“அங்கே எப்போதும் உன் நினைவாக இருந்தது. பாட்டி வேறு, எப்போது ஜெர்மனி போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, கண்ணில் பட்ட ஒரு பூங்காவுக்குள் புகுந்துகொண்டேன். அங்கே நம்மைப் போலவே ஒரு அழகான ஜோடி…” என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், அவள் முறைப்பதை உணர்ந்து புரியாமல், “என்ன..?” என்று கேட்டான்.
ஜோடியாக இருந்த நம்மை நீயே பிரித்துவிட்டு பிறகென்ன நம்மைப்போல என்கிறாய் என்று கேட்கத் துடித்த நாவை அடக்கி, “ஒன்றுமில்லை. உங்கள் கதையைச் சொல்லுங்கள்..” என்றாள் சனா.
“அவர்களிடமிருந்து என்னால் கண்ணை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பது தவறு என்று தெரிந்தாலும்.. அவ்வளவு அழகாக இருந்தது அவர்களைப் பார்க்க. என் கண்தான் பட்டதோ தெரியவில்லை. கொஞ்சத் தூரத்தில் இரண்டு பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் அந்த ஆணுக்கு தெரிந்தவள் போல. அவள் இவனைப் பார்த்துச் சிரித்தாள். இவனும் சிரித்து, தலையை ஆட்டினான். அவ்வளவுதான் நடந்தது. அதுவரை அவன் கையோடு கை கோர்த்தபடி நின்ற அவன் காதலி, கையைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.” என்றவனுக்கு, அதை நினைத்துச் சின்னப் புன்முறுவல் பூத்தது.
“எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது சனா. தெரிந்த பெண்ணைப் பார்த்துச் சிரிப்பதில் என்ன இருக்கிறது? அதற்கே அந்தப் பெண் அப்படி முறுக்கிக் கொண்டாள். அவன் எவ்வளவு கெஞ்சியும் கதைக்கவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாளும் அங்கு போனேன். நான் எதிர்பார்த்தது போலவே வந்திருந்தார்கள். அன்றும் அவன் கெஞ்ச, ‘நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எப்படிச் சிரிக்கலாம். நீங்கள் எனக்கு மட்டும்தான். என்னைப் பார்த்து மட்டும்தான் சிரிக்க வேண்டும்.’ என்று அந்தப் பெண் அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள். அவனும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சமாதானப் படுத்தினான். முதலில் இதென்னடா கொடுமை என்று எனக்குச் சிரிப்பாக இருந்தது.” என்றவனின் முகத்தில், அந்தச் சிரிப்பு இப்போதும் ஒட்டியிருந்தது.
“நடந்ததை பாட்டியிடம் சொன்னபோதுதான், அவர்கள் சொன்னார்கள். நம் பெண்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் காதலன் அல்லது கணவன் மேல் காட்டும் அன்பில் மட்டும் அவர்கள் சுயநலவாதிகள். அதில் சின்னச் சறுக்கலைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று. அப்போதுதான் உன் அன்பும் புரிந்தது எனக்கு. உன் அக்கா வீட்டு விசயங்களில் கூட ஒதுங்கிப் போகும் நீ, என்னுடைய எல்லா விசயத்திலும் தலையிட்டாய் என்றால், என்னை உன் சொந்தமாக நினைத்திருக்கிறாய்.
அது புரியாமல் நான் என்னென்னவோ உளறிவிட்டேன்…” என்றவன், அத்தோடு அதை நிறுத்திக்கொண்டான். அவனுக்குமே இப்போது அன்று சொன்னவைகளைத் திருப்பிச் சொல்லப் பிடிக்கவில்லை.
“ உனக்கு முன் எத்தனையோ பெண்கள் என்னை அணைத்திருக்கிறார்கள். நான் அணைத்திருகிறேன். அப்போதெல்லாம் உன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது. ஆனாலும் நீ அதை என்னிடம் ஒருநாள் தன்னும் காட்டிக்கொண்டதில்லை. அப்போதுதான் புரிந்தது உன் அன்பு எவ்வளவு பெரியது என்று. அது புரிந்த உடனேயே தாத்தா பாட்டியையும் இழுத்துக்கொண்டு உன்னைப் பார்க்கும் ஆவலில் இங்கு ஓடி வந்துவிட்டேன்..”
என்றவனைத் தீர்க்கமாகப் பார்த்தது சனாவின் விழிகள்.
“அந்த அன்புதானே உங்களுக்கு விலங்காக இருந்தது. அதில் மூச்சு முட்டித்தானே என்னை உதறிவிட்டு ஓடினீர்கள். இப்போது வந்து கதை அளக்கிறீர்கள்.” என்றாள், குறையாத ஏளனத்தோடு.
“அதுதான், நான் பேசியது எல்லாம் தப்பு என்று சொல்கிறேனே சனா. இன்னும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குவாயா..? இனி உன்னை என்னிடமிருந்து யாராலும்.. ஏன் என்னாலும் கூட பிரிக்க முடியாது.” என்றவனின் பேச்சை, “என்னால் முடியுமே..” என்று இடை வெட்டினால் சனா.
“ஏன் இப்படிச் சொல்கிறாய் சனா? என்னைப் புரிந்துகொள்ளவே மாட்டாயா?”
“புரிந்துகொள்ளாமல் என்ன, உங்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். புதிதாக ஒன்றும் இல்லை. அன்று நீங்கள் சொன்னதுதான். எனக்கும் உங்களுக்கும் என்றும் சரியாக வராது…” என்றாள் கடினப்பட்ட குரலில்.
“அப்படியானால் என்னை மறந்துவிட்டாயா நீ..?” அன்று ஜெயன் கேட்ட அதே கேள்வியை, இன்று சூர்யா கேட்டான்.
‘ஆமாம். உன்னை மறந்துவிட்டேன்..’ என்று சொல்லு என்று அவள் மனம் துடித்தாலும், அன்று போலவே இன்றும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அவளின் மௌனத்தில் அவன் முகம் மலர்ந்தது. “இல்லைதானே! என்னைப் போலவே உன்னாலும் என்னை மறக்கமுடியாது. எனக்குத் தெரியும். நான் உன்மேல் வைத்த காதலை விட நீ என்மேல் கொண்ட அன்பு ஆழமானது. அந்த நம்பிக்கையில் தான் உன்னிடம் திரும்ப வந்திருக்கிறேன். நான் பேசியவைகள் அனைத்தும் மூடத்தனமானவை. இன்று அதை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் ஏற்றுக்கொள்வாயா லட்.. சனா” என்று, ஆழ்ந்த குரலில் ஆவலோடு அவன் வேண்டியபோது, ஒருநொடி அவளும் தடுமாறித்தான் போனாள்.
ஆனால், இதுநாள் வரை அவள் பட்ட பாடுகள் கண் முன்னால் வலம்வர, ஆவேசம் கொண்டது அவள் மனது.
“இல்லை! முடியாது! என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது! அன்று சொன்னதை இன்று தவறென்று சொல்கிறீர்கள். இன்று சொன்னதை நாளை தவறென்று சொல்ல மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?” என்று, கிட்டத்தட்ட ஆத்திரத்தில் கத்தினாள் சனா.
“நிச்சயமாக மாறமாட்டேன். இந்த ஜென்மத்தில் எனக்கு நீ மட்டும்தான். என்னை நம்ப மாட்டாயா?”
“எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? அன்று உங்களை மலைபோல நம்பினேனே.. என் வாழ்க்கையே நீங்கள் என்று நினைத்தேனே.. இனி எல்லாம் சுகம்தான் என்று கனவு கண்டேனே.. அனைத்தையும் ஒரு நொடியில் தவிடுபொடியாக்கவில்லை நீங்கள்? மீண்டும் எந்த நம்பிக்கையில் உங்களை நம்பச் சொல்லிக் கேட்கிறீர்கள்?”
“தயவு செய்து என்னை புரிந்துகொள் சனா. அன்று என்னை நானே அறிந்துகொள்ளாமல் பேசியது அது. உன்னைப் பிரிந்தபிறகுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதையே உணர்ந்தேன். இலங்கையில் தாத்தா பாட்டி என்னைக் கவனித்துக் கொண்டார்கள். சொந்த பந்தங்கள் என்னைச் சுற்றி இருந்தார்கள். அம்மா அப்பா, நண்பர்கள் எல்லோரும் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசினார்கள். ஆனாலும், என் மனம் உன்னை மட்டும்தான் நாடியது. உன்னோடு கதைக்கமாட்டோமா? உன்னோடு கைகோர்த்து நடக்கமாட்டோமா என்றுதான் தவித்தேன். என்னருகில், என் காதலியாக, மனைவியாக நீயிருந்தால் மட்டுமே என் வாழ்க்கை பூரணமாகும்! அதை மட்டும்தான் என் இதயம் ஏற்கும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நான் உணர்ந்துகொண்டேன். எல்லோரும் இருந்துமே, நீ இல்லாமல் ஒன்றுமே இல்லாததுபோல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன்.” என்றவனை, சிறு திகைப்போடு நோக்கினாள் சனா.
அவளும் இதேமாதிரி நினைத்திருக்கிறாள். எல்லோரும் இருந்தும், அவன் இல்லாமல் யாருமே இல்லாதது போல் அவளும் உணர்ந்திருக்கிறாள்.
நினைவுகளில் கூட அவர்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை. ஆனால்.. என்ன ஒற்றுமை இருந்து என்ன பிரயோசனம்? அவனோடு வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லையே. தொண்டை அடைத்தது.
“இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும், இனி நமக்குள் எதுவும் சரிவராது. பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டும்..” என்றாள், குரலடைக்க.
“ஏன்?” என்றவனின் குரலில், அவனது பிடிவாதம் மீண்டிருந்தது.
“என்ன ஏன்? ஐந்தறிவு படைத்த பூனையே ஒருதடவை சூடு பட்டால் அந்த இடத்துக்கு மறுபடியும் போகாது. நான் என்ன அந்தப் பூனையை விடக் கேவலமானவளா? எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் உங்களை நம்ப?
“ஏன் சனா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்?”
“இது பிடிவாதம் அல்ல. என்னுடைய இயலாமை. இனியும் உங்களை நம்பி ஏமாறும் சக்தி எனக்கில்லை. சுதந்திரமாக வாழ்ந்து பழகிய உங்களுக்கு, என் செயல்கள் விலங்கு.. விலங்காக..” அந்த வார்த்தைகளைச் சொல்லவே அவளுக்குத் தொண்டை அடைத்தது.
அவளின் தவிப்பைத் தாங்க முடியாமல், “அந்தப் பேச்சு வேண்டாமே..” என்றான் சூர்யா.
ஒருவித பிடிவாதம் முகத்தில் தோன்ற, “இல்லை, இன்றாவது இருவரும் பேசித் தீர்த்துவிடலாம். என் செயல்கள், நான் காட்டிய அன்பு உங்களுக்கு விலங்காக இருந்திருந்தால், நீங்கள் அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? நீங்கள் எதைச் சொன்னாலும் நான் கேட்டிருப்பேனே.. யாருமே இல்லை என்று தவித்துக் கொண்டிருந்த எனக்கு, நீங்கள்தான் விடிவெள்ளியாகத் தெரிந்தீர்கள். அதனால்தான் என் உள்ளத்து அன்பு முழுவதையும் உங்கள் மீது கொட்டினேன். அது ஒரு தப்பா?” என்று கேட்டவளின் விழிகளில் கலங்கியது.
“அது தப்பில்லை சனா. ஆனால், அதை நான்தான் உணர்ந்துகொள்ளவில்லை.” என்றான் தவிப்போடு.
அவன் பேச்சு அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. இவ்வளவு நாளும் உள்ளே குமுறிய மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள்.
“அன்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? அடக்குமுறை என்றீர்கள், அடிமைப் படுத்துகிறேன் என்றீர்கள், இன்னும் சினமூட்டுகிறேன், உங்களை என்னிடம் கெஞ்ச வைக்கிறேன் என்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது உங்களால்? உங்கள் அம்மா உங்களைக் கண்டித்தால், இனி எனக்கு அம்மா வேண்டாம் என்று அவர்களையும் பிரிந்து விடுவீர்களா?” என்று அவள் கேட்டபோது, அதிலிருந்த உண்மை அவனைப் பலமாகத் தாக்கியது.
“என்னிடம் உங்களை இன்றுபோல் அன்று விளக்கியிருக்க வேண்டாமா? பிரிந்துவிடலாம் என்று எவ்வளவு இலகுவாகச் சொன்னீர்கள். அன்று என் நிலையைக் கொஞ்சமாவது யோசித்தீர்களா? சுயநலமாகத்தானே முடிவெடுத்தீர்கள்? அந்த முடிவு எனக்கும் நல்லது என்று, நீங்களாக எப்படி முடிவு செய்தீர்கள்? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?” அவளின் ஒரு கேள்விக்குக் கூட அவனிடம் பதிலில்லை. வாயடைத்து நின்றான்.
“யாரோடும் ஆத்மார்த்தமாக ஒட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள், உங்களைக் கண்டதும் இனி எல்லாமே நீங்கள்தான் என்று நினைத்தேனே, அதற்கு நீங்கள் தந்த பரிசு என்ன? நான் இறந்தாலும் மாறாத மனக்காயம். உங்களுக்கு எல்லாச் சொந்தமும் இருந்தது. அதனால் உங்கள் அன்பை எல்லோருக்கும் பங்கு போட்டீர்கள். ஆனால் எனக்கு? நீங்கள் மட்டும்தானே மொத்த சொந்தமாகத் தெரிந்தீர்கள். அதனால்தானே நேசம், பாசம், அன்பு, காதல், கோபம் என்று அனைத்தையும் உங்களிடம் கொட்டினேன். இந்த உலகில் என்னைப் புரிந்துகொண்டவர் நீங்கள் மட்டும்தான் என்று இருந்தவளின் தலையில், மின்னாமல் முழங்காமல் இடியை அல்லவா அன்று போட்டீர்கள். இன்று எந்த முகத்தோடு வந்து என் முன் நிற்கிறீர்கள்?” வேதனையில் முகம் கசங்க, கண்களில் கண்ணீர் வழிய, ஆவேசத்தோடு அவனைப் பார்த்து அவள் கேட்க, சூர்யா துடித்துப் போனான்.
எந்தளவுக்கு அவனை அவள் நேசித்திருக்கிறாள். மூடன் போல் அதைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டானே.
“உன்னுடைய எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை சனா. ஆனால், இனி என்னால் என்றும் உன்னை விடமுடியாது. விடமாட்டேன்!” என்றான் உறுதியான குரலில்.
“நீங்கள் என்ன என்னை விடுவதும் விடாததும்? நான் விடுகிறேன் உங்களை! நீங்கள் வேண்டாம் எனக்கு!” என்றாள், உறுதியான குரலில்.
“பொய் சொல்லாதே! உன் மனதிலும் என் மீது அன்பு இருக்கிறது என்பதற்குச் சாட்சி நீ வடிக்கும் இந்தக் கண்ணீர். பிறகும் ஏன் இந்த வீண் பிடிவாதம்?” என்று நயமாகக் கேட்டான் சூர்யா.
“இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதிலைச் சொல்லிவிட்டேன், உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதாக” என்றவள், அதற்கு மேல் அவனைப் பேசவிடாது, “எனக்கு நேரமாகிறது. நான் வீட்டுக்குப் போகவேண்டும்.” என்றுவிட்டுக் காருக்குள் ஏறினாள்.
அவனுக்கும் அதற்கு மேல் அவளைக் கஷ்டப் படுத்த இயலவில்லை. அவன் செய்த செயலுக்கு, உடனேயே அவள் மனம் மாறும் என்று எதிர்பார்க்க முடியாமல், “என்னை பெட்ரோல் செட்டில் விட்டுவிடு..” என்றபடி, அவனும் ஏறிக்கொண்டான்.
காரை இயக்கியவளுக்கு அதனை ஓரடி கூட நகர்த்த முடியவில்லை. இதுநாள் வரை மனதுக்குள்ளேயே வைத்துக் குமுறியவைகளை வெளியே கொட்டியதாலோ என்னவோ, கைகால்கள் நடுங்கியது. வீதியில் பார்வையைப் பதித்தால், கண்ணீர் அதை மறைத்தது.
கியரில் கையை வைத்தவளின் கை நடுக்கத்திலிருந்தே அவளின் நிலையை நொடியில் ஊகித்துக்கொண்டான் சூர்யா. உள்ளம் வலித்தது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது தான்தான் என்கிற உண்மை சுட, “நீ இறங்கு. நான் ஓட்டுகிறேன்..” என்றான் மென்மையாக.
“தேவையில்லை!” என்றாள், அப்போதும் வீம்பாக.
அவள் பேச்சைக் காதில் விழுத்தாது, இறங்கி அவள் புறமாக வந்தவன், அவள் கையைப் பிடித்து, “வெளியே வா..” என்றான்.
அவனிடமிருந்து தன் கரத்தை உருவ முயன்றபடி, “மாட்டேன்..” என்றாள் அடமாக.
அவளின் அடத்தில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“நீ இறங்காவிட்டால், உன்னைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தப் பக்கம் இருத்துவேன். அதுதான் உன் விருப்பம் என்றால், எனக்கும் ஓகே..” என்றபடி அவன் குனிய, அவனை முறைத்துவிட்டு இறங்கி, அந்தப் பக்கம் ஏறிக்கொண்டாள் சனா.