அதில் முகம் கன்ற, “நான் உனக்குக் கண்டனவா லட்டு?” என்று கேட்டான் சூர்யா. அவன் குரலில் அவளின் எடுத்தெரிந்த பேச்சால் உண்டான வலி தெரிந்தது.
“பின்னே? நீங்கள் கண்டவனில்லாமல் வேறு யார் எனக்கு? என் மாமனா? மச்சானா?” என்று ஏளனத்தோடு கேட்டவள், “என் பெயர் லட்சனா என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்தப் பெயரைக் கூடச் சொல்லிக் கூப்பிடும் அருகதை உங்களுக்குக் கிடையாது!” என்றாள் முகத்தில் அடித்தாற்போல்!
அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சி! அடிமேல் அடியாக இருந்தது சூர்யாவுக்கு அவளின் ஒவ்வொரு சொற்பிரயோகமும். அந்தளவுக்கு வலித்தது.
ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றவனிடம், “நந்தி மாதிரி மறித்துக்கொண்டு நிற்கும் காரை எடுங்கள். நான் போகவேண்டும். அந்நியரோடு எல்லாம் கதைக்க எனக்கு நேரமில்லை.. பிடிக்கவும் இல்லை!” என்றாள், முகத்தில் வெறுப்பை அப்பட்டமாகக் காட்டி!
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவளை அவன் காணவில்லை. அதற்குள் இத்தனை மாற்றமா என்று அயர்ந்துதான் போனான் சூர்யா.
தன்னுடைய அன்றைய பேச்சினால், கஷ்டப்பட்டிருப்பாள் என்பதை அவனும் அறிவான்தான்! காரணம், இவ்வளவு நாட்களும், அதே வேதனையை அவனும் அனுபவித்தவன் தான்! ஆனால், இந்தக் கோபத்தை இந்தளவு ஆக்ரோசத்தோடு சற்றும் எதிர்பார்த்தான் இல்லை!
அவளையே வெறித்தவன், “உன்னோடு சற்றுப் பேசவேண்டும்.” என்றான், உணர்ச்சிகள் அற்ற குரலில்.
“எனக்கு உங்களோடு கதைக்க ஒன்றுமில்லை!” என்றாள் பட்டென்று!
“எனக்கு இருக்கிறது!” என்றான் சூர்யா. இப்போது அவன் குரலிலும் பிடிவாதம் வந்திருந்தது.
உன் பிடிவாதத்துக்கு நான் ஆளில்லை என்று நினைத்தவள், “இருந்தால் தனியாக நின்று கதைத்துக் கொள்ளுங்கள். என்னோடு அல்ல!” என்றாள் அலட்சியமாக!
“உன்னோடு கதைக்காமல், நான் என் காரை எடுக்கமாட்டேன்!” என்றான் அவன் இலகுவாக. நினைத்ததைச் சாதித்துப் பழகியவன் அல்லவா..!
ஏளனமாக உதடு பிதுக்கி, “கார் என்ன முன்பக்கம் மட்டும்தான் ஓடுமா? பின்பக்கமும் ஓடும். அதோ.. எனக்குப் பின்னால் நிற்பவர் காரை எடுக்கப் போகிறார்..” என்றாள், ரிவர்ஸ் கியரைப் போட்டபடி.
அவன் இதழ்களில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாக, அதன் காரணம் புரியாது, பின்னால் அவள் பார்க்க,அவளுக்குப் பின்னால் நின்ற கார்க்காரன் ரிவர்ஸில் காரை எடுக்க, அந்த இடத்தில் புதிதாக ஒரு கார் வந்து நின்றது. அதற்குப் பின்னும் இன்னும் ஒரு கார் வேறு நின்றது. ஆக, அவளின் வழிகள் இரண்டும் இப்போதைக்கு அடைபட்டிருந்தது.
அவனிடம் தோற்கிறோமே என்று உண்டான எரிச்சலில், “இப்போது நீங்கள் காரை எடுக்காவிட்டால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று உங்கள் காரை இடித்துக்கொண்டு போய்விடுவேன்..” என்றாள் மிரட்டலாக.
“உன் லைசென்ஸ் புதியது. ஒரேயடியாக பறித்து விடுவார்கள். பரவாயில்லையா?” என்று கேட்டான் அவன் அமைதியாக.
அருகதை அற்ற அவனுக்காக அவள் லைசென்ஸை இழப்பதா?
இவனை இவன் வழியில் சென்றுதான் கவுக்க வேண்டும் என்று நினைத்தவள், “சரி. வருகிறேன். முதலில் உங்கள் காரை எடுங்கள்.” என்றாள், இழுத்துப் பிடித்த பொறுமையோடு.
அவளைப் புரிந்துகொண்ட புன்னகை அவன் முகத்தில்.
அங்கே, பெட்ரோல் செட்டில், இதர வேலைகளுக்கு என்று நின்ற மனிதனை அழைத்து, “என் கார் அதோ நிற்கிறது. அதை அந்தப் பக்கம் பார்க் பண்ணிவிடு. நான் சற்று நேரத்தில் வந்து எடுக்கிறேன்.” என்று தன் காரத் திறப்பை(சாவி) அவனிடம் கொடுத்துவிட்டு, சனாவின் காரைச் சுற்றி வந்து, அவளருகில் ஏறி அமர்ந்துகொண்டான் சூர்யா.
இதை எதிர்பார்க்கவில்லை அவள். தன் திட்டத்தை நொடியில் அவன் முறியடித்துவிட்டதை உணர்ந்தவளுக்கு, அவனைப் பார்த்து முறைக்க மட்டும்தான் முடிந்தது.
மூளையோ, இவனை என்ன செய்யலாம் என்று வேகமாகச் சிந்தித்தது.
“என்ன, இதை எதிர்பார்க்கவில்லையோ?” என்று கேட்டான் சூர்யா, இலகுவாக அமர்ந்தபடி.
தான் தோற்றுவிட்டதை காட்டாதிருக்க முயன்றபடி, “எதிர்பார்க்கவில்லைதான். அதுவும் நீங்கள், நான் எதிர்பார்க்காத எதையும் செய்து என்னை அதிசயிக்க வைப்பதில் வல்லவராச்சே!!” என்றாள் குத்தலாக!
அவள் எதைச் சொல்கிறாள் என்று புரிந்துகொண்டவனின் முகத்திலும் வேதனையின் சாயல். “சாரி! உன்னை வேதனைப் படுத்திவிட்டேன் என்று தெரியும். ஆனால், இந்தளவு கோபத்தை எதிர் பார்க்கவில்லை..” என்றான் வெளிப்படையாக.
“பின்னே, உங்களைக் கண்டதும் பழையபடி, வெட்கம் கெட்டு கொஞ்சிக் குலாவுவேன் என்று நினைத்தீர்களோ..?” என்று அவள் எகத்தாளமாகக் கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல், “அவன் என் காரை எடுத்துவிட்டான். நீயும் எடு.” என்றான் சூர்யா.
காரை நகர்த்திக்கொண்டே, “உங்களோடு எங்கும் என்னால் வரமுடியாது. சொல்வதைக் கொஞ்சம் விரைவாகச் சொல்லித்.. சொல்லுங்கள்.” என்றாள், வேண்டா வெறுப்பாக.
“சொல்லத்தானே உன்னோடு வருகிறேன். நீ முதலில் காரைக் கொஞ்சத் தூரம் ஓட்டு…”
“எதற்கு?” என்று வெடுக்கெனக் கேட்டாள் சனா.
“எப்படிக் கார் ஓட்டுகிறாய் என்று பார்க்க..” என்று அவன் சொல்ல, “நீங்களென்ன என் காரோட்டத்தைப் பார்ப்பது?” என்று வெடுவெடுத்தவள், ஏதோ நினைவு வந்தவளாக காரைச் சாலையோரமாக இருந்த பார்க்கிங்கில் நிறுத்தினாள்.
பின்னால் இருந்த தன் கைப்பையை எட்டி எடுத்தவள், அதற்குள் கையை விட்டுப் பணத்தை எடுத்தாள்.
அவன் கேள்வியாக அவளைப் பார்க்க, “இது நீங்கள் எனக்காகக் கட்டிய பணம். அடுத்தவரின் காசு எனக்குத் தேவைப்படாது..” என்றபடி, அவள் பணத்தை நீட்ட, அவன் முகம் இறுகியது.
“உளறாதே!” என்றான் கோபத்தோடு.
“உளறுகிறேனா?” என்று எகிறியவள், “அதுசரி! இதற்குமுதல் முட்டாளாக உங்களை நம்பி எல்லாவற்றையும் உளறியவள் தானே! அதுதான் இப்போதும் அப்படித் தோன்றுகிறது.” என்று ஆத்திரப்பட்டாள்.
“அடுத்தவனுக்கு மனைவியாகப் போகும் எல்லாப் பெண்களுக்கும் நீங்கள் செலவு செய்வீர்களோ?” என்று விடாது அவள் குத்த, அவன் முகம் கருத்தது.
“அன்று நான் அப்படிப் பேசியது தப்புத்தான். அதை உணர்ந்துதான் வந்திருக்கிறேன்… “ என்றவன், அவள் கையிலிருந்த பணத்தைக் காட்டி, “அதை உள்ளே வை.” என்றான் தன்மையாக.
“நீங்கள் எதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை. அதோடு உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை.” என்றாள், நீட்டிய பணத்தை நீட்டியபடி.
“பிடிவாதம் பிடிக்காமல் உள்ளே வை லட்.. சனா.” என்றான் அப்போதும் தணிந்த குரலில். லட்டு என்று சொல்லத் தொடங்கியவன் அவள் முறைப்பில் அதைச் சனாவாக்கினான்.
“மாட்டேன்.. உங்கள் பணம் எனக்குத் தேவையில்லை.” என்றவளை, ஒரு பார்வை பார்த்தவன், அவள் மடியில் கிடந்த கைப்பையை எடுத்து, அவள் நீட்டிக்கொண்டிருந்த பணத்தை வாங்கி அதன் உள்ளே வைத்து, அந்தக் கைப்பையைத் தன் காலடியில் வைத்தான்.
அவளுக்கோ, இதிலும் அவன் நினைத்ததைத் தான் செய்கிறான் என்றதும் கோபம் எல்லை மீற, “என்ன, உங்களோடு பழகியதற்கு கூலி கொடுக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டாள், கேட்டதன் பொருள் முற்றாகப் புரியாமலே!
“ஏய்!” என்று கைநீட்டி உறுமியவனின் உறுமலில் அவள் விழிகளில் அச்சம் படர்ந்தது. இருந்தவாக்கிலேயே பின்னால் சரிந்தாள்.
அவள் பயந்துவிட்டதை உணர்ந்தவன், கண்களை இறுக மூடி, ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப் படுத்தினான்.
“இப்படியெல்லாம் கதைக்காதே..!” என்றான் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு.
தன் பேச்சை எண்ணி சனாவும் குன்றித்தான் போனாள். அவன் விட்ட பிழைக்கு அவள், அவளையே அல்லவா தாழ்த்தப் பார்த்துவிட்டாள். இதில் இப்படியெல்லாம் கதைக்காதே என்று அவன் புத்தி சொன்னதில், தன் மீது இருந்த கோபத்தையும் அவன் மீதே காட்டுபவளாக, “என்னை இப்படி மாற்றியவர் நீங்கள்தானே!” என்றாள் வெறுப்போடு.
மெல்லிய அதிர்வோடு அவளையே பார்த்தான் சூர்யா. அவன் பேச்சு இந்தளவுக்கு அவளைக் காயப்படுத்திவிட்டதா? அந்தக் காயத்தை ஆற்றும் வகை அறியாது, சில விநாடிகளை மௌனமாகக் கழித்துவிட்டு, “காரை பார்க்குக்கு விடு.” என்றான்.
“உங்களோடு கதையளக்க எனக்கு நேரமில்லை. நான் வீட்டுக்குப் போகவேண்டும்..” என்று அவள் அறிவிக்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாது, அவளையே பார்த்தபடி அமைதியாக இருந்தான் சூர்யா.
சனாவுக்குப் பத்திக்கொண்டு வந்தது. அமைதிப் போராட்டம் நடத்துகிறானா? இப்படியே என் வீட்டுக்கு விட்டால் என்ன செய்வானாம்? அங்கே வந்து எதையாவது உளறினாலும் உளறுவான். யாருக்குத் தெரியும்?
இவன் எப்போது எதைப் பேசுவான் என்று, என்றுமே அவள் புரிந்துகொண்டதில்லையே!
இதில் அக்கா, அத்தான் இவனைப் பார்த்தால் அதுவேறு பிரச்சினை. சந்தோசமாக இருக்கும் அந்தக் குடும்பத்தின் அமைதியை எதற்குக் கெடுப்பான் என்று நினைத்தவள், விருப்பம் இல்லாமலேயே காரை எடுத்தாள்.
அவளின் வெறுப்பு, காரோட்டத்திலேயே தெரிந்தது.
“என் மீது இருக்கும் கோபத்தைக் காரில் காட்டாதே! நிதானமாக ஓடு.” என்று அவன் அதற்கும் கடிந்தபோது, “எனக்கு என் வேலையைப் பார்க்கத் தெரியும். நீங்கள் உங்கள் வாயை மூடிக்கொண்டு வாருங்கள். என் காரில் வர விருப்பம் இல்லாவிட்டால், தாராளமாக நீங்கள் இறங்கலாம். உங்களை யாரும் இங்கே இழுத்துப் பிடிக்கவில்லை.” என்று அவனிடம் எடுத்தெறிந்து கதைத்தவள், “என்ன, கரை நிற்பாட்டவா? இறங்குகிறீர்களா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டான் சூர்யா,
அவனை அதிலாவது வாயடைக்க வைத்துவிட்டதில் அவளுக்குச் சற்றுத் திருப்தியாக இருந்தது.
காரை பார்க்குக்கு கொண்டுசென்று நிறுத்திவிட்டு அவள் அமைதியாக இருக்க, “இறங்கு..” என்றபடி சூர்யா இறங்கினான்.
அவன் சொன்னதைச் செய்யப் பிடிகாதபோதும், எதையாவது சொல்லட்டும் நன்றாகத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று கருவிக்கொண்டே இறங்கியவள், தன் காரிலேயே சாய்ந்து நின்றபடி, கைகளைக் குறுக்காகக் கட்டியபடி, தூரத் தெரிந்த மலைப்பகுதியை ரசிப்பவள் போல் நின்றுகொண்டாள்.
அதில் ஒருவித அலட்சியம் தெரிந்தது.
அதைப் பார்த்தவனுக்கு, நெஞ்சில் பாரமொன்று ஏறி அமர்ந்துகொண்டது.
“நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள் லட்.. சனா.” என்று ஆரம்பித்தான் சூர்யா.