இதயத் துடிப்பாய்க் காதல் 4 – 1

அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா.

பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். சனா எறிந்த பந்தை ஓடிச்சென்று பிடித்த சைந்து, “தாகமாக இருக்கிறது சித்தி. குடிக்க என்ன கொண்டு வந்தீர்கள்…?” என்று மூச்சுவாங்கக் கேட்டாள்.

வியர்த்து நின்ற சின்னவளைப் பார்க்கையில் சிரிப்பு வந்தது சனாவுக்கு.

“மாம்பழ ஜூஸ் இருக்கிறது. வா, தருகிறேன்.” என்றவள், ஜூசை பிளாஸ்டிக் கப்பில் வார்த்துக் கொடுத்தாள். கொண்டுவந்திருந்த ஆப்பிளையும் துண்டங்களாக வெட்டி, அவள் முன்னே வைத்தாள்.

ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பிராக்குப் பார்த்துக்கொண்டே அதை உண்டவள், தன் தோழியைக் கண்டுவிட்டு, “சித்தி, அங்கே பாருங்கள், செலின் வந்திருக்கிறாள். நானும் போய் அவளோடு விளையாடட்டுமா…?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

“சரி. போய் விளையாடு. ஆனால் கவனம்!” என்று அவளை அனுப்பிவைத்துவிட்டு, அந்தப் புல்வெளியிலேயே அமர்ந்து அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சனா.

அப்போது அவளின் கைபேசி சிணுங்கியது.

‘யார்…’ என்று யோசித்துக்கொண்டே எடுத்துப் பார்த்தவள் அதைப் பார்த்தபடியே இருந்தாள்.

அழைத்தது சூர்யா!

தன்னுடைய இலக்கத்தை பதிந்துகொள் என்று அவன் அன்று சொல்லியும் அவள் பதிந்து கொள்ளவில்லை. ஆனால் அவளின் நெஞ்சம் என்னும் பெட்டகத்தில் அவளை அறியாமலேயே பதிந்துபோனது!

அன்றைக்கு சந்தையில் சந்தித்த பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இந்த இரண்டு கிழமைகளில் இதோடு அவன் இரண்டாவது முறையாக அழைக்கிறான். அன்றும் அவனின் அழைப்பை அவள் எடுக்கவில்லை. இன்றும் எடுக்கவில்லை. ஏனோ அவனோடு கதைப்பதைத் தவிர்க்கச்சொன்னது மனது. அவனைத் தவிர்த்ததனாலேயே கிடந்தது தவித்தது அதே மனது.

அவனைப் பார்ப்பதற்கும், அவனோடு கதைப்பதற்கும் ஆவலாக அல்ல பேராவலாக இருந்தாள். அப்படியிருந்தும் அவனைத் தவிர்த்தாள்.

ஏதேதோ சிந்தனைகளுடன் அடித்து ஓய்ந்த கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவளை சைந்தவி அழைத்தாள்.

“சித்தி, செலின் வீட்டுக்குப் போகப் போகிறாளாம். நாமும் போகலாமா..? இன்று டோராவின் பயணங்கள் பார்க்கவேண்டும்.”

மனதின் எண்ணப்போக்குகளை ஒதுக்கி, “சரி, வா போகலாம்…” என்றபடி எழுந்து, சைந்தவியோடு வீட்டுக்கு நடந்தாள்.

அந்தச் சாலையின் ஓரமாக, பாதசாரிகளுக்கு என்று அமைக்கப்பட்ட தனிப்பாதையில் சைந்தவி தன்னுடைய குட்டிச் சைக்கிளில் முன்னால் செல்ல இவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். வீதியில் போகும் வாகனங்களை பார்வையிட்டபடி வந்தவளை ஒரு சில்வர் நிறக் கார் ஈர்த்தது.

இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று எண்ணம் ஓடும்போதே, அவளின் அருகே வந்ததும் வேகம் குறைந்து பின் மீண்டும் வேகமெடுத்த காரை இனங்கண்டு, அதற்குள்ளே இருப்பவனை மெல்லிய அதிர்வோடு பார்த்தாள் சனா.

அவனோ அவளையும் அவளின் கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுவிட்டான்.

‘என்னைக் கண்டுவிட்டும் கதைக்காமல் போகிறானே.’ ஏங்கிப்போனாள் அவள்.

எதற்காக என் கையைப் பார்த்தான் என்று நினைத்தபடி கையைப் பார்க்க, கைபேசி அவளைப் பார்த்துச் சிரித்தது.

கையில் கைபேசி இருந்தும் அவன் அழைத்தபோது அவள் கதைக்கவில்லை என்பதை, அவளுக்கே சுட்டிக் காட்டத்தான் அந்தப் பார்வை பார்த்திருக்கிறான்.
இனி என்னோடு கதைக்கமாட்டானோ என்று உள்ளம் துடிக்க, அவன் கார் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டு நின்றாள் சனா.

“சித்தி.. யாரைப் பார்க்கிறீர்கள்?” சற்று முன்னால் சென்றுவிட்ட சைந்தவி குரல் கொடுத்தாள்.

அதற்குப் பதிலைச் சொல்லாமல், “இதோ வருகிறேன்…” என்றபடி அவளிடம் விரைந்தாள்.

அவன் அழைத்தபோது எடுத்துக் கதைத்திருக்கலாமோ? அவனைப் பார்க்காதவரை அவனைத் தவிர்க்க முடிந்தவளுக்கு இப்போது முடியவில்லை.

அவள்தான் முதலில் அவனைத் தவிர்த்தாள். இப்போது அவன் காட்டிச் சென்ற புறக்கணிப்பை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தளவுக்கு வலித்தது. கலங்கிவிட்ட கண்களை இமைகளைக் கொட்டிச் சரிசெய்தாள்.

உடலும் மனமும் சோர வீட்டுக்குள் நுழைந்தவளிடம், “ஹேய் சனா, ஜெயனும் விரைவில் இங்கே வந்துவிடுவான்.” என்றார் சிவபாலன் உற்சாகமாக.

யார் ஜெயன்? என்பதாக அவரைப் பார்த்தாள் சனா.

“என்ன பார்க்கிறாய்? ஜெயன் இங்கே வரப்போகிறானாம்…” என்றார் அவர் மீண்டும்.

நிஜம் புரிய முகம் கன்றியது அவளுக்கு. பின்னே, இன்று அவள் உயிருடன் இருக்கிறாள் என்றால் அதற்கு அவனும் ஒரு காரணம் அல்லவா! அப்படியானவனை மறக்கலாமா அவள்?

“உண்மையாகவா அக்கா…?” முகத்தில் பொய்யான மலர்ச்சியைக் காட்டிக் கேட்பதற்குள் பெரும்பாடு பட்டுப்போனாள்.

“ஆமாம் சனா. விசாவுக்கு கொடுத்துவிட்டானாம். எப்படியும் இரண்டொரு மாதத்தில் வந்துவிடுவான்…” என்றவளின் முகத்திலும் மகிழ்ச்சியே!

அக்காவின் மகிழ்ச்சிக்கான காரணம் புரிய தலையை வலிப்பதுபோல் இருந்தது சனாவுக்கு.

“அதென்ன, நான் சொன்னதை நம்பாமல் உன் அக்காவிடம் கேட்கிறாய்…?” என்று அவளைச் சீண்டினார் சிவபாலன்.

“உங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை அத்தான். அதுதான்…” தன் திணறலைச் சரி செய்யக் கேலி பேசிச் சமாளித்தாள் சனா.

பிறகு, “மாமாவும் மாமியும் அங்கே தனியே இருக்கப்போகிறார்களா அத்தான்?” என்று, அவரின் பெற்றோர்களைப் பற்றிய உண்மையான அக்கறையோடு கேட்டாள்.

“அவன் வந்தபிறகு கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் தனியாகத்தான் இருக்கவேண்டும் சனா. வீட்டோடு தங்கி அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு வேலைக்கு யாரையாவது அமர்த்தச் சொல்லி ஜெயனிடம் சொல்லியிருக்கிறேன். அவன் வந்தபிறகு அவர்களையும் இங்கேயே அழைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன.. நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக சந்தோசமாக இருக்கலாம்…” என்றவரின் முகத்தில், எல்லாமே நன்றாக அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி தவழ்ந்தது.

ஜெயன், சிவபாலனின் தம்பி ஜெயபாலன். கொழும்பில் பெற்றோருடன் இருக்கிறான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock