இதயத் துடிப்பாய்க் காதல் 27 – 1

காருக்குள் அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வையும் சனாவையே தொடர்ந்தது. ஒருவனின் பார்வை காதலுடன் என்றால், மற்றவனின் பார்வை சிந்தனையோடு தொடர்ந்தது. அவளும் இவர்களை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

அவள் பார்வையிலிருந்து மறைந்ததும், ஜெயனின் புறம் திரும்பி, “எங்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டான் சூர்யா.

அவன் எதைக் குறித்துக் கேட்கிறான் என்று புரிந்தபோதும், “உங்களைப் பற்றி என்றால்..?” என்று கேட்டான் ஜெயன்.

“நானும் சனாவும் ஒருவரை ஒருவர் விரும்புவது உனக்கு.. சாரி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான் சூர்யா. தொடர்ந்து, “முதலில் நாமிருவரும் இந்த ‘ங்க’வை விட்டுவிடுவோம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயதாகத்தான் இருக்கும்..” என்றான்.

இவன் இப்போது என்னிடம் அனுமதி கேட்கிறானா அல்லது அறிவிக்கிறானா என்கிற சந்தேகம் எழுந்தது ஜெயனுக்கு. அதைக் காட்டிக்கொள்ளாமல், சம்மதமாகத் தலையை அசைத்து, “ம்.. தெரியும்.” என்றான் சுருக்கமாக.

“உன்னிடம் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டிருந்தவள், எப்படிச் சொன்னாள்?” என்று சிறு வியப்போடு சூர்யா கேட்க, அவள் சொன்ன சூழ்நிலை கண்ணிலாட, உண்டான எரிச்சலில், “வாயால்தான்..” என்றான் ஜெயன் இடக்காக. அவனுக்கு ஏனோ ஒரு புது நபரோடு பழகும் இலகுத் தன்மையோடு சூர்யாவோடு பழக முடியவில்லை.

அந்த இடக்கைச் சாதரணமாக எடுத்த சூர்யா, “மற்றவர்கள் என்ன மூக்காலா சொல்வார்கள்?” என்று விளையாட்டாகப் பதில் சொன்னான்.

“நானும் உன்னோடு அதைப் பற்றிக் கதைக்கத்தான், சனாவை அனுப்பினேன். பெரியவர்கள் அவளை உனக்கு நிச்சயித்து இருந்தார்கள் என்று சொன்னாள். ஆனால் அவளுக்கு உன்னிடம் அப்படியான விருப்பம் எதுவும் இல்லை ஜெயன்.” என்று சூர்யா சொன்னபோது, எவ்வளவுதான் மனதைத் தேற்றி வைத்திருந்தபோதும் ஜெயனுக்கு வலித்தது.

“அவளைப் பொறுத்தவரை, நீ நல்லதொரு நண்பன். நம்மைப் பற்றி நீ இங்கு வந்ததும் சொல்வதாகச் சொன்னாள். அதேபோல சொல்லியும் இருக்கிறாள். அதற்கு முதலே அவள் உன்னிடம் சொல்லாமல் விட்டதற்கு, அவளை மன்னித்துவிடு. அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்றான் சூர்யா.
அதைக் கேட்டபோது, மெல்லிய பொறாமை உணர்வொன்று ஜெயனைத் தாக்கியது. அவளுக்காக இவன் மன்னிப்புக் கேட்பதும், தனிமையில் சூர்யாவை எவ்வளவு திட்டினாலும், தன் முன்னால் விட்டுக் கொடுக்காமல் நடந்த சனாவின் செயலும், பிரிவொன்று வந்திருந்த போதிலும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையே உணர்த்தியது!

“எதற்கும் கொஞ்சம் தயங்கும் குணம் அவளுக்கு. அதோடு பெற்றவர்களையும் இழந்தது அவள் மனதுக்கு பெரும் அடி. இதில் நான் வேறு..” என்ற சூர்யா, “இனி அவளை மிக மிக சந்தோசமாக வைத்திருக்கவேண்டும்.” என்றான், தனக்குத் தானே சொல்வது போல்.

உண்மையான காதலனாக, அக்கறையோடு அவன் பேசியது இவனுக்கு கோபத்தைக் கிளப்பியது. இவ்வளவு அக்கறை இருக்கிறவன் தான் அன்று விட்டுவிட்டுப் போனானா? சனாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து அவள் நன்றாக வாழவேண்டும் என்கிற விருப்பம் நிறையவே இருந்தாலும், ஜெயனால் சூர்யாவை முழுதாக மன்னிக்க முடியவில்லை.

லட்சனாவின் காதலனாக சூர்யாவை ஏற்றுக் கொள்ள முடிந்தபோதும், அவள் பட்ட கஷ்டத்துக்கு அவனே காரணம் என்று நினைத்தவனுக்கு கோபம் உள்ளுக்குள்ளே கனன்றுகொண்டே இருந்ததில், “அதுதான், போதும் போதும் என்கிற அளவுக்கு அவளை அழ வைத்துவிட்டாயே..!” என்றான், மனதில் இருந்த ஆத்திரம் குரலில் தொனிக்க.

தான் செய்தது பிழை என்பதை உணர்ந்திருந்த சூர்யாவுக்கு, அவன் பேச்சு கோபத்தை வரவழைக்கவில்லை.

ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, “ம்.. அவளையும் வருத்தி, என்னையும் வருத்தி நான் செய்த முட்டாள் வேலை அது..” என்றான், குரலில் நிஜமான வருத்தம் தொனிக்க.

அதை உணரமுடிந்தாலும், அன்று சனாவின் நிலையை எண்ணியதும் ஜெயனின் முகம் இறுகியது. “எது.. நீ அவளைக் காதலித்ததைச் சொல்கிறாயா?” என்று கேட்டவனின் குரலில், குத்தலும் கோபமும் சரிசமமாய்க் கலந்திருந்தது.

ஜெயனின் பேச்சில் இருந்த பேதத்தை அப்போதுதான் உணர்ந்தவனுக்கு, தொடக்கத்தில் இருந்தே அவன் குத்தலும் கோபமுமாகவே தான் கதைக்கிறான் என்பது புரிந்தது. சட்டென்று திரும்பி ஜெயனைப் பார்த்தான். ஜெயனும் தளராது அந்தப் பார்வையைத் தாங்கி நின்றான்.

“உனக்கு என்ன கோபம் என்னிடம்? சனாவை நான் விரும்புவதாலா?” என்று புருவங்கள் சுருங்கக் கேட்டான் சூர்யா.

“அதுசரி! எப்போதும் முட்டாள் தனமாக ஒரு முடிவை எடுப்பதில் நீ வல்லவனாச்சே!” என்றான் ஜெயன், அப்போதும் குறையாத ஏளனத்தோடு.

“அப்போ உனக்கு என்மீது கோபம் இல்லை என்கிறாயா?”

“நிச்சயமாக இருக்கிறது!”

சூர்யாவுக்குத் தெரிந்து, ஜெயனுக்கும் அவனுக்கும் இடையில் சனாவை அவன் விரும்புவதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையுமே இல்லை. அதனால் கோபம் இல்லை என்றும் ஜெயன் சொல்லிவிட்டான். பிறகு வேறு எதனால் கோபமாக இருக்கிறான் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“நீ சொல்வதன் அர்த்தம் புரியவில்லை” என்றான் சூர்யா.

“ஏன் புரியாமல்? நீ சனாவைக் காதலித்த அழகைச் சொல்கிறேன்..” என்றான் ஜெயன் அலட்சியமாக.

தாடை இறுக, “ஜெயன்!” என்று அதட்டினான் சூர்யா எச்சரிக்கும் விதமாக. எந்த அலட்டலும் இன்றி அவனையே பார்த்தான் ஜெயன்.

ஒருமுறை கண்களை இறுக மூடித்திறந்தான் சூர்யா. “எதற்கு இப்படி எல்லாம் கதைக்கிறாய் ஜெயன்? என் காதலில் என்ன குறை கண்டாய்?” என்று, முடிந்தவரை நிதானமாகக் கேட்டான்.

“உனக்குப் பிடிக்கும் வரை காதலிப்பதும், பிடிக்கவில்லை என்றதும் பிரிவைச் சொல்வதும் குறையில்லாமல் வேறென்ன?”

“எல்லாம் தெரிந்தவன் போல் பேசாதே!” என்றவன் தொடர்ந்தான்.

“வாழ்க்கையை பிராக்டிக்கலாக பார்த்துப் பழகியவன் நான். உள்ளத்தில் அன்பு இருந்தாலும், அந்த அன்பு மட்டுமே குடும்பம் நடத்தப் போதாது. இருவருக்குள்ளும் புரிந்துணர்வு வேண்டும். அது எங்களுக்குள் இல்லாத மாதிரிப் பட்டது. எதிலும் முரண்பாடு. அதனால்தான் பிரிவைச் சொன்னேன். முதலில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்துத்தான், அவளை மிகவும் பிடித்திருந்தும் பிரிந்து சென்றேன். ஆனால்.. பிரிந்தபிறகுதான், அவள் இல்லாமல் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது புரிந்தது.” என்ற சூர்யாவைத் திரும்பிப் பார்த்தான் ஜெயன்.

“எல்லாம் சரிதான். ஆனால், நீ ஒன்றை மறந்துவிட்டாய். இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பாய்..?” என்று நிதானமாகக் கேட்டான் ஜெயன்.

அந்தக் கேள்வியில் இருந்த உண்மை சூர்யாவைச் சுட்டது. அந்தக் கோணத்தில் சிந்தித்தே இராதவன் அதிர்ந்துபோய் ஜெயனைப் பார்த்தான்.

அதுவும் சில நொடிகள் தான். “இல்லை! நிச்சயமாக இல்லை! என் லட்டு என்னைத் தவிர இன்னொருவனை நிச்சயமாக் ஏற்றுக்கொள்ள மாட்டாள்!” என்றான் உறுதியான குரலில். ஜெயனுடனான திருமணத்துக்கு அவனே வாழ்த்துச் சொல்லிவிட்டுப் பிரிந்தபோதும், அவனை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பவள் என்று எண்ணியவனின் உள்ளம் கர்வம் கொண்டது.

“சரி. நீ சொல்வது போல அவளால் இன்னொரு திருமணம் செய்யமுடியாது என்றே இருக்கட்டும். ஆனால், உன் பிரிவைத் தாங்க முடியாமல் அவள் வேறு ஏதும் முடிவு எடுத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான் ஜெயன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock