அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் செய் இதைச் செய் என்று நீ வற்புறுத்தியதும், தன்னுடைய வேலையைத் தானே செய்து, தன்னுடைய முடிவை தானே எடுத்துப் பழகியவனுக்கு, திடீரென்று உன்னுடைய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவன் பிரிவைச் சொல்லியிருக்கிறான்..” என்றவரின் பேச்சில் மூச்சடைத்தது அவளுக்கு.
ஜெயனும் இதையே தான் சொன்னான். அப்போதே மனதில் மெல்லிய உறுத்தலாக இருந்த விஷயம், இப்போது பாட்டி சொல்வதைக் கேட்கையில், அவள்தான் பிழை விட்டிருக்கிறாளோ என்று அவளுக்கே தோன்றத் தொடங்கியது.
“அவன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இங்கே மூன்று வயதிலேயே சுயமாக எதையும் செய்யவேண்டும் என்பார்கள். அந்தச் சின்ன வயதில் இருந்தே, அவர்களுக்குப் பிடித்ததையே செய்து, அவர்கள் முடிவை அவர்களே எடுத்துப் பழகியவர்கள். அம்மா அப்பா கூட ஒரு அளவைத் தாண்டி அவர்களின் விருப்பங்களில் தலையிட முடியாது. அதேபோல அவர்களின் நல்லது கெட்டது அவர்களுக்கே தெரியும்.” என்றவர் தொடர்ந்தார்.
“அதற்காக, நீ அவன்மீது அக்கறை காட்டுவதைத் தவறு என்றே சொல்லவில்லை. அதுதான் சரியும் கூட! ஆனால் அதை மெல்ல மெல்லச் செய்யவேண்டும். இவ்வளவு காலமும் வேலியற்று வாழ்ந்தவனுக்கு திடீரென்று வேலியைப் போட்டால் மூச்சு முட்டுவது போலத்தான் இருக்கும். அப்படித் தோன்றி, உன்னை வேண்டாம் என்றுவிட்டுப் போனவன், அப்படியே போகவில்லையே! நீதான் வேண்டும் என்று மீண்டும் உன்னைத்தானே தேடி வந்திருக்கிறான். எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு வாழும் இந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகி இருந்தாலும், அவன்தானே உன்னைத் தேடி வந்திருக்கிறான். நீ அவனைத் தேடி வரவில்லையே!” என்றவரின் பேச்சு அவளுக்குப் பெரும் அடியாக இருந்தது.
உண்மைதானே! என்ன துடித்தாலும் அவனிடம் திரும்பிப் போகும் எண்ணம் அவளுக்கு இருக்கவில்லையே!
“யோசித்துப் பார் கண்ணம்மா.. அவனுக்குப் பிடிக்கும் என்று முடியைக் குட்டையாக வெட்டச் சொன்னால் நீ வெட்டுவாயா? அல்லது குட்டைப் பாவாடை போடு என்றால் போடுவாயா? அவனுக்காக என்று நீ செய்தாலும், உன் மனதுக்கு அது பிடிக்காமல்தானே இருக்கும். அப்படி எத்தனை விசயங்களை அவனுக்காக என்று பொறுத்துப் போவாய்? ஒரு கட்டத்தில் வெடிக்க மாட்டாயா?” என்று அவர் பொட்டில் அறைந்தது போல் கேட்டபோது, அவள் செய்த தவறுகள் அனைத்தும் உறைத்தது.
உண்மைதானே! அன்று அவன் சொல்லி லென்ஸ் வைத்துக்கொண்டால் என்றால், அவளுக்கும் அது பிடித்திருந்தது. அதுவே இன்று பாட்டி சொல்வது போல அவனுக்குப் பிடிகிறது என்பதற்காக இதையெல்லாம் அவள் செய்வாளா? நிச்சயமாக இல்லை!
இப்படித்தானே அவனுக்கும் பழக்கம் இல்லாத ஒன்றைச் செய்கையில் இருந்திருக்கும். ஆனாலும் அவளுக்காகச் செய்வானே. அதையும் எவ்வளவு அடம் பிடித்து அவனைச் செய்ய வைத்திருப்பாள். இப்போது நினைக்கையில் உள்ளம் குன்றியது அவளுக்கு.
அவள் அடம் பிடித்த போதெல்லாம் அவன் சினம் காட்டியிருக்கிறான் தான். சிடுசிடுத்திருக்கிறான் தான். ஆனால் அவள்தான் அதை உணர்ந்து கொள்ளாமல் இருந்திருக்கிறாள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், முடியாமல் போனதில் வெடித்திருகிறான்.
ஆக, அவளால்தான் அந்தப் பிரிவு என்கிற முடிவுக்கு அவன் வந்திருக்கிறான்.
நடந்த தவறுகளின் ஆணிவேராக அவளின் செயல்கள் இருந்திருக்கிறது. இதில் அவள் அவனைப் போட்டுப் படுத்தியிருக்கிறாள்.
தன்னை நினைத்தே வெட்கியவளின் விழிகளில், கண்ணீர் மீண்டும் வழியத் தொடங்க, “எல்லாவற்றுக்கும் அழுகையா லச்சு..?” என்று அதட்டிய பாட்டிக்கும் உள்ளம் நெகிழ்ந்தது.
“இல்லைப் பாட்டி. இனி அழவில்லை.. நான் அழுதால் சூர்யாவுக்குப் பிடிக்காது..” என்றபடி, கண்ணை அவள் துடைத்துக் கொள்ளவும், அவளின் அறைக்கதவு மீண்டும் தட்டப்படவும் சரியாக இருந்தது.
யாராக இருக்கும் என்று இருவரும் பார்க்க, கதவைத் திறந்துகொண்டு வந்தவன் சூர்யா. சனாவின் முகம் மலர்ந்தது என்றால், பாட்டியின் முகத்தில் குறும்புப் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“பெண்கள் கதைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் உனக்கு என்னடா அலுவல்?” என்று, எடுப்பாகக் கேட்டார் பாட்டி.
“எனக்கு மனைவியாகப் போகிறவளிடம் உங்களுக்கு என்ன பேச்சு? அவளோடு நான்தான் கதைக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணவரிடம் ஓடுங்கள்..” என்றான், சனாவையே பார்த்தபடி அவன்.
“இந்த வயதில் என்னால் ஓட முடியுமாடா..?” என்று, அப்போதும் இருந்த இடத்தில் இருந்து அசையாது அவர் கேட்க, “இப்போது நீங்களாகப் போகவில்லை என்றால், உங்களைத் தூக்கிக் கொண்டுபோய் வெளியே விட்டுவிடுவேன்..” என்றான் அவன், அசராது.
அவன் பேச்சைக் கேட்டுச் சனாவுக்குச் சிரிப்பு வந்தது. “பார்த்தாயா லச்சு. என்னையே இந்த மிரட்டு மிரட்டுகிறான். அவனிடம் சொல்லி வை. நான் பொல்லாதவள் என்று..” என்றவர் கட்டிலில் இருந்து எழுந்தபடி, “உனக்காகத்தான் நான் இப்போது போகிறேன்..” என்றவர், அவனைப் பார்த்துப் பொய்யாக ஒரு முறைப்பைச் சிந்திவிட்டு சென்றார்.
சென்றவர் கதவை மூடிக்கொண்டு சென்றுவிட, சனாவுக்குள் ஒருவித பதட்டம் புகுந்துகொண்டது. தவறு செய்துவிட்டோமே, அவனை வருத்தி விட்டோமே என்று குற்ற உணர்ச்சில் உள்ளம் குன்ற கட்டிலில் இருந்து எழுந்தவள், தலையைக் குனிந்துகொண்டாள்.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, அவனிடம் இருந்து ஒருவித சத்தத்தையும் காணோமே என்று எண்ணியபடி அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் பார்வைக்காக காத்திருந்தவன் போல், கைகள் இரண்டையும் விரித்து அழைத்தவனின் விழிகளில் இருந்த வேண்டுதலில், அனைத்தையும் மறந்து ஓடிச்சென்றவள் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.
தனக்குள் புகுந்துகொண்டவளை, புதையலைக் காப்பவன் போல் வேகமாக அணைத்துக் கொண்டவனின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது. அவளும் அந்த அணைப்புக்குள் அடங்கி நிற்க, “என்னை மன்னித்துவிடு லட்டு..” என்றான், கம்மிவிட்ட குரலில்.
அதைக் கேட்டவளின் உள்ளம் உருகியது. அவள் செய்த பிழைக்கு அவன் மன்னிப்புக் கேட்பதா?
“நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும் சூர்யா..” என்றாள் தழுதழுத்த குரலில்.
சட்டென்று அணைப்பில் இருந்து அவளைப் பிரித்தவன், அவள் தோள்களைப் பற்றி, “நீ என்ன பிழை செய்தாய்? செய்தது எல்லாம் நான். என்னால்தானே நீ அன்று.. அன்று..” என்று பரிதவித்தவன், “என்ன நடந்தாலும் நீ அப்படிச் செய்யலாமா?” என்று கோபப்பட்டான்.
அடுத்த நொடியே, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே, “ஆனால் நீ அப்படிச் செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை லட்டு.. ஜெயன் சொன்னபோது நம்பவே முடியவில்லை என்னால். இனிமேல் அப்படியான முட்டாள் வேலைகள் பார்க்காதே! உனக்கு மட்டும் ஏதும் நடந்திருக்க, நான் பைத்தியமாகத்தான் அலைந்திருப்பேன்..” என்றான் நடுங்கிய குரலில்.
அதைத் தாங்க முடியாமல், “அச்சோ சூர்யா இப்படியெல்லாம் கதைக்காதீர்கள்..” என்று அவள் பதற, “இதற்கே உனக்கு இப்படிப் பதறுகிறதே. நீ அப்படிச் செய்தாய் என்று தெரிந்தபோது, நான் என்ன பாடு பட்டிருப்பேன்.. நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை.” என்றான் அவன் வேதனையோடு.
அவன் கன்னத்தை இதமாகத் தடவிக் கொடுத்தவள், “என்னை மன்னித்துவிடுங்கள் சூர்யா. இனி எப்போதும் அப்படி நடக்கமாட்டேன்.” என்றவள், தொடர்ந்தாள்.
“அன்று நீங்கள் பிரிவைச் சொன்னதும், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது சூர்யா. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால், நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று நினைக்கவில்லை. வீதியைக் கடப்பதற்காக நின்றபொழுது, கார் வரவும், ஒரு வேகத்தில் பாய்ந்துவிட்டேன்..” என்றாள், குன்றளோடு.
“அதற்குக் காரணம் நான்தானே..” என்றான் அவன் வேதனையோடு.
அவன் வேதனைப் படுவதைப் பொறுக்க முடியாமல், “அசடு மாதிரிப் பேசாதீர்கள் சூர்யா.” என்று கோபப்பட்டாள் சனா. “நீங்களா என்னைக் காருக்கு முன்னால் பாய் என்று சொன்னீர்கள்? புத்தி இல்லாது நான் செய்ததற்கு நீங்கள் எப்படிப் பொறுப்பாவீர்கள்?” என்று, அவனுக்காக அவள் வாதாடினாள்.
அதைப் புரிந்துகொண்டவனுக்கு இன்னும் வலித்தது. “பார்.. இப்போது கூட நீ என்னைத் தேற்றுகிறாய். அப்படியான உன் அன்பைத்தான் நான் உதறினேன்..” என்றான் அவன்.
“அப்படிச் சொல்லாதீர்கள் சூர்யா. அன்பைக் காட்டுகிறேன் என்கிற பெயரில் நான்தான் முழுப் பிழையும் செய்தேன். உங்களை வருத்தி, வாட்டி.. எல்லாவற்றிற்கும் அடம்பிடித்து..” என்றவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது.
கண்கள் கலங்க, தலையை இடமும் வலமுமாக ஆட்டி, “இனி அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டேன். உங்களை வருத்த மாட்டேன். எனக்கு நீங்கள்தான் வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது சூர்யா..” என்றவள், ஆவேசம் வந்தவளாக அவன் முகத்தைக் கையில் ஏந்தி, முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
அவள் தோள்களில் இருந்த அவன் கைகளின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே செல்வதை உணர்ந்து, முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, “என்னை மிகவும் சோதிக்கிறாயே லட்டு…” என்றான், சின்னச் சிரிப்போடு.
புரியாமல் விழித்தவளுக்கு, அவன் விரல்களின் அழுத்தமும், பார்வையில் இருந்த தாகமும் அனைத்தையும் உணர்த்திவிட, “சூர்யா..” என்று சிணுங்கியவள், வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க, அவனுக்குள்ளேயே புதைந்தாள்.
அவளை அணைத்துக்கொண்ட அவனும் அப்படியே நின்றான். இருவருக்குமே அந்த நிலை இதமாக, சுகமாக ஒருவித போதையைக் கொடுத்தது.
“உங்கள் கைகளுக்குள் இப்படி இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை சூர்யா.” என்றாள் லட்சனா, அவன் மார்பில் இருந்த தலையை உயர்த்தி.
நேசம் பொங்க, அவளைக் குனிந்து பார்த்தவனின் விழிகளில் குறும்பு மின்னியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை அப்படிப் பார்த்தவளுக்கு, அவன் முகத்தில் இருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.
அவளையே பார்த்தபடி, செவ்வானமாய் சிவந்திருந்த அவள் கன்னத்தைப் பற்கள் படாமல் மெல்லக் கடித்தவன், “இப்போது நம்புகிறாயா?” என்று மோகனச் சிரிப்போடு கேட்டான்.
அந்தச் சிரிப்பில் மயங்கி நின்றவளைப் பார்த்தவனின் பார்வை மெல்ல மெல்ல மாற, அதை உணர்ந்தவளின் விழிகளில் நாணம் நாட்டியமாட, அந்த அழகை ரசித்தவனின் நாடி நரம்புகள் அத்தனையும் அவள் வேண்டும் என்றது.
வெட்கத்தில் எழிலாய் நெளிந்த அவளின் இதழ்களின் அமுதைப் பருகிட வேகம் கொண்டவன், வேட்கையுடன் குனிந்தான். நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்தவளும், அவன் கொடுத்த ஆழ்ந்த முத்தத்தில் சித்தம் கலங்கி நின்றாள்.
அவன் கைகளுக்குள் நெகிழ்ந்து, இதழ்களுக்குள் புதைந்து, அவனுக்குள் கரைந்துகொண்டிருந்தவள், மூச்சுக் காற்றுக்காய்த் திணறியபோதே, அவளை விடுவித்தான் அவள் காதலன்!
செவ்வானமாய்ச் சிவந்த முகத்தோடு, மூச்சினை வேகவேகமாக இழுத்துவிடுபவளைப் பார்த்து, கண்ணைச் சிமிட்டிக் கள்ளச் சிரிப்புச் சிரித்தான் அந்தக் கள்வன்.
அந்தச் சிரிப்பில் வெட்கம் வந்தபோதும், “சூர்யா…” என்றபடி மலர்ந்து சிரித்தவள், தன் இதயத்தின் துடிப்பாய்க் கலந்துவிட்டவனின் காதலில் கரைந்து, மீண்டும் அவனுக்குள்ளேயே புதைந்துகொண்டாள் சுகமாக!