“பார். ஒரு கையில் பியர். மறுகையில் சிகரெட். இதில் உன் அத்தானுக்கு வேறு கொடுக்கிறான். எங்கள் ஊராக இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன் இப்படிச் செய்வார்களா? ஒரு மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை. இவர்களோடு சேர்ந்தவர்களும் கெட்டார்கள்..” என்றாள் கோபத்தோடு சுலோ.
அக்காவின் பேச்சில் மனமதிர, சூர்யாவைத் திரும்பிப் பார்த்தாள் சனா. அங்கே அவள் கண்ட காட்சி, அவனை முதன் முதலாக எப்படிப் பார்த்தாளோ அப்படி நின்றான்.
இதில், சிகரெட்டை பியர் இருந்த கைக்கே மாற்றிவிட்டு, அவனிடம் ஓடிச்சென்ற சைந்துவை ஒற்றைக் கையால் தூக்கிக்கொண்டான் சூர்யா. சைந்துவைக் கண்டதும் சிவபாலன் சிகரெட்டை எறிந்ததைப் பார்த்தாவது இவனும் அப்படிச் செய்ய வேண்டாமா?
குழந்தையின் சுவாசத்துக்கு கூடாதே என்று அவள் எண்ணமிடும் போதே, “வா, நாமும் அங்கே போவோம். இந்தச் சைந்துவை அவனிடமிருந்து தூக்க வேண்டும்..” என்றபடி எழுந்துகொண்டாள் சுலோ.
லட்சனாவுக்குத்தான் பெரும் அவமானமும் ஆத்திரமுமாக இருந்தது. அவனை அக்கா அப்படி நினைப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதைவிட, சுலோ அப்படிக் குறையாக நினைக்கும் படி அவன் நடந்துகொண்டதை நினைக்க நினைக்க பத்திக்கொண்டு வந்தது.
இப்போதே இப்படிச் சொல்லும் அக்கா, நாளை அவள் காதலைச் சொல்கையில் இதையே உதாரணமாகக் காட்டி மறுத்துவிட மாட்டாளா?
மனம் கோபத்தில் புகைய தமக்கையோடு தானும் நடந்தாள் லட்சனா. அவர்கள் வருவதைக் கண்டதும் அவன் விழிகள அவளையே பார்த்தது. அதை உணர்ந்தபோதும், தலையை நிமிர்த்தவில்லை சனா.
இதுவரை அவனைக் காணமாட்டோமா என்று தவித்தவளின் மனதில் இப்போது அவனைப் பார்க்கக் கூடாது என்கிற பிடிவாதம் எழுந்தது.
‘நீ இப்படித்தானே…’ என்பதாக அவன் இதழோரம் ஏளனத்தில் வளைந்ததை அவள் அறியவில்லை.
அருகே சென்றதும், “எப்படி இருகிறாய் சூர்யா..?” என்று கேட்ட சுலோ, “எங்கே திபி?” என்று கேட்டாள். அவளில்லாமல் அவன் பார்க்குக்கு வரப்போவதில்லை என்பதை ஊகித்து.
“எனக்கென்ன அக்கா. நன்றாக இருக்கிறேன். திபி அந்தப் பக்கம் விளையாடுகிறாள். நீங்கள் வந்திருப்பது அவளுக்குத் தெரியாது..” என்றான்.
“சைந்து, திபியோடு போய் விளையாடு..” என்று அவன் கையிளிருந்தபடி ஐஸ்கிறீம் குடித்துக்கொண்டிருந்த மகளிடம் சுலோ சொன்னாள்.
சூர்யாவிடமிருந்து மகளை அகற்றுவதற்காகத்தான் அக்கா அப்படிச் செய்கிறாள் என்று புரிந்ததில், சனாவுக்கு முகம் கன்றிக் கருத்தது.
இந்த அவமானம் இவனுக்குத் தேவையா என்று தோன்ற, அவனைப் பார்த்து அவள் முறைக்க, அந்த முறைப்பின் அர்த்தம் புரியாததில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.
செய்வதறியாது அவள் தமக்கையைப் பார்க்க, ‘பார்த்தாயா..’ என்பதாக சுலோ அவன் கையைச் சைகையில் காட்டினாள். பெண்கள் தாங்கள் அருகில் வந்தபோதும் அவன் அவற்றைத் தூக்கிப் போடவில்லை என்பதைத்தான் அக்கா குறிப்பிடுகிறாள் என்று புரிய, அவனை இழுத்துவைத்து அறைந்தால் என்ன என்கிற அளவுக்கு கோபம் வந்தது.
திபியிடம் ஓடிய மகளைத் தொடர்வதைப் போல், சனாவுக்கும் கண்ணைக் காட்டிவிட்டு கணவனின் கையைத் தட்டிவிட்டு சுலோ நடக்க, அவளைத் தொடர்ந்தார் சிவபாலன்.
தானும் மெல்ல நகர்ந்த சனா, அவர்கள் சற்று முன்னே சென்றதும், “உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவென்பதே இல்லையா..?” என்று இருந்த கோபம் எல்லாவற்றையும் சேர்த்துச் சீறினாள்.
அதன் அர்த்தம் புரியாமல் அவளைப் பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் முன்னே நடக்க, “அங்கே போக முதலில் இந்தக் கருமங்களைத் தூக்கி எறியுங்கள்.” என்றாள் மீண்டும் காட்டமாக.
“ஏன்..?” நடை நின்றுவிட, புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.
“அத்தான் உங்களை விடப் பெரியவர். அவர் முன்னால் இப்படி நடப்பதே தப்பு. இதில் சிகரட்டை அவருக்கும் கொடுக்கிறீர்களே? மரியாதை என்றால் என்ன என்றே தெரியாதா..?” என்று சிடுசிடுத்தாள்.
“நான் கொடுத்தபோது, அவரும் தானே வாங்கிக்கொண்டார். அதோடு அவர் புகைப்பார் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் நான் கொடுக்காமல் இருந்தால், அதுதான் நாகரிகமற்ற செயல்…” என்றான் நிதானமாக.
“நாகரீகத்துக்கே நீங்கள் தான் எடுத்துக்காட்டுப் பாருங்கள்..!” என்றாள், இருந்த கோபத்தில் குத்தலாக.
அவன் முகம் இறுகுவதைக் கவனியாது, “அவர் வாங்கினார் என்பதற்காக நீங்கள் கொடுத்தது சரியாகுமா? ஒருவர் புகைப்பார் என்று தெரிந்தால், வயது வித்தியாசமே பார்க்காமல் தூக்கிக் கொடுப்பீர்களா? ஒரு குழந்தையின் அருகில் இப்படி நடக்கக் கூடாது என்று கூடவா தெரியாது?” என்று அடுத்த குற்றச் சாட்டை அவள் வைக்க, “இப்போ என்னதான் பிரச்சினை உனக்கு?” என்று விழிகளில் கூர்மையோடு கேட்டான் அவன்.
“நீங்கள்தான் எனக்குப் பிரச்சினையே. எவ்வளவு சொன்னாலும் எதையும் காதில் வாங்காதீர்கள். நானும் அக்காவும் அருகில் வரும்போதாவது அதைத் தூக்கி எறிந்திருக்கலாம் தானே. தமிழை நன்றாகச் சொல்லித் தந்த உங்கள் தாத்தா பாட்டி, இதையெல்லாம் சொல்லித்தராமல் என்னத்தைக் கிழித்தார்கள்? ஏதாவது ஒரு நல்ல பழக்கம் இருக்கிறதா உங்களிடம்? அக்கா வேறு ‘பார் அவன் பழக்கத்தை’ என்று என்னிடம் சொல்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் உங்களைக் காதலிப்பதாக அக்காவிடம் சொல்ல முடியும்? கொஞ்சமாவது யோசிக்க மாட்டீர்களா..?” என்று சனா வார்த்தைகளை விட,
“ஏய்!!” என்று ஒரு விரல் நீட்டி உறுமினான் அவன்.
அவனைப் பார்த்தவள் பயந்தே போனாள். அதுவரை நிதானமாக இருந்தவனின் முகம் இறுகிச் சிவந்தது. கண்களோ தணல் துண்டங்களாய் மாறி அவளை உறுத்தது.
அவளுக்கு அவன் கோபங்கள் பழக்கமானதுதான். ஆனால் இப்படி ஒரு எரிமலைச் சீற்றத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விழிகளில் அச்சம் படர அவனையே பார்த்தாள்.
“இனி ஏதாவது பேசினாயானால், உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன்!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன். அவள் மேனி பயத்தில் நடுங்கியது.
அவள் வாழ்வின் சூரியனா அவன்? அந்தச் சூரியனைப் போலவே அவன் முகமும் கோபச் சூட்டில் சிவந்து தணலாய் ஜொலித்தது.
“நான் இப்படித்தான். உனக்காக என்னால் எதையும் மாற்ற முடியாது! அடுத்தவருக்காக நல்லவனாக நாடகமும் போடமுடியாது! இனிமேல் என் தாத்தா பாட்டியை ஏதாவது குறையாகக் கதைத்தாய் என்று வை. என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது! ராஸ்கல்!” என்று உறுமியவன், கையிலிருந்த பியரையும் சிகரட்டையும், “சை!” என்றபடி தூக்கி எறிந்துவிட்டு வேகமாக நடந்து, சிவபாலனோடு சேர்ந்துகொண்டான்.
தாத்தா பாட்டியோடு அப்படிப் பாசமாகப் பழகிவிட்டு, இன்று அவர்களையே அவள் குறை கூறியதும், ‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் உங்களைக் காதலிப்பதாக அக்காவிடம் சொல்ல முடியும்?’ என்ற வார்த்தைகளும் அவனுக்குப் பெரும் அடியாக இருந்தது. அவளின் காதலனாக இருக்க அவனுக்குத் தகுதி இல்லை என்கிறாளா?
மனதில் கனன்ற கோபம் முகத்திலும் தெரிந்தது போலும், “ஏன் ஒருமாதிரி இருகிறாய்..?” என்று கேட்ட சிவபாலனிடம்,
“ஒன்றுமில்லை அண்ணா..” என்றவன், “நான் இப்போது அவசரமாகப் போகவேண்டும் அண்ணா. வருகிறேன் சுலோக்கா.” என்றான் அவர்கள் இருவரிடமும்.
சைந்துவோடு விளையாடிக்கொண்டிருந்த திபியிடம், “வா வீட்டுக்கு போவோம். அங்கே உன் அப்பா வந்துவிட்டாராம்…” என்று ஒரு வாரமாக வெளியூர் சென்றுவிட்ட தந்தையை நினைவு படுத்தினான்.
“அப்பா வந்துவிட்டாரா சித்தப்பா. இந்த முறை எனக்குப் பிடித்த பார்பி பொம்மை வாங்கியதாகச் சொன்னாரே. அதை உடனே பார்க்கவேண்டும். நாம் போகலாம் வாருங்கள்.…” என்று சிறிய தந்தையிடம் சொன்னவள், “சைந்து, பார்பியை நாளைக்கு பள்ளிக்கு கொண்டுவருகிறேன். இப்போ பாய்! சுலோ ஆன்ட்டி, சிவா மாமா பாய்!” என்றபடி சூர்யாவிடம் ஓடினாள் அவள்.
அண்ணன் மகளோடு அவன் விரைந்து சென்றுவிட, அவன் காட்டிய அதீத கடுமையில் அதிர்ந்து நின்றவள், கண்களில் கண்ணீர் வழியே அவனையே பாத்திருந்தாள்.