இதயத் துடிப்பாய்க் காதல் 22 – 1

தூரத் தெரிந்த மலை முகட்டில், வெள்ளைக் கம்பளமாய் படர்ந்திருந்த பனிமூட்டத்திலேயே நிலைத்திருந்தது ஜெயனின் விழிகள்.

கடும் வெயிலில் கூடக் கரையாது, தேங்கி நின்ற பனியைப் பார்க்கையில், இப்படித்தான் சனாவின் நினைவுகளும் தன் மனதிலா என்கிற கேள்வி எழுந்தது.

அவள் சொன்னவற்றை எல்லாம் கேட்டவனைத் தாக்கியது, ஏமாற்றமா? வலியா? வெறுப்பா? அல்லது மூன்றுமா?

அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்பதை இத்தனை நாட்களில் அவன் அறிவான்தான். இனிக் காதலிக்க வைத்தால் ஆயிற்று என்று நினைத்தல்லவா வந்தான்.

அவள் மேல் கொண்ட காதல் என்பதை விட, அவனுக்கு அவள்தான், அவளுக்கு அவன்தான் என்று அவன் கொண்டிருந்த நம்பிக்கை அல்லவா பொய்த்துவிட்டது.

அவனும் அவளைக் கண்டதும் காதல் கொள்ளவில்லை தான். பெற்றவர்கள் கேட்டபோது, மறுப்பதற்கு காரணம் ஒன்றுமில்லை என்பதனால் சம்மதம் சொன்னவன்தான். இருபக்க வீட்டிலிருந்தும் கிடைத்த சம்மதத்தில், அவள்மீது இயல்பாகவே தோன்றிவிட்ட அன்புதான் இந்தக் காதல்.

ஆனாலும், காதல் காதல் தானே! அதை இழப்பதன் வலி ஒன்றுதானே!

அவனுக்கு என்னவோ அவனும் அவளும் வாழ்க்கைக் கோட்டில் ஒரே இடத்தில் நிற்பது போன்ற பிரம்மை.

அவளுக்கும் காதல் தோல்வி! அவனுக்கும் அதுவே! அந்தத் தோல்விகள் அவர்களைச் சந்தித்த வடிவங்கள் மட்டும் வேறு வேறு!

சொந்தம் என்று யாருமற்று, பாதுகாப்பாகத் தங்க வீடுமற்று, மனதில் பெற்றவர்களை இழந்த வலியைச் சுமந்துகொண்டு இருப்பவளிடம், தன் காதலைச் சொல்வது தப்பென்று அன்று நினைத்தது தவறோ?

அவர்களை அண்டி வாழ்கிறேன், அதனால் சம்மதித்துத் தானே ஆகவேண்டும் என்று அவள் சம்மதித்துவிட்டால், அல்லது தனக்கு யாருமில்லையே என்று நினைத்து சம்மதம் சொன்னால், அது காதலில்லையே என்று நினைத்தல்லவா, தன் அன்பை அவளுக்கு வெளிப்படையாகச் சொல்லாமல் விட்டான்.

ஆனாலும், தன் சொத்தாகப் போகிறவள் என்று எண்ணி அக்கறையையும் அன்பையும் அப்போதெல்லாம் அவன் காட்டத் தவறியதே இல்லையே? அதெல்லாம் அவளிடம் சிறு சலனத்தைக் கூடவா உண்டாக்கவில்லை? எதிலோ ஏமாந்துவிட்ட உணர்வு உண்டானது.

எங்கே தவறு விட்டான்? என் கை சேரும் என்று நம்பியிருந்த பொருள், எப்படி இன்னொருவன் கை சேர்ந்தது?

நம் வீட்டுச் சொத்தை எவன் களவாடுவான் என்கிற நம்பிக்கைக்கு கிடைத்த அடியல்லவா இது. அல்லது அந்த நம்பிக்கையில் அலட்சியமாக இருந்துவிட்டானா?

மூன்று வருடங்களாக அவளின் நிழலாக, கூட இருந்த தன் மேல் வராத காதல், பழகிய சில நாட்களிலேயே இன்னொருவன் மேல் எப்படி வந்தது? அதுவும் இப்படிப் பித்துப் பிடித்தவள் போல், அவனுக்காக உருகும் அளவுக்கு என்று பல கேள்விகள் அவன் மனதில் எழுந்ததே தவிர, அவள் மீது கோபம் வரவே இல்லை.

வருத்தம் நிறைந்திருந்த போதும், அவனுக்கு மருந்துக்கும் அவள் மீது வெறுப்பு வரவில்லை. அவள் நிலையையும் எண்ணி வேதனையே கொண்டான்.

அடுத்து என்ன என்கிற யோசனையோடு அவளைத் திரும்பிப் பார்க்க, கட்டிலில் எழுந்து, சாய்ந்து அமர்ந்திருந்தவள் அவனையே தயக்கத்தோடு பார்த்திருந்தாள்.

ஏன் இந்தத் தயக்கம் என்று எண்ணியவனுக்கு, எதிர்காலத் துணையாக நிச்சயிக்கப்பட்ட தான், இதற்கு என்ன சொல்லப் போகிறேனோ என்று யோசித்துத் தயங்குகிறாள் என்று புரிந்தது. இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்? அவளின் தயக்கத்தைப் போக்க வேண்டுமா? புரியவில்லை அவனுக்கு.

அவனுக்கு தன்னை நினைத்தே விசித்திரமாக இருந்தது. தன் மனதைத் தேற்றுவானா அல்லது அவளைத் தேற்றுவானா?

எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவனுக்கே, மொட்டிலேயே கருகிவிட்ட காதலின் வலி பெரிதாக இருக்க, பூப்பூத்து கனியாகக் கனியக் காத்திருந்த காதலைப் பறிகொடுத்தவளின் நிலையை அவனால் பரிபூரணமாக உணர முடிந்தது.

“சாரி.. என்.. என்னை மன்னித்துவிடுங்கள்..” என்றவளின் தயக்கமான குரல் கேட்டு, அவன் சிந்தனை கலைந்தது.

எதற்கு என்றும் அவன் கேட்கவில்லை, இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்பாயா என்றும் சொல்லவில்லை. அவனால் அப்படிச் சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

எதையும் பொய்யாகச் சொல்லாமல் அமைதி காத்தான்.

அதைப் பொறுக்க முடியாமல், “கோபமாக இருக்கிறீர்களா?” என்று கலங்கிய குரலில் கேட்டாள் சனா.

“இல்லை…” என்று இழுத்தபடி ஆழ மூச்சிழுத்து விட்டவன், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு சிவரில் சாய்ந்து நின்றபடி, ஜன்னல் வழியே தெரிந்த மலை முகட்டில் மீண்டும் பார்வையைப் பதித்து, “கோபம் என்றில்லை. கொஞ்சம் வருத்தம் தான். எங்கே என்ன பிழை விட்டேன் என்று யோசித்தேன்…” என்றான் மனதை மறையாமல்.

அவளுக்கோ அதைக் கேட்டு இன்னும் சங்கடமாக இருந்தது.

அவனையும் கஷ்டப்படுத்தி, தானும் கஷ்டப்பட்டு, போதாக்குறைக்கு இன்னொருவனைக் காதல் என்கிற பெயரில் மூச்சு முட்ட வைத்து, அவனே வெறுத்தொதுக்கும் அளவுக்குத் தாழ்ந்து என்று சிந்தனைகள் ஓட, “செத்துவிட வேண்டும் என்றுதான் கார் முன்னால் பாய்ந்தேன். அப்படியிருந்தும் தப்பிவிட்டேனே. போதாததுக்கு இப்படி உங்கள் எல்லோரையும் வருத்திக்கொண்டு, பூமிக்குக் பாரமாக வேறு இருக்கிறேன்..” என்றாள் சுயவெறுப்பில்.

‘சாவு’, ‘பூமிக்குப் பாரம்’ என்ற சொற்கள் முதலில் புரிய, உளறாதே!” என்று அதட்டியவன், அவள் சொன்னது முற்றாகப் புரிய, “என்ன சொன்னாய்? நீயாகப் பாய்ந்தாயா? அறிவில்லை உனக்கு? தப்பித் தவறி உனக்கொன்று நடந்திருந்தால், எங்கள் நிலையை யோசித்தாயா? நாங்கள் எல்லோரும் ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது என்று நினைத்தால், நீ திட்டம் போட்டுச் செய்திருக்கிறாய்.” என்று, அவளைக் கடுமையான குரலில் குற்றம் சாட்டினான்.

அவன் காட்டிய கடுமையில் திடுக்கிட்டுப் போனாள் சனா. தெரியாத்தனமாக வாயை விட்டு, அவனிடம் மாட்டிக்கொண்டதை அப்போதுதான் உணர்ந்தாள்.

“திட்டம் போடவில்லை. அது.. அது.. அப்போது இருந்த மனநிலையில்…” என்றாள் கன்றிவிட்ட முகத்தோடு, வெளியே வராத குரலில் இழுத்தாள்.

“என்ன பெரி..ய மனநிலை!” என்று வெடித்தான் அவன்.

அவன் கோபத்தைப் பார்த்தவளுக்கு, அக்கா அத்தானிடம் சொல்லிவிடுவானோ என்று அச்சமாக இருந்தது. பிறகு அவளால் அவர்கள் முகத்திலேயே விழிக்க முடியாதே!

“அக்கா, அத்தானிடம் இதைச் சொல்லிவிடாதீர்கள். தாங்க மாட்டார்கள்.” என்றாள், அவன் முகம் பாராது.

“பெருமையான விஷயம் பார். இதையெல்லாம் அவர்களிடம் சொல்ல.” என்றான் குத்தலாக.

பதில் சொல்ல வழியின்றி, ஊமையாகிப் போனவளிடம், “உன்னை உதறிவிட்டுப் போன ஒருவனுக்காக உயிரை விடத் துணிந்தாயே, வெட்கமாயில்லை உனக்கு? அவனைத் தவிர வேறு எதுவுமே இல்லையா இந்த உலகில் நீ வாழ?” என்று அழுத்தமான குரலில் அவன் அதட்ட,

“என் உலகமே சூர்யாதான்.” என்றவளின் குரல், அவளையும் மீறித் தழுதழுத்தது.

ஒரு நிமிடம் அயர்ந்துதான் போனான் ஜெயன். என்ன மாதிரியான அன்பு இது. அந்த முகமறியா சூர்யாவின் மேல் பொறாமையும் கோபமும் ஒருங்கே தோன்றியது.

அதைக் காட்டிக் கொள்ளாது, “நீ இவ்வளவு சுயநலம் கொண்டவளா சனா? உன் அக்காவைப் பற்றி ஒரு நிமிடமாவது யோசித்தாயா?” என்று, அவளை மீண்டும் குற்றம் சாட்டினான்.

அதைக் கேட்டவளுக்குத் தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது. அவன் கேட்பது சரிதானே. ஆனால் அன்று அவள் இருந்த நிலைமை..

அதை விளக்க ஆரம்பித்தவளின் பேச்சைக் காதிலேயே வாங்காது, “டாக்டர் உனக்கு ஏதோ மன அழுத்தம் என்று சொன்னாராம். அதைக்கேட்டு அண்ணா கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறார். அண்ணியோ உனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கோவிலுக்கு நேர்த்தி அது இது என்கிறார்கள். நீயானால்…” என்றவனுக்கு முகம் இறுகியது.

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தவனாக, பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காத்தான். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. காதல் பிரிவு வலிக்கும் தான். அவனுக்கும் வலிக்கிறது தான். அதற்காக யாராவது சாவதற்கு முடிவு எடுப்பார்களா? முட்டாள்! கொதித்துக் கொண்டிருந்த மனம், திடீரென்று விழித்துக் கொண்டது.

இனி அவள் தனக்குச் சொந்தமில்லை என்று தெரிய வந்தபோது, அவனுக்கு இப்படியான எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லையே! வாழ்க்கையே வெறுத்தது போல்.. இந்த உலகத்திலேயே வாழக்கூடாது என்பது போல்.. இல்லையே!

அவன் தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டிருக்க, அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொண்டது. மகளைப் போல் பார்க்கும் அத்தானையும் அக்காவையும் அல்லவா வருத்திவிட்டோம். எல்லாம் இந்தப் பாலாப் போன காதலால் வந்தது என்று தன்னுள்ளேயே வருந்தியவளிடம், “சொல்! இன்னும் அந்தப் பைத்தியக்கார எண்ணங்கள் ஏதும் இருக்கிறதா..?” என்று அதட்டிக் கேட்டான் ஜெயன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock