இதயத் துடிப்பாய்க் காதல் 28 – 1

ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை.

தொலைக்காட்சியில் இருந்து பார்வையைத் திருப்பியவரின் விழிகளில் சூர்யாவும் ஜெயனும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது விழுந்தது.

எந்தக் கவலையும் இன்றி, சூர்யாவிடம் எதையோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்த ஜெயனைப் பார்த்தவருக்கு, ஆச்சர்யமாக இருந்தது.

அவரின் பார்வையை உணர்ந்து திரும்பிப் பார்த்தவனிடம், கண்ணைக் காட்டிவிட்டு எழுந்து சென்றார் சிவபாலன்.

அருகில் இருந்த சூர்யாவிடம், “இரு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்த ஜெயன், தமையனைத் தேடி அவர் அறைக்குச் சென்றான்.

“என்ன அண்ணா..?” என்று கேட்டவனிடம், “உனக்குக் கவலையாக இல்லையாடா?” என்று அவன் தோளில் கைவைத்துக் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு உடனடியாக அவனால் பதில் சொல்ல முடியவில்லை. நொடிகள் அமைதியில் கழிய, “நான் வந்த அன்றே எனக்கு இது தெரியும் அண்ணா. அதனால், இதற்கு என்னைத் தயார் படுத்திக் கொண்டேன்.” என்றான் அவன்.

அதைக் கேட்ட சிவபாலனுக்கு பெரும் கவலையாக இருந்தது. தன் விருப்பம் நடக்காது என்று தெரிந்ததும், தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருக்கிறான்.

“சனாவுக்கு ஏன்டா உன்னைப் பிடிக்கால் போய்விட்டது? உனக்கு என்ன குறை..?” என்று அவர் கேட்டபோது, அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“யாருக்கு யாரைப் பிடிக்கும் என்று நம்மால் சொல்ல முடியுமா அண்ணா? அவள் என்னை விரும்பவில்லை என்றால், என்னில் குறை என்று அர்த்தமா?” என்று தெளிவாகக் கேட்டான்.

“ஆனால், நீ அவளை..” என்றவரை, அவன் மேலே பேச விடவில்லை.

“அண்ணா, இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறவளைப் பற்றி நாம் இப்படிக் கதைப்பது தப்புண்ணா. “ என்றான்.

“சரிடா. அவளைப் பற்றிக் கதைக்கவில்லை. ஆனால், இனி உன் நிலை?” ஒரு அண்ணனாகக் கேட்டார் அவர்.

“என் நிலைக்கு என்னண்ணா?” என்று சாதரணமாக அவன் கேட்க,

“புரியாத மாதிரிப் பேசாதே. உனக்கு திருமணம் நடக்க வேண்டாமா? நான் இன்றே அம்மாவுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். உடனேயே நல்லதொரு பெண்ணாக பார்க்கச் சொல்லி..” என்றவரை மீண்டும் இடைமறித்தான் ஜெயன்.

“இல்லை அண்ணா. எனக்கு யாரும் பெண் பார்க்க வேண்டாம்..” என்றான் அவன் உறுதியான குரலில்.

பதறிப் போனார் சிவபாலன். “விசராடா உனக்கு? சனா இல்லை என்றால் என்ன? உனக்கென்று பிறந்தவள், உன் மேல் அதிகமாக அன்பைக் காட்டும் ஒரு பெண் நிச்சயமாக உனக்குக் கிடைப்பாள்..” என்றார் அவர் அவசரமாக.

தமையனின் பதட்டத்தைப் பார்த்து ஜெயனுக்குச் சிரிப்பு வந்தது. புன்னகையோடு, “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். என்னையே உயிராக நேசித்து, எனக்காக உருகும் ஒரு பெண்தான் எனக்கு வேண்டும். அவளை நானாகக் கண்டு, திகட்டத் திகட்டக் காதலித்துக் கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறேன் அண்ணா..” என்றான் அவன் தெளிவாக.

சிவபாலனுக்கு அப்போதுதான் அப்பாடி என்றிருந்தது. பின்னே, காதல் தோல்வியில், இப்படியே இருந்துவிடுகிறேன்.. அது இது என்று அவன் எதையும் சொல்லிவிடுவானோ என்று அவர் தவித்தது அவருக்குத்தானே தெரியும்.

மனதில் இருந்த பாரம் அகன்றுவிட, வேகமாகத் தம்பியை தழுவிக் கொண்டவர், “நிச்சயமாக உனக்கு நல்ல பெண் கிடைப்பாள். நீ மிக மிக சந்தோசமாக வாழ்வாய்…” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டுவர நினைத்தவன், “அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அண்ணா.” என்றவன், இரண்டடி அவரை விட்டுப் பின்னால் நகர்ந்து, “அதுவும் உங்களையும் அண்ணியையும் விட, நாங்கள் நன்றாக இருப்போம்..” என்று குறும்போடு அவன் சொல்ல, “உன்னை!” என்றபடி விளையாட்டாகக் கையை ஓங்கினார் சிவபாலன்.

அந்த அடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடியவனின் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவருக்கும் சிரிப்பு வந்துவிட, மனம் விட்டுச் சிரித்தார்.

அறைக்குள் இருந்த சனாவுக்கு, ஒருவித அமைதி கிட்டியிருந்தது.

முதலில் சூர்யாவை விரும்புவதை எப்படிச் சொல்வது என்று பயந்துகொண்டிருந்தாள். அவன் பிரிவைச் சொன்னபிறகோ ஜெயனுடனான திருமணத்தைப் பற்றி அக்கா அத்தான் கதைத்தால் என்ன காரணத்தைச் சொல்லி மறுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தாள். சூர்யாவை விரும்பியதை சொல்லவும் முடியாது. சொன்னால், அதுதான் நடந்து முடிந்துவிட்டதே என்பார்கள்.

இன்று அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிட்டிருந்தது.

அதேபோல, நடக்காது என்று வேதனையோடு நினைத்திருந்த, சூர்யாவுக்கும் அவளுக்குமான திருமணமும் நடக்கப் போகிறது. அவன் மீது அவளுக்கிருந்த கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்றாலும், அவனைத் தவிர வேறு யாரையும் அவளால் மணக்க முடியாதே!

இன்றும், அன்று அவன் சொன்னவைகளை நினைக்கையில் வலியொன்று தாக்குவதையும் தவிர்க்க முடியவில்லை அவளால்.

அதை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும், அது முடியாமல் அவள் தவித்துக்கொண்டிருந்த போது, அறைக் கதவை இலேசாகத் தட்டிவிட்டு, “லச்சு..” என்று அழைத்தபடி உள்ளே வந்தார் பாட்டி.

அவர் வந்ததை உணராமல், ஏதோ சிந்தனையில் இருந்தவளைப் பார்த்தவருக்கு, திருமணம் நடக்கப் போகும் பெண்ணின் மலர்ச்சி அவள் முகத்தில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது.

அருகில் வந்து அவள் தோளில் அவர் கையை வைக்கவும், திகைத்து நிமிர்ந்தவள், பாட்டி நிற்பதை அப்போதுதான் கண்டு, சட்டென்று எழுந்து முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றபடி, “வாருங்கள் பாட்டி..” என்று அழைத்தாள்.

அவளருகிலேயே கட்டிலில் அமர்ந்தவர், அவளையும் தன்னருகே அமர்த்திக் கொண்டார். அவளைப் பார்த்து, “சூர்யா மேல் உள்ள கோபம் இன்னும் போகவில்லையா உனக்கு?” என்று கேட்டார்.

அவரைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, இவருக்கு எப்படித் தெரியும் என்று யோசனை உள்ளே ஓடியபோதும், “அப்படி.. அப்படி எதுவும் இல்லை..” என்றாள் மழுப்பலாக.

அவள் மழுப்புவதை உணர்ந்து, “எனக்கு எல்லாம் தெரியும் லச்சு..” என்றார் அவர்.

“என்ன தெரியும் பாட்டி?” என்று அப்போதும் அவள் தயங்க,

“எல்லாம் தெரியும். எல்லாம் என்றால், உயிரை விடுவதற்காக அசட்டுத் தனமாக நீ காருக்கு முன்னால் பாய்ந்தாயே.. அதுவரை..” என்றவர், “என்ன துன்பம் வந்தாலும் அந்த முடிவை நீ எடுக்கலாமா லச்சும்மா. எதையும் எதிர்த்து நின்று போராடுவதை விட்டுவிட்டு இப்படியா செய்வாய்..” என்று கடிந்தார்.

தான் செய்த செயலை எண்ணி வெட்கித் தலை குனிந்தவள், “இனி அப்படி நடந்துகொள்ள மாட்டேன்..” என்று பணிந்தாள்.

“ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

“சூர்யாதான் சொன்னான். அவனுக்கு ஜெயன் சொன்னானாம்..”

“ஓ…” என்றவளுக்கு, நேற்று அவர்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்றதும்தான் எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். அதுதானே பார்த்தேன். இல்லாவிட்டால் அவனாவது வருவதாவது என்று விரக்தியோடு எண்ணியது அவள் உள்ளம்.

“எப்போது சொன்னார் பாட்டி?” என்று உணர்வுகளைக் காட்டாத குரலில் கேட்க முயன்றாள்.

“இலங்கையில் இருக்கும் போதே, நீங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், அதற்குக் காரணம் தான்தான் என்றான். என்ன நடந்தது என்று நான் துருவித் துருவிக் கேட்டபோதுதான் நடந்ததைச் சொல்லி, என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது பாட்டி என்றான். சரி இங்கு வந்ததும் உன்னைப் பெண் கேட்டு வரலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று நேற்றிரவு வந்து, நாளைக்கே சனா வீட்டுக்குப் போகவேண்டும் பாட்டி என்று அடம் பிடித்தான். காரணத்தைச் சொல்லவே மறுத்துவிட்டான். பிறகு உன் தாத்தாதான், அப்படி என்ன அவசரம் என்று அதட்டிக் கேட்டதும் தான் ஜெயன் சொன்னதைச் சொன்னான். அதைச் சொல்லும் பொது, அவன் முகத்தில் இருந்த கவலை, பரிதவிப்பைப் பார்த்து எங்களுக்குக் கலங்கிவிட்டது லச்சும்மா. எங்கள் பேரன் அப்படித் தவித்து நாங்கள் பார்த்ததே இல்லை..” என்று அவர் சொன்னபோது, அதைக் கேட்டிருந்தவளும் கலங்கித்தான் போனாள்.

அந்தக் கலக்கத்திலும், மனதில் ஒருவித சந்தோசம். அவன் அவளின் தற்கொலை முயற்சியைக் கேள்விப்பட்டு, இரக்கத்தில் அவளைத் தேடி வரவில்லை. அதேபோல அவளிடம் அவன் சொன்னவை அனைத்தும் உண்மை. ஆனாலும்.. அன்று அவன் பேசியவை? மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது, அவளின் அலைபாயும் மனது!

அவளின் அமைதியைப் பார்த்துவிட்டு, “என்னம்மா யோசிக்கிறாய்..?” என்று கேட்டார் பாட்டி.

அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், “ஒன்றும் இல்லை பாட்டி..” என்றாள் மீண்டும்.

“பொய் சொல்லக் கூடாது கண்ணம்மா.” என்றபடி, அவள் தலையை இதமாக வருடியவர், “இன்னும் உன் கோபம் போகவில்லை. அப்படித்தானே?” என்று கேட்டார்.

பொய் சொல்ல முடியாமல் அவள் அமைதி காக்க, “இந்தப் பாட்டிக்காகவாவது என் பேரனை மன்னிக்க மாட்டாயா? நீயும் அவனும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதுதான் இந்தப் பாட்டியின் தாத்தாவினதும் ஆசை. அதை நிறைவேற்ற மாட்டாயா?” என்று அவர் கேட்டபோது,

“பாட்டி..” என்றவளின் குரல் அழுகையில் வெடிக்க, உரிமையோடு அவர் தோளில் சாய்ந்துகொண்டாள். விழிகள் கண்ணீரைச் சொரிந்தது. ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளை, அவள் மனதே எதிரியாக நின்று வதைத்தது.

“அழக்கூடாது..” என்று அவள் கன்னங்களைத் துடைத்து விட்டவர், “இந்தத் திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?” என்று, பதில் தெரிந்த கேள்வியைக் கேட்டார்.

திகைத்து நிமிர்ந்தவள், “ஐயோ பாட்டி. அப்படியெல்லாம் இல்லை.” என்றாள் அவசரமாக.

புன்னகையோடு, “பின்னே?” என்று கேட்டார் பாட்டி.

வேதனையில் முகம் கசங்க, “பயமாயிருகிறது பாட்டி.” என்றாள் வலி நிறைந்த குரலில்.

“ஏன்மா..?” என்று அவர் இதமாகக் கேட்க,

“அவர் மேல் இருக்கும் அன்பில் சாப்பிட்டீர்களா? குடித்தீர்களா? எங்கே நிற்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்டால், அது அவருக்கு மூச்சு முட்டுவது போல் இருக்குமோ? அடிமைப் படுத்துவது மாதிரி இருக்குமோ என்று பயமாக இருக்கிறது பாட்டி. முதல் போன்று என்னால் உண்மையான அன்போடு பழகமுடியுமா தெரியவில்லை. இனியும் அவருக்கு ஒரு போன் பண்ணவோ அல்லது மேசேஜாவது அனுப்பவோ முடியும்போல் தோன்றவில்லை. ” என்றவளின் பேச்சில் இடைபுகாது, முழுவதும் வெளியே வரட்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாட்டி.

“இவருக்கு அது பிடிக்குமா இது பிடிக்குமா என்று எத்தனை நாளைக்குப் பாட்டி என்னால் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியும்? உண்மையான அக்கறையோடு எதையாவது செய்யுங்கள் என்று என்னால் இனி எப்படி உரிமையோடு கேட்க முடியும்? அதை அவர் எப்படி நினைப்பாரோ? இனியும் என்னை விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்று உள்ளே பயந்துகொண்டே இருக்க முடியுமா பாட்டி. இந்தப் பிரிவையே என்னால் தாங்கமுடியவில்லை. இதில் பிள்ளை குட்டி என்றானபிறகு விவாகரத்து என்று வந்தால்.. நினைக்கவே பயமாக இருக்கிறது பாட்டி.” என்று தன் உள்ளத்துப் பயம் அனைத்தையும் கொட்டினாள் சனா.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock