அவளின் பாவனையில் சிரித்துக்கொண்டே, “சும்மா ஒரு நடை நடந்துவிட்டு வருகிறேன் என்று போய்விட்டார் லச்சும்மா.” என்ற பாட்டியை, அவள் விழிகள் அளந்தன.
ஒரு முக்கால் ஜீன்ஸும் கொஞ்சம் பெரிதான ப்ளவுசும் போட்டிருந்தவரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இதில் குதிரை வால் கொண்டை வேறு. வெளிநாட்டவர்கள் அப்படித்தான் அணிவார்கள் என்றாலும், நம் நாட்டவர்கள், அதுவும் வயதானவர்கள் இலகுவில் இப்படி மாறமாட்டார்கள். ஆனால் இங்கே.. அவரின் பேச்சு, நடை, உடை என்று எல்லாமே அதிசயமாக இருந்தது அவளுக்கு.
இந்த மாற்றங்கள்தான் சூர்யாவிடமும் தென் படுகிறதோ என்று ஓடிய அவள் சிந்தனையை, “என்னம்மா, என்னைப் பார்த்து முடித்துவிட்டாயா? ஒரு தொண்ணூறு மார்க்ஸ் போடுவாயா?” என்று கேட்டார் அவர்.
“என்னது? மார்க்கா?” என்று மீண்டும் அதிசயித்தவள், “பாட்டி! நீங்கள் மிகவும் பொல்லாதவர்கள்…” என்றாள் மலர்ந்துவிட்ட நகையோடு.
“உடையிலும் பேச்சிலும் என்னம்மா இருக்கிறது? மனம் நல்லதாக இருந்தால் போதும். இங்கு வந்து நிறையக் காலம் ஆகிவிட்டதாலோ என்னவோ எங்களுக்கு இது பழகிவிட்டது…” என்றார் தன் உடையைக் காட்டி.
“உங்களைப் போலத்தான் சூர்யாவும் பாட்டி. எதையும் வெளிப்படையாகவே கதைக்கிறார்..” என்றாள் அவளும் இலகுவான குரலில். ஏனோ அவளுக்கு பாட்டியையும் தாத்தாவையும் நிரம்பவுமே பிடித்திருந்தது. அதுவும் அவரின் வெளிப்படையான பேச்சு மிக மிகப் பிடித்தது.
“ம்ம்.. அவன் மிகவும் நல்ல பிள்ளை லச்சு. உன்னை விரும்புகிறேன் என்று தாத்தாவிடம் சொல்லி இருக்கிறான். அதைக் கேட்டதும் எங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? எங்கே, எந்த வெள்ளைக்காரியைக் கூட்டிக்கொண்டு வருவானோ என்றிருந்தது. இப்போது நிம்மதியாக இருக்கிறோம். நீ வேறு தங்கமான பிள்ளையாக இருக்கிறாய்..” என்றார் அவர் அன்போடு.
“பாட்டி, இப்படி ஐஸ் வைக்காதீர்கள்..” என்றபோதும், அவர் சொன்னதைக் கேட்டு அவளுக்கு சந்தோசமாக இருந்தது.
“எப்படிப் பாட்டி சூர்யா இவ்வளவு நன்றாகத் தமிழ் கதைக்கிறார். என்னைப் போலவே..” அவளின் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டாள்.
“எங்களால்தான். இந்த நாட்டு மொழி முக்கியம் என்பதால், பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முதலில் அதையே முதன்மையாக கற்பிக்கிறார்கள் லச்சு. அதைப் பிழை என்றும் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் தமிழ் நன்றாக கற்றுக்கொள்ள முடிவதில்லை. எங்கள் வீட்டில் தாத்தா பாட்டி என்று நாங்கள் இருவரும் இருந்தபடியால், நானே அவர்களுக்கு தமிழைக் கட்டாயமாக சொல்லிக்கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு இப்போதும் எழுத வாசிக்கக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் நன்றாகக் கதைப்பார்கள். அதுவும் சூர்யா மிக நன்றாகக் கதைப்பான். காரணம், அவன் அவர்களின் வீட்டில் இருப்பதை விட இங்குதான் அதிகம் இருப்பான்.” என்றார் அவர், அவளிடம் தேநீரை நீட்டியபடி.
“உங்களுக்கு எதற்குப் பாட்டி சிரமம். என்னிடம் சொல்லியிருக்க, நானே போட்டிருப்பேனே..” அவர் தேநீர் ஊற்றியதைக் கூட கவனியாமல் மூழ்கிவிட்ட தன்னையே கடிந்தபடி சொன்னாள் அவள்.
“இதில் என்ன இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வரப்போகும் மகாலட்சுமி நீ. உனக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறேன்.” என்றவர், “உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால் அவர்களைப் பற்றி நீ யோசிக்காதே…” என்றார் தொடர்ந்து.
அதைக் கேட்டதும் அவள் உள்ளமெல்லாம் புதுவித உணர்வுகளின் ஆரம்பம். அவளுக்கும் அவனுக்குமாய் பிள்ளைகள். அவனைப் போல ஒன்று. அவளைப்போல ஒன்று. அதுவும் அவனைப் போன்று ஒரு குழந்தை, நினைக்கவே நெஞ்சம் இனித்தது. கண்களிலோ அந்தக் காட்சிகளின் கனவு மின்னியது.
கையில் பிடித்திருந்த கப்போடு, கனவு மிதக்கும் விழிகளோடு உலகை மறந்து நின்றவளைப் பார்க்க, பாட்டிக்கும் சந்தோசமாக இருந்தது.
அவருக்கும் வேறு என்ன வேண்டும்? பிள்ளைகளின் நல் வாழ்வைப் பார்த்துவிட்டார். இனிப் பேரப்பிள்ளைகள் வாழ்க்கைதானே அவர்களின் கனவும். அதுவும் அவரின் செல்லப் பேரன் சூர்யாவின் தேர்வு, குடும்பப் பாங்கான பெண்ணாக இருக்கக் கண்டு அவருக்கும் உள்ளம் நிறைந்தது.
இன்னொரு கப்பையும் வெட்டிய கேக் துண்டுகளையும் ஒரு தட்டில் வைத்தவர், அதை அவளிடம் கொடுத்து, “மேலே சூர்யா இருப்பான். அவனுக்கும் கொடுத்து, நீயும் குடி. நான் உன் தாத்தாவுக்கு சாக்ஸ் பின்னவேண்டும்..” என்றவர், இளையவர்களுக்கு இடம் கொடுத்துத் தான் ஒதுங்கினார்.
“சரி பாட்டி..” என்றவள், நெஞ்சில் என்னென்னவோ இனிய கற்பனைகள் ஓட, தேநீர் கப்புக்களோடு சூர்யாவின் அறைக்குச் சென்றாள்.
இரண்டு கைகளாலும் தட்டைப் பிடித்திருந்தவள், கதவைத் தட்டாமல், தட்டத் தோன்றாமல், “சூர்யா..” என்று கூப்பிட்டபடி உள்ளே செல்ல, அங்கே அவன் நின்ற கோலத்தைக் கண்டு, அவள் குரல் உள்ளேயே பதுங்கிக்கொண்டது.
மேல் ஷர்ட் ஐ மட்டும் கழட்டிவிட்டு முகம் கழுவி இருக்கிறான் என்று தெரிந்தது. வெள்ளை உள் பனியன் தண்ணீர் பட்டு நனைந்திருக்க, முகம் துடைத்த துவாயை ஒரு பக்கத் தோளில் போட்டபடி, கப்போர்டைத் திறந்து என்னவோ தேடிக்கொண்டிருந்தான். உருண்டு திரண்ட புஜங்களும், பரந்துவிரிந்த மார்பும் அவளை என்னவோ செய்தது.
அவள் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து, “ஹேய் லட்டு, வாவா. ஏதாவது குடிக்கலாமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கீழே வருவதற்குள் நீயே கொண்டு வந்துவிட்டாய்..” என்றான். அவளோ அவனைப் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தபடி நின்றாள்.
உடலிலும் மனதிலும் இளமையின் தாக்கங்கள் புதிதாக வந்து அவளைப் போட்டுப் புரட்டியெடுத்தன!
அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. “என்ன லட்டு?” என்றபடி அவன் அருகே வர அவளுக்கோ கைகள் நடுங்கியது. அவள் கையில் இருந்த தட்டு ஆடவும், அதை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தவன், அவள் தோள்களைப் பற்றி, “என்ன லட்டு…” என்று மீண்டும் கேட்டான்.
குனிந்த முகம் நிமிராமல் நின்றவளின் முகத்தை, ஒற்றை விரலால் அவன் நிமிர்த்த, அங்கே வெட்கத்தில் சிவந்துவிட்ட கன்னங்களோடு, சிப்பியாய் மூடிக்கொண்ட இமைகள் துடிக்க, உதட்டை மெலிதாகக் கடித்தபடி நின்றவளின் தோற்றம் அவனைக் குறுகுறுக்க வைத்தது.
காரணம் தெரியாதபோதும், அவன் முகத்தில் அவளை எண்ணிக் குறுநகை தோன்றியது. “என்னை நிமிர்ந்து பார் லட்டு. இதென்ன இப்படி வெட்கப் படுகிறாய்…” என்று அவன் அவள் முகத்தை இன்னும் நிமித்த, அவள் பார்வை மின்னலென அவன் தேகத்தைத் தீண்டி விலகியது.
அவளைத் தொடர்ந்து, தானும் தன்னைப் பார்த்தவனுக்கு, இதற்கா இவளுக்கு இந்த வெட்கம் என்று தோன்றினாலும், மனதில் உல்லாசமும் உண்டானது.
அதில் சந்தோசமாக வாய்விட்டு நகைத்தவன், “என்ன லட்டு. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பாய்..” என்றபடி அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.