உள்ளே அடைத்துவிட்ட குரலை வெகு சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து, “நான்.. நான் நன்றாக இருக்கிறேன் பாட்டி.…” என்றாள் தடுமாற்றத்தோடு.
மற்றவர்களின் பார்வை அவளை ஆராய்கிறதோ? துளைக்கிறதோ? அங்கே நிற்க முடியாமல் தடுமாறினாள்.
அதற்குள் அவளை நெருங்கிவிட்ட பாட்டி, நெகிழ்ந்துவிட்ட குரலில், “என் கண்ணே..” என்றழைத்து, பனித்துவிட்ட கண்களால் பாசத்தோடு நோக்கி, கைகளால் அவள் கன்னங்களைத் தாங்கி, அவள் உச்சியில் இதழ் பதித்தார். ஏனோ அவளுக்கும் கண்ணைக் கரித்தது.
“சோர்வாகத் தெரிகிறாயே. போ.. போய் முகம் கழுவிக்கொண்டு வா.” என்று அவளின் நிலை அறிந்தோ என்னவோ பாட்டி சொல்ல, விட்டால் போதும் என்று உள்ளே விரைந்தாள் சனா.
தன்னுடைய அறைக்குள் புகுந்தவளுக்கு, இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. அந்தக் குளிரிலும் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியது.
அக்காவைக் காணவில்லையே என்று எண்ணியவள், நெஞ்சு படபடக்க, சமையலறைக்கு விரைந்தாள். அங்கே குளிருக்கு இதமாக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள் சுலோ. இவளைக் கண்டதும், “வந்துவிட்டாயா சனா..” என்றவள், தலையசைத்து அவளை அருகே அழைத்தாள்.
கைகால்கள் உதற அருகே சென்றவளின் காதருகே குனிந்து, “மொத்தக் குடும்பமுமே சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறார்கள். என்னவென்றே தெரியவில்லை..” என்று ரகசியம் பேசினாள்.
அது தெரிந்தால் என்ன நினைப்பார்களோ என்று நெஞ்சு பதற, “அக்கா.. அது..” என்று இழுத்தவளிடம், “நீ போய் முகத்தை நன்றாகக் கழுவி, நல்ல உடுப்பாக ஒன்றைப் போட்டுக்கொண்டு வா. போ.. அதற்குள் நான் இந்தக் கேக்கையும் வெட்டி தேநீரையும் ஊற்றி முடிக்கிறேன்..” என்று தங்கையை ஏவினாள் சுலோ.
அதற்கு மேல் எதையும் சொல்லத் தைரியம் இன்றி அறைக்குச் சென்றவள், தமக்கை சொன்னது போலவே முகம் கழுவி, எதை அணிவது என்று தடுமாறி, பகட்டாகவும் இல்லாமல் வெகு சாதரணமாகவும் தோன்றாமல் இருக்க, கரும் பச்சை நிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட முழு நீளப் பாவாடையும், அதற்குத் தோதாத ‘வி’ வடிவக் கழுத்தில் கரும் பச்சை நிறத்தில் பட்டிபோன்று தைத்திருந்த, வெள்ளை நிறத்தில் ஆன முழுக்கை ‘ப்ளவுஸ்’ உம் அணிந்துகொண்டாள்.
தலைவாரிப் பொட்டு இட்டுக் கொண்டவளுக்கு வெளியே செல்லவே கால்கள் எழவில்லை. ஆனாலும் அக்கா காத்திருப்பாள் என்பதால், ஒருவித பயம் மனதை ஆட்ட மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்.
அவளை மேலிருந்து கீழாக அளவிட்ட சுலோவுக்குத் திருப்தியாக இருந்தது. “இந்தா இதை நீ பிடி..” என்று தேநீர் தட்டை தங்கையிடம் கொடுத்துவிட்டு, கேக் தட்டுடன் முன்னறைக்கு அவள் நடக்க, பலியாடு போன்று பின்னே நடந்தாள் சனா.
“எல்லோரும் .எடுத்துக்கொள்ளுங்கள்..” என்றபடி சுலோ கேக்கைக் கொடுக்க, இவள் ஒவ்வொருவருக்கும் தேநீரை நீட்டினாள். கப்பை எடுக்கையில் எல்லோரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்ததில் ஓரளவுக்கு ஆறுதலாக உணர்ந்தாள்.
சூர்யாவுக்கு நீட்டுகையில், அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது என்று எவ்வளவு முயன்றும் முடியாமல், விழிகள் அவனைப் பார்த்துவிட, அவனது ஒரு கை கப்பை எடுத்துக்கொண்டிருந்தாலும், உதடுகள் “ஷூல்டிகுங்(சாரி)” என்று மெதுவாக அசைந்தது, மற்றவர்களுக்குத் தெரியாத வகையில்.
ஏன் மன்னிப்புக் கேட்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு!
அதுவும் அவன் விழிகளில் இருந்த பரிதவிப்பும் யாசிப்பும் என்னவோ செய்ய, குழப்பமும் கேள்வியுமாக அவனைப் பார்த்தாள். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது, அவனிடமிருந்து நகர்ந்து, அவனுக்கு அருகில் இருந்த ஜெயனுக்கும் கொடுத்துவிட்டு, வெறும் தட்டை மேசையில் வைத்தவள் அங்கிருந்து அகன்றாள்.
மனமோ குழம்பித் தவித்தது. ஒருவித பதட்டம், பயம், படபடப்பு என்று உள்ளே என்னவோ செய்தது. அக்கா அத்தானை நினைக்கையில் அழுகை வரும்போல் இருந்தது.
தன்னறைக்குள் சென்றவள், வாசலுக்கு அருகேயே, அவர்கள் பேசினால் தனக்குக் கேட்கும் வகையில் நின்றுகொண்டாள்.
“உன் தம்பிக்கு விசா எல்லாம் கிடைத்துவிட்டதா சிவா?” என்று சூர்யாவின் அப்பா, தேநீரைப் பருகிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.
“ஆமாம் அண்ணா. ஒரு வருட விசா தந்திருக்கிறார்கள். வேலைக்கும் போகிறான்..” என்றார் சிவபாலன்.
“பிறகு என்ன.. அம்மா அப்பாவையும் இருவருமாகச் சேர்ந்து கூப்பிட்டு விட்டீர்கள் என்றால், எல்லோரும் ஒன்றாக இருக்கலாம்..” என்றார் தாத்தா வைரவேலன்.
“அப்படித்தான் எங்கள் எண்ணமும் தாத்தா. அவர்களைக் கூப்பிட இன்னுமொரு ஆறுமாதம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஜெயனின் திருமணமும் தள்ளிக்கொண்டே போகிறது..” என்றவர், “மூன்றரை வருடங்களுக்கு முதலே நடந்திருக்க வேண்டியது..” என்பதையும் சேர்த்துச் சொன்னார்.
உள்ளே அதைக் கேட்டுக் கொண்டிருந்த சனாவுக்கு உதறல் எடுத்தது என்றால், சூர்யாவோ தாத்தாவோடு கண்ணால் எதையோ பேசினான்.
“நாங்களும் திருமண விஷயம் கதைக்கத்தான் வந்திருக்கிறோம்.” என்றார் வைரவேலன்.
‘அதற்கு எதற்கு எங்கள் வீட்டுக்கு வந்திருகிறார்கள்..’ என்கிற கேள்வி மனதில் தோன்றினாலும், அதை வாய்விட்டுக் கேட்பது நாகரிகம் இல்லை என்பதால், கேள்வியாக அவரை நோக்கினார் சிவபாலன்.
“உன் மச்சாளை(மனைவியின் தங்கை-நாத்தனார்) எங்கள் சூர்யாவுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறோம்..” என்று விசயத்தைப் போட்டு உடைத்தார் தாத்தா.
கணவன் அருகில் அமர்ந்திருந்த சுலோ, “என்னது?” என்று அதிர்ந்துபோய் எழுந்தே விட்டாள். அவள் இதைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.
சிவபாலனுக்குமே அது அதிர்ச்சிதான் என்றாலும், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், மனைவியின் கையைப் பிடித்து மீண்டும் அவளை இருத்திக்கொண்டே, “நீங்கள் சொன்னதை எதிர்பாராததால் அதிர்ந்துவிட்டாள்..” என்றார் மற்றவர்களைப் பார்த்து.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சனாவுக்கு வெளிப்படையாகவே கைகால்கள் நடுங்கியது. சிவபாலனின் குடும்பத்தில், தாத்தா சொன்னதைக் கேட்டு எந்தவித அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையாமல் இருந்த ஒருவன் என்றால், அது ஜெயன் மட்டுமே!
அவனுமே சூர்யாவின் வேகத்தைப் பார்த்து உள்ளுக்குள் மீண்டும் வியந்துகொண்டான்.
“நாங்களும் சொல்லாமல் வந்தது பிழைதான் சிவா. ஆனால் எங்கே..” என்ற தாத்தாவின் பார்வை பேரனைத் தொட்டு மீண்டது.
தாத்தாவின் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக, “அது பரவாயில்லை தாத்தா. ஆனால், சனாவை ஜெயனுக்கு என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.” என்றார் சிவபாலன்.
“சரிதானப்பா. ஆனால், லட்சனாவுக்கு சூர்யாவைத் தானே பிடித்திருகிறது..” என்றார் வைரவேலன்.
“இல்லை தாத்தா. நீங்கள் எதையோ பிழையாக புரிந்துகொண்டு கதைக்கிறீர்கள்..” என்றாள் சுலோ அவசரமாக.
அவளுக்கு என்னவோ வைரவேலனின் பேச்சு ஜெயனை அவமானப் படுத்துவது போன்று தோன்றியது. அவளின் அன்புக் கணவனின் தம்பியை ஒருவர் ஒன்று சொல்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“சுலோக்கா, நானும் சனாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். இதை அவளே உங்களிடம் சொல்வதாகத்தான் சொன்னாள். நான்தான் அவசரப்பட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்தேன்..” என்று இப்போது இடைபுகுந்தான் சூர்யா. அப்போதும் எல்லோர் முன்னிலையிலும் தன் காதலைச் சொன்னவன், சனாவையும் விட்டுக் கொடுக்கவில்லை.
அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சிவபாலனும் சுலோவும், ஒரே நேரத்தில் ஜெயனை திரும்பிப் பார்த்தனர்.
அவனும் அவர்களைத்தான் பாத்திருந்தான். அவனிடம் தெரிந்த நிதானம் அவர்களைக் குழப்பியது.
என்ன சொல்வது என்றே தெரியாமல் அவர்கள் திகைக்க, “சின்னப்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். பெரியவர்கள் நாம் அவர்களைச் சேர்த்துவைப்போமே சிவா..” என்றார் தாத்தா.