“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை.
அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்கு முதலில் அவள் தன்னைத் தானே தயார் செய்யவேண்டும். இவனோ திடீர் என்று சொல் என்கிறான். அவளால் அது முடியவில்லை.
அதோடு அவள் செய்வது தவறு என்று அவளுக்குமே புரிந்ததில், ஜெயனிடம் நேரடியாகவே சொல்லி மன்னிப்புக் கேட்கவே அவள் மனம் விரும்பியது.
“சூர்யா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்கள். அவசரப் படவேண்டாம். முதலில் அக்காவிடம் சொல்லிவிட்டு, ஜெயனிடம் நேரவே சொல்கிறேனே. அதுதான் முறை சூர்யா..” என்றாள் கெஞ்சலாக.
“ப்ச்! என்ன நீ…” என்று சலித்தவன், “என்னவாவது செய். ஆனால் நீ செய்வது தவறு.” என்றான் அழுத்தமான குரலில். அவள் முகம் அதைக் கேட்டுக் கூம்பியது.
அதற்கு மேல் அதைப்பற்றி அவன் பேசவில்லை. இனி அது அவள் பொறுப்பு என்று நினைத்தவன், காரைக் கிளப்பினான்.
காரைக் கொண்டு சென்று நிறுத்திய இடம், அவன் தாத்தா பாட்டியின் வீடு.
யோசனையில் இருந்தவள் கார் சென்ற பாதையைக் கவனிக்கவில்லை. அவன் நிறுத்தியதுமே, இடத்தை இனங்கண்டு, “அச்சோ சூர்யா. இங்கு எதற்கு வந்தீர்கள்? நான் வேறு அழுது வீங்கிய முகத்தோடு இருக்கிறேன்.. அக்காவுக்கு தெரிந்தால் அதுவேறு பிரச்சினை..” என்று படபடத்தவளிடம், எதுவும் சொல்லாது காரைவிட்டு இறங்கினான் அவன்.
அவள் இருந்த பக்கமாக வந்து, கதவைத் திறந்து, “இறங்கு..” என்றான்.
“என்ன சூர்யா இது..?”
“அழுதாலும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் அக்காவுக்கு நீ இங்கு வந்தது தெரியவராது. அதனால் இறங்கு..” என்றவன், அவள் கையைப் பிடித்து இறக்கி அவளோடு சேர்ந்தே நடந்தான்.
பெரியவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக இருக்க, கையை அவனிடமிருந்து உருவப் பார்த்தாள் அவள்.
அதை உணர்ந்து, “பேசாமல் வா. இல்லையானால் தூக்கிக்கொண்டு போவேன்..” என்றான் அவன். படக்கென்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனாள் சனா.
பின்னே, அவன் என்றும் எதையும் பேச்சுக்காகச் சொன்னதே இல்லையே. சொன்னதுபோல் அவளைத் தூக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது. அதற்கு இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு போவது எவ்வளவோ மேல் அல்லவா!
சோபாவில் இலகுவாக அமர்ந்து, சாக்ஸ் பின்னிக்கொண்டிருந்த பாட்டி உள்ளே வந்தவர்களைக் கண்டதும், முதலில் யோசனையாகப் பார்த்தார். பின்னர் முகம் மலர எழுந்து வந்தார்.
“வாம்மா லச்சு.. வாவா. உன்னைக் கூட்டிக்கொண்டு வா என்று இவனிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் தெரியுமா. இன்றுதான் மனம் வந்திருகிறது இவனுக்கு…” என்றவர் மருந்துக்கும் அவன் முகம் பாராது, லட்சனாவை அன்போடு அணைத்துக்கொண்டார்.
தன் வீட்டினர் தன் விருப்பத்துக்கு தடை சொல்லமாட்டார்கள் என்று சூர்யா சொல்லியிருந்தாலும், அந்த வீட்டுக்குள் நுழைகையில் அவளுக்கு நடுக்கமாகத்தான் இருந்தது.
எப்படி வரவேற்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று நொடிக்குள் பலதைக் கற்பனை பண்ணிக் கலங்கியவள், இப்படியான பாசமான வரவேற்பைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அதைவிட அவளின் அம்மா அப்பா அழைக்கும் பெயரை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டதில், அவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது.
“ஏன் கண்கள் கலங்குது லச்சும்மா. இந்தப் பாட்டியைப் பார்க்க அவ்வளவு பயமாகவா இருக்கிறது?” என்று அவர் கேட்க, அழுகையும் சிரிப்பும் ஒருங்கே வந்தது அவளுக்கு.
“இல்லை பாட்டி. அம்மா அப்பா இப்படித்தான் என்னைக் கூப்பிடுவார்கள்.. அதுதான்…”தழுதழுத்த குரலில் அவள் சொல்ல, “அதற்கென்ன லச்சும்மா. என்னையும் உன் அம்மாவாக நினைத்துக்கொள். எனக்கும் உன் அம்மா வயதுதான் இருக்கும். அல்லது ஒன்றிரண்டு குறைவாக இருக்கும்..” என்றார் அவர் உண்மை போல.
“ம்கும்.. இந்த நினைப்பு வேறு உங்களுக்கு இருக்கிறதா பாட்டி…” என்ற சூர்யாவின் முகத்திலும் முறுவல்.
“அவன் பேச்சை நம்பாதே லச்சு. எனக்கு வயது குறைவுதான். அவனை விட நான் அழகு என்பதால் அவனுக்குப் பொறாமை..” என்றார் அவர் மீண்டும்.
அதைக் கேட்டவளுக்குச் சிரிப்புப் பீறிட கலகலத்துச் சிரித்தாள். அவர்களுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதும், அவரின் பேச்சும் கலங்கியிருந்த அவள் மனதை இலேசாக்க, உற்சாகம் பீறிட்டது. வார்த்தைகளால் வடிக்க முடியாத நிறைவை அந்த வீட்டிற்குள் நுழைந்த நொடியிலிருந்து அனுபவித்தாள்.
அவளின் மலர்ந்த முகத்தை ஆசையோடு பார்த்தவர், “எப்போதும் இப்படியே இரம்மா. அப்போதுதான் என் பேரன் உன்னிடம் மயங்கியே கிடப்பான்…” என்றார் பாட்டி அப்போதும்.
அவரின் பேச்சில் மலர்ந்த முகத்தோடும் கதகதத்த கன்னத்தோடும் அவள் அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். இன்னும் சிவந்தது அவள் முகம்.
“பக்கத்தில் இருக்கும் பேரனோடு ஒரு வார்த்தை கதைக்கவில்லை. இதில் பேரனை மயக்குவதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறீர்களே, நீங்கள் என் பாட்டியா அல்லது அவளின் பாட்டியா..?” என்று பொய்க் கோபம் காட்டிக் கேட்டான் அவன்.
“இதிலென்ன சந்தேகம் உனக்கு? நான் இனி லச்சுவின் பாட்டிதான். நீ போடா..” என்றார் ஒரேடியாக.
லட்சனாவுக்கோ வியப்பாக இருந்தது. அவன் அவள் காதலனாக இருந்தாலும், கம்பீரமாகவே அவனைப் பார்த்துப் பழகி இருக்கிறாள். அவனிடமும் ஒருவித நிமிர்வு எப்போதுமே இருக்கும். அப்படியானவனை ஒருவர் இப்படிச் சிறுபிள்ளை போல் நடத்துவது, அவளுக்கு அதிசயமாக இருந்தது.
“நீ வாம்மா. அவன் கிடக்கிறான். அவனுக்கு தான் பெரிய இவன் என்று நினைப்பு..” என்றபடி பாட்டி அவளை உள்ளே அழைத்துச் செல்ல, நடந்துகொண்டிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்து, புருவங்களைத் தூக்கி மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள். விழிகளோ அவனைப் பார்த்து நகைத்தது.
அதைக் கண்டவனின் முகத்தில் ரசனையுடன் கூடிய புன்னகை தோன்ற, கண்களோ ரகசியச் சிரிப்பில் மின்னியது. அந்தக் கண்களில் இருந்த காந்த சக்தியில் அவனைத் தொடர்ந்து பார்க்க முடியாமல், சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள் லட்சனா.
“தாத்தா எங்கே பாட்டி..” அவளோடு எதையெதையோ கதைத்தபடி, பேரீச்சம்பழக் கேக்கை அவளுக்காக வெட்டிக்கொண்டிருந்த பாட்டியிடம் கேட்டாள்.
“அவரா.. என்னையே எப்போதும் பார்த்துச் சலித்துவிட்டதாம். அதுதான் அழகான பெண்களைப் பார்த்து வருகிறேன் என்று வெளியே போய்விட்டார்…” என்றவரிடம், “என்னது..?” என்று அதிர்ந்து விழித்தாள் சனா.