‘ஜெயன் வந்ததும், அவனிடம் சொல்லிவிட்டு முடிந்தவரை விரைவாக திருமணத்தை வைக்கவேண்டும்…’ என்று நினைத்துக்கொண்டவள், உடம்பு கழுவி வீட்டுடையை அணிந்துகொண்டாள்.
அவன் தனக்கு வாங்கித் தந்த உடைகளை வெளியே எடுத்து, ஒவ்வொன்றாக போட்டுப் பார்த்தாள்.
அப்போதுதான் அவன் பையொன்றும் வந்துவிட்டதைக் கவனித்தவள், அதைச் சொல்ல அவனுக்கு அழைத்தாள்.
காரில் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தவன், கைபேசி சிணுங்குவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அங்கே ‘லட்டு’ என்று அது மின்ன, அவன் முகத்தில் இதுவரை தேக்கி வைத்திருந்த எரிச்சல், சினம் அனைத்தும் அப்பட்டமாகத் தெரிந்தது.
“மனிதனை கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்க விடுகிறாளா…” என்று வாய்விட்டே சினந்தவன், கைபேசியை அணைத்து பக்கத்து இருக்கைக்கு தூக்கி எறிந்தான்.
இதை எதுவும் அறியாத அவளோ, ‘வீட்டுக்கு போய்விட்டான் போல. நாளைக்கு கொடுக்கலாம்..’ என்று நினைத்து அதை எடுத்து வைத்தாள்.
மனதில் இனிய பல கற்பனைகளுடன் அந்த இரவு அவளுக்குக் கழிய, அடுத்தநாள் அவனுக்கு வேலை என்பதால், பின் மாலை வரை பெரும் சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தினாள்.
அப்போதும் பல மெசேஜ்களை அவனுக்கு அனுப்ப மறக்கவில்லை. அவன் வீட்டுக்கு வந்ததும் கைபேசியில் அழைத்து, “ஏன் என் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பவில்லை..?” என்று கோபத்தோடு கேட்டாள்.
“நீ என்ன ஒரு மெசேஜா அனுப்பினாய். உனக்குப் பதில் போட..” என்றான் அவன் சுள்ளென்று.
“எனக்கு நேரமே போகவில்லை சூர்யா. அதுதான்..” என்றாள் இருந்த சின்னக் கோபமும் நீங்கியவளாக.
“தனியாக இருக்க போரடிக்கிறது. எங்காவது வெளியே போகலாமா…?” என்று ஆர்வத்தோடு அவள் கேட்க,
“இன்று முடியாது.” என்றான் சுருக்கமாக.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று அவள் கெஞ்ச, ‘கெஞ்சியோ கொஞ்சியோ எப்படியாவது தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கிறாள்..’ என்று நினைத்துச் சினம் மூண்டதில் அமைதியாகவே நின்றான் அவன்.
“சூர்யா.. இருக்கிறீர்கள் தானே…?” அவனிடமிருந்து பதில் இல்லாமல் போனதில் கேட்டாள்.
“ம்.. இருக்கிறேன்.”
“எனக்கு எல்லோரிடமும் சொல்லி, திருமணம் முடிந்து எப்போது உங்களிடம் வருவேன் என்றிருக்கிறது. ஆனால் ஜெயன் வரும்வரை பொறுக்க வேண்டுமே.. அதுவரை உங்களைத் தினமும் பார்க்காவிட்டால், எனக்குத் தாங்காது சூர்யா.” என்றாள் ஏக்கம் நிறைந்த குரலில்.
அவனுக்கு அதைக் கேட்டுச் சலிப்பாக இருந்தது. ஜெயன் எப்போது வந்து, இவள் எப்போது சொல்லி, அவன் பெற்றோரிடம் கதைத்து, அதன் பிறகு திருமணம் நடந்து என்று நினைக்கவே களைப்பாக இருந்தது.
ஜெயன் வந்ததும் இவள் சொல்வாளா? அடுத்த கேள்வி எழுந்தது. நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து பழகியவனுக்கு, தன்னை யாரோ கயிற்றால் கட்டி வைத்தது போன்று இறுக்கமாக உணர்ந்தான்.
அவள் பேச்சுக்கு பதில் எதுவும் சொல்லாது, “நான் வைக்கிறேன்.” என்றான்.
“இன்று வெளியே போகமாட்டோமா..?” என்று அவள் கேட்க,
“என்ன நீ? கொஞ்சமாவது புரிந்துகொள்ள மாட்டாயா? இன்றும் வந்தால் அம்மா என்ன நினைப்பார்கள்? தினமும் உன்னோடு சுற்ற முடியுமா? எப்போதும் உன்னைப் பற்றி மட்டும்தான் நினைப்பாயா நீ?” என்று சினத்தில் சீறினான் அவன்.
“அம்மாவிடம் எதையாவது சொல்லுங்களேன் சூர்யா. நானும் அப்படித்தானே. இவ்வளவு நாளும் அக்காவிடம் அதை இதைச் சொல்லிவிட்டு உங்களோடு வரவில்லையா?” அவன் கொண்ட சினம் பாதிக்காத குரலில், தன்மையாகச் சொன்னாள் அவள்.
“பொய் சொல்லச் சொல்கிறாயா?” என்றவனின் குரலில் கசப்பு இருந்ததோ?
“நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் அம்மா வீட்டிலா? தாத்தா பாட்டி வீட்டிலா?”
“இங்கே தாத்தா வீட்டில்..”
“பிறகு என்ன. நீங்கள் என்னோடு வந்தாலும் உங்கள் அம்மாவுக்குத் தெரியவராதே. தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு வாருங்கள். ப்ளீஸ் சூர்யா.. நிறைய நேரம் வேண்டாம். ஒரு.. ஒரு மணித்தியாலம் என்னோடு இருங்களேன். அதற்குள் உங்கள் அம்மா உங்களைத் தேடமாட்டார்கள்.. ப்ளீஸ்..?”
அவளின் அந்தப் ப்ளீஸில் அவனுக்குச் சிரிப்பும் சினமும் சேர்ந்தே வந்தது. அதோடு மறுக்கவும் முடியவில்லை. அவள் சொன்னது போல் ஒரு மணித்தியாலத்தில் வந்தால் சரிதானே என்று நினைத்தவன், “சரி வை. வருகிறேன்..” என்றான்.
“அப்போ நான் தயாராகிறேன். விரைவாக வாருங்கள். சூர்யா, நேற்று வாங்கிய அந்தப் பச்சை நிற வட்டக் கழுத்து டிஷர்ட் போட்டு வாருங்கள். அது உங்களுக்கு மிக நன்றாக இருந்தது..” என்றாள் உற்சாகக் குரலில்.
அதைக் கேட்டவனின் முகத்திலும் புன்னகை. “சரி..” என்றான் சிரித்துக்கொண்டே.
அவள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான் சூர்யா. நொடிகளே கழிந்திருக்கும், முகம் மலர ஓடிவந்து கதவைத் திறந்தவளைப் பார்த்ததும் அவன் விழிகள் அதிசயத்தைக் கண்டவனைப் போல் மின்னியது.
அவ்வளவு அழகாக இருந்தாள் லட்சனா. அதுவும் நேற்று அவன் வாங்கிக் கொடுத்த கருப்பு ஜீன்ஸ் மற்றும் பச்சையும் வெள்ளையும் கோடுகோடு போட்ட கையில்லாத ப்ளவுஸ் அணிந்திருந்தாள். அதற்கு மேல் மெல்லிய கோர்ட் ஒன்று வரும். வீட்டில் இருக்கிறோம் என்று அதை அணியவில்லை. அதில் அவன் கண்களுக்கு அவள் விருந்தாகிப்போனாள்.
தன் மனத்தைக் கொள்ளை கொண்டபடி நின்றவளைக் கண்டவன், தன்னை மறந்து அவள் இடையில் கையைப் போட்டுத் தன்னோடு இழுத்துக்கொண்டான்.
அவன் கண்களின் பாஷையிலேயே வெட்கியவளை, அவன் செயல் இன்னும் நாணம் கொள்ளச் செய்தது.
“சூர்யா…” அவனை எச்சரிக்க நினைத்தவளின் அழைப்பு, அழைப்பாக இல்லாமல் கிசுகிசுப்பாகவே இருந்தது.
தன் கை வளைவுக்குள் சிக்கிக்கொண்டவளை வீட்டின் உள்ளே தள்ளிக்கொண்டு வந்தவன், “மாயமோகினி போல் மயக்கும் அழகோடு இருந்துகொண்டு என்னைத் தொடாதே என்றால், என்னால் அதைக் கேட்க முடியாது..” என்றவன், ஆசையோடு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனின் நெருங்கிய அணைப்பில் அவள் மேனி சிலிர்த்தது.
“க..தவு தி..றந்திருக்கிறது சூர்யா.” இதைச் சொல்வதற்குள் திணறிவிட்டாள்.
கதவுக்கு முதுகு காட்டி நின்றவனோ, “நீயே மூடிவிடு..” என்றான் இலகுவாக.
எப்படி என்று யோசித்தவள், அவன் தோள் மேலே கையைக் கொண்டுசென்று, எட்டிக் கதவைத் தள்ளிவிட, அது மூடிக்கொண்டது. அவளோ அவனோடு இன்னும் அழுத்தமாகப் போருந்திக்கொண்டாள். இல்லையில்லை, அவன் பொருத்திக்கொண்டான்.
அதில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், கழுத்தில் புதைந்த அவன் உதடுகளை விட, அதன்மேலே புதிதாக பூத்திருந்த மீசையின் உராய்வில் மேனி கூச, துள்ளிக் குதித்துக்கொண்டு விலகினாள்.
அவனுக்கோ கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை. மோகம் கலையாமல், அவளின் கையைப் பிடித்து மீண்டும் இழுக்க, “சூர்யா, உங்களிடம் என்ன சொல்லியிருக்கிறேன்..” என்றாள் பலமில்லாத குரலில்.
“அதெல்லாம் நினைவில் இல்லை..” என்றபடி அவன் அவளை அணைக்க முற்பட, அதில் அடங்க ஆசை இருந்தாலும், வீட்டின் தனிமையும் அவனின் வேகமும் ஆபத்தில் முடியும் என்பதை, அவள் பெண் மனம் உணர்த்தியது.
“விடுங்கள் சூர்யா…” என்றாள் இப்போது உறுதியான குரலில், அவனிடமிருந்து விலக முயன்றுகொண்டே.
“ப்ச்! சும்மாயிரு லட்டு..” என்றபடி, அவன் அவளை அணைக்க முயல, இப்போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் லட்சனா.
அதை எதிர்பாராத சூர்யா சற்றே பின்னகர்ந்து நின்றான். அவன் முகம் இறுகிப்போனது. அவமானப்பட்டதாக உணர்ந்தவன், வேகமாக வெளியே சென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டான்.
பின்னோடு சென்று தானும் ஏறிக் கொண்டவளுக்கு, அவன் கோபம் புரிந்ததில் அமைதியாகவே இருந்தாள்.