இதயத் துடிப்பாய்க் காதல் 26 – 1

வீட்டுக்குள் வந்த சனாவைப் பார்த்த சுலோவின் நெற்றி சுருங்கியது. “ஏன் சனா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது..?” என்று கேட்டவளிடம், சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

“அது.. அதக்கா தலை வலிக்கிறது. அதுதான்.” என்றாள் தமக்கையின் முகம் பாராது.

“ஏன்.. என்ன ஆச்சு..?” என்று கேட்டவள், அருகே வந்து தங்கையின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

ஏற்கனவே சூர்யாவால் பலகீனப் பட்டிருந்த மனது, தமக்கையின் செயலால் இன்னும் நெகிழ்ந்தது.

“நெற்றி சுடுகிறதே.. கண்கள் வேறு சிவந்திருகிறது.” என்றபடி, கழுத்திலும் கைவைத்துப் பார்த்துவிட்டு, “நீ முகம் கழுவிக்கொண்டு வா. சூடாக டீ தருகிறேன். குடி. தலைவலிக்கு நன்றாக இருக்கும்.” என்றுவிட்டு, சமையலறைக்குச் சென்றாள் சுலோ.

தன்னறைக்குள் வேகமாகச் சென்ற சனா, கதவை அடைத்துவிட்டு அதிலேயே சாய்ந்து நின்றாள். கண்களில் இருந்து காரணமின்றிக் கண்ணீர் வழிந்தது.

இதுநாள் வரை, என்னை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டானே என்று தினம் தினம் தவித்திருக்கிறாள். ஒவ்வொரு இரவையும் கண்ணீரில் கழித்திருக்கிறாள்.

இன்றோ, விட்டுப் போனவன் மீண்டும் வந்து நிற்கிறான். ஆனாலும் அவளால் அவனை ஏற்க முடியவில்லை. அவனிடம் சம்மதம் சொல்லி, அவன் கைகளுக்குள் சரண் புகுந்துவிட மாட்டோமா என்று மனம் ஏங்கினாலும், அது எத்தனை நாளைக்கு என்று கேட்டது மூளை!

கடைசிவரையும் இப்படித் தனியாக தவிப்போடு வாழ்வதுதான் என் விதியா என்று விரக்தியோடு எண்ணியவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று, குளிர் தண்ணீரை முகத்துக்கு நன்றாக அடித்துக் கழுவினாள்.

உடலுக்கு இலகுவான உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவளிடம், டீக்கப்பை நீட்டினாள் சுலோ. “முதலில் இதைக் குடி. பிறகு நெற்றிக்குத் தைலம் தடவி விடுகிறேன்.” என்றாள்.

அதை வாங்கிக்கொண்டு, “சரிக்கா..” என்றபடி, சோபாவுக்குச் செல்ல ஓரடி எடுத்து வைத்த சனா, அங்கிருந்த ஜெயனைக் கண்டதும் தயங்கினாள்.

இவளைப் பார்த்துப் புன்னகைத்தவனிடம், தயக்கத்தோடு சின்னதாகச் சிரித்தவள், அவனருகில் செல்லாமல் பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டாள். அவனோடு சகஜமாக கதைக்கும் மனநிலை அவளுக்கு அப்போது இருப்பதாகத் தோன்றவில்லை.

வெளியே வீசிக்கொண்டிருந்த குளிர் காற்று, தலைவலிக்கும், அழுததால் எரிந்துகொண்டிருந்த கண்ணுக்கும் இதமாக இருந்தது.

“மெல்லிய குளிர்காற்றும் பனிப்புகாரும் அழகாக இருக்கிறதில்லையா..” அருகில் கேட்ட ஜெயனின் குரலில், திரும்பி பார்த்தாள் சனா.

டீயை உறிஞ்சியபடி நின்றவனின் விழிகள் அவள் முகத்தை ஆராய்ந்தது. அதை உணர்ந்தவள், பனிப்புகாரைப் பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“என்ன சனா, என்ன விஷயம்?” என்று கேட்டான் ஜெயன்.

அவனிடம் உண்மையையும் சொல்ல முடியாமல், பொய்யும் சொல்லமுடியாமல், “ஒ.. ஒன்றுமில்லை.. லேசான தலைவலி.” என்று அக்காவிடம் சொன்னதையே அவனிடமும் சொன்னாள்.

“அந்தத் தலைவலி வரக்காரணம் என்ன என்றுதான் கேட்கிறேன்..”

பதில் சொல்ல முடியாமல் அவள் நிற்க, “அழுதாயா..?” என்று கேட்டான் அவன்.

அக்கா கூட கண்டுபிடிக்காததை இவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்று வியப்போடு அவள் பார்க்க, “அண்ணியைப் பொறுத்தவரை நீ அழுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.” என்றான் ஜெயன்.

அப்படித்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் டீயைப் பருக, “சரி சொல்லு. எதற்கு அழுதாய்..?” என்று விடாமல் கேட்டான்.

“சூர்யாவைப் பார்த்தேன்..” என்றாள் சுருக்கமாக.

“ஓ…”

சற்று நேரம் அவர்களுக்குள் மௌனமே நிலவியது. அவளைத் தாண்டி நடந்து சென்ற ஜெயன், நீள்சதுர வடிவில் இருந்த பால்கனியின் கம்பியில், இவளைப் பார்த்தபடி சாய்ந்து நின்றுகொண்டான்.

“உன்னோடு கதைத்தானா?” மௌனத்தைக் கலைத்தான்.

“ம்..”

“என்ன சொன்னான்?”

பார்வையை எங்கோ பதித்து, “மன்னிப்புக் கேட்டார்..” என்றாள் சனா.

“ஓ..” என்று மீண்டும் இழுத்தவனின் விழிகள் அவளை ஆராய்ந்தது.

“அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று, தன் விசாரணையைத் தொடர்ந்தான் அவன்.

“என்ன சொல்லவேண்டும்? எனக்கு வந்த கோபத்திற்கு நன்றாகக் கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். மன்னிப்புக் கேட்கிறாராம் மன்னிப்பு! செய்வதை எல்லாம் செய்துவிட்டு, மன்னித்துவிடு என்று வந்து நின்றால், உடனேயே மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்னை என்னவென்று நினைத்தார்?” என்று அவள் பொரும, அவனோ அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

அந்தப் பார்வையின் பொருள் புரியாமல், “என்ன?” என்று வினவினாள் சனா.

“ஒருவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அதை ஏற்பது தானே பண்பு..”

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? ஒருவர் கொலை செய்துவிட்டு வந்து மன்னிப்புக் கேட்டால், அப்போதும் மன்னித்து விடவேண்டுமா?”

“நீ உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறாய் சனா. கொலையும் இதுவும் ஒன்றல்ல.”

“உண்மைதான்! கொலையும் இதுவும் ஒன்றில்லை தான். அதற்கும் மேலே! ஏனென்றால், இங்கே கொன்றது அவர் என் நம்பிக்கையை! என் மனதை! கொலையுண்டவருக்கு அதன் பிறகு நடக்கும் எதுவும் தெரியாது. அதேபோல நெஞ்சுக்குள் செல்லரிப்பது போன்ற இந்த வலியும் இருக்காது. ஆனால் இங்கே அப்படி இல்லையே.. என் மனம் தினம் தினம் வெந்து சாகிறது. இப்படித் தினமும் சாவதற்கு அன்றே நான் செத்திருக்கலாம். அல்லது சூர்யாவே என்னைக் கொன்றிருக்கலாம்..” என்றவளின் குரல் அடைத்தது. மீண்டும் கண்ணைக் கரித்தது அவளுக்கு.

“இதென்ன பேச்சு.. சாவு அது இது என்று… பைத்தியம் மாதிரிப் பேசாதே! ”
என்று அதட்டினான் ஜெயன்.

“ப்ச்!” என்றாள் விரக்தியாக.

“ஏன் இந்தச் சலிப்பு. நடந்தவைகள் எல்லாம் முடிந்தவைகளாகவே இருக்கட்டும். அதையெல்லாம் மறந்துவிடு. இனி நடக்கவேண்டியதைப் பற்றி மட்டும் யோசி. நல்ல முடிவாக எடு.”

“நீங்கள் சொல்வது போல நடந்தவைகளை மறக்க முடிந்தால் எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எங்கே முடிகிறது? அவரோடு பழகியதும், அவரை நம்பியதும், கடைசியாக சூர்யா சொன்ன வார்த்தைகளும் தானே திரும்பத் திரும்ப நினைவில் நிற்கிறது..” என்றாள், அவற்றை மறக்கமுடியவில்லையே என்கிற ஆற்றாமையோடு.

தொடர்ந்து, “இதில் திரும்ப வந்து மன்னிப்புக் கேட்கிறாராம் மன்னிப்பு!” என்று உதட்டுக்குள் அவள் முணுமுணுத்தது, ஜெயனின் காதுகளில் மிக நன்றாகவே விழுந்தது.

அவளையே சற்று நேரம் பார்த்துவிட்டு, “அவனாவது தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டான். நீ.. நீ செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டாயா?” என்று நிதானமாகக் கேட்டான்.

மெல்லிய திகைப்போடு அவனைப் பார்த்தாள் சனா. “நானா? நான் என்ன பிழை செய்தேன்? அவர் மேல் அளவற்ற அன்பை வைத்ததைத் தவறென்கிறீர்களா?”

“அது தவறில்லை. ஆனால் அந்த அன்பின் பெயரால், அவனைக் கட்டுப் படுத்த நினைத்தது தவறு.” என்று அவளுக்குப் புரியவைக்க முயன்றான் ஜெயன்.

“நன்றாக யோசித்துப் பார். ஒருவரை அவரின் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வதுதானே அன்பு. அவன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியும் தானே. அப்படி இருந்தும் அவனை நீ மாற்ற முயன்றது தப்பில்லையா? மாற்றம் தானாக நிகழ வேண்டாமா.” என்று அவன் கேட்டபோது, திகைப்போடு ஜெயனைப் பார்த்தாள் சனா.

“முதலில் அப்படி ஒருவரை மாற்ற முடியுமா? நீ அவனை மாற்ற முயன்றாய். அவனும் மாறியது போல் நடித்தான். நடிப்பு எத்தனை நாட்களுக்கு நிலைக்கும்? அதுதான் ஒரு நாள் அந்த நடிப்பு வெடித்துச் சிதறிவிட்டது. இதுதானே நடந்து.” என்று அவன் கேட்டது அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து.

அவள் செய்ததுதான் தவறா? கள்ளமில்லா உள்ளத்தில் வெள்ளமெனப் பாய்ந்த அன்பை அவனுக்கு அள்ளியள்ளிக் கொடுத்தது ஒரு குற்றமா?

“அவன் உன்னிடம் என்ன சொல்லி மன்னிப்புக் கேட்டான் என்று தெரியாது. ஆனால், உணர்ந்து வந்தவனை உதறி, அவன் செய்த அதே பிழையை நீயும் செய்துவிடாதே…” என்றுவிட்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டான் ஜெயபாலன்.

ஸ்தம்பித்து நின்றாள் லட்சனா.

அடுத்தநாள் மாலை, டொச் வகுப்பு முடிந்ததும், வகுப்பை விட்டு வெளியே வந்தார்கள் ஜெயனும் லட்சனாவும்.

“இலங்கையிலும் அறிமுக டொச் கோர்ஸ் படித்தேன்தான். அங்கு அவர்கள் சொல்லித்தரும் உச்சரிப்புக்கும், இங்கு கதைக்கும் விதத்துக்கும் நிறைய வித்தியாசம் சனா…” என்றான் ஜெயன்.

“ஆமாம். முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இப்போது ஓரளவுக்கு..” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளின் கண்களில், அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த சூர்யா பட்டான்.

அவன் வரமுதல், இங்கிருந்து போய்விடவேண்டும் என்று நினைத்தவள், “இருட்டத் தொடங்கிவிட்டது. வாருங்கள் விரைவாகப் போகலாம்..” என்றபடி, எட்டி நடந்தாள்.

வேகமாக நடப்பவளை வியப்போடு நோக்கி, “பெரிதாக இருட்டவில்லையே.. ஆனாலும் வீடு கிட்டத்தானே..” என்றபடி, அவனும் அவளோடு சேர்ந்துகொள்ள, வேகத்தைக் குறைக்காமலே நடந்தாள் சனா.

அவள் முகத்தில் இருந்த பதற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. இவளுக்கு என்ன ஆயிற்று. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தாள் என்று எண்ணியவனின் சிந்தனையை, “லட்டு..” என்கிற அழைப்பு தடை செய்தாலும், யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தபடி, நடந்தான்.

ஆனால் சனாவின் வேகமோ இன்னும் கூடியது. “ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறாய்..?” என்றவனின் பேச்சை, “லட்டு நில்லு..” என்று சனாவின் கையைப் பிடித்தவனின் பேச்சு நிறுத்தியது.

புருவம் சுருக்கிக் கேள்வியாக ஜெயன் பார்க்க, பிடித்திருந்த சனாவின் கையை விடாமலேயே, மற்றக் கையை முன்னே நீட்டியபடி, “நீங்கள் சிவாண்ணாவின் தம்பி ஜெயபாலன் தானே..” என்று புன்னகையோடு வினவினான் சூர்யா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock