அத்தியாயம்-3
நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்திருந்த மக்களைப் பார்க்க கோபம் வந்தது சனாவுக்கு. அவர்களால் தானே அவளும் இங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டாள்.
கோழிக்குஞ்சுகளை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த அந்தக் கடைக்காரனின் மேல் கொலைவெறியே எழுந்தது. இதெல்லாம் ஒரு விஷயம் என்று இப்படி ஒரு கடையைப் போட்டு அவளை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டானே. இது போதாது என்று கடையைக் காட்டுகிறேன் என்று அந்நியன் ஒருவன் அவள் இடையில் கையைப் போட்டபடி நிற்கிறான்.
‘கையை எடுடா…’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அப்படிச் செய்தால் அந்த இடத்தில் அசிங்கப்படுவது தான்தான் என்பதால் கோபத்தை அடக்கினாள். மக்கள் நெருக்கியடித்ததில் அவனை உதறிவிட்டு வெளியேறவும் வழியைக் காணோம். உடல் கோபத்தில் நடுங்க அவனை முறைத்தாள். அவனோ வீடியோ எடுப்பதில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அதற்கு மேலும் அப்படியே நிற்க முடியாமல், அவனிடமிருந்து விடுபட முயன்றுகொண்டே, “விடுங்கள்…!” என்று கிட்டத்தட்ட அடிக்குரலில் சீறினாள்.
கைபேசியில் இருந்து பார்வையைத் திருப்பி அவளைப் புரியாமல் பார்த்துவிட்டு மறுபடியும் வீடியோ எடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்திய அவன், “எதை விட..?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான்.
‘என் இடையை விடுடா…’ என்று சொல்லவா முடியும். விருப்பம் இல்லாதபோதும் இடையில் பதிந்திருந்த அவன் கையைத் தன் கையால் பிடித்து, அகற்றி அவன் எதை விடவேண்டும் என்று செய்கையால் உணர்த்தினாள் அவள்.
அப்போதுதான் உணர்ந்தவனாக, “ஓ.. உன்னை அருகில் இழுப்பதற்காகப் பிடித்தேன்..” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு கையை எடுத்துக்கொண்டான்.
தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவன் மன்னிப்புக் கேட்காததில் கோபம் இன்னும் ஏறியது. இது போதாது என்று இடையில் இருந்து அவன் கை அகன்றபோதும் அவனோடு ஒட்டிக்கொண்டு நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை அவளால். அந்தளவுக்கு மக்கள் நெருக்கி அடித்தனர்.
அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல், வெளியே வருவதற்காக முயன்றவளின் கையைப் பற்றிக்கொண்டவன், “பார்த்துமுடித்துவிட்டாய் என்றால் வா போகலாம்.” என்றபடி, பெரும் கஷ்டப்பட்டு அவளோடு அந்த மக்கள் நெருக்கடிக்குள் இருந்து வெளியே வந்தான்.
உடனே அவன் கையில் இருந்த தன் கையைப் பறித்துக்கொண்டு எதுவும் பேசாது நடந்தாள் அவள்.
“லட்சனா, எங்கே போகிறாய்…? வா ஐஸ் குடிக்கலாம். இந்த வெயிலுக்கு நன்றாக இருக்கும்…” என்று அழைத்தான் அவன்.
எல்லோரும் சனா என்று அழைக்க அவன் லட்சனா என்று அழைப்பது கூட அவளுக்கு ஏனோ சினமாக இருந்தது. அப்போதுதான் அவனது பெயர் இன்னும் தனக்குத் தெரியாது என்பது நினைவு வர, நடந்துகொண்டிருந்தவள் நின்று, திரும்பி அவனைப் பார்த்து, “உங்கள் பெயர் என்ன..?” என்று கேட்டாள்.
அவளையே பாத்திருந்தவனின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“இன்னும் தெரியாதா உனக்கு…?” சின்னச் சிரிப்பினூடே கேட்டான்.
அவனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொண்டே இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.
முகத்தில் இருந்த புன்னகை மாறாது, “என்னோடு ஐஸ் குடிக்க வந்தாயானால் பெயரைச் சொல்கிறேன்…” என்றான் இலகுவாக.
‘பெயரைக் கேட்டால் பெரிய எடுப்பு எடுக்கிறான் பனங்கொட்டைத் தலையன்!’ ஒரு முறைப்பான பார்வையை அவனிடம் வீசிவிட்டு, “உங்களின் பெயரும் தெரியவேண்டாம். ‘ஐஸ்’உம் வேண்டாம்..” என்றுவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.
அவளின் செய்கைகளைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்பாகவும் ஏதோ ஒரு வகையில் அவனைக் கவர்வதாயும் இருந்தது. எப்போதும் அவனோடு இயல்பாகப் பழகும் பெண்களையே அறிந்திருந்தவனுக்கு, தொட்டதற்கும் சுருங்கும் அவளின் குணம் அவளோடு பழகுவதற்கு அவனைத் தூண்டியது.
வேகமாக நடந்து நான்கு எட்டில் அவளை எட்டி, மீண்டும் அவளின் கையைப் பற்றி, “எதற்காகக் கோபப்படுகிறாய் லட்சனா. சும்மா வேடிக்கைப் பேச்சுத்தானே. இப்போது என்ன என் பெயர் உனக்குத் தெரியவேண்டும். அவ்வளவுதானே…?” என்று கேட்டான்.
முகத்தில் கண்டிப்பைக் காட்டி, “முதலில் என் கையை விடுங்கள்..” என்றாள் அழுத்தமான குரலில்.
“கையைப் பிடிப்பதில் என்ன இருக்கிறது லட்சனா? நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள். நண்பர்கள் வேறு. ஓ… நாம் தான் நண்பர்கள் இல்லையே. நீ அப்படித்தானே சைந்துவிடம் சொல்லியிருக்கிறாய். அங்கே திபி நான் பொய் சொல்லிவிட்டேன் என்று என்னோடு கோபமாக இருக்கிறாள். அவளை சமாதானப்படுத்தவே கோழிக்குஞ்சை வீடியோ எடுத்தேன்.” என்றவனின் கை இன்னும் அவள் கையை விடவில்லை.
அவன் சொன்னதைக் கேட்டு முகத்தில் புன்னகை வந்தபோதும், தன்னுடைய கையை விடுவித்துக்கொண்டாள் சனா.
“சாரி. சைந்துவும் நீங்கள் என் நண்பர் என்பதைத் தன்னிடம் சொல்லவில்லை என்று கோபித்தாள். அதுதான் அப்படிச் சொன்னேன்..” என்றாள் இலகு குரலில்.
“அப்படியானால் நாம் நண்பர்கள் தானே…?” முகத்தில் முறுவலோடு அவளின் முகத்தையே பார்த்துக் கேட்டவனிடம், தன் பேச்சால் தானே மாட்டிக்கொண்டதாய் தோன்றியது அவளுக்கு.
எதுவும் சொல்லாது அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“வா, நாம் நண்பர்கள் ஆகிவிட்டதைக் கொண்டாடுவோம்…” அவளின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்து அழைத்தான் அவன்.
இப்போது ஏனோ மறுக்க முடியவில்லை அவளால். ஆனாலும் தயக்கமாகவும் இருந்தது.
“ஒரு ஐஸ் குடிக்கத்தானே கூப்பிடுகிறேன் லட்சனா. ஏதோ பியர் குடிக்கக் கூப்பிட்டதுபோல் தயங்குகிறாயே…” என்றவனின் குரலில் நகைப்பு நன்றாகவே இருந்தது.