மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளின் பார்வை, வானின் சூன்ய வெளியை வெறித்தபடி இருந்தது.
அழுதழுது ஓய்ந்து போனவள், எவ்வளவு நேரமாக அப்படியே இருந்தாளோ, அவளே அறியாள். வீடு செல்ல வேண்டும் என்பதோ அக்கா அவளைத் தேடப்போகிறாரே என்பதோ அவள் நினைவில் இல்லை.
என்றும் போலவே இன்றும் , இப்போதும் அவள் நினைவில் சூர்யாவே நின்றான். அவன் மட்டுமல்ல, அவன் பேசிச் சென்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் காதைச் சுற்றி ரீங்காரித்துக்கொண்டே இருந்தது.
சொல்லாமல் கொள்ளாமல் இடியை அல்லவா அவள் தலையில் இறக்கிவிட்டான். முற்றாக நிலைகுலைந்து நின்றாள் லட்சனா. இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.
பேசியது அவன்தானா? ஏன்? ஏன் அப்படியெல்லாம் சொன்னான். எதற்காக?
அவள் செய்த பிழைதான் என்ன? உயிரினும் மேலாக அவனை நேசித்ததா?
நீயின்றி நானில்லை என்று அவன் மீது பித்தாகி நின்றாளே. அதுவா? கடைசிவரை நீதான் என்று அவனையே கனவிலும் நினைவிலும் சுமந்தாளே. அதனாலா?
எதற்காக? அப்படி என்ன குற்றம் செய்தாள் என்று இவ்வளவு பெரிய தண்டனை? நேசம் காட்டிவிட்டு மோசம் செய்துவிட்டானே!
ஒருவர் காட்டும் அன்பில் கூட மூச்சு முட்டுமா? சரி, அவனுக்கு அப்படித் தோன்றியிருந்தால், அதைச் சொல்லியிருக்க அவள் புரிந்து கொண்டிருப்பாளே! திருத்திக்கொள்ள சந்தர்ப்பமே கொடாமல் தண்டித்துவிட்டானே!
இதே மரத்தடியில் எத்தனை நாட்கள் சந்தித்து, ஒருவரை ஒருவர் கேலி செய்து எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். அத்தனையும் பொய்யா? நினைக்க நினைக்க மீண்டும் மீண்டும் கண்ணீர் பெருகியது. நெஞ்சைப் பிளப்பது போல் பெரும் விம்மல் ஒன்று வெடிக்க, அதை அடக்க முடியாமல் வாயை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அழுகையில் குலுங்கியது அவள் மேனி.
தேற்ற யாருமின்றி, உள்ளத்து வேதனையைச் சொல்லவும் யாருமின்றித் தனித்து நின்றவளின் துயர் துடைக்கும் சக்தியை இழந்து, காற்றுக் கூட ஈரப்பதமாய்க் கண்ணீர் வடித்தது.
அவள் உள்ளக் கோவிலில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தவன், காதல் தீபத்தை அல்லவா எட்டி உதைத்துவிட்டான்.
அவளோடு அவள் காதலனாக கைகோர்த்துத் திரிந்தவன், உன் கணவன் நான்தான் என்று அவளுக்கே அடித்துச் சொன்னவன், இன்று இன்னொருவனோடு அவளை இணை கூட்டிவிட்டானே! அதை அவள் நெஞ்சம் தாங்குமா என்று யோசிக்கவில்லையே அவன்!
அவனை அண்டியே, அவனைச் சுற்றியே தன் வாழ்க்கை வட்டத்தை அமைத்துக்கொண்டவளுக்கு, அவனின்றி அடுத்த அடியை எடுத்துவைக்க முடியுமா? எடுத்து வைப்பதென்ன, அப்படி யோசிக்கவே முடியவில்லையே!
கை கோர்த்து நடக்க, அவன் கையின்றி அவளால் நடக்க முடியுமா?
பிறகெப்படி வாழ்வது?
காதல் வந்தபிறகுதானே வாழ்க்கையே அழகானது. அழகிய பூங்காவை பூத்திருந்த அவள் மனதில் ஆசிட்டை அல்லவா ஊற்றிவிட்டான். கருகிக் கருகியே உயிர் மருகுகிறதே!
அவளை வேண்டாம் என்று மறுத்துவிட்டானே! உண்மையாகவே வெறுத்துவிட்டானா? அப்படி மறுத்து ஒதுக்கும் அளவுக்கு என்ன தப்புச் செய்தாள்?
என் வாழ்வின் உயிர்நாடி அவன்தான் என்று அவள் நினைத்திருக்க, அவன் அவளை ஒதுக்கியது கஷ்டமாக அல்ல, கஷ்டத்தின் உச்சக் கட்டமாக இருந்தது. நெஞ்சு ரணமாகிக் கொதித்தது. உள்ளே எதுவோ கருகுவது போல், இதயம் விண்டு விண்டு வலித்தது.
அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லையா? ஒன்றுமே இல்லையா? அந்தளவுதானா அவள் காதல்? இவ்வளவு இலகுவாகத் தூக்கி எறியக் கூடிய அளவுக்கா, அவள் அன்பு கேவலமாகிப் போனது? அவன் காட்டிய பாசத்தின் ஆழம் இந்தளவு தானா?
அவன் கட்டியணைக்கும் போதெல்லாம், தள்ளி நில்லுங்கள் என்று சொன்னாலும், அவளைத் தேடும் அவன் தேடலில் எத்தனை நாட்கள் மகிழ்ந்திருப்பாள். அவளை அவனுக்கு அவ்வளவு பிடிக்குமா என்று எவ்வளவு பூரித்திருப்பாள். எல்லாம் பொய்யா? காதலன்றி காமத்தில் அணைத்தானா? நினைக்கவே கசந்தது.
அவன் காதலுக்காகத் தன்னையே தருகிறேன் என்று கெஞ்சினாளே! அதைக் கூட அலட்சியப் படுத்திவிட்டானே! அவனுக்காக உயிரைக் கூட கொடுக்கத் தயாராக இருந்தாளே! இப்போது கூட அவன்தான் வேண்டும் என்றுதானே அவள் மானங்கெட்ட மனம் கிடந்தது அடித்துக் கொள்கிறது.
பாசமாய் வளர்த்த அம்மா அப்பா இறந்தபோதும் தவித்தாள் தான். உயிராய் பேணிய அண்ணன் இறந்தபோதும் ‘இனி எனக்கு யார் இருக்கிறார்கள்’ என்று துடித்தாள் தான்.
ஆனால், இப்படி இனி இந்த உலகத்தில் வாழத்தான் வேண்டுமா என்று அவள் யோசித்ததில்லையே! யோசிக்க வைத்துவிட்டானே!
ஏன்? ஏன்? ஏன்? இப்படிச் செய்தான்?
குமுறிக் கதறிய அவள் உள்ளம், நடந்ததை எண்ணிப் பதறித் துடித்தது.
அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டானே என்று ஒரு பக்க நெஞ்சு கிடந்தது தவிக்க, அவன் வெறுக்கும் அளவுக்கு நான் செய்த பிழைதான் என்ன என்கிற கோபத்தில் மறுபக்கம் மருக, இனி யாருக்காக இந்த உலகில் நான் துடிக்க என்று கேட்டது அவள் இதயம்.
விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். இனி எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் யாருக்காக வாழ? அண்ணா இருந்திருக்க என்னை இப்படித் தவிக்க விட்டிருப்பாரா? அந்த நொடியில் உறவுகளின் அருகாமைக்கு ஏங்கித் தவித்தது அவள் உள்ளம்.
“ஐயோ… அண்ணா நான் படும் பாட்டைப் பார்த்தீர்களா? இந்தத் துன்பத்தை அனுபவிக்கத்தான் அன்று உங்கள் உயிரைக் கொடுத்து என்னைக் காத்தீர்களா? என்னால் முடியவில்லையே…” என்று வாய்விட்டுக் கதறினாள்.
“என்னையும் உங்களோடு கூட்டி போயிருக்கலாமே! ஏன் என்னை மட்டும் விட்டுவிட்டுப் போனீர்கள்? இனி நான் யாருக்காக வாழ? எதற்காக வாழ? எனக்கென்று யார் இருக்கிறார்கள்?” இருக்கும் இடத்தை மறந்து கதறித் துடித்தாள்.
அழுதழுது ஓய்ந்தவளின் விழிகள் கூட வற்றிப் போனது. இதயம் முழுதும் வெறுமை! எங்கோ வெறித்திருந்த விழிகளிலும் தனிமை! உள்ளும் புறமும் வெறுமை அவளை முற்றாகத் தாக்க, எழுந்துகொண்டாள் சனா.
எங்கு செல்கிறோம் என்று உணராமல், கால்கள் செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தாள். தினமும் வகுப்பு முடிந்து வீட்டுக்கு நடந்து பழகிய கால்கள், வீதியின் அடுத்த பக்கம் மாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிக்னலில், வீதியைக் கடப்பதற்காக நின்றது.
அங்கு ஏற்கனவே சிக்னலுக்காக காத்து நின்றவர்கள் அழுது வீங்கிய முகத்தோடு, கலைந்த தலையோடும், விழிகளில் வெறுமையோடும் நின்றவளை வித்தியாசமாகப் பார்ப்பதை உணராமல், வீதியை வெறித்துக்கொண்டு நின்றாள் சனா.
சிக்னல் இன்னும் விழாததில் வேகமாக வந்துகொண்டிருந்தது ஒரு கார். அதைக் கண்டதும் அவள் விழிகளில் ஒரு மின்னல். நெஞ்சைப் புழுவாய் அரிக்கும் வேதனையையும், அவன் பிரிவைத் தாங்க முடியாமல் துடிக்கும் இதயத்தின் துடிப்பையும் முற்றாக நிறுத்த நினைத்தவள், அந்தக் கார் அருகில் வந்ததும் ஒருவித பிடிவாதத்தோடு வீதியில் பாய்ந்தாள்.
இதைச் சற்றும் எதிர்பாராத கார் அவளைத் தூக்கித் தூர வீசிவிட்டு, கிரீச் என்று பெரும் சத்தத்துடன் சற்று தூரத்தில் பிரேக்கடித்து நின்றது. அங்கே நின்றவர்கள் கூட நொடியில் நடந்துவிட்ட அசம்பாவிதத்தைக் கண்டு திகைத்து நின்றுவிட்டனர்.
தூக்கி வீசப்பட்டவளின் உடலோ, உள்ளே வேதனையால் துடித்துக்கொண்டிருந்த அவள் இதயத்தைப் போலவே துடியாய்த் துடித்தது!
………..
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த லட்சனாவின் தூக்கம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது.
“ஹேய் சனா, விழித்துவிட்டாயா..?” என்று கேட்டது ஆர்ப்பாட்டமான ஒரு குரல்.
இந்தக் குரலை எங்கோ கேட்டிருக்கிறேனே என்று எண்ணியபடி, விழிகளை நன்கே விரித்து அவள் பார்க்க, எதிரே ஜெயன் நின்றுகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தும் அவள் விழிகளில் எந்தச் சலனமும் இல்லை. அதைப் படம் பிடித்துக் கொண்டது அவன் விழிகள். நெஞ்சில் மெல்லிய வலியொன்று எழுந்து அடங்கியது.
ஆனாலும், நொடியில் தன்னை தேற்றிக் கொண்டு, “என்ன மேடம், எப்படி இருக்கிறீர்கள்? என்னைத் தெரியுமா? முதலில் உன்னை உனக்கே தெரியுமா? அல்லது ‘இப்போ நான் எங்கே இருக்கிறேன்?’ என்று கேட்கப் போகிறாயா..?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் அவன்.
அதைக் கேட்டவள் சிரமப்பட்டு புன்னகைக்க முயன்றாள். ஆனால் முடியத்தான் இல்லை. வார்த்தைகளால் வடிக்க முடியாத வலியொன்று உடனிருந்து அவளைச் செல்லரித்துக் கொண்டிருந்தது.