு. எப்போது பார்த்தாலும் அவனோடு சண்டை பிடித்துக் கொண்டிராதே!” என்று அடக்கிவிட்டு, கணவரிடம் பயணத்தை பற்றிய விபரங்களைக் கதைக்கத் தொடங்கினார் அவள் தாயார்.

அதன் பிறகான இரண்டு நாட்களும் மின்னல் வேகத்தில் கடந்தது.

வெள்ளியன்று மாலை நால்வரும் கொழும்பு செல்வதற்கு ஆயத்தமாகி, ஆட்டோவை வரசொல்லிவிட்டுக் காத்திருந்தார்கள். ஏனோ லட்சனாவின் முகத்தில் சஞ்சலம். எப்போதும் கண்டிப்பைக் காட்டும் அவளின் அம்மாவே மகளைப் பார்த்துவிட்டு, “என்னம்மா..?” என்று தன்மையாகக் கேட்டார்.

“தெரியவில்லை அம்மா. ஏனோ மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. பயமா இருக்கு. படபடப்பா இருக்கு..” என்று கலங்கிய மகளை அணைத்துக் கொண்டார் அவர்.

“எல்லாப் பெண்களுக்கும் திருமணத்தை நினைத்துப் பயம் வருவதுதான் லச்சு. ஆனால் நீ பயப்படத் தேவை இல்லை. அத்தையையும் மாமாவையும் உனக்கு ஏற்கனவே தெரியும். அதோடு சுலக்சனா இருக்கிறாள் உனக்குத் துணையாக. நேற்றுத் தொலைபேசியில் கதைக்கும் போது கூடச் சொன்னாள், இந்தத் திருமணம் நடந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் அம்மா என்று. எல்லாவற்றையும் விட ஜெயனைப் பற்றியும் உனக்குத் தெரியும் தானே. மிகவும் நல்ல பிள்ளை. அதோடு இப்போது நாம் திருமணத்திற்கு போகவில்லை. சும்மாதான் போகிறோம். அதனால் நீ வீணாக கவலைப் படாதே. சரியா…” என்றவரிடம், சரியென்பதாக தலையை அசைத்தாள், மனக் கலக்கம் தீராமலே.

ரயிலில் பயணம் செய்த நேரம் முழுவதும், தங்கையைக் கலகலப்பாக வைத்திருந்தான் இனியவன். அவளை வேறு எதையும் சிந்திக்க விடாது, வம்பிழுத்து, சீண்டி, அவளிடம் திட்டுக்களை வாங்கி என்று தாய் தந்தையரையும் சிரிக்க வைத்தான். அந்த ரயில்பயணம் அவர்களுக்கு மிக மிக அழகான பயணமாக அமைந்தது. அப்படி அமைய வைத்தான் அவளின் அண்ணன்!

அடுத்த நாள் காலை கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும், அம்மா, அப்பா, தங்கை மூவரையும் அங்கிருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, சிவபாலனின் அப்பா சேதுராமன் எங்கேயாவது நிற்கிறாரா என்று சுற்றிப் பார்த்தான் இனியவன்.

அவர் கண்ணில் படவில்லை என்றதும், “மாமாவுக்கு அழைத்துப் பார்க்கவா அப்பா..?” என்று கேட்டான்.

“ம்.. இங்கே வந்துவிட்டாரா என்று கேள். இல்லாவிட்டால் நாமே வருகிறோம் என்று சொல்…” என்று அவர் சொல்ல, சேதுராமனுக்கு அழைத்தான்.

அதற்குள், “ஏதாவது குடிக்கலாமா அண்ணா…” என்று கேட்டாள் லட்சனா.

“கொஞ்சம் பொறு தங்கா. மாமாவோடு கதைத்துவிட்டு ஏதாவது வாங்கித் தருகிறேன்..” என்றபடி கைபேசியைக் காதுக்குக் கொடுத்தான்.

அவர் எடுத்ததும், “மாமா…” என்று இவன் சொல்வதற்குள், “வந்துவிட்டீர்களா இனியா? இங்கே நான் வாகன நெரிசலுக்குள் மாட்டிக்கொண்டேன். நேரத்தோடுதான் புறப்பட்டேன். ஆனாலும்.. மன்னித்துக்கொள்ளப்பா. அப்பாவிடமும் சொல்லிவிடு.. இதோ இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்…” என்றார் அவர் அவசரமாக.

“அச்சோ மாமா, என்ன இது.. மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள். நாங்கள் இப்போதுதான் வந்தோம். நீங்கள் ஆறுதலாகவே வாருங்கள்.”

“ம்ம்.. வாகனங்கள் நிரம்பி வழிகிறது.. நகரவே மாட்டேன் என்கிறது இனியா. அதுதான் நேரத்துக்கே வரமுடியவில்லை. சம்மந்தி என்ன நினைகிறாரோ தெரியவில்லை…” என்றவரை இப்போது அவன் இடைமறித்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock