இதயத் துடிப்பாய்க் காதல் 15 – 1

கடந்த பல விடியல்களை உணராமலேயே வைத்தியசாலையில் உணர்வற்றுக் கிடந்தாள் லட்சனா. மாதம் ஒன்று கடந்துசெல்ல, பெரும்பாடு பட்டு அவள் உடலின் வெளிக்காயங்களை தேற்றினார்கள் வைத்தியர்கள்.

அதை மட்டும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. மனக்காயத்தை எந்த மருத்துவத்தை வைத்துத் தேற்றுவது? காலம் ஒன்றே மருந்தென்றார்கள். அந்த ஒரு மாதத்தில், தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர அவள் வாயே திறந்ததில்லை. திறக்க முடிந்ததில்லை!

‘அண்ணா’ என்கிற ஒரு சொல்லைத் தவிர்த்து வார்த்தைகளைக் கோர்த்து வசனமாக்க முடியவில்லை அவளால். அவர் உயிருடன் இல்லை என்று மூளை சொன்னபோதும், யாராவது அவரைக் காப்பாற்றி அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்துவிட மாட்டாரா என்று உள்ளம் கிடந்தது துடித்தது!

அதை வாய்விட்டுக் கேட்கும் துணிவின்றி ஊமையாகிப் போனாள். அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட சேதுராமன் குடும்பத்தினரும், தாம் எதையாவது சொல்லி, அது அவளை இன்னும் பாதித்துவிட்டால் என்கிற பயத்தில், வாயைத் திறந்து எதுவும் கதைக்கவில்லை.

அதோடு தங்கள் வீட்டுக்கு வருகையில் இப்படி ஆகிவிட்டதே என்று அதுவேறு அவர்களை இன்னும் வருத்தியது.

இனி அவள் உடம்புக்கு ஒன்றுமில்லை என்று வைத்தியர்கள் சொல்ல, தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் சேதுராமனும், ஜெயனும்.

பெற்றவர்களின் அல்லது கூடப் பிறந்தவனின் குரல் கேட்டுவிடாதா என்கிற கடைசித்துளி நம்பிக்கையை நெஞ்சில் சுமந்தபடி, அவர்கள் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தவளை, விறாந்தையில்(ஹாலில்) மேசை ஒன்றின் மேலே பூ மாலைகளைச் சுமந்தபடி, சட்டம் போட்ட பிரேமுக்குள் இருந்து சிரித்தபடி வரவேற்றார்கள், அவளின் பெற்றவர்களும் உடன் பிறந்தவனும்.

அதைப் பார்த்ததும், கைகால்கள் நடுங்க, உள்ளம் துடிக்க, உடல் முழுவதும் பதற, இது பொய்யாக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டே அந்தப் படங்களை உற்று உற்றுப் பார்த்தாள்.

எத்தனை தடவைகள் பார்த்தாலும் மாண்டவர் மீண்டு வரப்போவது இல்லையே! அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை அவளுக்கு தலையில் அடித்துச் சொன்னது அவர்களின் முன்னால் எரிந்துகொண்டிருந்த விளக்கு.

எரிந்துகொண்டிருந்த ஊதுவத்தி, அவர்களும் சாம்பலாகி விட்டார்கள் என்று அவள் மூளைக்கு அறைந்து சொன்னது!

கண்டிப்பிலேயே பாசத்தைக் காட்டும் அவள் அன்னை இவ்வுலகில் இல்லையா..? அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த அப்பாவை அவளால் இனிப் பார்க்கவே முடியாதா..? அண்ணா.. ஐயோ அண்ணா நீங்களும் என்னை விட்டுப் போய்விட்டீர்களா?

உயிர்போகும் தறுவாயிலும் அவளைக் காத்தவன் கிடந்த கோலம் கண்முன் ஆடியது!

“ஐயோ அண்ணா..! என்னை விட்டுவிட்டு எங்கே போனீர்கள்…” என்கிற கதறலோடு அந்த மேசையின் காலடியில் விழுந்தவள், இந்த ஒரு மாதமாய் மனதில் தவித்த தவிப்பை எல்லாம் கதறித் தீர்த்தாள்.

“என்னை இப்படித் தனியாக விட்டுவிட்டீர்களே.. இனி எப்படி நானிருப்பேன். எனக்கு என்ன தெரியும்… அப்பா, எங்கப்பா போனீங்க.. அம்மா வாங்கம்மா… நீங்கள் எல்லோரும் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன். உங்களை எல்லாம் விட்டுவிட்டு இருக்கமுடியாது என்றுதானே கல்யாணமே வேண்டாம் என்றேன்.. இப்படி மொத்தமாக என்னை விட்டுட்டு போயிட்டீங்களே.. ஏன் இப்படிச் செய்தீர்கள்.. இனி எனக்கு யார் இருக்கிறார்கள்.. ஐயோ.. அம்மா…” என்று தலையில் அடித்துக் கதறியவளைப் பார்த்து அங்கு நின்ற மூவருக்குமே கண்கள் கலங்கியது.

ஜெயனுக்கோ ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்டு இறுகிப்போய் நின்றான்.

அவள் படும் வேதனையைப் பார்க்க முடியாது, அவளருகில் விரைந்த அவனின் அம்மா மங்கை, அவளை அணைத்துத் தூக்கி, “அழாதம்மா… என்ன செய்வது, எல்லாம் விதி. நீ அழாதே, உன் உடம்பு மீண்டும் கெட்டுவிடும்..”என்றவரின் பேச்சுக்கள் அவள் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை. தன் பாட்டுக்கு கதறித் துடித்தாள்.

“என்னால்தான்! எல்லாம் என்னால்தான். நான்தான் ஏதாவது குடிப்போம் என்று கேட்டேன்.. கடவுளே.. நானே எல்லோரையும் கொன்றுவிட்டேனே.. அண்ணா.. நான் என்ன செய்வேன் இனி..” என்று வேதனையோடு அரற்றியவளின் முதுகைத் ஆதரவாக தடவிக்கொண்டிருந்தவரின் விழிகளும் கலங்கியது.

“அழாதே சனா. நீ அழுதால் உன் அம்மா அப்பா தாங்குவார்களா? ம்..? நீ நல்ல பிள்ளைதானே.. அழாதே! உனக்கு நாங்கள் இருக்கிறோம்..” வார்த்தைகளாலும் அவளைத் தேற்ற முயன்றார் மங்கை.

அங்கே ஜெர்மனியில் சுலக்சனா வேறு அழுதுகொண்டிருக்கிறாள் என்று சிவபாலனும் சொன்னதில், இரு பெண்களினதும் நிலையை நினைத்து அந்தத் தாயுள்ளமும் கலங்கியது.

அழுதுகொண்டிருந்த சனாவின் உடல் தன் மேல் அழுந்துவதை உணர்ந்து, “ஜெயன்.. இங்கே பார் சனாவை..” என்றார் பதட்டத்தோடு.

விரைந்துவந்தவன் அவளைத் தாங்கிக்கொண்டான். “மயங்கிவிட்டாள் போல அம்மா…” என்றவனிடம், “மயங்கிவிட்டாளா? இதோ நான் உடனே வைத்தியரைக் கூப்பிடுகிறேன்..” என்று பதறிக்கொண்டே வீட்டுத் தொலைபேசி அருகே விரைந்த மங்கையைத் தடுத்தார் சேதுராமன்.

“வேண்டாம் மங்கை. பெற்றவர்களை படத்தில் பார்த்ததால் வந்த அதிர்ச்சியில் உண்டான மயக்கமாக இருக்கும்…” என்றார் கம்மிய குரலில். நட்போடு நல்லுறவு கொண்ட சம்மந்தி வீட்டினரை இழந்துவிட்ட துக்கம் அவர் குரலிலும் தெரிந்தது.

“இந்தப் பெண் இந்தப் பாடு படுகிறாளே.. கடவுளும் இப்படிச் செய்திருக்க வேண்டாம்.. அதுவும் எங்கள் வீட்டுக்கு வரும்போது இப்படி நடந்துவிட்டதே..” என்று புலம்பினார் மங்கை அழுதுகொண்டே.

“அம்மா, நீங்களும் அழாதீர்கள். பிறகு அவளை யார் தேற்றுவது..” என்று தாயைக் கடிந்தபடி சனாவை அறைக்குத் தூக்கிச் சென்றான் ஜெயன்.

“எனக்கே தாங்க முடியவில்லையேடா. இந்தப் பெண் எப்படித் தாங்குவாள். ” என்றபடி, அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

சனாவைக் கட்டிலில் கிடத்திவிட்டு, “அப்பா, அந்த மாத்திரைகளைத் தாருங்கள்..” என்று அவர்களோடு அறைக்கு வந்த தகப்பனின் கையில் இருந்த பையை வாங்கி, “அதிர்ச்சியில் மயக்கத்தோடு தூக்கமும் வரும் என்று டாக்டர் சொன்னார். அதனால் இதை அவள் எழுந்தபிறகு கொடுங்கம்மா. அதற்கு முதல் வயிற்றுக்கு எதையாவது கொடுத்துவிடுங்கள். தூக்க மாத்திரையும் இருக்கிறது..” என்று தாயிடம் நீட்டினான் ஜெயபாலன்.

அவர் அதை வாங்கி வைக்கவும், “நன்றாகத் தூங்கட்டும். இப்போதைக்கு தூக்கம் தான் அவளுக்குப் பெரிய மருந்து. வாருங்கள் நாம் விறாந்தைக்குப் போகலாம்…” என்றுவிட்டு சேதுராமன் அறையை விட்டு வெளியேற, அவளுக்கு போர்த்திவிட்டு மங்கையும் வெளியேறினார்.

காற்று வருவதற்கு ஏதுவாக ஜன்னலைத் திறந்துவிட்ட ஜெயன், சற்று நேரம் வாடி வதங்கிக் கிடந்த சனாவின் முகத்தையே பார்த்திருந்தான்.

அவளை ஆவலோடு எதிர்பார்த்துத் தான் காத்திருந்தது என்ன, கண்ட கனவுகள் என்ன, இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்ட விதம் என்ன என்று நினைத்தவனுக்கு அவனை அறியாமலேயே பெருமூச்சொன்று வெளியேறியது. பின்னர் கதவை அரைவாசிக்குச் சாத்திவிட்டு அவனும் மனதில் பாரத்தோடு அவ்விடம் விட்டு அகன்றான்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. மற்றொரு தாயாகவே மாறி அவளைத் தாங்கினார் மங்கை. சேதுராமனோ முடிந்தவரை அவளிடம் பொது விஷயங்கள் பற்றிப் பேச்சுக் கொடுத்து, அவள் வாயைத் திறக்கவைக்க முயன்று கொண்டிருந்தார். பலன் என்னவோ பூஜ்ஜியமாகவே இருந்தது.

சில நாட்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்த ஜெயன், அவள் பொறுப்பை பெற்றவர்களின் அனுமதி இன்றியே தனதாக்கிக் கொண்டான்.

தேங்காயை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் தேங்காய்ப்பால், பால்பவுடர் போன்றவற்றைத் தயாரிக்கும் சேதுராமனின் சொந்தத் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தவன், அன்றிலிருந்து முடிந்தவரை வேலை நேரத்தைச் சுருக்கிவிட்டு அவளோடு பொழுதைச் செலவழித்தான்.

“வா, வெளியே போய்வரலாம்…” என்று அவன் வற்புறுத்தியபோதும் மறுத்தவளை, மங்கைதான், “சும்மா வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு எங்கயாவது போய்விட்டு வாம்மா…” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாதபோதும், தவிர்க்க முடியாமல் சென்றாள் லட்சனா.

இலங்கையின் அழகை இன்னுமின்னும் கூட்டிக்காட்டும் “கோல்பேஸ்” கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.

காற்று முகத்தில் மோத, பட்டம் விட்டபடி விளையாடித் திரிந்த குழந்தைகளையும், பயிற்ச்சிகள் எடுத்துக்கொண்டிருந்த திரளான ராணுவ வீரர்களையும், திரண்டு நின்று கடலை ரசிக்கும் மக்களையும் பார்த்தவளின் முகத்தில் தோன்றிய மெல்லிய தெளிவைக் கண்டவன் தினமும் அங்கே அழைத்து வந்தான்.

அவள் வீட்டுக்குள்ளேயே தனிமையில் முடங்குவதை முற்றிலுமாக தடுத்தான். எதையாவது சுவாரசியமாக பேசிக்கொண்டே இருந்தான். அவளோ அவனிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போனாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock