அந்தக் கேள்வியின் பொருள் புரியாமல், “வேறு முடிவு என்றால்.. எதைச் சொல்கிறாய்..?” என்று கேட்டான் சூர்யா.
அவன் முகத்தையே ஊன்றிப் பார்த்தபடி, “உயிரை விடத் துணிந்திருந்தால்…” என்றவனைச் சொல்லி முடிக்க விடாது, “வாயை மூடு முட்டாள்!” என்று, தன் கட்டுப்பாட்டை இழந்து உறுமினான் சூர்யா.
எந்த மாற்றமும் இன்றி, சூர்யாவையே பாத்திருந்தான் ஜெயன்.
அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு, “சனா அப்படியெல்லாம் செய்யமாட்டாள். எனக்குத் தெரியும்..” என்றான் சூர்யா இறுகிய குரலில்.
“நீ அவளைப் புரிந்துகொண்ட லட்சணம் நன்றாக இருக்கிறது..” இளக்காரமாகச் சொன்னான் ஜெயன்.
“நான் நன்றாகத்தான் அவளைப் புரிந்து வைத்திருக்கிறேன். நீ உளறுவதை நிறுத்து!” கடினப்பட்ட குரலில் சொன்னான் சூர்யா.
ஏளனமாக உதடு வளைய, “உண்மை உளறலாகப் படுகிறதோ?” என்று கேட்டான் ஜெயன்.
சூர்யாவுக்கு அதைப் புரிந்துகொள்ளவே சில நொடிகள் தேவைப் பட்டது. “என்ன உண்மை? அப்படி எதுவும் இருக்காது..” என்றவனின் குரல் அவனையும் மீறி நடுங்கியது.
அவள் உயிருடன்தான் இப்போது இருக்கிறாள் என்பதே அவனுக்கு மறந்துபோனது. ஜெயன் சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், தவிப்போடு ஜெயனைப் பார்த்தான்.
அவன் விழிகளில் பரிதவிப்பு, வேதனை, வலி என்று அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தன. அதைப் பார்த்த ஜெயனுக்கே ஒருமாதிரி ஆகிப்போனது.
“அவளைப் பற்றி யோசியாது, நீ உனக்குச் சரி என்று பட்டதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டாய். அவளோ உன் பிரிவைத் தாங்க முடியாமல், நீ சொன்னவைகளை நம்ப முடியாமல் வாழ்க்கையே வேண்டாம் என்று விரக்தியில் முடிவெடுத்து, காருக்கு முன்னால் பாய்ந்துவிட்டாள்.” என்று ஒருவித மரத்த குரலில் சொன்னான்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் உடல் இறுகியது. இறுகிய தாடையும், அழுந்திய உதடுகளுமாக தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போராடிக்கொண்டிருந்தான் சூர்யா.
“கொழும்பில் பெற்றவர்களை இழந்து, பித்துப் பிடித்தவள் போல் கிடந்தவளை மனுஷியாக்கி இங்கே அனுப்பி வைத்தேன். நீயானால் காதல் என்கிற பெயரில் மீண்டும் அவள் உயிரைப் பறிக்கப் பார்த்தாய்!” என்று கொதித்தவன், “காதலித்தவளின் மனதைப் புரிந்து கொள்ளாமல், காதல் என்கிற பெயரில் எதைக் கிழித்தாய் நீ?” என்று சீறினான். எவ்வளவு முயன்றும் அவனால் தன் கோபத்தைக் குறைக்க முடியவில்லை.
ஜெயனின் பேச்சால் இப்போது சூர்யாவுக்குக் கோபம் வரவே இல்லை.
மனதைப் பிளந்து கொண்டிருந்த வலியில், காருக்குள்ளே மூச்சடைப்பது போன்று இருக்கவே, காரைத் திறந்துகொண்டு இறங்கியவனின் இதயமோ தன் ஜோடிப்புறா அனுபவித்த வேதனைகளை எண்ணி வெந்துகொண்டிருந்தது.
அவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவற்ற அன்பை அறிவான்தான். ஆனால், அந்த அன்பே அவளின் உயிரையே பறிக்கும் அளவுக்குத் தூண்டும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டான். தப்பித்தவறி அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்… நினைக்கவே முடியவில்லை. நெஞ்சு நடுங்கியது. அவன் கைகள் தடுமாற்றத்தோடு ஜீன்ஸ் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியைத் தேடி அலைந்தது.
வேகமாக எடுத்தவன் ஒன்றைத் தீமூட்டி உதட்டில் வைத்தான். இருளை வெறித்தபடி புகைத்து முடித்தவன் இன்னொன்றையும் எடுத்து, முன்னதிலேயே தீமூட்டினான். அதுவும் மிக வேகமாகச் சாம்பலாகிக் கொண்டிருந்தது.
தானும் காரிலிருந்து இறங்கி அதுவரை அவனையே பாத்திருந்த ஜெயனுக்கு, சூர்யாவின் இந்தத் துடிப்பு அவனே எதிர்பாராதது! அவன் மீது ஒருவித பரிதாபம் கூடத் தோன்றியது.
அவன் பதட்டத்தைக் குறைக்க எண்ணி, “நீ மட்டும் புகைக்கிறாயே? எனக்கு ஒன்று தரமாட்டாயா? அந்தளவுக்குக் கஞ்சனா நீ..?” என்று இலகுவாகப் பேச முயன்றான் ஜெயன்.
புகையை இழுத்து விட்டபடியே அவனைத் திரும்பிப் பார்த்தவனின் மற்றக் கை தன் பாட்டுக்கு சிகரெட் பெட்டியை ஜெயன் பக்கமாக நீட்டியது.
அந்தப் பெட்டியிலிருந்து ஒன்றை எடுப்பதற்காக ஜெயன் கையை நீட்ட, சிகரெட் பெட்டியை மீண்டும் இழுத்துக்கொண்ட சூர்யா, “இல்லை. தரமாட்டேன்.” என்றான் ஜெயனிடம்.
அந்தச் செயல் சிறுபிள்ளைத் தனமாகப் பட, “ஏன்?” என்று கேட்ட ஜெயனின் குரலில் வியப்பிருந்தது.
“சனாவுக்குப் பிடிக்காது..”
“எனக்குத் தருவது அவளுக்குப் பிடிக்காதா?” என்று கேட்டவனின் குரலில் இன்னும் வியப்பிருந்தது.
“ம்.. ஒருநாள் சிவாண்ணாவுக்கு சிகரெட் கொடுத்தேன் என்று என்னைத் திட்டிவிட்டாள்.”
அதைக் கேட்டதும் ஜெயனுக்குச் சிரிப்பாக இருந்தது. காதல் ஒரு மனிதரை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நினைத்தவன், “சரி. ஆனால் இப்போது அவள்தான் இங்கில்லையே..” என்றான்.
“அவள் இல்லாவிட்டாலும், அவளுக்குப் பிடிக்காததைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை..” என்றான் சூர்யா.
“ஓ..” என்று அளவுக்கு அதிகமாகவே இழுத்தவன், “நீ புகைப்பது மட்டும் அவளுக்கு மிக மிகப் பிடிக்குமோ..?” என்று கேட்டான் கேலியாக.
அப்போதுதான் அதையே உணர்ந்தவன் போல் எரிந்துகொண்டிருந்த சிகரெட்டை ஒருதடவை பார்த்துவிட்டு, அதைச் சுண்டி எறிந்தான் சூர்யா.
ஜெயன் புறமாகத் திரும்பி, “சரி. நீ கிளம்பு. நாளை சந்திக்கலாம்..” என்றுவிட்டுக் காரில் ஏறத் தொடங்கியவன், திரும்ப வேகமாக ஜெயனுக்கு அருகே வந்து, அவனை ஆரத் தழுவிக்கொண்டான்.
அந்தத் தழுவலில் இருந்த இறுக்கத்தில் ஆச்சர்யத்தோடு ஜெயன் சூர்யாவைப் பார்க்க, “மிக்க நன்றிடா..” என்றான் உணர்ச்சி வசப்பட்ட குரலில்.
உரிமையாக அவன் போட்ட அந்த ‘டா’வில் தன் மனதில் உண்டான ஒருவித நட்புணர்வை உணர்ந்தபடி, “எதற்கு?” என்று கேட்டான் ஜெயன்.
“எல்லாவற்றுக்கும்…” என்று பொதுவாகச் சொன்னவன், “பாய்டா..!” என்றுவிட்டுக் காரில் ஏறினான்.
எல்லாவற்றிலும் அவன் காட்டும் வேகத்தை நினைத்து, மெல்லிய முறுவல் ஒன்று மலர்ந்தது ஜெயனின் முகத்தில். இதுவரை சூர்யாவின் மேல் இருந்த கோபம் கூட காணாமல் போனதுபோல் உணர்ந்தான். தான் அமர்ந்திருந்த பக்கத்தின் கதவைத் திறந்து, குனிந்து, “மெதுவாக ஓட்டு.. இருட்டு வேறு.” என்றான்.
“ம்ம்..” என்றபடி எடுத்தவனின் காரோ, ஜெயன் சொன்னதற்கு மாறாக வேகமாக அவன் கண்ணை விட்டு மறைந்தது.
…….
அடுத்த நாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் சனா. முதல் நாள் நடந்தவைகளை நினைத்து அன்று முழுவதுமே மனம் சஞ்சலப் பட்டுக்கொண்டிருந்தது அவளுக்கு.
அந்த சஞ்சலம் கொடுத்த சோர்வோடு வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள், அங்கிருந்தவர்களைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.
காரணம், அங்கே சூர்யாவின் தாத்தா பாட்டி முதல், அப்பா அம்மா, அண்ணா அண்ணி என்று சைந்து வரை அவனது மொத்தக் குடும்பமுமே வீற்றிருந்தது. அவர்களோடு சிவபாலன் மற்றும் ஜெயபாலனும் அமர்ந்திருந்தார்கள்.
‘கடவுளே.. சொன்னதுபோல் வந்துவிட்டானே. எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா.. ஐயோ அக்கா அத்தான் என்ன நினைப்பார்கள்…’ என்று உள்ளம் நடுங்க, அவள் விழிகள் வேகமாக சிவபாலனையும் சுலோவையும் தேடிச் சுழன்றது.
சுழன்ற விழிகள் சிவபாலனைக் கண்டதும் பயத்தோடு அவரைப் பார்க்க, அவரோ இலகுவாகப் புன்னகைத்து, “என்ன சனா, அப்படியே நிற்கிறாய். தாத்தா பாட்டியை உனக்கு முதலே தெரியும் தானே..” என்றவரின் பேச்சு, அவர்களை வா என்று சொல் என்று மறைமுகமாக உணர்த்தியது.
இன்னும் ஒன்றும் சொல்லவில்லை போலும் என்று ஒரு நொடி ஆறுதலடைந்த அவள் மனது, சொல்லத்தானே எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தவுடன் மீண்டும் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.
ஆனாலும் சிரமப்பட்டு, “வா..வாருங்கள்..” என்றவளுக்கு, அந்த ஒரு சொல்லைச் சொல்லவே பெரும் கஷ்டமாக இருந்தது.
“எப்படி இருக்கிறாய் லச்சும்மா?” என்று கேட்ட பாட்டியின் பாசமான குரலைக் கேட்டுக் கூட அவளுக்கு உதறியது.