அவள் ஏறிய பிறகும் காரை எடுக்காமல் இருந்தவனைத் திரும்பி அவள் பார்க்க, “எங்கே போவது..?” என்று அவளைப் பாராது, ஒட்டாத குரலில் கேட்டான் சூர்யா.
“எங்காவது. எனக்கு உங்களோடு இருக்கவேண்டும். அது எங்கு என்றாலும் பரவாயில்லை..” என்றாள் அடைத்த குரலில்.
எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ளாமல், இப்படிக் கோபிக்கிறானே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு.
ஒன்றுமே பேசாமல் காரை எடுத்தவன் ஓடிக்கொண்டே இருந்தான். அவளுக்கும் அவன் அருகாமையில் இருக்கிறோம் என்பதில் மனம் அமைதி கொண்டதில், இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
இருவருமே கதைக்கவில்லை. அவனும் காரை எங்கும் நிறுத்தவில்லை. சரியாக ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் அவள் வீட்டில் கொண்டுவந்து நிறுத்தினான்.
அப்போதுதான் திரும்பி நேரத்தைப் பார்த்தவளுக்கு, அதற்குள் ஒரு மணித்தியாலம் கடந்துவிட்டதா என்றுதான் தோன்றியது.
இறங்க மனமின்றி அவள் அமர்ந்திருக்க, அவன் தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான்.
அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், “கோபமா சூர்யா..?” என்று மெல்லக் கேட்டாள். அவனோ எதுவுமே சொல்லவில்லை. தன் பக்கக் கண்ணாடியால் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.
“சூர்யா…” என்றபடி, அவள் அவன் கையைப் பிடிக்க, “நீ இறங்கினால் தான் நான் போக முடியும்..” என்றான், அப்போதும் அவள் முகம் பாராது.
“ஓ….” அடைத்த தொண்டைக்குள் இருந்து அது மட்டும்தான் வந்தது.
மனமே இல்லாதபோதும், திறப்பதற்காக கார்க் கதவில் அவள் கையை வைக்க, “நாளை நான் வரமாட்டேன்..” என்றான் இப்போது நேராக முகத்தை வைத்து.
திகைத்துப்போனாள் சனா. “ஏ..ன்?” என்று அவள் கேட்க, “நண்பர்களோடு நாளைக்கு கோப்லென்ஸ் போகிறேன்..” என்றான் அவன்.
“அங்கு ஏன்?”
“அங்கே ரைன் நதியில் வைன் பார்ட்டி..”
“ஓ…” எப்போதும் அவனோடு சலசலப்பவளுக்கு இப்போது இதைத்தவிர வேறெதுவும் வரவில்லை.
நாளை அவனைப் பார்க்க முடியாது என்பது வேதனையைக் கொடுத்தது என்றால், அவனின் ஒட்டாத பேச்சும் பாரா முகமும் இன்னும் அவளைப் பாதித்தது.
அவன் பக்கமாகத் திரும்பி, “என்னோடு கதைக்கமாட்டீர்களா..?” என்று ஏக்கம் நிறைந்த குரலில் கேட்டாள்.
“கதைக்காமல் என்ன, கதைத்துக்கொண்டுதானே இருக்கிறேன்..” என்றான் பட்டும் படாமல்.
“ப்ளீஸ் சூர்யா, கோபிக்காதீர்கள். ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று பயந்துதான் அப்போது அப்படிச் செய்தேன்..” என்றாள் சமாதானமாக.
“அப்படி நடந்தால் தான் என்ன? என்ன, உன்னை விட்டுவிட்டு ஓடிவிடுவேன் என்று நினைத்தாயா..? அவ்வளவு நம்பிக்கை இல்லாதவள் எதற்கு என்னைக் காதலிக்கிறாய்?” கோபமாகக் கேட்டான்.
“இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் சூர்யா..” வேதனையோடு சொன்னவள், தொடர்ந்தாள்.
“நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யலாமா சூர்யா? அல்லது உங்கள் விருப்பத்துக்கு விட்டால்தான் உங்களை நம்புகிறேன் என்று அர்த்தமா?”
“நான் என்ன உன்னைக் கட்டிலுக்கா கூப்பிட்டேன். அழகாய் இருக்கும் காதலியைக் கண்டும் அவளை நெருங்காமல் இருக்க நான் என்ன உணர்சிகள் இல்லாத ஜடமா..? இந்தப் பிரச்சினையே வேண்டாம் என்றுதான், திருமணத்திற்கு வீட்டில் பேசலாம் என்றேன். நீ அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் என்றால், என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்..?” அவர்களுக்குள் கருத்து மோதல் ஆரம்பித்தே இடத்துக்கே மறுபடியும் வந்து நின்றான் அவன்.
ஒரே விஷயத்தை எத்தனை தடவைதான் பேசுவது என்று அவன் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. அதோடு அவன் கட்டில் வரை கதைத்ததில் முகம் வேறு கன்றியது. அந்தளவுக்கு எல்லாம் அவளால் வெளிப்படையாக கதைக்க முடியாது. அதற்காக கோபத்தோடு இருப்பவனை விட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை.
“சரி சூர்யா. நான் செய்தது பிழைதான். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்..” என்றாள் கெஞ்சலாக.
அவன் எதுவும் சொல்லாமல் இருக்க, அவன் கையைப் பிடித்து, “ப்ளீஸ் சூர்யா. கோபிக்காதீர்கள். என்னால் தாங்க முடியாது…” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய. அந்தளவுக்கு அவன் கோபம் அவளைப் பாதித்தது.
சற்று நேரம் அமைதியாக இருந்தவனுக்கு பெருமூச்சொன்று வெளியேறியது. அவளைத் திரும்பிப் பார்த்து, “சரி விடு. நீ அழத்தொடங்காதே…” என்றான், தன்மையான குரலில்.
அந்தளவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சிறு விம்மலோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“ப்ச்! அழாதே என்று சொன்னேன்..” என்று அவளைச் சுற்றிக் கையைப் போட்டு, அணைத்துக்கொண்டே சொன்னான் சூர்யா.
“ம்ம்..” என்றபடி கண்களைத் துடைத்தவள், “சூர்யா…” என்று தயங்கி மெல்ல அழைத்தாள்.
“என்ன?”
“அது.. நானும்…” என்று அவள் அப்போதும் இழுக்க, “இழுக்காமல் என்னவென்று சொல்லு…” என்றான் அவன்.
“நானும் நீங்களும் போவோமா ரைன் நதிக்கு?” என்று வேகமாகக் கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு புன்னகை அரும்பியது.
அதில் உற்சாகம் ஆனவள், “எனக்கு உங்களோடு அங்கு வர விருப்பமாக இருக்கிறது சூர்யா…” என்றாள் அவனைப் பார்த்து.
அவனால் மறுக்க முடியவில்லை. ஆனால் பியர் சிகரெட் என்று கொண்டாடும் நண்பர்களோடு அவளையும் கூட்டிக்கொண்டு போகமுடியாதே!
அவர்களைக் கழட்டி விடுவது எப்படி என்றும் தெரியவில்லை. அவர்கள் கூட ‘இப்போதெல்லாம் நீ எங்களோடு நேரம் செலவழிப்பதில்லை’ என்று பலமுறை சொல்லிவிட்டார்கள்.
சிறு குழந்தையைப் போல தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, அவனை அறியாமலையே சரியென்பதாகத் தலையசைத்தான்.
அதில் மகிழ்ச்சி அடைந்தவள், தன்னை மறந்து, “நன்றி சூர்யா..” என்றபடி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அந்த முத்தத்தில் விழிகளை இறுக மூடித் திறந்தவனின் உடல் விறைக்க, அதை உணர்ந்தவளுக்கு அப்போதுதான் தான் செய்த செயல் புரிந்தது.
“சாரி சூர்யா..” என்றாள் மனம் குன்ற.
‘என் உணர்வுகளோடு விளையாடுவதே இவள் வேலையா..’ என்று மனம் முரண்ட, அவள் முகம் பாராது, “இறங்கு” என்றான் இறுக்கமான குரலில்.
அவளுக்கும் அவனோடு அதற்கு மேல் கதைக்கத் தயக்கமாக இருக்கவே, எதுவும் சொல்லாது இறங்கினாள்.
போய்வருகிறேன் என்று கூடச் சொல்லாது, காரைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான் சூர்யா.