“அதில்லை தாத்தா. என் தம்பிக்கு..” என்று சிவபாலன் ஆரம்பிக்க, “அண்ணா.. சனாவை சூர்யாவுக்கே கட்டிக்கொடுக்கலாம்..” என்று இப்போது இடைபுகுந்தான் ஜெயன்.
“என்னடா நீ..” என்ற தமையனைப் பேசவிடாது, “என்னோடு கொஞ்சம் உள்ளே வாருங்கள் அண்ணா..” என்றபடி, இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான் ஜெயன்.
வந்திருப்பவர்களை விட்டுவிட்டு எப்படி உள்ளே போவது என்று சிவபாலன் தயங்க, “நீ போய்க் கதைத்துவிட்டு வா சிவா. நாங்கள் இருக்கிறோம்.” என்றார் தாத்தா.
சிவபாலன் எழுந்துகொள்ள, “அண்ணி, நீங்களும் வாருங்கள்..” என்றான் ஜெயன்.
மூவருமாக ஜெயனின் அறைக்குள் சென்றதும், கதவை அடைத்த சுலோ, “என்ன ஜெயன் நீ? அவர்கள் தான் என்னென்னவோ சொல்கிறார்கள் என்றால் நீயும் உளறுகிறாய்..” என்றாள் கோபத்தோடு. இன்னும் அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.
“இல்லை அண்ணி. நான் எதையும் உளறவில்லை. சூர்யாவும் சனாவும் விரும்புவது உண்மை.” என்று ஜெயன் சொன்னபோது, “நம் சனாவா? இருக்காது ஜெயன். அப்படி ஏதும் என்றால் என்னிடம் சொல்லியிருப்பாளே..” என்றாள், சுலோ மீண்டும், அதை நம்பமுடியாமல்.
“அவள் சொல்வதாகத்தான் இருந்தாள் அண்ணி. அதற்குள் இவர்கள் வந்துவிட்டார்கள்.” என்றான் ஜெயன் சமாளிப்பாக.
“ஆனால், அவளின் சம்மதமும் கேட்டுத் தானேடா உனக்கு நிச்சயித்தார்கள்..” என்றார் சிவபாலன். அவருக்குமே இந்த விஷயத்தை நம்புவது சற்றுச் சிரமமாக இருந்தது.
“நிச்சயித்தால் என்ன அண்ணா. ஒவ்வொருவரின் மனமும் நிச்சயிக்க வேண்டாமா எனக்கு அவன்தான். அல்லது அவள்தான் என்று. சனாவின் மனது சூர்யாவை தன்னவனாக நிச்சயித்திருகிறது.” என்றான் ஜெயன், எந்த உணர்ச்சியும் இல்லாத குரலில்.
அதை உள்வாங்கிக் கொள்ள அந்தக் கணவன் மனைவி இருவருக்குமே சற்று நேரம் தேவைப் பட்டது போலும். அமைதியாக சில நொடிகள் கழிய, ஜெயனின் புறம் திரும்பிய சிவபாலனின் விழிகள் கூர்மையோடு அவனில் நிலைத்தது.
“உன் முடிவு என்ன ஜெயன்?” என்று கேட்டவரின் பார்வை, விழி வழியே அவன் இதயத்தையே அலசியது.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், முகத்தைத் திருப்பியபடி, “இப்போது என் முடிவு முக்கியம் இல்லை அண்ணா..” என்றான் ஜெயன்.
“உன் முடிவுதான்டா முக்கியம்!” என்றார் அவர் அழுத்தமாக.
மீண்டும் ஒரு சிறு அமைதி. “ஒருவரை ஒருவர் விரும்பும் இருவர் இணைவதுதான் அண்ணா முறை.” என்றான் ஜெயன் விருப்பு வெறுப்பு அற்ற குரலில்.
“நீ அவளை விரும்பவில்லையா?” கூர்மையோடு அவர் கேட்க, “அண்ணா, ப்ளீஸ். இப்போது எதற்கு தேவை இல்லாததுகளைப் பேசுகிறீர்கள். காதலிப்பவர்களைச் சேர்த்து வையுங்கள்.” என்றான் அவன்.
“என்னடா நீ…” என்றார் சிவபாலன் சலித்த குரலில். அவரால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.
பிடிக்காமல் திருமணம் செய்யமுடியாது. அந்த வகையில் அவர்களுக்குச் சம்மதம் சொல்ல நினைத்தாலும், சனாவையே தன் வருங்கால மனைவியாக நினைத்த தன் தம்பியின் நிலை என்ன என்று நினைக்கையில் அந்த சம்மதத்தை வழங்கவும் பிடிக்கவில்லை.
சுலோவோ என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள். தங்கையின் மனதுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையவேண்டும் என்பதுதான் அவளது விருப்பமும்! ஆனால், அந்தத் தங்கைக்குப் பிடித்தவன் அவர்கள் எதிர்பார்த்த நபராக இல்லாமல் போனதில் மனம் சுணங்கியது.
“இந்தச் சனா இப்படிச் செய்வாள் என்று நான் நினைக்கவே இல்லை…” என்றாள் கலங்கிய குரலில்.
“விடு சுலோ. நினைப்பது மட்டுமே எப்போதும் நடந்து விடுவதில்லை.” என்று மனைவியைத் தட்டிக் கொடுத்தார் சிவபாலன்.
“ஆனால் அவள் என்னிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லையே..” என்றவளின் விழிகள் கலங்கியது. தாயைப்போல் அவளைப் பார்த்துக் கொள்கிறோம் என்று நினைத்து மகிழ்ந்ததெல்லாம் பொய்யா? அவளும் அப்படி நினைத்திருக்க, இதை என்னிடம் அல்லவா முதலில் சொல்லியிருப்பாள் என்று துடித்தது அவள் உள்ளம்.
“எப்படிச் சொல்வாள் அண்ணி. நீங்கள் அவளின் அக்கா என்றாலும் என் அண்ணாவின் மனைவி அல்லவா. அத்தானின் தம்பியை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால், நான் வந்ததும் என்னிடம் சொல்லிவிட்டாளே. பிறகு என்ன அண்ணி?” என்று ஜெயன் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க, அவர்கள் முன் வந்து நின்றாள் சனா.
தலை குனிந்து கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி நின்றவளின் கைகள் நடுங்கியது. அவள் அழுகிறாள் என்பதை நிலத்தில் விழுந்துகொண்டிருந்த கண்ணீர்த் துளிகள் காட்டிக் கொடுத்தது.
சிவபாலனின் முன்னே போய் நின்றவள், யாருமே எதிர்பாரா வகையில் அவர் காலடியில் விழுந்து, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அத்தான். எனக்கே தெரியாமல் நான் சூர்யாவை விரும்பிவிட்டேன். அதை உங்களிடம் சொல்ல எனக்குப் பயமாக இருந்தது.. நான் செய்தது பிழைதான். ஆனால்.. ஆனால்..” அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் அத்தான்.” என்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது.
ஜெயனுக்கே மனதைப் பிசைந்தது என்றால், சுலோ அழவே தொடங்கியிருந்தாள்.
அவளின் முகம் பாராத வரை ஒருவித கோபம் சிவபாலனின் மனதில் இருந்தது தான். அவளைப் பார்த்ததும், அதுவும் அவள் அழுவதைப் பார்த்ததுமே அந்தக் கோபம் மறைந்துவிட்டது என்றால், அவள் காலில் விழாவும் பதறியே போனார்.
“இதென்ன சனா.. எழுந்திரு.” என்றபடி, அவளின் தோள்களைப் பற்றி எழுப்பியவர், “என்னிடம் உனக்கு என்ன பயம்? அத்தான் எனக்கு இதுதான் வேண்டும் என்று எதையும் என்னிடம் உரிமையாகக் கேட்க வேண்டாமா? எனக்கு நம் சைந்துவும் நீயும் ஒன்றுதானே..” என்றவரின் விரல்கள் பாசத்தோடு அவள் கண்ணீரைத் துடைத்தன.
பெறாமலே மகவாகிப் போனவள் மீது பாசம் இல்லாமல் இருக்குமா என்ன?
அதில் உள்ளம் மகிழ, “அத்தான்..” என்று விசித்தவள், கண்களில் கண்ணீரோடு இதழ்களில் புன்னகையுமாக அருகில் வந்த தமக்கையின் தோளில் சாய்ந்துகொண்டாள் உரிமையோடு.
சட்டென்று நிமிர்ந்து தமக்கையைப் பார்த்து, “சாரிக்கா..” என்றவளின் விழிகள் கலங்க, சுலோவுக்கு மீண்டும் அழுகை வந்தது. அவளுக்கும் தங்கை மீது கோபம் இருந்ததுதான். ஆனால் இப்போது அதன் அடையாளம் கொஞ்சமும் இல்லை.
“நீ என்னிடம் சொல்லியிருக்கலாம்..” என்றவள், சனாவின் விழிகள் கலங்குவதைக் கண்டதும், “சரி விடு…” என்றபடி, தங்கையின் தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.
அந்த சூழ்நிலையை மாற்ற, “சரி சரி. அக்காவும் தங்கையும் பாசப் பயிரை பிறகு வளர்க்கலாம். இப்போது வாருங்கள் அங்கே போவோம். அவர்கள் நமக்காக் காத்திருக்கிறார்கள்..” என்றான் ஜெயன்.
அவன் குரலைக் கேட்டு அவன் புறமாகத் திரும்பிய சனா மீண்டும், “சாரி..” என்றாள், குற்ற உணர்வோடு.
ஜெயன் அவளை முறைத்தான். “இன்னும் யாரிடமெல்லாம் சாரி சொல்லப் போகிறாய்? அதுவும் என்னிடம் எத்தனை தடவைதான் சொல்வாய்..” என்று கடிந்தான்.
அவள் அமைதியாக நிற்க, “வாருங்கள் அண்ணா. விட்டால் இவள் இந்தச் சாரியைப் பாட்டாகவே பாடுவாள்..” என்று தமையனை அழைத்தான்.
அவனை ஒரு கூறிய பார்வையால் அளந்துவிட்டு, “வா..” என்றபடி ஓரடி நடந்தவர் நின்று, “இருவரும் முகத்தைக் கழுவுங்கள்.. அழுதது தெரிகிறது.” என்று, சகோதரிகளைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றார். அவரோடு ஜெயனும் முன்னறைக்குச் சென்றான்.
சுலோவும் சனாவும் முகம் கழுவிவிட்டு ஹாலுக்குச் சென்றபோது, அங்கிருந்த சந்தோசமான மனநிலையே சிவபாலன் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டார் என்று தெரிந்தது.
தயக்கத்தோடு சுலோவின் பின்னால் சனா பதுங்கிக் கொள்ள, அதைப் பார்த்துவிட்டு எழுந்துவந்த சூர்யாவின் தாய் மங்கை, அவளின் கையைப் பிடித்தபடி, “எதற்குத் தயங்குகிறாய். இனி நாங்கள் உன் சொந்தம். வா…” என்றபடி அழைத்துச் சென்று தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.
யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல், பார்க்க முடியாமல் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள் லட்சனா. சூர்யாவின் பார்வையோ ஒருவித எதிர்பார்ப்புடன் அடிக்கடி அவளைத் தழுவி மீண்டது.
சூர்யாவின் தந்தையோடு எதையோ கதைத்துக்கொண்டிருந்த சிவபாலன், மனைவியைக் கண்டுவிட்டு, “இரவுக்கு எல்லோருக்கும் சேர்த்துச் சமை..” என்றவர், சூர்யாவின் குடும்பத்தாரைப் பொதுவாகப் பார்த்து, “இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்..” என்றார் உபச்சாரமாக.
“அதற்கு என்ன சிவா. சந்தோசமாகச் சாப்பிடுகிறோம்…” என்றார் தாத்தா, பிகு எதுவும் இல்லாமல்.
சுலோ சமையலைக் கவனிக்கச் செல்ல, அவளோடு சூர்யாவின் அண்ணி சுமித்திரவும் உள்ளே சென்றுவிட, மற்றவர்கள் ஏதேதோ பேச்சில் சுவாரசியமாக மூழ்கிவிட, சனா அங்கிருந்து நழுவித் தன்னறைக்குள் புகுந்துகொண்டாள்.