அவர்கள் வீட்டின் பால்கனியில் இருந்த சாய்கதிரையில் அமர்ந்து, கைபேசியில் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த சூர்யாவை, விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் லட்சனா.
சற்று முன்னர்தான் அவனோடு கதைத்தாள். அதுவும் அன்றைய நாளில் ஐந்தாவது தடவையாக.
காலையிலேயே எழுந்துவிட்டீர்களா என்று கேட்க, முதல் அழைப்பு. காலைச்சாப்பாடு சாப்பிட்டீர்களா என்று கேட்க அடுத்த அழைப்பு. என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று அடுத்தது. வேலைக்குப் போகவில்லையா என்று அடுத்தது. சற்று முன் சும்மா என்று ஒன்று.
ஏதோ ஒன்றைச் சாட்டி எடுப்பவள், என்னவென்றே இல்லாது அவனோடு கதை அளந்துவிட்டுத்தான் வைத்தாள். அப்படி வைத்தபிறகு அடுத்து அவள் செய்யும் வேலை, கைபேசியில் இருக்கும் அவன் போட்டோவோடு கதைப்பது.
“மகா கள்ளன்டா நீ. இப்போது ஆசையாகப் பார்ப்பதுபோல் உன்னை நேராக என்னால் பார்க்கவே முடிவதில்லை. அப்படி இந்தக் கண்ணில் என்னதான் வைத்திருக்கிறாயோ… அப்படியே என்னைச் சுண்டி இழுக்கிறது.” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளித் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள். அவன் கண்களுக்கு நேரடியாகவே ஒரு முத்தம். அந்தக் கைபேசி பாவம்! வாயிருந்திருக்க, கதறிக் கண்ணீர் விட்டிருக்கும்!
“இதையெல்லாம் நேரே செய்யத்தான் விருப்பம். அதற்கு எங்கே நீ விடுகிறாய். நான் ஆரம்பித்தால் நீ முடித்துவைக்கிறாயே, அவசரத்துக்குப் பிறந்தவனே…” மீண்டும் செல்லமாக அவனைச் சீராட்டிக்கொண்டாள்.
வீட்டில் யாருமில்லாத தனிமையும், அவன் அருகிலில்லாத இனிமையும் இதையெல்லாம் வாய்விட்டுச் சொல்லும் துணிவை அவளுக்குக் கொடுத்தது.
அவனைப் பார்க்கப்பார்க்க, அவள் இதழ்களில் இளம் புன்னகை நெளிந்தது. மலர்ந்த முகமும், விழிகளில் கனவுமாக இருந்தவளின் எண்ணங்கள் முழுவதிலும் சூர்யாவே நிறைந்திருந்தான்.
இப்போதெல்லாம் அவள் உள்ளமெல்லாம் உள்ள உணர்வு காதல்… காதல்.. காதல் மட்டுமே!
அந்தளவுக்கு அவன் காதல் அவளை மயிலிறகாய் வருடிக்கொடுத்தது!
ஜெயனைப் பற்றி சூர்யாவிடம் சொல்லவேண்டுமே என்றிருந்த தவிப்பு மறைந்திருந்தது. பெற்றவர்களின் இழப்பைப் பற்றி அவனிடம் சொல்லியதில் மனம் பெரும் ஆறுதல் அடைந்திருந்தது.
போதாக்குறைக்கு அன்று சூர்யாவின் தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர்களின் சம்மதமும் கிடைத்துவிட்டதை அறிந்துகொண்டதில், அவளின் காதல் அசுரனைக் கைப்பிடிக்க அவளுக்குத் தடை எதுவுமில்லை என்று எண்ணியெண்ணி அவள் உள்ளம் களித்தது.
இன்னும் மிகுதியாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினை. அது ஜெயன்!
அவனிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்லி, அவன் விலகிவிட்டால், அக்கா அத்தானும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதுவும் நடக்கும் என்று அவள் உள் மனது நம்பியது.
காரணம், அவள் அறிந்தவரையில் ஜெயன் நல்லவன். மிக மிக நல்லவன்! அவளைப் புரிந்துகொள்வான்.
அவன் பாவமே என்று தோன்றினாலும், காதலின்றி ஒருவனுடன் எதிர்கால வாழ்க்கையை அமைக்கமுடியாதே. அவனுக்கும் அவனையே நினைத்து உருகும் ஒருத்தி வராமலா போய்விடுவாள்.
இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் நிச்சயித்திருப்பான் தானே! ஜெயனுக்குச் சொந்தமான அந்த ‘இன்னார்’ வெகுவிரைவில் அவன் வாழ்வில் வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.
அடுத்தநொடியே, அவளுக்குச் சொந்தமான ‘இன்னாரை’ நோக்கி அவள் உள்ளம் பாய்ந்தது.
இப்போதெல்லாம் அவளால் அவனை விட்டுவிட்டு இருக்கவே முடிவதில்லை. ‘எங்காவது சந்திக்கலாம் வா’ என்று அவன் அழைத்த காலம் மலையேறி, ‘இன்று எங்கு பார்க்கலாம் சூர்யா’ என்று அவள் கேட்கும் காலம் வந்திருந்தது.
‘டிரைவிங்’ குக்கு படிப்பதே பெருஞ் சிரமமாக இருந்தது. அந்தளவுக்கு அவன் நினைவுகள் அவளை ஆட்டிப்படைத்தன. பெரும் கஷ்டப்பட்டுப் படித்துத்தான் அந்தப் பரீட்சையை எழுதி சித்தியடைந்திருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவன் தோளில் தன்னை மறந்து தொங்கியபடி, “சூர்யா, எழுத்துப் பரீட்சையில் நான் பாசாகிவிட்டேன்…” என்று அவள் துள்ளலோடு சொன்னபோது, அவளை அணைத்து, “வாவ்..! எனக்குத் தெரியும். என் லட்டு பாசாகிவிடுவாள்..” என்று அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது, அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
பாசானபோது உண்டான பரவசத்தை விட, அவன் ‘என் லட்டு’என்றபோது உண்டான பரவசம் அதிகமாக இருந்தது.
நேற்று அவளின் அக்கா, “முதன் முதலாக கார் ஓடப்போகிறாய். துணைக்கு நான் வரவா..” என்று கேட்டபோது, “வேண்டாம்க்கா. நான் மட்டுமே போகிறேன்..” என்றவள், “முதன் முதலாக கார் ஓடப்போகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது சூர்யா.…” என்றாள் அவனிடம்.
“வா, நானும் வருகிறேன் உன்னோடு…” என்றவன், காரில் ஓட்டுனரின் இருக்கையில் அவளும், அருகில் அவளுக்குப் பழக்கும் மாஸ்டரும் அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் அமர்ந்து, “உன்னால் முடியும். பயப்படாமல் ஓட்டு..” என்றபோது, எதையும் சாதிக்க என்னால் இயலும் என்கிற பலம் உண்டானது.
ஆக மொத்தத்தில் அவளின் சக்தியாக, அவன் இருந்தான்!
அன்று அவளுக்கு வேலையும் இல்லை, டொச் வகுப்பும் இல்லை. வீட்டில் அக்கா குடும்பமும் இல்லை.
தூரத்து உறவினர்களின் மகளுக்குத் திருமணம் என்று அவர்கள் பெர்லின் சென்றுவிட்டார்கள். அவளையும் அழைத்தார்கள் தான். மூன்று நாட்கள் அங்கு தங்கவேண்டும் என்றதும், வேலை, டொச் வகுப்பு, கார் ஓட்டம் என்று எதையெதையோ சாக்குச் சொல்லி அவர்களோடு செல்லாமல் நின்றுவிட்டாள். உண்மைக் காரணம் அவையல்ல என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
அவனைப் பாராமல் மூன்று நாட்களென்ன, மூன்று நிமிடம் கூட அவளால் இருக்க முடியாது!
பெற்றவர்களின் இழப்புக்கூட முன்னர் போன்று இப்போதெல்லாம் அவளைப் பெரிதாகத் தாக்குவதில்லை. அனைத்துச் சொந்தமாக, அவளையே நேசிக்கும் ஒருவன் கிடைத்துவிட்டதில், அம்மா, அப்பா, அண்ணா என்று அனைவரையும் அவனில் கண்டாள்.
அவனுக்கு அழைப்போமா வேண்டாமா.. இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்.. என்று எண்ணங்கள் ஓட, மனதின் ஆவலை அடக்க முடியாது, மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.
“ஹலோ..” அந்த ஹலோவே அவனருகில் யாரோ இருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்தியது. இல்லாவிட்டால் ஆரம்பமே “லட்டு” வாகத்தானே இருக்கும்!
“ஹாய் சூர்யா, பக்கத்தில் யாராவது .இருக்கிறார்களா..?” என்று ரகசியக் குரலில் கேட்டாள்.
“ம்…” என்றவன், இருந்த இடத்தில் இருந்து எழுந்து செல்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.
“இப்போது திரும்ப எதற்கு எடுத்தாய் லட்டு..?” என்றவனின் குரலில் என்ன இருந்தது. சலிப்பு?!
“தனியாக வந்துவிட்டீர்களா சூர்யா? எனக்கு இங்கே நேரமே போகமாட்டேன் என்கிறது. நாம் எங்காவது போகலாமா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.
“இதைக் காலையில் கதைக்கும்போது சொல்லியிருக்கலாமே நீ. நான் அம்மாவோடு கடைக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். இனி உன்னோடு வர இயலாது…” என்றான் அவன்.
“அச்சோ சூர்யா. காலையில் எனக்கு இந்த எண்ணம் வரவில்லை. இப்போதுதான் வந்தது. இன்று எனக்கு ஒரு வேலையும் இல்லை. பொழுது நகரவே மாட்டேன் என்கிறது. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. உங்கள் அம்மாவிடம் எதையாவது சொல்லிச் சமாளித்துவிட்டு வாருங்களேன்..” என்றாள் கெஞ்சலாக.
அதற்கு அவன் என்னவோ சொல்ல வரவும், “மாட்டேன் என்று சொல்லிவிடாதீர்கள் சூர்யா. அம்மாவோடு பிறகும் போகலாம் தானே. எனக்கு இந்த மூன்று நாட்களுக்குத்தான் இந்தச் சுதந்திரம். இந்த மூன்று நாட்களையும் எனக்காக ஒதுக்குங்கள் சூர்யா…” என்றாள் மீண்டும் வேண்டுதலாக.
அவனுக்கு அவளின் பேச்சில் முறுவல் தோன்றியது. “சரி, வர முடியுமா என்று பார்க்கிறேன்..” என்றான் இலகுவான குரலில்.
“அதென்ன பார்ப்பது. நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நான் வந்து, உங்கள் அம்மாவிடம் நேரடியாக சொல்லிவிட்டே உங்களை இழுத்துக்கொண்டு வருவேன்..” என்றாள் தைரியமாக.
“அட! எதற்கெடுத்தாலும், அவர்கள் என்ன நினைப்பார்கள் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயப்படும் உனக்கு இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது..?” நகையோடு அவன் கேட்க,
“எல்லாம் உங்கள் அன்பு தந்த சக்திதான் சூர்யா. நீங்கள் இல்லாவிட்டால் என்னால் வாழவே முடியாது…”சாதரணமாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கையில் நெகிழ்ந்து குழைந்தது.
“இன்று உனக்கு என்னவோ நடந்துவிட்டது..” என்றவனை அவன் தாய், “சூர்யா..!” என்று கூப்பிடும் குரல் கேட்க, “நீ வை லட்டு. அம்மாவோடு கதைத்துவிட்டு உனக்கு அழைக்கிறேன்…” என்றுவிட்டு கைபேசியை அணைத்தான் அவன்.