இதயத் துடிப்பாய்க் காதல் 23 – 2

அவன் சொன்னது போல, இன்னொரு பெண்ணோடு சூர்யாவை குழந்தை குட்டி என்று மனக்கண்ணில் கூட அவளால் பார்க்க முடியவில்லை. நினைக்கவே மனம் கசந்து வழிந்தது. இந்தத் துயருக்கு முடிவுதான் என்ன?

அவள் மனத் துயரை முகத்தில் படித்தவன், “ஒன்றில் நீ அவனைத் திருமணம் செய்ய வேண்டும். இல்லை என்றால் என்னைத் திருமணம் செய்ய வேண்டும்..” என்றான், அவளையே கூர்ந்தபடி.

“என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” என்று திகைத்துப்போய் அவள் அவனைப் பார்க்க, தளராத பார்வையோடு அவள் விழிகளை எதிர்கொண்டான் ஜெயன். அவன் பார்வையை, அதிலிருந்த கூர்மையை எதிர்கொள்ள முடியாமல், அவள்தான் விழிகளை விலக்கிக்கொண்டாள்.

அதில் உண்டான எரிச்சலோடு, “நான் இன்னொருவரைக் காதலித்தவள்.” என்று அறிவித்தாள் ஆத்திரத்தோடு.

“அதுதான் நீயே ‘காதலித்தவள்’ என்று இறந்த காலத்தில் சொல்லிவிட்டாயே, பிறகென்ன?” என்று அசராமல் அவன் கேட்க, அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது.

“இன்னொருவரை மனதில் நினைத்திருப்பவளிடம் இப்படிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?”

“இதிலே வெட்கப்பட என்ன இருக்கிறது? திருமணத்திற்கு முதலில் காதலிக்காதவர்களை மட்டும்தான் திருமணம் செய்வது என்றால், நூற்றில் ஒருசிலருக்கு மட்டும்தான் திருமணம் நடக்கும். அதேபோல திருமணமான ஒவ்வொருவரினதும் இதயத்தின் இருட்டறைக்குள் எட்டிப் பார்த்தால், அங்கு நிறைவேறாத ஒரு காதலாவது ஒளிந்திருக்கும். அவர்கள் எல்லாம் அந்தக் காதலை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு சந்தோசமாக வாழவில்லையா? அப்படி நீயும் இரு.” என்றான் அவன் அப்போதும் அசராமல்.

அதைக் கேட்டவள் வாயடைத்து நின்றாள். நல்லவன் என்று நம்பி, மனதைத் திறந்து அவனிடம் அனைத்தையும் சொல்லியும், இப்படி இரக்கமே இன்றிக் கேட்கிறானே.

சட்டென்று உண்டான வெறுப்பில், “அது சரி! நீங்களும் ஆண்பிள்ளை தானே! நீங்கள் எல்லாம் பெண்களின் மனதைப் பற்றி என்று சிந்தித்து இருக்கிறீர்கள்..” என்றாள், அவனைக் காயப்படுத்தும் வேகத்தோடு.

அதைக் கேட்டவனின் முகம் இறுகியது.

“எல்லோரையும் அந்த சூர்யாவைப் போல் கேவலமாக எண்ணாதே! உன் அப்பா எப்படி? உன் அண்ணா எப்படி? என்று நானும் கேட்கவா?” என்று அவன் கேட்டபோது, வாயடைத்து நின்றாள் சனா.

உண்மைதானே! எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டியது எவ்வளவு தவறு என்று புரிந்துவிட, கன்றிவிட்ட முகத்துடன் “சாரி..” என்றாள் லட்சனா. எப்போது பார்த்தாலும் அவசரப்பட்டு அவனிடம் கோபப்படுவதும், பிறகு மன்னிப்புக் கேட்பதுமே வேலையாகப் போய்விட்டது என்று மனம் குன்றியது.

“எதையும் யோசித்துப் பேசு. பேசிய வார்த்தைகளை அள்ள முடியாது!” என்றான் கண்டிப்பான குரலில்.

அவன் முகம் பார்க்கமுடியாது, தலை குனிந்து நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன், “போகலாமா?” என்று கேட்டான்.

அப்போதும் அவன் முகம் பாராமல், “ம்ம்..” என்றபடி அவள் நடக்க எத்தனிக்க, “இனி இங்கு வருவாய் தானே..” என்று கேட்டான் ஜெயன்.

பதில் சொல்லச் சிரமப்பட்டவளிடம், “வேதனைகளை ஒதுக்கு. உனக்குள்ளேயே முடங்காமல் வெளியே வா. சோகத்தைக் கூட சுகமாக நினைக்கப் பழகு.” என்றபோது, அவள் விழிகள் சட்டென்று அந்த இருக்கையைத் தான் பார்த்தது.

நடந்தவைகள் நினைவில் வந்தாலும், அவை அவளைச் சோகத்தில் ஆழ்த்தினாலும், அந்த சோகத்திலும் ஏதோ சுகம் இருப்பது போல் தோன்றியது இப்போது.

உள்ளே செல்லரிக்கும் அந்த வலிகூட ஒரு இதத்தைக் கொடுத்தது.

அன்றிலிருந்து முற்றாக அவள் மாறிவிட்டாள் என்றில்லை. ஆனால், அவள் அறிந்தும் அறியாமலும் அவளை மெல்ல மெல்ல மாற்றினான் ஜெயன்.

கார் ஓடிப் பழகுவதற்கு மீண்டும் அவளை அனுப்பினான். இதுவரை நான்கு மணித்தியாலம் என்று செய்த அவள் வேலையை ஆறு மணித்தியாலமாக செய்ய வைத்தான்.

முக்கியமாக அவளை எங்கும் முடங்க அவன் சம்மதிக்கவில்லை. தூங்குவதற்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அவளை அவள் அறைக்கே விட்டான்.

வாழ்க்கையே காதல் தான் என்று அதிலேயே உழன்றவளை, “அவனுக்கு மட்டுமில்லை, உனக்குமே காதல் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்..” என்று அடித்துச் சொல்லி, அவளை ஏற்க வைத்தான்.

ஆக, சூர்யாவை அவள் மறந்துவிடவில்லை. அவளாலும் அது முடியாது. ஜெயனாலும் அவனை மறக்கவைக்க முடியவில்லை.

ஆனால், ஒதுக்கப் பழகிக் கொண்டாள். மனதில் ஓரிடத்தில் அவன் நினைவுகளைப் பொக்கிசமாகப் பாதுகாத்துக் கொண்டாள்.

அவனில்லாத தனிமையைத் தாங்கி, அவனுடனான வாழ்ந்த நினைவுகளைச் சுமந்து, சோகத்தையும் சுகமாக மாற்றி வாழக் கற்றுக் கொண்டாள்.

ஜெயனும் வேலை ஒன்றில் சேர்ந்துவிடவே, அவர்கள் எல்லோரினதும் வாழ்க்கையும் அமைதியான நீரோடையாகச் சென்றது.

இரண்டு மாதங்கள் வேகமாகக் கழிந்தது. அக்காவும் அத்தானும், ஜெயனுக்கும் தனக்குமான திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்கிறார்களே என்று அவ்வப்போது தோன்றினாலும், எடுக்காதவரை நிம்மதி என்று நினைத்து அதை ஒதுக்கினாள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனை அவளால் ஏற்க முடியாது. அக்கா அத்தானிடம் மறுக்கத்தான் போகிறாள். அவர்கள் மனதை நோகடிக்கத்தான் போகிறாள். அது முடிந்தவரை தள்ளிப் போகட்டுமே!

அன்று, “அக்கா, நான் லைசென்ஸ் எடுத்துவிட்டேன்..” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் சனா.

“உண்மையாகவா. எங்கே காட்டு.. நான் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன். உனக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று…” என்றபடி, ஆர்வமாக அவள் கையில் இருந்த லைசென்ஸை வாங்கிப் பார்த்தாள் சுலோ.

தமக்கை தங்கை இருவரினதும் மகிழ்ச்சியைப் பார்த்து, அங்கு சோபாவில் அமர்ந்திருந்த தமையனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

“இங்கே பாருங்கள்..” என்று தங்கையின் லைசென்ஸை சிவபாலனிடம் காட்டிக்கொண்டே, “உடனடியாக அவளுக்கு ஒரு காரை வாங்கிக் கொடுங்கள். இன்றே கார்க் கம்பனிக்குப் போவோமா..?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் சுலோ.

“போனால் போயிற்று..” என்றவர், “சொல்லு சனா, உனக்கு என்ன நிறத்தில் என்ன மாதிரிக் கார் வேண்டும்?” என்று கேட்டபோது, அந்த அன்பில் விழிகள் கலங்கியது அவளுக்கு.

“இப்போது எதற்கு அத்தான்..?” என்று அவள் தயங்க, “பிறகு எப்போது வாங்கப் போகிறாய்..?” என்று அதட்டினார் அவர்.

அவள் அமைதியாக நிற்க, “போ.. போய் முகம் கழுவிக் கொண்டு வா. களைத்துத் தெரிகிறாய்.. அவளுக்கு எதையாவது சாப்பிடக் கொடு சுலோ.” என்று இருவரையும் ஏவினார் சிவபாலன்.

அவளை இந்த லைசென்ஸை எடுக்கவைக்கும் அளவுக்கு கொண்டுவந்த ஜெயனுக்கு கண்களாலேயே சனா நன்றி சொல்ல, சின்னப் புன்முறுவலோடு இமைகளை மூடித் திறந்தான் அவன்.

தன்னறைக்குள் சென்றவளுக்கு, விழிகள் குளம் கட்டியது. கையில் இருந்த லைசென்ஸை பார்த்தவளுக்கு, அதைக் காட்டி மகிழ சூர்யா இல்லையே என்று ஏக்கமாக இருந்தது.

அவளைக் கொண்டாட எல்லோரும் இருந்தும், எல்லாம் இருந்தும் கூட, வெறுமையை மட்டுமே உணர்ந்தாள்.

இவ்வளவு நாட்கள் நகர்ந்தும், அவனின்றி அவளுக்கு எதுவுமில்லை என்பதுதான் அவள் கண்டறிந்த கசப்பான உண்மை.

காலம் காயத்தை ஆற்றும் என்பர். இங்கே அவள் காயமும் ஆறவில்லை. காதலும் குறையவில்லை.

கண்ட கனவுகள் அத்தனையும் கலைந்த விதம் மீண்டும் நினைவில் வர, நெஞ்சம் கனக்க ஆரம்பித்தது.

இல்லை. அதை நான் நினைக்கக் கூடாது. என்னை வேண்டாம் என்றவன் எனக்கும் வேண்டாம் என்று மனப்பாடம் செய்தவள், பெற்றவர்களின் படத்தருகே சென்றாள்.

லைசென்ஸை அவர்கள் முன் வைத்துவிட்டு, மனதால் அவர்களோடு பேசியவள், வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் கட்டிலில் விழுந்தாள்.

லைசென்ஸ் எடுத்து, எனக்குப் பிடித்த சில்வர் கலரில் ஒரு சின்னக் கார் வாங்கி, எங்கென்று இல்லாமல் இந்த ஊரையே சுற்றி வரவேண்டும் என்று, ஒரு காலத்தில் அவள் கனவு கண்டதுண்டு.

இதோ, இன்று அவள் ஆசை, கனவு நிறைவேறும் தருவாயில் நின்றபோதும், மனம் மரத்துக் கிடந்தது.

எதிலும் உற்சாகம் இல்லை. எந்தச் செயலிலும் துடிப்பு இல்லை.

அவள் உடலின் ஒவ்வொரு திசுவிலும் ஒன்றிவிட்டவன், அவளை உயிரோடு கொன்று கொண்டிருந்தான்..

மனச் சுமைகளைத் தாங்க முடியாமல், கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவளை, “சனா, தயாராகிவிட்டாயா?” என்ற தமக்கையின் குரல் நினைவுலகுக்கு இழுத்து வந்தது.

“இதோ.. இதோக்கா வருகிறேன்..” என்றபடி எழுந்தாள்.

சிவபாலன் வாங்கிக் கொடுத்திருந்த காரில், வந்துகொண்டிருந்தாள் சனா. அவள் இதழ்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெல்லிய புன்னகை இயல்பாக மலர்ந்திருந்தது.

வெளிநாடுகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு பெண்களுக்கும் கார் என்பது இன்னொரு துணையைப் போன்றது. அவனின்றி அணுவும் அசையாது என்பது போலவே, அங்கு காரின்றிக் காரியங்கள் ஆவது மிகக் கடினமே!

அப்படியான ஒரு துணையான காரும் ‘லைசென்ஸ்’உம் கிடைத்ததில், அவள் முகத்தில் மெல்லிய தெளிவு!

பெட்ரோல் செட்டைக் கண்டதும், காருக்கு பெற்றோலை நிரப்ப எண்ணிக் காரை அங்கே விட்டாள். காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கியவளை, சொல்லாமல் கொள்ளாமல் சூர்யாவின் நினைவுகள் சூழ்ந்தது.

அவன்தான் அவளுக்கு பெட்ரோல் நிரப்பும் விதத்தைக் காட்டிக் கொடுத்தான். அதுவும் இதே பெட்ரோல் செட்டில்! அதை மட்டுமல்ல, கார் ஓட்டுகையில் கியர் மாற்றும் ஒவ்வொரு முறையும், அவள் குனிந்து, கியரைப் பார்த்து மாற்றுவதை கண்டு, அவளைச் சாலையைப் பார்த்து ஓட்டச் சொல்லிவிட்டு, அவள் கைக்கு மேலால் தன் கையை வைத்து கியரை மாற்றிப் பழக்கி இருக்கிறான்.

இப்படி அனைத்து விடயங்களிலும் அவனே இருந்தான். அன்று அவ்வளவு அன்பையும் அக்கறையும் காட்டியவனால், பிறகு எப்படிப் பொய்த்துப் போக முடிந்தது?

அவன் நினைவுகள் இன்றி ஒரு செயலையும் அவளால் செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு அவளைப் பாதித்து இருப்பவனை, அவள் கொஞ்சம் கூடவா பாதிக்கவில்லை. அந்தளவுக்கு அவள் சாதாரணமாகிப் போனாளா?
அதுவரை அவன் நினைவுகளில் கனத்த மனம் ஆத்திரம் கொண்டது!

உதறிவிட்டானே! அவளை வேண்டாம் என்றுவிட்டானே! என்று எண்ணிக்கொண்டே நிமிர்ந்தவள், அங்கே நின்றவனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனாள்!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock