“இவ்வளவு கஷ்டப்பட்டு நீ சிரிக்கத்தான் வேண்டுமா?” என்று அவன் கேட்டபோதும் அவள் முகத்தில் உயிர்ப்பில்லை.
அதைப் பார்த்ததும், அவளிடம் உயிர்ப்பைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிற வெறி எழுந்தது அவனுக்கு.
“சரி, உன் பெயர் என்னவென்று உனக்குத் தெரியுமா? முனியம்மா. எங்கே சொல், மு..னி..ய..ம்..மா..” என்று ஒவ்வொரு எழுத்தாக அவன் சொல்ல, அவள் மெல்லப் புன்னகைத்தாள்.
அதைப் பார்த்ததும் அவன் முகத்தில் திருப்தியான முறுவல்.
“எப்படி இருக்கிறாய் சனா..?” அதுவரை இருந்த விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு, கட்டிலில் கிடந்த அவள் கையைப் பிடித்தபடி, இதமான குரலில் கேட்டான்.
அந்தக் கனிவில் அவள் முகம் கசங்கியது. அவளைக் கனிவோடு கட்டியணைத்தவனின் நினைவு வர, விழிகள் கலங்கி, கண்ணீர் காது மடல் வரை வழிய, அதைப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டபோதும், எதுவும் கேட்கவில்லை ஜெயன்.
“எப்படி இருக்கிறாய் என்றுதானே கேட்டேன். ஏதோ உன் வீட்டுச் சொத்தைக் கேட்டது போல் இதென்ன அழுகை?” அதட்டலோடு கூடிய பொய்க் கோபத்தை அவன் காட்ட, அது கூட அவளுக்கு கண்ணீரை வரவைத்தது.
அவனும் இப்படித்தானே! அவள் அழுதால் அவனுக்குப் பிடிக்காதே! அன்று கூட, ‘உன்னுடைய இந்த அழுகை கூட எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கடைசி அம்பை எறிந்துவிட்டுப் போனானே! அதையும் அவன் சொன்ன விதம்?!
அப்படி அவன் சொல்லியும் அறிவில்லாமல் இன்னும் கண்ணீர் வடிக்கிறேனே. பட்டும் திருந்தவில்லையே இந்த மனம்! ச்சே! எப்போது பார்த்தாலும் இது என்ன அழுகை என்று தன் மீதே வெறுப்புத் தோன்றியது.
இனியாவது அழக்கூடாது என்று நினைத்துக்கொண்டாள். தன்னால் அது முடியுமா என்று தெரியாமலே!
அவன் தூக்கி எறியுமளவுக்கு அவளும், அவள் காதலும் தாழ்ந்து போனதா? அந்தளவுக்குக் கேவலமாகப் போனாளா அவள்? என்று நினைத்தமாத்திரத்தில் தாழ்வுணர்ச்சி ஒன்று அவளைப் பலமாகத் தாக்கியது. வெறுமையும் வேதனையும் மட்டுமே அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது.
கலங்கிக் கொண்டே இருந்த கண்களும், பரிதவித்துக் கொண்டிருந்த அவள் முகமும், மனதுக்குள் எதையோ வைத்து மருகுகிறாள் என்று புரிந்தது ஜெயனுக்கு. ஆனால் ஏன் இந்த மருகல்? ஏன் இந்தக் கண்ணீர்?
அப்படி என்னதான் நடந்தது? அவனுக்குப் புரியவே இல்லை. கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் கழித்து, அவளைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலோடு அவன் பிரான்க்புவர்ட் விமானநிலையம் வந்திறங்கிய போது, முகத்தில் சந்தோசம் கொஞ்சமும் இல்லாது வரவேற்றார் சிவபாலன்.
சனாவை விழிகள் தேட, “என்ன அண்ணா, ஏதோ வேண்டாதவனை வரவேற்பது போல் வரவேற்கிறீர்களே?” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லைடா. நீ வந்தது சந்தோசம் தான். வா..” என்று அவர் சோர்ந்த குரலில் சொல்ல, என்னவோ நடந்திருகிறது என்று தோன்றியது அவனுக்கு.
“எங்கே அண்ணா, அண்ணி, சைந்து, சனா ஒருவரையும் காணோம்?” என்று கேட்டான். கேட்கும் போதே அந்த இடத்தை அலசியது அவன் விழிகள்.
“சைந்து பள்ளிக் கூடம். உன் அண்ணி சனாவைக் கவனிக்க அவளோடு வைத்தியசாலையில் இருக்கிறாள்.” என்றவரின் குரலில் கவலை அப்பிக் கிடந்தது.
நடந்துகொண்டிருந்தவன் நின்றுவிட்டான். அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. “என்ன சொல்கிறீர்கள்? என்ன நடந்தது சனாவுக்கு?” என்று திகைப்போடு கேட்டவனிடம், “ஒன்றும் இல்லை, நட. நடந்துகொண்டே கதைக்கலாம்..” என்றவர், “சிக்னலைக் கவனிக்காமல் வீதியைக் கடந்திருக்கிறாள் போல, கார் ஒன்று அவளை மோதிவிட்டது..” என்றார் அவர் தொடர்ந்து.
“என்னது?” என்று அவன் திகைத்துப் போனான். அன்றும் வீதியில் வைத்துத் தானே உறவுகளை இழந்தாள். மீண்டும் ஒரு வீதி விபத்தா? அவள் உயிருக்கு ஏதாவது? என்று நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு நடுங்கியது.
“அவள்.. அவளுக்கு ஏதாவது?” என்று, நடுக்கத்தைக் குரலில் காட்டாது இருக்க முயன்றபடி அவன் கேட்க, “இல்லையில்லை. பெரிதாக ஒன்றும் இல்லை. ஊர்மனை என்றபடியால், கார்க் காரனும் வேகமாக வரவில்லை.” என்றார் சிவபாலன்.
ஜெயனுக்கு அப்போதுதான் சுவாசம் சீரானது.
அவனோடு தொலைபேசியில் கதைப்பதில் அவளுக்கு நாட்டமில்லை என்பதிலேயே சனாவைக் குறித்து அவனுக்குச் சில அனுமானங்கள் தோன்றி இருந்ததுதான். ஆனாலும், அவளுக்கு ஒன்று என்கையில் அவன் இதயம் அவனையும் மீறித் துடித்தது.
“இது எப்போது நடந்தது?”
“அது நடந்து ஒரு வாரமாகிவிட்டது..” என்றார் சிவபாலன்.
“பிறகேன் என்னிடம் நீங்கள் சொல்லவில்லை. அம்மா அப்பாவிடமும் சொல்லவில்லை போலவே. அவர்களுக்குத் தெரிந்திருந்தால் எப்படியும் என்னிடம் சொல்லியிருப்பார்களே..” என்று அவன் கேட்க,
“உன்னிடம் சொல்லி என்ன செய்யச் சொல்கிறாய். உன்னையும் வருத்தவா? அதே காரணம் தான் அம்மா அப்பாவிடமும் சொல்லாததற்கு. அதுதான் நீயே வரப்போகிறாய் தானே என்று விட்டுவிட்டேன். ஏதோ மன அழுத்தம் என்கிறார்கள். உடல் காயத்தை விட மனதில் ஏதோ அவளைப் போட்டு ஆட்டுகிறது என்கிறார் டாக்டர். அப்படி என்ன என்று எனக்குத் தெரியவில்லை ஜெயன். எனக்குத் தெரிந்து நானும் உன் அண்ணியும் அவளை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டோம்…” என்றவரின் மனது புரிந்தது அவனுக்கு.
“நீங்கள் குறை விட்டதாக அவளே சொல்ல மாட்டாள் அண்ணா. இதை நினைத்து நீங்கள் உங்களை வருத்த வேண்டாம். அப்படி எதுவும் இருக்காது. எதிர்பாராமல் நடந்துவிட்ட விபத்தால் உண்டான அழுத்தமாக இருக்கலாம். இப்படி வீதியில் நடந்த குண்டு வெடிப்பால் தானே பெற்றோரை இழந்தாள். அதை நினைத்திருப்பாளாயிருக்கும்.” என்று தமையனைத் தேற்றியவனுக்கும், மனதில் பல கேள்விகள்.
ஒரு வழியாக தமையனோடு வீட்டுக்கு வந்தவன், செய்த முதல் காரியமே அவளை வந்து பார்த்ததுதான்.
எங்கோ வெறித்துக்கொண்டு வேதனையில் உழன்றவளைப் பார்த்து, “என்ன சனா, என்ன பிரச்சினை உனக்கு? எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது.” என்றான் ஆழ்ந்த குரலில் இதமாக. என்ன நடந்தது என்று தெரியாதபோதும், நடந்த விபத்தை விடவும் வேறு ஏதோ பிரச்சினை அவளுக்கு உண்டு என்கிற அளவில் அவனுக்கு விளங்கியது.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது, அமைதியாக இருந்தவளை ஒருதடவை கூர்ந்தவன், சட்டென்று தன் பாணிக்குத் திரும்பினான்.
“முதன் முதலில் ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன். என்னை வாருங்கள் வாருங்கள் என்று நீ என் காலில் விழுந்து வரவேற்பாய் என்று நான் எதிர்பார்க்க, நீயானால் இப்படி இங்கு வந்து படுத்திருக்கிறாயே..” என்று சலித்தான்.
அவள் நலம் நாடும் அவனிடம், தன் வேதனையைச் சொல்லி ச்அவனையும் எதற்கு வேதனைப் படுத்துவான்? என்று நினைத்தவள், தன் மன வலியை மறைத்து, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“இது நல்ல பிள்ளைக்கு அழகு!” என்றவன், “இப்போது சொல். என்ன நடந்தது?” என்று நயமாகக் கேட்க, மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் துளிர்க்கப் பார்த்தது.
ஆனாலும், முயன்று தன்னைக் கட்டுப் படுத்தியவள், “எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள்.
அதைப் புரிந்துகொண்டான் அவன். ஆனாலும், அவள் வழிக்கே செல்ல முடிவெடுத்து, “இன்றுதான் வந்தேன்..” என்றவனை மேலே பேசவிடாது, “எப்படி இருக்கிறீர்கள்?” என்று, வாய்க்கு வந்த அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
இன்னும் ச்ச்ச்எவ்வளவு தூரத்துக்குச் சமாளிக்கிறாள் என்று பார்க்கலாம் என்று நினைத்தவன், அமர்ந்திருந்த கதிரையில் இருந்து வேகமாக எழுந்து, ஒரு சுற்றுச் சுற்றினான்.
“நீயே சொல், எப்படி இருக்கிறேன். ராஜா மாதிரி இல்லை?” என்று கேட்டான்.
அவள் காதல் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா கூட்டை விட்டுப் பிரிந்துவிட்டானே.. என்று நினைத்த மாத்திரத்தில் எவ்வளவு கட்டுப் படுத்தியும் முடியாமல், அவள் விழிகள் குளம் கட்டியது.
அதைப் பார்த்ததும், “சரி விடு. நான் ராஜா மாதிரி இல்லை கூஜா மாதிரி இருக்கிறேன். அதற்காக அழாதே..” என்று அவளைத் திசை திருப்ப அவன் முயல, அவள் காதுகளில் அது விழவே இல்லை.
மீண்டும் மீண்டும் அன்று சூர்யா சொன்னவைகளே காதில் எதிரொலித்தது.
அதை எல்லாம் கேட்டுவிட்டும் , இன்னும் உயிரோடு இருக்கிறேனே. என்னை யார் காப்பாற்றினார்கள்? எதற்குக் காப்பாற்றினார்கள்? நானெல்லாம் வாழத் தகுதி இல்லாதவள். நேசிக்கும் உறவுகளை எல்லாம் இழந்துவிடும் ராசியே இல்லாதவள் ச்என்று நெஞ்சு துடித்தது.
அதைத் தாங்க முடியாமல் விம்மல் ஒன்று வெடிக்க, அதை ஜெயனுக்குக் காட்டப் பிடிக்காமல், தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.
குலுங்கும் உடலில் இருந்தே அவள் அழுவதை உணர்ந்து, அவன் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. கையாலாகாத தனத்துடன் அவளையே பாத்திருந்தான். ம்கூம், அழுகை நின்றபாடில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவனின் பொறுமை பறக்க, “இந்த அழுகையை நிறுத்தப் போகிறாயா இல்லையா.:?” என்று அடிக்குரலில் அதட்ட, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்து விழித்தாள் சனா.
அதைப் பார்த்தவனுக்கு ஐயோ என்றிருந்தது. அந்தளவுக்கு பரிதாபமாக இருந்தது அவள் தோற்றம்.
கதிரையை அவளருகே இழுத்துப் போட்டு அமர்ந்தவன், அவள் தலையைக் கோதி விட்டபடி, “என்னம்மா? என்ன பிரச்சினை உனக்கு?” என்று கண்களில் கனிவோடு கேட்டான்.
அப்படி அவன் காட்டிய இதமா அல்லது, “உனக்கு நான் இருக்கிறேன். உன் அக்கா குடும்பம் இருக்கிறது. உனக்கு ஒன்று என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? நீ வாயைத் திறந்து சொன்னால் தானே, எங்களுக்குப் புரியும். ம்? சொல்லு. என்ன நடந்தது?” என்று அவன் காட்டிய அக்கறையா, ஏதோ ஒன்று அவள் வாயைத் திறக்க வைத்தது.
“சூ..ர்..யா…” அந்தப் பெயரைச் சொல்லும் போதே அவ்வளவு வலித்தது. எவ்வளவு ஆசையாக அழைப்பாள். வாய்க்கு வாய், வார்த்தைக்கு வார்த்தை என்று அவள் உள்ளத்திலும் உதட்டிலும் வாழும் பெயரல்லவா அது!