“நானும் உன்னை அந்த இடத்தைப் பார்க்கச் சொல்லவில்லையே. வகுப்புக்குத் தானே வரச் சொல்கிறேன்.” என்றவனிடம், தன் நிலையை எப்படிச் சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு.
எனவே கோபத்தை துணைக்கழைத்தவள், “நான் வரவில்லை என்றால் வரவில்லைதான். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். என் விசயத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்..” என்றாள், இயலாமையால் உண்டான எரிச்சலை அவனிடம் காட்டி.
அவனுக்கு அவள் பேச்சு வியப்பாக இருந்தது. சனாவுக்கு இப்படி எடுத்தெறிந்து பேசக்கூடத் தெரியுமா என்பதாக அவன் அவளைப் பார்க்க, அப்போதுதான் தான் பேசியதன் பொருள் அவளுக்குப் புரிந்தது.
புரிந்த மாத்திரத்தில் விழிகள் கலங்கிவிட, “சாரி.. சாரி.. ஏதோ கோபத்தை உங்களிடம் காட்டிவிட்டேன். அது.. “அவளுக்கு பேச்சு வர மறுத்தது.
ஒரு தோழனாக எவ்வளவு உதவி செய்திருக்கிறான். அதையெல்லாம் நொடியில் மறந்து போனாளே! இப்படி எடுத்தெறிந்து பேசுவது, எரிச்சல் படுவது எல்லாம் அவள் இயல்பு இல்லையே.
என் இயல்பைக் கூட மாற்றிவிட்டானே என்று சூர்யாவின் மேல் கோபம் வந்தது.
அவன் மேல் உள்ள கோபத்தை இவன் மேல் காட்டிவிட்டோமே என்று உள்ளம் குன்ற, அவனைப் பாராது மீண்டும் மன்னிப்புக் கேட்க அவள் வாயைத் திறக்க, கைநீட்டித் தடுத்தவன், “எனக்குப் புரிகிறது..” என்றான் இதமாக.
அவள் நன்றியோடு அவனைப் பார்க்க, “ஆனால் நீ என்ன சொன்னாலும், நாளை, நீயும் நானும் போகிறோம். என்னை நீதான் வகுப்பில் அறிமுகப் படுத்துகிறாய்..” என்றவன், எழுந்து சென்றுவிட்டான்.
எல்லாவற்றையும் சொல்லிக் கூட என்னைப் புரிந்து கொள்கிறான் இல்லையே என்று செயலற்ற ஆத்திரம் வந்தது. நாளைய நாளை நினைத்து நடுங்கியபடியே அன்றைய இரவை உறக்கமின்றிக் கழித்தாள் லட்சனா.
அடுத்த நாள் காலையில் இருந்தே அவள் கை கால்களில் ஒரு உதறல்.
கிடைத்த தனிமையில், “நான் அங்கு வரவில்லை!” என்று அவனிடம் அறிவித்தாள்.
“ஏன்?” என்று அவன் சுருக்கமாகக் கேட்க, “உங்களுக்குத் தெரியாதா?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“தெரியாமல் தானே கேட்கிறேன்..” என்றான் அவனும் அசராமல்.
“நான் படும் பாட்டை என் வாயால் கேட்கவேண்டும் என்று ஆசையா? அந்தளவுக்கு இரக்கமே இல்லாதவரா நீங்கள்? சரி. சொல்கிறேன். நன்றாகக் காத்து குளிரக் கேளுங்கள். அவரை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன். அங்குதான்.. அங்கு.. வைத்துத்தான் என்னை வேண்.. டாம் என்றார்.” என்றவளுக்கு, குரல் நடுங்கியது.
“சரி! அதுக்கும் நீ வகுப்புக்கு வருவதற்கும் என்ன சம்மந்தம்?” என்று சாதரணமாக கேட்டவனை, என்ன செய்தால் தகும் என்று தோன்றியது அவளுக்கு.
மனம் குமைந்தபடி, மறுப்பை முகத்தில் காட்டி நின்றவளை, சில நொடிகள் பார்த்தவன், “இப்படி எத்தனை நாட்களுக்குப் போகாமல் இருப்பாய்?” என்று இதமாகவே கேட்டான் ஜெயன்.
அவளிடம் பதிலில்லை. மௌனமாக நின்றாள்.
“சொல் சனா. அவனை அங்கு மட்டுமா சந்தித்தாய். இந்த ஊரில் பல இடங்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அங்கெல்லாமா போகாமல் இருக்கப் போகிறாய்? அது சாத்தியமா?”
அவன் கேட்பது அவளுக்குப் புரியாமல் இல்லை, ஆனால்… அங்கு போவதை நினைத்தாலே, இதயத்தை யாரோ குத்திப் பிழிவது போல் வலியொன்று தாக்குகிறதே.. என்ன செய்வது?
“அல்லது இப்படி எத்தனை நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாய்..? இன்று நான் கேட்கும் கேள்விகளை, நாளை உன் அக்காவோ, என் அண்ணாவோ கேட்க மாட்டார்களா? அப்போது என்ன பதில் சொல்வாய்?” என்று அவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.
“என்னால் முடியவில்லை. நான் என்ன செய்யட்டும்?” இயலாமையுடன் கேட்டவளின் விழிகளில், அவளையும் மீறி நீர் கோர்த்தது.
“இதை எல்லாம் தாண்டி வரவேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறன். ஆனால் முடியவில்லையே..” என்றவளின் குரலும் தழுதழுத்தது.
அதைப் பார்த்தவனுக்கும் மனதுக்குள் என்னவோ செய்தது. அவன் நேசிக்கும் ஒருத்தி, தன் நேசத்தை இழந்துவிட்டு இந்தப் பாடு படுகிறாளே என்று வருந்துவானா? அல்லது இவ்வளவு ஆழமான அன்பை இழந்துவிட்டோமே என்று வருந்துவானா?
இதற்கெல்லாம் காரணமான அந்த முகமறியா சூர்யாவின் மேல் கண்மண் தெரியாத கோபம் வந்தது.
தன் மனதை அவளுக்கு மறைத்து, “முடியவேண்டும்! நம்மால் முடியாது என்று ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் தாண்டி வா..” என்றான் உறுதியான குரலில். தனக்கும் சேர்த்துச் சொன்னானோ?
நம்பிக்கை அற்று அவள் அவனை நோக்க, “ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஓரிடத்தில் நம்மால் தேங்கிவிட முடியாது சனா. சில இடங்களில் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நாம் ஓடித்தான் ஆக வேண்டும். அந்த நிலைதான் உனக்கும்.”என்றவன், சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்.
“உன்னை உதறிய ஒருவனை எண்ணி, உயிரை விடத் துணிந்தாயே, முதலில் அவனுக்கு அந்தத் தகுதி இருக்கிறதுதானா என்று யோசித்தாயா? பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் லட்சனா.” என்றான் அழுத்தமாக.
அவள் முகம் கன்றியது. அன்று உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவள் எடுத்த முடிவு இன்று அவளுக்கே, அவமானமாகப் பட்டது.
அவள் முகத்தில் இருந்த அவமானக் கன்றலைப் பார்த்துவிட்டு, “உன்னை வருத்தச் சொல்லவில்லை. இனியும் இப்படி முட்டாள் தனமான முடிவுகளை நீ எடுக்கக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்..” என்றான் இதமாகவே.
“புரிகிறது..” என்றாள், அவன் முகம் பார்த்து.
“மரணம் நமக்குப் பரிசாக வரவேண்டுமே தவிர, அதற்கு நாம் பரிசாகக் கூடாது சனா!” என்றான் மீண்டும் அழுத்தி.
அன்று அவள் சொன்னதில் முழு நம்பிக்கை இன்றித்தான், மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறான் என்று விளங்கியதில், “என் அண்ணா மேல் சத்தியம் செய்திருக்கிறேன். இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்படி நடக்க மாட்டேன். அதோடு அன்று ஒரு வேகத்தில் எடுத்த முடிவு. இன்று எனக்கே அது முட்டாள் தனமாகப் படுகிறது.” என்றாள் தெளிவாகவும், உறுதியாகவும்.
“நல்லது.” என்றவனின் முகம் மலர்ந்தது.
“பிறகென்ன, அப்படியே உன் இறந்த காலத்தையும் தூக்கித் தூரப்போடு. இன்றிலிருந்து புது மனுஷியாய் வெளியே வா..” என்றான் தொடர்ந்து.
அதற்கு மட்டும் அவளிடம் பதிலில்லை. அப்படி இறந்த காலத்தைத் தூக்கிப் போட அவளுக்கே விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், அதை அவனிடம் சொல்ல முடியாதே!
“என்ன, முடியாதா?” அவளைப் புரிந்துகொண்டவன் கேட்டான்.
இயலாமையுடன் அவள் அவனைப் பார்க்க, “முடியவேண்டும்!” என்றான் அவனே, உறுதியுடன்.
தொடர்ந்து எதுவோ சொல்லத் தொடங்கியவன், சிவபாலன் அவர்களை நோக்கி வருவதைக் கண்டுவிட்டு, “வாங்கண்ணா..” என்றான் புன்னகையோடு.
“என்னடா, இருவரும் எதைப் பற்றித் தீவிரமாகக் கதைக்கிறீர்கள்..?” என்று அவர் கேட்க, சுலோ நால்வருக்குமான தேநீரோடு வருவதைக் கண்டுவிட்டு, “அங்கே கொழும்பில், எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாலினியை நீங்கள் சைட் அடித்தீர்களே. அதைப் பற்றி சனாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன்..” என்றான், கண்கள் மின்ன.
“என்னடா.. அதையெல்லாமா சொல்வாய்..” என்று ஆரம்பித்தவர், மனைவியைக் கண்டதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.
சுலோ கணவனைப் பார்த்த பார்வையில் அணல் பறந்தது. சிவபாலனோ பரிதாபமாக மனைவியையும் தம்பியையும் மாறி மாறிப் பார்த்தார்.
அவரை அப்படியான ஒரு கோலத்தில் இதுவரை கண்டிராத சனாவின் முகத்திலும் புன்னகை.
“ஜெயன் சொன்னது உண்மைதானா?” சுலோ முறைத்துக் கொண்டே கேட்க, “அவன் விசரன். அவன் கதையை நீ நம்புகிறாயே?” என்றார் அவர்.
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்?” முறைப்போடு கேட்டவளிடம், “அதெல்லாம் சின்ன வயதில் செய்தது சுலோ. அந்தப் பெண்ணுக்கு என்னை விட வயது கூட..” என்று வாயை விட்டார் அவர்.
“அக்கா போன்றவளை சைட் அடித்திருக்கிறீர்கள். வெட்கமாயில்லை.” என்று பாய்ந்தாள் சுலோ.
“இப்போ சந்தோசமாடா? நீ ஜெர்மனிக்கு வந்த விஷயம் நிறைவேறியதா..?” என்று சிவபாலன் ஜெயனிடம் பாய, “அவனிடம் பேசுவதை விட்டுவிட்டு எனக்குப் பதில் சொல்லுங்கள்..” என்றாள் சுலோ.
திண்டாடும் தமையனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் ஜெயன்.
“அண்ணி, அண்ணாவை விடாதீர்கள். நன்றாக நாலு கேள்வி கேளுங்கள்.” என்றவன், “நீ வா. நாம் போகலாம்.” என்று சனாவை அழைத்தான். போகையில் தன் தேநீர் கோப்பையை எடுக்க மறக்கவில்லை.
சிரிப்போடு அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, தன்னதையும் எடுத்துக்கொண்டு அகன்றாள் சனா.