எவ்வளவு நேரம் சென்றதோ, வானை நோக்கி சீறிப் பாய்ந்த பட்டாசு பெரும் சத்தத்தோடு வெடிக்க, திடுக்கிட்டு மயக்கம் கலைந்தவளுக்கு, தான் நின்ற நிலையைப் பார்க்க பேரதிர்ச்சியாக இருந்தது.
சற்று முன் வேறொரு ஜோடியின் அத்துமீறிய செயல்களில் அருவருத்தவள் இப்போது அதேநிலையில்!
இப்படித் தன்னிலை மறந்தோமே என்று தன்னையே வெறுத்தவளுக்கு, அவன் மீது பெரும் கோபமே வந்தது.
“விடுங்கள் சூர்யா..!” என்று மற்றவர்களுக்குக் கேட்காத வகையில், அடிக்குரலில் சீறினாள்.
அவனுக்கு, ‘திரும்பவும் ஆரம்பித்துவிட்டாள்..’ என்றிருந்தது. அதுவரை அடங்கியிருந்த சினமும் கோபமும் மீண்டும் துளிர்க்க, அவளை விட்டு விலகித் தள்ளி நின்றான்.
‘செய்வதையும் செய்துவிட்டு நிற்பதைப் பார்’ என்று அவள் முறைக்க, ‘என் உணர்வுகளோடு விளையாடுவதைத் தவிர வேறு என்ன வேலை உனக்கு’ என்பதாக அவன் முறைத்தான்.
அழகழகான பட்டாசுகள் வானில் பல வண்ணங்களைத் தூவி மலர்ந்தபோதும், அவர்கள் இருவரினதும் மனதும் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
ஒருவழியாக பட்டாசுகள் வெடித்து முடித்து, அந்தத் திருவிழா முடிவுக்கு வர, மக்கள் எல்லோரும் கலையத் தொடங்கினர்.
சூர்யாவும் அவள் கையைப் பிடிக்க, “விடுங்கள்!” என்றாள் லட்சனா அதட்டலாக.
அவளை உறுத்துவிட்டு, “உன்னைக் கொஞ்சுவதற்காக கையைப் பிடிக்கவில்லை. விட்டால் இந்த நெரிசலுக்குள் தொலைந்து விடுவாய். அதனால் பேசாமல் வா…” என்று பாய்ந்தவன், கிட்டத் தட்ட அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.
காரை நெருங்கியதும், திறப்பை அவன் தன்னிடம் தருவான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினான்.
ஓடிவந்து மற்றப் பக்கமாக உள்ளே ஏறியவள், “நீங்கள் எதற்கு குடித்துவிட்டு ஓடுகிறீர்கள்? என்னிடம் தாருங்கள்..” என்றாள் சனா.
“என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ வாயை மூடிக்கொண்டு வா…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன்.
“போலிஸ் மறித்தால்..?” என்று அவள் கேட்க, “என் லைசென்ஸை பிடுங்கட்டும்..” என்றான் இறுகிய குரலில்.
கடவுளே அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று மனதால் வேண்டிக்கொண்டு, அவள் ஏதோ சொல்ல வரவும், “வாயை மூடப் போகிறாயா இல்லையா..?” என்று சுள்ளென்ன்று பாய்ந்தான் அவன்.
அவன் காட்டிய கடுமையில் அவள் விழிகள் லேசாய்க் கலங்க, அவன் மேல் கோபமும் வந்தது.
இதுவரை தனிமையிலும், யாருமற்ற இடத்திலும் தான் அவன் நெருக்கம் இருக்கும். இன்று அவ்வளவு பேர் கூடியிருந்த ஓரிடத்தில், நினைக்க நினைக்க மனமும் உடலும் குன்றிப்போனது.
எவ்வளவு வெட்கம் கெட்ட வேலையைப் பாத்திருகிறோம். அவன்தான் அப்படி என்றால், நானுமா… என்று சிந்தித்தபடி அவள் வெளியே பார்க்க, கார் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது.
பயந்து பதறியவள், “கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்கள்..” என்றாள் நடுங்கும் குரலில்.
அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. இதுநாள் வரை மனதில் புதைந்து முற்றாக அழியாமல் அப்பப்போ மேலெழுந்து அவனைச் சினந்து சீற வைத்துக்கொண்டிருந்த கோபத்துக்கு எல்லாம் காரின் வேகத்தை வடிகாலாக்கி ஓட்டினான்.
அவளுக்குப் பயத்தில் உடல் வேர்த்து நடுங்கியது. கண்களை இறுக்கமாக மூடிச் சாய்ந்துகொண்டாள்.
நெஞ்சு மட்டும் எதுவும் ஆபத்தாக நடந்துவிடக் கூடாது என்று தவித்தது.
அவள் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்க, அதுவரை இருந்த பயம் கோபமாக மாறியதில் எதுவும் பேசாது இறங்கிக் கொண்டாள்.
அவனும் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.
வீட்டின் உள்ளே நுழைந்தவளுக்கு, நாளை அக்கா வந்துவிடுவார் என்று அப்போதுதான் நினைவில் வந்தது.
மனதில் பாரத்தோடு உடல் கழுவி, உடை மாற்றிக் கட்டிலில் விழுந்தவள், மனம் கேட்காமல் ‘குட்நைட்’ என்று ஒரு மெசேஜை அவனுக்குத் தட்டிவிட்டாள்.
அவனிடமிருந்து பதில் வருமோ என்கிற நப்பாசையில் கைபேசியையே பாத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
காலையில் எழுந்ததும், அவள் செய்த முதல் வேலை, அவனிடமிருந்து அழைப்போ அல்லது மேசெஜோ வந்திருக்கிறதா என்று பார்த்ததுதான். மிஞ்சியது ஏமாற்றமே!
ஏமாற்றத்தால் உண்டான வலியைச் சுமந்தபடி, அக்கா குடும்பம் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவார்கள் என்பதால் சமையல் வேலையை ஆரம்பித்தாள்.
அதன்பிறகு அவர்களும் வந்துசேர, அன்றைய நாள் சைந்தவியின் சலசலப்போடும் அக்கா அத்தானின் விசாரிப்புக்களோடும் கழிந்தது.
அடுத்தடுத்து வந்த நாட்களும் கைபேசியில் சூரியாவுக்கு அழைத்தால், எடுக்கவில்லை. மேசெஜ்களுக்கு பதிலில்லை. எங்காவது காணலாம் என்றால், கண்ணிலேயே பட்டானில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தாள்.
எப்போதும் போலத்தானே அன்றும் அவர்களுக்குள் நடந்தது. அதேபோல கோபத்தை இழுத்து வைத்திருப்பவனும் அல்ல அவன். என்ன ஆகிற்று அவனுக்கு?
பாட்டி வீட்டுக்கு போய்ப்பார்க்கலாமா என்று யோசித்தாள். எப்படிப் போவது? அக்காவிடம் என்ன சொல்வது? என்று யோசித்தபடியே அன்று வேலை முடிந்து வீடு வந்தவளை, “உனக்குக் களைப்பாக இல்லை என்றால் நீயும் வா சனா, பார்க்குக்கு போவோம்.” என்றாள் சுலோ.
மனச்சோர்வால் மறுக்க நினைத்தவளின் மூளையில், பார்க்குக்கு போகும் வழியில் தானே சூர்யாவின் தாத்தா பாட்டியின் வீடு என்று தோன்றவும், உடனேயே முகம் மலர்ந்து, “நானும் வருகிறேன் அக்கா…” என்றாள் ஆர்வத்தோடு.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்றபடியால், சிவபாலனும் வீட்டில் இருக்கவே, நால்வருமாக நடந்து சென்றனர்.
தாத்தா பாட்டியின் வீட்டை நெருங்க நெருங்க, தன்னை மறந்து கண்களில் ஆர்வத்தோடு, ‘எப்படியாவது அவனைக் கண்டுவிடவேண்டும்’ என்கிற பரிதவிப்போடு, அருகில் வந்துகொண்டிருந்தவர்களையும் மறந்து, அவர்கள் வீட்டையே பார்த்தது அவள் விழிகள்.
அவள் பார்வையை உணர்ந்து, “அதுதான் சூர்யாவின் தாத்தா பாட்டியின் வீடு…” என்றாள் சுலோ. அதைக் கேட்டு விதிர்விதித்துத் திரும்பினாள் சனா.
அக்காவுக்கு நம் விடயம் ஏதும் தெரிந்துவிட்டதோ என்கிற அச்சம் விழிகளில் படர அவளைப் பார்க்க, “என்ன?” என்று கேட்டாள் சுலோ, சனாவின் பார்வையின் அர்த்தம் புரியாது.
அப்போதுதான் அக்கா சாதரணமாகத்தான் அதைச் சொல்லியிருக்கிறாள் என்று புரிய, நெஞ்சப் படபடப்பு அமைதியானது அவளுக்கு. வீட்டுக்குத் தெரியாமல் தவறைச் செய்பவர்களின் நிலையை அந்த நொடியில் பரிபூரணமாக உணர்ந்தாள்.
அவனைக் காண முடியவில்லை என்பதும், அக்காவை ஏமாற்றுகிறோம் என்பதும் நெஞ்சைத் தாக்க, சோர்ந்துவிட்ட மனதோடு, விருப்பம் இன்றியே பார்க்குக்கு நடந்தாள்.
அங்கே சைந்தவியையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு நால்வரும் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்திலேயே களைத்துவிட்ட சைந்து, “அப்பா ஐஸ் குடிப்போமா..?” என்று கேட்டாள்.
அங்கிருந்த வாங்கிலில் பெண்கள் மூவரும் அமர்ந்துகொள்ள, சற்றுத் தள்ளியிருந்த கடைக்குச் சென்றார் சிவபாலன்.
காத்திருக்கும் பொறுமை இல்லாமல், “அப்பா எங்கேம்மா? இன்னும் காணவில்லை…” என்றபடி தந்தை சென்ற திசையைப் பார்த்த சைந்து, “ஹே… சூர்யா மாமா…” என்று கத்திக்கொண்டே எழுந்து ஓடினாள்.
அந்தப் பெயரைக் கேட்டதும் சனாவின் முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி. நெஞ்சம் இனிமையாய் அதிர, முகம் மலர, வேகமாகத் திரும்பிப் பார்த்தவளுக்கு, அவனைக் கண்டதும் கண்கள் கலங்கியது.
கண்ணில் தேங்கிய கண்ணீர் அவனை மறைக்க, விழிகளைச் சிமிட்டி நன்றாகப் பார்த்தவளுக்கு, சைந்துவை முந்திக்கொண்டு ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற வேகம் எழுந்தது.
அது முடியாமல் போனதில், மனதில் எழுந்த பேராவலை அடக்கிக் கொண்டு அவனையே பாத்திருந்தாள்.
“இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் பழக்கவழக்கம் இப்படித்தான்..” என்று எரிச்சலோடு சுலோ சொல்ல, அது சூர்யாவைக் குறித்தது என்கிற அதிவோடு தமக்கையைத் திரும்பிப் பார்த்தாள் சனா.