அவள் அவனை முறைக்க, சிரிப்போடு, “வா…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.
“உன்னைப்பற்றி என் பாட்டியிடம் சொன்னேன். அவர்கள் சொல்கிறார்கள் நீ மிகவும் நல்ல பெண்ணாம். இல்லாவிட்டால் பியர் குடிக்கிறாயா என்று நான் கேட்டதற்கு என் கன்னம் பழுத்திருக்குமாம்…” என்றான் நன்றாக மலர்ந்த முறுவலோடு.
அவளின் முகத்திலும் புன்னகை விரிந்தது. போதாததுக்கு மனம் வேறு இலகுவானது. பாட்டியிடம் தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறான் என்றால், அவன் தவறானவன் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா.
“உங்கள் பாட்டியும் உங்களோடுதான் இருக்கிறார்களா..?” ஆர்வத்தோடு கேட்டாள். அவள் அனுபவிக்காத ஒரு சொந்தத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது அவளிடம்.
“ம். பாட்டியும் தாத்தாவும் இங்கேதான் இருக்கிறார்கள். தாத்தா சின்னவயதிலேயே இங்கே வந்துவிட்டாராம். பிறகு பாட்டியும் அம்மாவும் வந்திருக்கிறார்கள். தாத்தாவின் நண்பரின் மகன்தான் அப்பா. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இங்கேயே திருமணம் நடந்திருக்கிறது. பிறகு.. அண்ணாவும் நானும் இங்கேதான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம்..” என்று தன்னைப்பற்றிச் சொன்னான்.
“நான் மட்டுமல்ல எங்கள் வீட்டில் எல்லோருமே மிக நன்றாகத் தமிழ் கதைப்போம். அதற்குக் காரணம் தாத்தாவும் பாட்டியும்தான்…” என்றவனின் குரலில் இப்போது கேலி வந்திருந்தது.
அன்று, நீங்கள் தமிழரா என்று அவள் கேட்டதைக் கேலி செய்கிறான் என்பது புரிந்தது.
“சந்தேகம் என்று வந்துவிட்டால் கேட்கத்தானே வேண்டும்…” என்றாள் அவள் மிடுக்கோடு.
அதற்கிடையில் ஐஸ் விற்கும் கடையடிக்கு வந்திருந்தார்கள்.
இரண்டை வாங்கி, ஒன்றை அவளிடம் நீட்டிவிட்டு, “வா, அங்கே இருக்கும் வாங்கில் அமரலாம்…” என்றான், அங்கிருந்த வாங்கிலைக் காட்டி.
அதில் அவன் அமர்ந்தபிறகு கவனமாக இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள் லட்சனா.
“உங்கள் பெயரை நீங்கள் இன்னும் சொல்லவில்லையே…?” ஐஸ் குடித்துக்கொண்டு கேட்டாள் சனா.
“என் பெயர் என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்…?”
‘ம்.. பனங்கொட்டைத் தலையன் என்று உனக்கு நான் பெயரே வைத்துவிட்டேன்…’ என்று மனதுக்குள் நினைத்தபோதும், “என்னைக் கேட்டால்..? எனக்கு எப்படித் தெரியும்..?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள் அவள்.
“என் பெயர்…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “சூர்யா…!” என்று அவனை அழைத்தபடி ஓடிவந்தாள் ஒரு பெண்.
அவளைப் பார்த்துப் புன்னகையோடு, ”ஹாய் அலினா…” என்றபடி எழுந்தவன், வந்தவளை அணைத்துக்கொண்டான். அணைப்பு முடிந்து அவர்கள் விலகியபோதும் அவனின் ஒரு கை அவளின் இடையிலேயே தங்கியிருந்தது.
‘இதையே வேலையா வச்சிருக்கிறான் போல!’ முகம் சுருங்கிப்போயிற்று ஜனாவுக்கு.
“இன்று உனக்கு வேலை இல்லையா…?” அலினா கேட்க,
“மதியம்தான் வேலை…” என்றான் அவன்.
அவர்கள் டொச்சில் கதைப்பது இவள் காதிலும் விழுந்தது.
“இவள் யார்..? உன் தோழியா..?”
அலினா தன்னைப்பற்றி அவனிடம் கேட்பது புரிந்தபோதும் முகத்தை அவர்கள் புறம் திருப்பவில்லை அவள்.
“ஆமாம். என் புதுத்தோழி. இன்றுதான் நண்பர்கள் ஆனோம்…” என்றவனின் குரலில் சிரிப்பிருந்தது.
சனாவுக்கோ இவன் ‘நாம் நண்பர்கள் தானா..’ என்று அப்போது கேட்டதற்கு அமைதியாக இருந்தது தப்போ என்று இப்போது தோன்றியது.
“ஓ.. அப்படியா?” என்று கேட்ட அந்த அலினா, சனாவின் அருகே வந்து, “ஹாய்..! நான் அலினா. உன் நண்பனின் பள்ளித்தோழி. உன் பெயர் என்ன..?” என்று நட்போடு கைநீட்டிக் கேட்டாள்.
சட்டென்று அவள் வந்து கதைத்ததில் சற்றுத் தடுமாற்றமாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாது தானும் கையை நீட்டிக் கை குலுக்கியபடி,
“என் பெயர் லட்சனா…” என்றாள் அளவான புன்னகையோடு.
“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள்.
இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு.
“சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வருகிறேன்…” என்றுவிட்டுக் கிளம்பினாள் அலினா.
அவள் சென்றதும், “நேரமாகிவிட்டது. வருகிறேன்..” என்று அவன் முகம் பார்க்காமலேயே சொல்லிவிட்டு நகரத் தொடங்கியவளின் முகத்தைப் பார்த்தான் சூர்யா.
அதிலிருந்த மாற்றத்தைக் கவனித்தவன், “உனக்கு என்னதான் பிரச்சினை லட்சனா..?” என்று நேரடியாகக் கேட்டான்.
அவர்கள் இரண்டு முறைதான் சந்தித்து இருக்கிறார்கள். ஆனாலும், அவளும் தமிழ்ப் பெண் என்பதாலும், அவளின் செய்கைகள் ஏனோ அவனுக்குப் பிடிப்பதாலுமே அவளோடு உரையாடுவதில் ஆர்வம் காட்டினான் அவன்.
அதேபோல அவனோடு கதைப்பதில் அவளுக்கும் ஆர்வம் இருப்பதையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் நன்றாகக் கதைத்துக் கொண்டிருப்பவள் திடீரென்று முகத்தைத் திருப்புவதும், முறைப்பதும், கோபமாக எதையாவது சொல்வதும் என்று திடீர் திடீரென்று அவளின் இயல்பு மாறுவது ஏன் என்று அவனுக்குப் புரியவே இல்லை. அதை நேராகவே கேட்டான்.
அவளுக்குத்தான் அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்ல முடியவில்லை. “எனக்கு என்ன.. ஒரு பிரச்சினையும் இல்லை…” என்றாள் அவனின் முகம் பாராது.
“என் முகத்தைப் பார்த்துக் கதை லட்சனா. நான் பெயரைச் சொல்லவில்லை என்று கோபமா? என் முழுப்பெயர் சூர்யபிரகாஷ்..” என்றான் சூர்யா. அவனுக்குத் தெரிந்து வேறு எந்தப் பிரச்சினையும் அவர்களுக்குள் இருப்பதாகத் தோன்றவில்லை.
அழகான பெயர் என்று மனதில் தோன்றியபோதும், “உங்கள் மேல் எனக்கொரு கோபமும் இல்லை….” என்றாள் வெளியே.
“பிறகு எதற்கு இவ்வளவு நேரமும் என்னோடு நன்றாகக் கதைத்துக் கொண்டிருந்தவள் இப்போது கிளம்புகிறாய்..?”
“நாள் முழுக்க ஒரு அந்நியரோடு கதைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான் வீட்டுக்குப் போகவேண்டாமா..?” குரலில் கொஞ்சம் சூடு ஏறியிருந்ததோ அவளுக்கு..
நண்பர்கள் என்று ஆனபிறகும் அந்நியன் என்கிறாள்.
அவளையே சிலநொடிகள் கூர்ந்தான் சூர்யா. அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
அந்தச் செய்கையே அவள் மனதில் வேறு என்னவோ இருக்கிறது என்பதை உணர்த்த, என்னவென்று புரியாது அவனுடைய வழமையான செயலாக தோள்களைக் குலுக்கினான் சூர்யா.