“அப்பா ஒன்றும் நினைக்க மாட்டார் மாமா. நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் மெதுவாகவே வாருங்கள்.” என்றுவிட்டுப் பேசியை அணைத்தான்.
“மாமா வர இன்னும் அரைமணி நேரம் செல்லுமாம் அப்பா. அதற்குள் நாம் ஏதாவது குடிக்கலாமா..?”
“எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். அவளுக்கு மட்டும் எதையாவது வாங்கி வா.. அப்படியே நீயும் எதையாவது குடி.” என்றார் சரஸ்வதி.
“சரி. மூவரும் இங்கேயே இருங்கள். நான் போய் வாங்கி வருகிறேன்..” என்றவனை மறித்த லட்சனா, “அண்ணா, நானும் வருகிறேனே.. இவ்வளவு நேரமும் ரயிலில் இருந்து வந்தது ஒரு மாதிரி இருக்கிறது.” என்றாள்.
“சரி வா..” என்று அவன் சொல்ல, “கொஞ்சம் பொறு இனியா. நாங்கள் இருவர் மட்டும் இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம். உங்களுடன் நாங்களும் வருகிறோம். லச்சு சொன்னது போல கால்கள் மரத்துத்தான் இருக்கிறது. நடந்தால் கொஞ்சம் நல்லது. பிறகு சம்மந்தியின் காரிலும் இருக்கத்தானே போகிறோம்…” என்றார் நடராஜன்.
இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு நிற்கும் எண்ணத்துடன் வந்ததால், பைகளும் பெரிதாக இல்லாமல் இருக்கவே, நால்வரும் ஒன்றாகச் சென்றனர்.
கொஞ்சம் தரமான உணவுக்கடை வீதியின் அந்தப் பக்கம் இருக்கவே, வீதியைக் கடப்பதற்காக காத்திருந்தார்கள் நால்வரும். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததில், “அப்பா அம்மாவைப் பிடித்துக்கொள்ளுங்கள்..” என்ற இனியவன் தங்கையின் கையைத் தான் பிடித்துக்கொண்டான்.
தொலைவில் வாகனங்கள் வருவதைப் பார்த்துவிட்டு, “அப்பா விரைவாக வாருங்கள்..” என்ற இனியவன் லட்சனாவோடு வீதியில் இறங்கி வேகமாக நடந்தான்.
நடராஜனும் சரஸ்வதியும் அவன் சொன்னதைக் கேட்டு, வீதியின் இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு, சாலையில் காலை வைப்பதற்கிடையில், இனியவன் தங்கையோடு சாலையின் நடுப்பகுதிக்கே வந்துவிட்டிருந்தான்.
அப்போது பெற்றவர்கள் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.
அம்மாவும் அப்பாவும் தங்களுக்குப் பின்னால் வருவதாக நினைத்து, நடந்துகொண்டிருந்த இனியவனும் லட்சனாவும் வெடிச்சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து திரும்பினார்கள்.
அங்கே வான் நோக்கிப் பறந்துகொண்டிருந்த பெற்றவர்களின் உடலங்ககளைக் கண்டதும், “அப்பா…” என்கிற இனியவனின் கூவலும், “ஐயோ அம்மா… அப்பா..” என்கிற லட்சனாவின் கதறலும் கேட்டு ஓய்வதற்கு முதலே, அவர்களை நோக்கி காரின் பாகம் ஒன்று பறந்து வந்துகொண்டிருந்தது.
அதைக் கவனியாது கதறியபடி, சற்றுமுதல் தாய் தந்தையர் நின்ற இடத்தை நோக்கி ஓடிய தங்கையைத், “தங்கா…” என்று கத்திக்கொண்டே பிடித்திழுத்தவன், அவளைத் தனக்கு முன்னால் தள்ளிக்கொண்டு எதிர்புறமாக ஓடினான்.
அந்தக் காரின் பாகமோ தங்கையைக் காக்க நினைத்தவனின் தலையில் வந்து படார் என்று மோதியது!
தன்னை முன்னால் தள்ளிக்கொண்டிருந்த அண்ணனின் கைகள் தளர்ந்ததைக் கண்டு லட்சனா திரும்பிப் பார்க்க, அங்கே இரத்தம் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த பிடரியை ஒருகையால் பிடித்தபடி, மற்றக் கையை முன்னே நீட்டி ‘ஓடு’ என்பதாகச் சைகையில் காட்டிக்கொண்டே, உயிர்போகும் வலியில் முகம் சுருங்கியபடி, பின் பக்கமாகச் சரிந்து கொண்டிருந்தான் அவளின் உடன்பிறந்தவன்.
அதைக் கண்டு பதறித் துடித்து, “ஐயோ.. அண்ணா….இரத்தம்..” என்று பெருங்குரலெடுத்துக் கத்திக்கொண்டே ஓடிவந்தவளைப் பிடித்துத் தன்னால் முடிந்தவரையில் அந்தப் பக்கமாகத் தள்ளிவிட்டவன், “ஓ..டி..ப்பபோ…..!” என்று உயிரைக் கொடுத்துக் கத்தினான். அதற்கு மேலும் நிற்க முடியாமல் நிலத்தில் விழுந்தது அவன் தேகம்.
அவன் தள்ளியதில் வீதியின் அந்தப் பக்கம் சென்று விழுந்தவளின் தலையும் எதிலோ அடிபட்டது. அதில் மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தவளை மயங்க விடாது, அவளை மிதித்துத் தள்ளியபடி ஓடிக் கொண்டிருந்தது மக்கள் கூட்டம். நொடிப்பொழுதில் பல உயிர்களை பறித்துக்கொண்டிருந்தது அந்தக் கோர விபத்து.
அந்த அரை மயக்கத்திலும், “அண்ணா.. அண்ணா…” என்று வலியோடு துடிதுடித்தவள் மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தாள்.
கடந்தவை நொடிகளா அல்லது நிமிடங்களா அவள் அறியாள்.
“இந்தப் பெண்ணுக்குப் பெரிய காயமில்லை. மயங்கியிருகிறாள். விரைவாகத் தூக்குடா…” என்கிற குரல் எங்கோ கேட்டது.
அதில் அவள் காதில் விழுந்த ‘காயம்’ என்ற சொல் தமையனை நினைவுபடுத்த, “அண்ணா… ஐயோ அண்ணா…” என்று கத்தத்தான் நினைத்தாள். ஆனால் வலியில் முனகத்தான் முடிந்தது. விழிகள் மட்டும் கண்ணீரைக் கொட்டியது உடன் பிறந்தவனை நினைத்து!
அவர்கள் அவளைப் பிடித்துத் தூக்குவதை புரிந்துகொண்டவள், பெரும் சிரமப்பட்டு கண்ணைத் திறந்து, திக்கின்றி கையை நீட்டி, “அண்ணா.. என் அண்ணா…” என்று திக்கி விக்கினாள்.
அவள் சொன்னது விளங்காதபோதும், அவளின் கை நீண்ட பக்கமாக பார்வையைத் திருப்பி ஆராய்ந்தவர்கள், அங்கே வீதியில் கிடந்த இனியவனைக் கண்டுவிட்டு, “அது உன் அண்ணனா.. அவர் தான் உன்னைக் காட்டினார்..” என்றபடி அவளை அவன் தூக்க, மற்றவன் அதற்கு உதவி செய்தான்.
“அவ… அவ..ரையும்.. தூக்கு..ங்கள்..” அவளை அவன் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்த படியால், இப்போது அவள் சொன்னது அவனுக்குக் கேட்கவே, “அவர் தப்ப மாட்டார். அடி பலம். நீ வா…” என்றபடி வேகமாக அங்கிருந்த ஆடோவை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்.
அதைக் கேட்டதும், எங்கிருந்துதான் பலம் வந்ததோ அவளுக்கு, தன்னைத் தூக்கியிருந்தவனை உதறிக் கீழே பாய்ந்தவள், “ஐயோ.. அண்ணா..” என்று கத்திக்கொண்டே தமையனிடம் ஓடத்தொடங்கினாள்.
அவளைக் காப்பாற்ற நினைத்தவர்களில் ஒருவன் அவளின் கையை எட்டிப் பிடித்து, “என்ன பெண் நீ. நடந்த குண்டு வெடிப்புக்கு பயந்து, உதவி செய்தால் நமக்கும் பிரச்சினை வந்துவிடும் என்று எல்லோரும் ஓடிவிட்டார்கள். உன் அண்ணன் உன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சியதில், மனம் கேளாது உன்னைத் தூக்கினால், நீ ஓடுகிறாயே.. அவன் தப்ப மாட்டான். நீ வா.” என்றான் கோபத்தோடு.
“என் கையை விடுங்கள்.. நான் அண்ணாவிடம் போகவேண்டும். ஐயோ.. என்னை விடுங்களேன்.…” என்று அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டே கெஞ்சிக் கதறியவளின் விழிகள் பரிதவிப்போடு தமையனைத் தேடியது.
அங்கே நடுவீதியில் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி, உயிர் பிரிந்துகொண்டிருந்த அந்தத் தறுவாயில், இதழ்களில் வேதனையான புன்னகை ஒன்றை வலியோடு தவழவிட்டவனின் விழிகள், கண்ணீரை வடித்தபடி அவளையே பாத்திருந்தது.
அந்தக்கோலம் அவள் உயிரைக் கொன்றது. அவளின் அண்ணன் இனியவன்! இனிமையே நிறைந்தவன்! அவன் உயிர் பிரிந்துகொண்டிருக்கும் கோலம் அவள் கண்களின் முன்னால்.
அவன் விழிகளில் வடிந்துகொண்டிருந்த கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சில் இரத்தத்தை வடியவைத்தது.
தான் உயிரோடு இருந்தும் உயிருக்காகப் போராடும் சகோதரனைக் காக்கமுடியாமல் இருக்கிறோமே என்று நெஞ்சு துடித்தது. என்றும் அவளைக் காத்துவந்தவன் இன்றும் தன்னுயிரைக் கொடுத்து அவளைக் கத்துவிட்டான். அவளோ அதைச் செய்யமுடியாது செய்வதறியாது கதறிக்கொண்டிருந்தாள்.
“ஐயோ அண்ணா… எழுந்து வாங்கண்ணா.. எனக்கு பயமாயிருக்கு… என்னை விடுங்கள்… அண்ணா.. வாங்கண்ணா…“ அவன் கிடந்த கோலத்தைக் கண்கொண்டு பார்க்கமுடியாமல் கதறித் துடித்தாள்.
அவள் படும் பாட்டைப் பார்த்து, அந்த முகமறியா இரு மனிதர்களின் கண்களும் கலங்கியது. “சொன்னால் கேளம்மா. உன் அண்ணன் தப்பமாட்டார்…” என்றான் ஒருவன் தன்மையாக.
“ஐயோ.. அப்படிச் சொல்லாதீர்கள்.. என் அண்ணாக்கு ஒன்றும் ஆகாது. என்னை விடுங்களேன். நான் அண்ணாவிடம் போகவேண்டும்.. அவருக்கு நிறைய இரத்தம் போகிறது.. அவரைக் காப்பாற்ற வேண்டும்..” என்று வாய்விட்டுக் கதறிய தங்கையைப் பார்த்து, அசைக்கவே முடியாமல் விசிறிக் கிடந்த கையின் விரல்களை அசைத்துப் ‘போ’ என்பதாகச் சைகை செய்துகொண்டே விழிகளையும் மூடித்திறந்தான் இனியவன்.
தன் கூடப் பிறந்தவளுக்கு இனி இவ்வுலகில் யார் துணை என்று நினைத்தானா அல்லது பெற்றவர்களை நினைத்துத் துடித்தானா, அவன் விழிகள் இரண்டும் வலிகளைத் தாங்கிக் கண்ணீரை வடித்தது.
“மாட்டேன்… நான் போக மாட்டேன். ஐயோ அண்ணா நீங்களும் வாருங்கள்.” கதறித் துடிக்க மட்டும்தான் முடிந்தது அவளால்.
“ப்ச்! பேசாமல் வாம்மா.… இல்லாவிட்டால் நீயும் செத்துப்போவாய்..” என்று அவளைப் பிடித்திருந்தவன் சற்றே சினத்தோடு சொல்லிவிட்டு, “நீ ஆட்டோவை எடுடா. இவள் எங்களையும் பிரச்சினையில் மாட்டி விட்டுவிடுவாள். போலிஸ் வரமுதல் ஹாஸ்பிட்டல் போகவேண்டும்..” என்று மற்றவனுக்கு உத்தரவிட்டபடி அவளையும் உள்ளே தள்ளி, தானும் ஆட்டோவுக்குள் ஏறினான்.
“ஐயோ… அண்ணா… அண்ணா… எழும்பி வாங்க.. அண்ணாஆ…….!” ஆட்டோவின் பின் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கத்தியவளின் குரல் செவிப்பறையில் மோத, வேதனையோடு இனிய நெஞ்சம் கொண்ட இனியவனின் விழிகள் நிரந்தரமாக மூடிக்கொண்டன!