அன்றைய வகுப்பில் படித்த டொச் புரியாவிட்டாலும் படித்ததைப் பிரட்டிப் பார்ப்போம் என்று நினைத்தவள் புத்தகத்தைக் கையில் எடுத்தாள். அந்தப் புத்தகத்தோடு அன்று மாலையில் சந்தித்தவனின் நினைவும் கூடவே சேர்ந்து வந்தது.
அப்போதுதான், அவளைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தையும் அறிந்துகொண்டவனின் பெயரைக்கூட அவள் தெரிந்துகொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
சைந்துவிடம் கூட திபியின் சித்தப்பா என்றுதானே சொன்னாள்.
‘அறிவுக்கொழுந்துடி நீ…’ என்று தன் தலையில் தட்டிக்கொண்டாள்.
பிறகு, அவனின் பெயரை அறிந்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தவள் புத்தகத்தைப் பிரட்டத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில், “சனா, சாப்பிட வா.” என்கிற சுலக்சனாவின் குரல் கேட்க, புத்தகத்தை எடுத்துவைத்துவிட்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றாள்.
அங்கே சாப்பாட்டு மேசையில் சிவபாலனும் சைந்துவும் அமர்ந்திருந்தனர். இவளைக் கண்டதும், “வா சனா, இன்றாவது வகுப்பில் ஏதாவது விளங்கியதா உனக்கு…?” என்று கேலிக்குரலில் கேட்டார் சிவபாலன்.
“அத்தான், என்னுடைய திண்டாட்டம் உங்களுக்குக் கேலியாக இருக்கிறதா…?” சிரிப்போடு கேட்டாள் சனா.
“ஆனால் பாருங்கள், என்ன ஆனாலும் சரி. நானும் இந்த மொழியை ஒரு கரை காணாமல் விடமாட்டேன்…” என்றாள் தொடர்ந்து வீராவேசமாக.
வாய்விட்டு நகைத்தார் சிவபாலன். “பார்க்கலாம், பார்க்கலாம். நீ மொழியைப் பிடிக்கிறாயா அல்லது உன்னால் மொழிக்கு ஏதாவது பிடிக்கிறதா என்று…?”
“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து.
“பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி இருக்கிறாள்…” என்ற சனாவைப் பார்த்து அவர் கேலியாகப் புன்னகைக்கவும், “எனக்கும் ஆரம்பத்துக்கு கஷ்டமாகத்தான் இருந்தது சனா. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துவிட்டேன். அவர் உன்னைச் சும்மா கேலி செய்கிறார்…” என்றாள் தங்கைக்கு ஆறுதலாக சுலக்சனா.
இப்படி சலசலத்தவர்கள் தங்களுக்குத் தாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
ஒருவாய் உண்ட சிவபாலன் அதன் ருசியில் சொக்கிப்போனார். அருகில் அமர்ந்திருந்த மனைவியின் இடையில் கைபோட்டு அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து, “உணவு அருமையாக இருக்கிறது சுலோ..” என்றார், அவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை ஒட்டி.
அவர்களைப் பார்த்து சைந்து கிளுக்கிச் சிரிக்க, சனாவினால் அவர்களைப் பார்த்து சிரிக்கவும் முடியவில்லை. ‘என்ன அத்தான் இதைச் சாட்டாக வைத்து அக்காவை கொஞ்சுகிறீர்களா…?’ என்று கேலி பேசவும் முடியவில்லை.
கண்டும் காணததுபோல் தலையைக் குனியத்தான் முடிந்தது.
அந்த நொடியில் அவர்கள் இருந்தும் தான் தனித்து நிற்பதாக உணர்ந்தாள். அவர்கள் ஒருபோதும் அவளிடம் வேற்றுமை காட்டுவதில்லை என்றாலும் அவளால்தான் ஒரு அளவைத் தாண்டி அவர்களுடன் ஒட்ட முடியவில்லை.
சிறு வயதிலேயே வந்து, இருபது வருடங்களுக்கு மேலாக அங்கேயே வாழும் சிவபாலனுக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவியுடன் பட்டும்படாமல் இதழ் ஒற்றுவதோ, அருகருகில் அமர்கையில் மனைவியின் இடையில் கை போடுவதோ, சற்றுமுன் நடந்ததுபோல் மெல்லிய அணைப்புக்களோ சாதாரணமாகத் தோன்றியது.
அதனால் சனா அல்ல யார் இருந்தாலும் மனைவியின் அருகாமையை தவிர்ப்பதில்லை அவர். அதற்காகத் தரமற்ற மனிதர் அல்ல. மகள் மேல் வைத்திருக்கும் அதே பாசத்தை மச்சாளின்(நாத்தனார்) மேலும் வைத்திருக்கும் மனிதர்.
அங்கேயே பிறந்து வளர்ந்த சைந்துவிற்கும், கணவனுடன் உயிராக ஒன்றிவிட்ட சுலோவுக்கும் கூட அதில் வித்தியாசம் தோன்றியதில்லை.
தாய்ப்பறவையின் சிறகுக்குள் வளர்ந்த குஞ்சாக தமையனின் பாசக்கூட்டுக்குள் வாழ்ந்த சனாவுக்கோ அவை சங்கடமான விடயமாகத் தோன்றின. அமைதியாக உண்டுமுடித்தவள் தன் அறைக்குள் மீண்டும் புகுந்துகொண்டாள்.
அடுத்தடுத்து வந்த அவளின் நாட்கள், அவள் வேலை செய்யும் கஃபேடேரியாவோடே கழிந்தது. பணத்துக்காக அன்றி மொழியை பிடிப்பதற்காக, ‘வேலை ஒன்று வாங்கித் தாருங்கள்..’ என்கிற அவளின் தொந்தரவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சிவபாலன்தான் அந்த வேலையை வாங்கிக்கொடுத்திருந்தார்.
காலையில் வேலைக்குச் செல்வதும், வாரத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் மாலைநேர டொச் வகுப்புக்கு செல்வதும், மற்றும்படி அந்த ஊரைச்சுற்றி நடப்பதும் என்று அவளுடைய பொழுதுகள் இனிமையாகவே கழிந்தது.
திபியின் சித்தப்பா என்கிற அந்த ஆண் அவளின் நினைவிலேயே இல்லை.
கிராமமும் அல்லாத பெருநகரமும் அல்லாத அந்த மலைக்கிராமத்தை அவளுக்கு மிகவுமே பிடிக்கும். அவர்களின் வீடு அந்த மலைக்கிராமத்தின் உச்சியிலும் அல்லாமல் தரைமட்டத்திலும் அல்லாமல் நடுப்பகுதியில் அமைந்திருந்தது.
ஒவ்வொரு வீட்டின் கூரைகளும், ஸ்னோ கொட்டும் காலங்களில் படியும் பனிக்கட்டிகள் வழுக்கி விழுவதற்கு ஏதுவாக மிகுந்த சரிவாக கட்டப்பட்டிருக்கும்.
அப்படியான கூரைகள் ஒவ்வொன்றும் அவளின் வீட்டில் இருந்து கீழே பார்த்தால் படிக்கட்டுக்கள் கீழே இறங்குவது போலவும் மேலே பார்த்தால் படிக்கட்டுக்கள் ஏறுவது போலவும் அவ்வளவு அழகாய்த் தோன்றும்.
அது போதாது என்று ஊசியிலைக்காடுகள் ஓங்கி வளர்ந்து பனிக்காலத்தில் வெள்ளை ரோஜாக்கள் பூத்ததுபோல் காட்சி தரும் என்றால், வெயில் காலத்தில் பச்சைப் பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியைச் சேர்க்கும்.
அவளின் தனிமையை, மனதில் பூக்கும் வெறுமையை போக்குபவை இந்த இயற்கைக் காட்சிகளே.
அன்று திங்கட்கிழமை. அன்றைய தினம் அவர்களின் ஊரில் சந்தை கூடும் நாள். ஒவ்வொரு திங்களும் அந்தச் சந்தை கூடும். அங்கே எந்தவித இரசாயனக் கலப்பும் இல்லாத வீட்டுத்தோட்டத்தில் உண்டாகும் மரக்கறி(காய்கறிகள்) முதல் பெரும்பாலான உணவுவகைகள் அனைத்தும் கிடைக்கும். அதுமட்டுமன்றி பூக்கன்றுகள், தேயிலை வகைகள், ஆடைகள் என்று இன்னதுதான் என்று இல்லாமல் எல்லாமே அங்கே வரும்.
அன்று அந்த ஊர் மக்கள் அனைவரையுமே அங்கு காணலாம்.
எதையாவது வாங்குகிறாளோ இல்லையோ அந்தச் சந்தைக்கு ஒவ்வொரு திங்களும் செல்ல மறக்கமாட்டாள் சனா. சனநெருக்கடி நிறைந்த அந்த இடம் ஏனோ அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
மக்களுக்குள் மக்களாய் புதையுண்டு, ஒரு கடையைப் பெரும் கஷ்டப்பட்டு எட்டிப்பார்த்து, ஒரு பொருளை வாங்குவது என்பது அவளுக்கு நமது நாட்டின் சாயலைக் காட்டும்.
சுலோ கூட ஏதாவது வாங்க வேண்டுமானால் காலையிலேயே போய் வாங்கிவிடுவாள். ஆனால் சனாவோ மதியப்பொழுதில் தான் அங்கு செல்வாள்.
அன்றும் மதியமானதும் வழமைபோல் தமக்கையிடம் சொல்லிக்கொண்டு சந்தைக்குச் சென்றாள். சென்றவள் ஒவ்வொரு கடையாக பார்த்துக்கொண்டு வந்தாள். ஒரு கடைக்கு முன்னால் மக்கள் நிரம்பி வழிந்தனர். இவளுக்கும் அங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்த்துவிட ஆர்வம் கிளம்பவே, அவர்களுக்குள் புகுந்தாள். புகுந்தவளுக்கு முன்னேறும் வழிதான் கிடைக்கவில்லை.
பூட்டியிருக்கும் கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாவிட்டால் தூக்கம் வருமா நமக்கு? அதேதான் சனாவின் நிலையும்! அந்தக் கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்தே ஆகவேண்டும் அவளுக்கு!
முதல் வரிசையில் நின்றவர்கள் வெளியே செல்ல எத்தனிப்பது போல் தோன்றவும் அடுத்த கட்டமாக முன்னேறக் காத்திருந்தவளை, “ஹேய் லட்சனா…!” என்கிற அழைப்புத் தடுத்தது.
யார் என்று பார்க்க, அங்கே அந்த ‘அவன்’ முன்வரிசையில் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்துப் புன்னகைப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் அவள் நிற்க, “நீயும் பார்க்கப்போகிறாயா…?” என்று கடையைக் கையால் காட்டிக் கேட்டான் அவன்.
உடனேயே பளீரென்று புன்னகையைச் சிந்தியவள் ஆமென்பதாக தலையைப் பெரிதாக ஆட்டினாள். அவ்வளவுதான்! அந்த நொடியில் அவளின் அசைவுகள் அத்தனையும் நின்றிருந்தது. காரணம், தனது நீண்ட கையை அவள் புறமாக நீட்டி, அவளின் இடையை இறுக்கமாக வளைத்தவன் தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டிருந்தான்.
நெருக்கி நின்ற மக்களும், “அவள் உன் தோழியா…?” என்று கேட்டு அவளை அவனருகே செல்ல அனுமதித்தனர்.
“அங்கே பார். எவ்வளவு அழகாய் ஓடித்திரிகின்றன…” என்றவன் கையிலிருந்த கைபேசியில் வீடியோ எடுத்து கொண்டிருந்தான்.
கடையைப் பார்க்க வந்தவளோ அதை மறந்து விழிவிரிய அவனையே பாத்திருந்தாள். அவன் கை அவளின் இடையை இறுக்கித் தழுவியிருக்க, அவளின் முன்பக்க மேனி முழுவதும் அவனின் ஒருபக்க உடலில் அழுந்தியிருந்தது.
ஏதோ ஒரு உந்துதலில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஹேய், அங்கே பார். எவ்வளவு அழகான கோழிக்குஞ்சுகள்…” என்றான், அவள் இடையில் தன் கையினால் அழுத்தத்தைக் கொடுத்து.
உடலின் மொத்தமும் அல்லாமல் உயிரின் அந்தம் வரை ஆடியது அவளுக்கு.
அதுமட்டுமல்லாமல், ‘என்னது…? கோழிக்குஞ்சா… எத்தனை கோழிக்குஞ்சுகளைக் கையால் தூக்கி விளையாடியிருப்பேன். இதைப்பார்க்க வந்தா இவனிடம் இப்படி மாட்டிக்கொண்டேன்…’ என்று எண்ணம் ஓட, அந்தக் கடையைப் பார்த்தவளுக்கு தன் மீதே கடுப்பு கடுகடு என்று ஏறியது.
“திபிக்கு கோழிக்குஞ்சுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுதான், அவளுக்குக் காட்டுவதற்காக வீடியோ எடுக்கிறேன்..” என்றவன், அவளின் இடையில் பதிந்த கையை எடுக்க மறந்தே போனான். அல்லது பழக்கமான ஒன்று என்பதால் அவனுக்கு அது வித்தியாசமாகத் தோன்றவில்லையோ.