இது நீயிருக்கும் நெஞ்சமடி 5 – 2

ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார் மனோன்மணி. இரத்தப்பசையிழந்த மகனின் முகம், பெற்றவர்களின் முன்னால் மனைவியிடம் கைநீட்டி விட்டோம் என்கிற வேதனையோடு அவன் போன காட்சியே அவர் கண்ணுக்குள் நின்று வதைத்தது.

கணவர் சொன்னதுபோல அவனாவது சந்தோசமாக வாழட்டும்!

அன்றிலிருந்து தினமும் மாலையில் மகேந்திரமும் மனோன்மணியும் கருப்பனின் வீட்டுக்குச் செல்லத் துவங்கினர். மனோன்மணி சில நேரங்களில் காலையில் கணவர் தோட்டத்துக்குப் போகையிலேயே கருப்பன் வீட்டுக்கு நடையைக் கட்டிவிடுவார். இரவு கணவரும் வந்தபிறகு திரும்பி வருவார்.

ஆனால், சொந்த வீட்டில், பெற்ற மகனோடு வாழ முடியாமல் என்னவோ தப்பி ஓடுவதுபோல ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று நெஞ்சு முழுவதும் வேதனை அரித்தது. அதற்கு முழு மருந்தாகப் புவனா மாறிப்போனார். மனோன்மணி ஒன்றும் சொல்லாமலேயே பெற்ற தாயைத் தாங்குவதுபோலத் தாங்கினார்.

நேரமிருக்கையில் சுந்தரேசனும் அங்கே போய்விடுவார். அதைவிட, புவனா அடுத்த குழந்தைக்குத் தாயாகிவிட, அவரைக் கவனிக்கிறோம் என்று ஆளாளுக்குப் பறக்க லலிதாவால் தாங்கவே முடியவில்லை.

“ரெண்டு கிழட்டுக்கும் சமைச்சுப்போட்டு, வீட்டையும் கவனிச்சு, பிள்ளையையும் நான் பாக்க, பாசம் மட்டும் அங்க!” என்று தனக்குள் திட்டித் தீர்த்தார்.

புவனா பிரணவனையும் பெற்றுவிட, அவனது அழகும் சுட்டித்தனமும் எல்லோரையும் அப்படியே கட்டி இழுக்க, அதிக நேரத்தை அங்கேயே செலவளிக்கத் துவங்கினர், பெரியவர்கள் இருவரும்.

இல்லையோ புவனாவைப் பிள்ளைகளோடு இங்கே அழைத்துக்கொண்டார்கள்.

சுந்தரேசனுக்கும் மனைவியின் சிடுசிடுப்புக்கு ஆறுதல் கருப்பனின் வீடாகிப்போனது. அகரனும் தமயந்தியோடு விளையாட என்று அவர்களோடு சேர்ந்துகொள்ள, அவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தன்னை மட்டும் தனித்து விட்டதுபோல உணர்ந்த லலிதாவுக்கு அவ்வளவு ஆத்திரம்.

ஆர்கலியை லலிதா சுமக்கத் துவங்கியபோதும் அவர்களின் அந்த வீட்டுக்கான போக்குவரத்து குறையாமல் இருக்க, மொத்தக் குடும்பத்தையும் நிறுத்திவைத்து வெளுக்க வேண்டும் போலொரு கோபம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

“நான் என்ன நாயா? இந்த வீட்டைக் காவல் காத்துக்கொண்டு இருக்க?” என்று புகைந்துகொண்டிருந்தார்.

ஆர்கலி பிறந்தபிறகு பிரணவன் ‘பொம்மா பொம்மா’ என்று அவளைக் கேட்டு அழுவதும், “முதல் வளந்து வாடா. உனக்கே கட்டித்தாறன்!” என்று சுந்தரேசன் பகிடியாகச் சொல்வதும், அவர்கள் வீட்டுக்குப் போகும் நேரங்களில் ஆர்கலியையும் தூக்கிக்கொண்டு போவதும் என்று இருக்க, லலிதாவால் எதையும் ரசிக்க முடியவும் இல்லை, அவர்களோடு இணக்கமாகப் போகவும் முடியவில்லை.

ஒருநாள் இரவு, “ஒஃபீஸ்ல லண்டனுக்குப் போறதுக்கு கேட்டவே அம்மா. நான் மாட்டன் எண்டுபோட்டன்.” என்று கணவன் தாயிடம் சொன்னதைக் கேட்ட லலிதா, இதைப் பற்றிக் கணவர் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் சொல்லவில்லையே என்று வெகுண்டுபோனார்.

அது கொடுத்த உந்துதலில், “அங்கேயே போவோம். போனா பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் குடுக்கலாம். நாங்களும் முன்னேறலாம்.” என்றார் அவசரமாக.

கோபத்தைக் காட்டவும் பயம்; அதனாலேயே மாமியார் தடுத்துவிட்டால்?

அவருக்கு இந்தச் சிறைக்குள் இருந்து தப்ப வேண்டும். அதை நயமாகவே சாதித்துக்கொள்ள எண்ணினார்.

“இங்க என்ன குறை எண்டு அங்க போய் முன்னேற?”

“இது உங்கட அம்மா அப்பாட சொத்து. உங்கட இல்ல. அப்பிடித்தானே அண்டைக்கு உங்கட அம்மா சொன்னவா. மறந்து போச்சா?”

இப்போதெல்லாம் மனோன்மணி சமாளித்துப் போவதை உணர்ந்திருந்த லலிதா தைரியமாகவே அவரைப் பேச்சுக்குள் இழுத்தார்.

“நானும்தான் அம்மா பெத்த பிள்ளை. அப்ப என்னையும் விட்டுட்டு நீ மட்டும் லண்டனுக்குப் போ!” என்றுவிட்டு எழுந்து போய்விட்டார் சுந்தரேசன்.

மீண்டும் சண்டை. திரும்பவும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தார் லலிதா. சுந்தரேசனும் எல்லாம் வெறுத்தவர் போலப் பற்றற்றுத் திரிய, மனம் வெந்து போயிற்று மனோன்மணிக்கு.

ஒற்றை மகன். அவன் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டவளைக் கட்டிவைத்தார்கள். பிறகும் தினந்தோறும் சண்டையும் சச்சரவும் என்றால் என்ன பயன்?

“அந்த வேலைக்கு ஓம் எண்டு சொல்லு தம்பி.” ஒரு நாள் மகனிடம் சொன்னார் மனோன்மணி.

“ஏனம்மா?” கேட்கும்போதே குரலடைத்தது சுந்தரேசனுக்கு. தன்மீது உயிரையே வைத்திருக்கும் அம்மா பிரிவதற்குத் தயாராகியிருக்கிறார் என்றால், எந்தளவில் தனக்குள் நொந்துபோயிருப்பார் என்று விளங்காதா?

மனோன்மணிக்கும் கண்கள் கலங்கிற்று. அவரருகில் வந்து அமர்ந்துகொண்டு சொன்னார்.

“எங்களுக்கு நீ நல்லாருக்கோணும் தம்பி. பிக்கல் பிடுங்கல் இல்லாம சந்தோசமா வாழவேணும். நீ பக்கத்தில இருக்கிறாய் எண்டுறதை விடச் சந்தோசமா இருக்கிறாய் எண்டுறதைக் கேக்கத்தான் ஆசைப்படுறோம். எங்களுக்கு என்ன, கருப்பன் இருக்கிறான், புவனா இருக்கிறாள். நாங்க இருப்போம்.” தொண்டை அடைக்கச் சொன்னார் மனோன்மணி.

“கொஞ்சக்காலம் போய் இரு அப்பு. பிறகு பாப்பம் என்ன செய்யிறது எண்டு. உனக்கும் அது பதவி உயர்வு மாதிரித்தானே.”

பெற்ற மகன் அவர் இருந்தும் வளர்த்த மகன் இருக்கிறான், நீ உன் வாழ்க்கையைப் பார் என்கிறார் அன்னை.

தொண்டை அடைத்து அழுகை வரும்போல் இருந்தாலும் அடக்கிக்கொண்டு, “கடைசி வரைக்கும் உங்களை நல்லா வச்சுப் பாக்கோணும் எண்டு ஆசைப்பட்டனான் அம்மா. ஆனா, இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு கனவிலையும் நினைக்கேல்ல.” என்றார் கண்கள் கலங்க.

மனோன்மணி அம்மாவுக்கு நெஞ்சு வெடிக்கும் போலாயிற்று! வளர்ந்த பிள்ளை. அவன் கலங்குகிறானே. “நீ நினைக்கிறதே போதும் குஞ்சு. உனக்குப் பதிலா இருந்து கருப்பன் பாப்பான். நீ ஒண்டையும் யோசிச்சுக் கலங்காம வெளிக்கிடு!” என்று சொன்னதைக் கேட்டுக்கொண்டு விரைவிலேயே லண்டன் புறப்பட்டிருந்தார் சுந்தரேசன்.

அந்த நாட்களில் இருந்த அந்த வன்மம் இன்றும் தீராமல் லலிதாவின் மனதிலேயே இருந்தது.

“இந்த வேர்வை வேர்க்குது, ஒரு ஏசி கூட இல்லையா?” கழுத்தோரத்தைத் துடைத்துக்கொண்டு வினவினார்.

ஆர்கலிக்கே தாய் அப்படிக் கேட்டது பிடிக்கவில்லை. அவர்களின் பொருளாதார நிலை என்ன என்று அந்த வீடே சொல்லும்போது, இப்படியான கேள்விகள் அவர்கள் மனத்தைப் புண்படுத்திவிடும் என்று தெரியாதா?

ஆனால், கருப்பனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை போலும்.

“எங்களுக்கு இது பழகிப்போச்சு தங்கச்சி. நீங்க அங்க குளிருக்க இருந்திட்டு வந்ததுதானே, அதுதான் இப்பிடி.” என்று இன்முகமாகச் சொல்லிவிட்டு, “திவிக்குட்டி, அந்த ஃபேனை எடுத்துவந்து மாமிக்குப் போட்டுவிடு!” என்றார் கடைக்குட்டியிடம்.

“எண்டாலும், இண்டைக்கு இருபது வருசத்துக்கு மேலாச்சுது. ஒரு வீடு கூடக் கட்டி முடிக்கேல்ல நீங்க. இதுக்க மூண்டு பொம்பிளைப் பிள்ளைகள். யோசிக்காமப் பெத்துப்போட்டு என்னெண்டு கரையேத்தப் போறீங்கள்.”

எப்படியாவது புவனாவின் முகத்தைக் கறுக்க வைக்க வேண்டும் போலிருந்தது லலிதாவுக்கு.

புவனாவுக்கு பொறுப்பில்லாமல் பிள்ளைகளை மட்டும் பெத்துப் போட்டிருக்கிறார்கள் என்று குத்துகிறார் என்று விளங்கியது. “அதுக்கு என்ன லலிதாக்கா. எங்கட சந்தோசம் இந்தக் குழந்தைகள்தான். இப்பதானே தம்பியும் தமயாவும் வேலைக்குப் போகத் தொடங்கி இருக்கீனம். அதெல்லாம் நல்லபடியா நடக்கும். கடவுள் கைவிட மாட்டார்.” என்றார் புன்னகையோடு.

சுந்தரேசனுக்கு மனைவியின் மீது பெரும் கோபம். என்ன செய்ய? முன்னர் போல எல்லோர் முன்னும் கோபப்பட்டு இன்னும் வெறுப்பை அதிகரிக்க வேண்டாம் என்று பேசாமலிருந்தார்.

“நீங்க இன்னும் மூத்தவளுக்கே முடிக்கேல்ல, நாங்க எங்கட ஆர்கலிக்கு மாப்பிள்ளை பாக்கிறதுக்குத்தான் இஞ்ச வந்ததே.” என்றார் பெருமையாக.

“சந்தோசம் தங்கச்சி. மாப்பிள்ளை இங்கயா இருக்கிறார்?” லலிதாவின் பேச்சுகளை மனதுவரைக்கும் கொண்டுபோகாமல் கருப்பன் விசாரித்தார்.

“அதெல்லாம் இன்னும் முடிவாகேல்ல கருப்பா. லலிதான்ர ஒண்டுவிட்ட அண்ணான்ர மகனுக்குக் கலியாணம். அந்த வழில ஒரு நல்ல பெடியன் சுவிசுல இருக்கிறானாம். அவனும் கலியாணத்துக்கு வாறான். அப்ப ஒருக்கா பாப்போம் எண்டு நினைச்சிருக்கிறம். இனிப் பாத்து, பிடிச்சு, பொருத்தம் பொருந்தி எண்டு எவ்வளவு வேலை கிடக்குச் சொல்லு?” என்றார் சுந்தரேசன்.

“என்ன எவ்வளவு வேலை? அவன் நல்ல பெடியன். அவனைத்தான் கட்டிவைக்கோணும்.” அவர்களுக்கு முன் தன் அதிகாரத்தை நிலைநாட்ட லலிதா குரலை உயர்த்தினார்.

“எனக்குத்தானே?” சிரித்துக்கொண்டு கேட்டாள் ஆர்கலி.

புவனாவும் தமயந்தியும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். அவள் சொன்ன விதமே அவளின் விருப்பமில்லாமல் எதையும் நடத்திவிட முடியாது என்று உணர்த்தியது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock