யாரை நினைக்கவும் பிடிக்காமல், மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் நின்றுகொண்டிருந்தான். அதுவும், அவளையே விழியகலாது பார்த்தவண்ணம்!
சற்றும் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சந்திப்பில் சனாவும் திகைத்துத்தான் போனாள். மூளை மரத்துவிட, உடலின் அனைத்து உறுப்புக்களும் செயலை இழந்துவிட, அசைவற்று அப்படியே நின்றுவிட்டாள்.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, அருகில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பினாள். அப்போதுதான் தன் காருக்குப் பின்னே இன்னும் மூன்று கார்கள் வரிசையில் நிற்பதைக் கண்டாள்.
அவர்களில் யாரோதான் பொறுமையிழந்து ஹார்ன் அடித்திருக்கவேண்டும். நம் ஊர்களைப் போல தொட்டதற்கும் ஹார்ன் அடிக்கும் பழக்கமற்றவர்கள் ஹார்ன் அடித்திருக்கிறார்கள் என்றால், அவள் உறைந்து நின்ற நேரம் நெடியதாக இருந்திருக்கவேண்டும். பட்டும் திருந்தாமல் அவனையே மொய்த்த தன் விழிகள் மேலேயே கோபம் வந்தது.
பின்னே, அவளை வேண்டாம் என்று உதறியவனை அவ்வளவு நேரம் பாத்திருக்கிறாள்! அதுவும் சுற்றுப்புறத்தை மறந்து!
தூக்கியெறிந்த பிறகும் என்னையே பாக்கிறாள் என்று எவ்வளவு இளக்காரமாக நினைத்திருப்பான் என்று எண்ணிக்கொண்டே நிமிர, அவன் அவளை நோக்கி வருவது கண்ணில் பட்டது.
எதற்கு வருகிறான்? அன்று அவளைக் கொன்ற வார்த்தைகளின் தொடர்ச்சியை இன்று தொடரப் போகிறானாமா? மனதில் கோபம் கொழுந்துவிட, அவன் வருவதற்குள் பணம் செலுத்த உள்ளே சென்றுவிட வேண்டும் என்கிற அவசரத்தில் அவள் நடக்க, “லட்டு, கொஞ்சம் நில்லு.” என்று அழைத்தான் சூர்யா, வெகு இயல்பாக.
அன்று லட்சனாவாகிப் போனவள், இன்று மறுபடியும் லட்டா ? அதுவும் வெகு இயல்பாக அழைக்கிறான். ஒன்றுமே நடக்காதது போல். எப்படி முடிகிறது அவனால்? அவன் முகம் பார்த்து நறுக்கென்று நான்கு கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றியது. பொது இடத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று எண்ணியவள், அவன் அழைப்பைக் காதில் வாங்காது, அலட்சியம் செய்து நடந்தாள்.
மீண்டும், “லட்டு!?” என்று அழைத்தவனின் குரலில் மெல்லிய வியப்பு இருந்ததோ…
இருக்கும். இருக்கும்! எப்படி இல்லாமல் போகும்?! முன்னரெல்லாம் அவன் அப்படிக் கூப்பிட்டாளே உருகுபவள் ஆயிற்றே! இன்று கேட்டும் கேட்காதது போல் போகிறாளே என்று அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கும்!
நிற்காமல் நடந்தவளின் கையை எட்டிப் பிடித்த சூர்யா, “என்ன லட்டு, கூப்பிடக் கூப்பிட கேட்காதது போல் போகிறாயே?” என்று கேட்டான்.
அதுவரை அவள் காத்துவந்த பொறுமை பறந்தது!
அடங்காத ஆத்திரத்தோடு அலட்சியமும் சேர்ந்துவிட, அவன் கையிலிருந்த தன் கையை ஆத்திரத்தோடு உதறினாள். அவளால் தன் கையை விடுவிக்க முடியவில்லை. பார்க்க சாதரணமாக பிடித்திருப்பது போல் தோன்றினாலும், அவன் பிடி இறுக்கமாக இருந்ததில், அவள் கை அவனிடமே சிக்கியிருந்தது.
அதில் உண்டான அதிகோபத்தில், “என் கையை விடு. இல்லாவிட்டால் உன் மரியாதை கெட்டுவிடும்!” என்றாள், பெரும் சீற்றத்தோடு! ஆத்திர மிகுதியில் மரியாதைப் பன்மை கூட மறந்து போயிருந்தது.
அதைக்கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்துபோனான் சூர்யா. அவளுக்கு கோபம் இருக்கும் என்பது அவன் எதிர்பார்த்ததே! ஆனால் இந்தளவு கோபத்தை, ஆத்திரத்தை, வெறுப்பை எதிர்பார்க்கவே இல்லை.
அவளின் கடுமையில் அவன் மனம் அடிவாங்க, அவளைப் பிடித்திருந்த அவன் கை, தன் பாட்டில் நழுவியது!
அதே கையை உயர்த்தி, சுட்டுவிரலை மட்டும் பத்திரம் காட்டுவது போல் நீட்டி, “இனிமேல் என் கையைத் தொட்டாயானால், தொட்ட கையை உடைத்துவிடுவேன்!” என்றாள், வெறுப்போடு அவனை உறுத்து விழித்தபடி.
மறுபடியும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சூர்யா. இப்படியொரு சீற்றத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவனறிந்த சனா மென்மையே உருவானவள். அன்பில் மட்டுமே அடம் பிடிப்பவள். அதுவும் குழந்தையைப் போல்.
திகைத்து நின்றவனை அலட்சியம் செய்து முன்னே நடந்தவள், வேகமாகத் திரும்பிவந்து, “என் பெயர் லட்சனா! அதைவிட்டுவிட்டு லட்டு கிட்டு என்றால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.” என்று மீண்டும் சுட்டுவிரலை உயர்த்திச் சுட்டியவள், மிக வேகமாக உள்ளே சென்றாள், பணத்தைச் செலுத்த!
லட்டாம் லட்டு! அப்படிச் சொல்லிச் சொல்லித் தானே என்னை அவன் பின்னால் பைத்தியமாக அலைய விட்டான். அவளை அவன் ஒதுக்கப் போகிறான் என்று, அவனாக வாயைத் திறந்து சொல்லும் வரை, அவள் கொஞ்சம் கூட அதை ஊகிக்கவே இல்லையே!
அந்தளவுக்கு அல்லவா நம்பிக்கையைக் கொடுத்துக் கெடுத்தான். அன்று அவனுடன் இனிக்க இனிக்க கொஞ்சியதை எல்லாம் நினைக்கையில் இன்று வெறுப்பாக இருந்தது.
பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தாள் லட்சனா. அப்போதும், அவன் அதே இடத்தில் நிற்பது கண்ணில் பட்டாலும், அவன் விழிகள் அதிர்ச்சியோடு தன்னையே தொடர்வதை உணர்ந்தாலும், அவன் புறம் திரும்பியும் பாராமல் காரில் ஏறி அமர்ந்தாள்.
காரைத் திறந்து உள்ளே அமர்கையில், அவள் உடலிலும் முகத்திலும் மெல்லிய நிமிர்வு! நீயில்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்று அவனுக்குக் காட்டிவிடும் வேகம் இருந்தது அதில்!
சீட் பெல்ட்டைப் போட்டு, காரை இயக்கியவளுக்கு, அதை மேற்கொண்டு நகர்த்தத்தான் முடியாமல் போனது.
காரணம், அவளுக்கு முன்னே நின்றது சூர்யாவின் கார். ரிவர்ஸில் செல்லலாம் என்றால், பின்னுக்கும் கார். நடுவில் மட்டிக்கொண்டவளுக்கு பக்கத்தாலும் எடுக்க முடியவில்லை. அன்று என்று பார்த்து பெட்ரோல் செட்டில் கார்கள் நிறைந்து நின்றன.
பல்லைக் கடித்தவளின் கார்க்கண்ணாடியைத் தட்டியது ஒரு கரம். திரும்பிப் பார்க்காமலேயே தட்டுவது யார் என்று புரிந்துவிட, கண்ணாடியை இறக்காமல் நேர்கொண்ட பார்வையோடு அமர்ந்திருந்தாள்.
அவனோ, அவள் கண்ணாடியை இறக்கவில்லை என்றதும், கதவைத் திறந்து, குனிந்து, “நீதானா இப்படியெல்லாம் கதைப்பது? நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்றான், அவள் செயல்களை நம்ப முடியாத குரலில்.
கதவை லாக் பண்ணாமல் விட்ட தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்தவாறே, அவனைத் திரும்பிப் பார்த்தவளின் விழிகள் நெருப்பைக் கக்கின!
“ஆமாமாம்! எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் தான்! முன்னர் எல்லாம் நீங்கள் எவ்வளவு திட்டினாலும் நாய்க்குட்டி மாதிரி உங்களையே சுற்றிச் சுற்றி வந்தவள் இல்லையா? இப்போதும் நீங்கள் கூப்பிட்டதும் வருவேன் என்று எதிர் பார்த்திருப்பீர்கள்! அப்படித்தானே!?” என்று கேட்டாள் சீற்றத்துடன்.
அவள் பேச்சில் அயர்ந்து நின்றவனை விழிகளால் எரித்தபடி, “ எனக்கு என்ன வெட்கம், மானம், சூடுசுரணை எதுவுமே இல்லை என்று நினைத்தீர்களா..? அல்லது இன்னும் உங்களை நம்பி ஏமாறுவேன் என்று நினைத்தீர்களோ? அல்லது நீங்கள் லட்டு என்று கூப்பிட்டதும், திரும்பவும் ஈ என்று இளித்துக்க்கொண்டு வருவேன் என்று எதிர்பார்த்தீர்களா?” என்று பொரிந்து தள்ளினாள்.
சூர்யாவின் விழிகள் ‘பேசுவது நீதானா’ என்பதாக அவளையே வெறித்தன.
அவனைப் பார்க்கப் பிடிக்காது, முகத்தைத் திருப்பிக்கொண்டு, “காரை எடுங்கள். நான் போகவேண்டும். கண்டவனோடும் கதைக்க எனக்குப் பிடிக்கவில்லை!” என்றாள், அப்போதும் குறையாத கோபத்தோடு!