மூவரும் மிக நன்றாகவே ஒட்டிவிட்டிருக்க, கலகலத்தபடி காணியைச் சுற்றிக்கொண்டு வந்தனர்.
“இது கிணறுதானே?” பெரிய வட்டத்தில் மிகுந்த ஆழமாக இருந்தது. கிணற்றைச் சுற்றி இடுப்பளவில் கல்லால் கட்டப்பட்டிருக்க எட்டிப் பார்த்தாள் ஆர்கலி. தலையைச் சுற்றிக்கொண்டு வரவும் சட்டென்று அகன்றுவிட்டாள்.
அதற்குள் குழாய் அடித்து, மோட்டார் மூலம் தண்ணீர் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு அருகில் தகரத்தால் மூடி அடைக்கப்பட்ட ஒரு அறைபோல இருக்கக் கண்டு, “என்ன இது?” என்று கேட்டாள்.
“அதுதான் எங்கட திறந்தவெளி பாத்ரூம்.”
“பாத்ரூமா?” ஆச்சரியத்தோடு போய்ப் பார்த்தவளால் அதைக் கட்டியவரை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
ஒரு அறைபோல நான்கு பக்கமும் தகரத்தால் அடைத்து, அதற்கு ஒரு கதவும் போட்டு, தலைகீழாக நிறுத்திவைத்த ஆங்கில எழுத்து எல் வடிவில் இருந்த தண்ணீர் பைப்பில் ஷவர் பூட்டப்பட்டிருந்தது. அதற்குக் கூரை சடைத்து நின்ற மாமரம். நிலத்துக்குச் சீமெந்து சற்றே சரிவாக இழுக்கப்பட்டிருக்க, குளிக்கும்போது தேங்காமல் தண்ணீர் ஓடக்கூடியதாக இருந்தது. அந்தத் தண்ணீரையும் வீணாக்காமல் வாய்க்கால் வெட்டி ஒவ்வொரு மரத்துக்கும் போய்ச் சேருவது போல அமைக்கப்பட்டிருந்தது.
“இதுவும் உங்கட அண்ணாவின்ர வேலையா?”
“ஓமோம்!” இருவரும் ஒரு சேரக் குறும்புடன் குரல் கொடுக்க,
“இனாஃப்! இப்ப சொல்லோணும்! என்ன விசயம்? ரெண்டு பேரும் என்ன மறைக்கிறீங்க?” என்று, ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
“உண்மையாவே ஒண்டுமில்ல.”
“பொய் சொல்லுறீங்க! என்ன எண்டு சொல்லுங்கோவன். என்னையும் உங்கட ஃபிரெண்டா சேர்த்திட்டு சொல்லாம இருந்தா எப்பிடி?” சோகமாய் அவள் தூண்டித் துருவ, உருகிவிட்டாள் திவ்யா.
“அக்கா, சும்மா பகிடி தானே. சொல்லன்.”
“அக்கா பேசுவாடி.”
“பெரியக்காக்குத் தெரியாமச் சொல்லுவமா?”
துவாரகா அரைமனதாக நிற்க, “நீங்க எங்கட அக்காட்டத் தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்கொள்ளக் கூடாது சரியோ.” என்று, நம்பிக்கை வாக்குறுதி வாங்கினாள் திவ்யா.
“சரிசரி. நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன். சொல்லுங்க சொல்லுங்க.” என்று அவள் காதைக் குடுக்க, சகோதரிகள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“சொல்லிப்போட்டுச் சிரிங்கப்பா. மனுசருக்குப் பொறுமை போகுது.”
“அது… எங்கட அண்ணா இருக்கிறார் எல்லோ…”
“அது இப்பயில்ல சின்ன வயதில நடந்தது.” அவள் தவறாக நினைத்துவிட்டாலும் என்று அவசரமாகச் சொன்னாள் துவாரகா.
“ஓம் ஓம். சின்ன வயதில எங்கட அண்ணாக்கு உங்களை நல்ல விருப்பமாம். எப்பவும் உங்களைத் தூக்கி வச்சிக்கொண்டே இருப்பாராம்!”
“ஓ…!” அதே அவளுக்குப் பெரும் ஆச்சரியமாயிருந்தது. மனத்தைக் கவரும் அழகோடு அன்று நடந்துவந்தவன் அவளைத் தூக்கி வைத்திருந்தானா?
“தன்ர பொம்மை எண்டு உங்களை ‘பொம்மா’ எண்டுதான் கூப்பிடுவாராம்.”
“ஓ…!” ஒவ்வொரு முறையும் அவளின் ஆச்சரியத்தின் அளவு கூடிக்கொண்டே போனது.
“லலிதா மாமிட்ட கூட உங்களைக் குடுக்க மாட்டாராம். அவ்வளவு விருப்பமாம். எங்களிட்ட ஃபோட்டோ எல்லாம் இருக்கு. நாங்க பாத்தோம்.”
“அத எனக்கும் காட்டுங்கோ!”
“அதுதான் ஏலாதே!”
“ஏன்?”
“அண்ணா ஒளிச்சு வச்சிட்டார்.”
“ஏன்?” ஒளிக்கிற அளவில் அப்படி என்ன இருக்கிறது என்று குழம்பினாள் ஆர்கலி.
“அது… அது…” திவ்யாவுக்கு வெட்கம் வந்துவிட்டது. “அக்கா நீ சொல்லு!”
“சொல்லுங்கடியப்பா. அப்பிடி என்ன கிடக்கு ஃபோட்டோல?”
“அது… அண்ணா உனக்கு கிஸ் பண்ணி இருக்கிறான். அதுவும் உதட்டில.” பட்டென்று சொல்லிவிட்டாள் துவாரகா.
“என்னது?” கேட்ட ஆர்கலி வாயைக் கையால் பொத்திக்கொண்டாள். அவளால் நம்பவே முடியவில்லை.
“அப்ப விட்டுட்டு இப்ப பொத்தி என்ன பிரயோசனம்?” குறும்புடன் துவாரகா சொல்ல,
“அடிங்! எனக்கே தெரியாது. இதுல விட்டனானாம். உனக்கு முதுகுலதான் விடப்போறன்!” என்றபடி அவளைத் துரத்தத் தொடங்கினாள் ஆர்கலி.
தப்பித்து வீட்டுக்குள் ஓடினாள் துவாரகா. துரத்திவந்த ஆர்கலி, அங்கே அமர்ந்திருந்த பிரணவனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஓடி வந்தவளை அவனும் பார்த்துவிட, அவள் உதடுகளில் சட்டென்று குறுஞ்சிரிப்பு முளைத்தது.
இதற்குத்தானா தடுமாறி விழிகளை அகற்றினான்?
ஒரு ஆணின் தடுமாற்றம். ஹாஹா… அதை மனக்கண்ணில் கண்டவளுக்கு அவனை அவ்வளவு பிடித்தது. வெட்கித்தானே அவளோடு கதைக்காமல் ஓடினான்.
அங்கேயே நல்லபிள்ளையாக அமர்ந்துகொண்டவளின் கண்கள் அடிக்கடி அவனிடமே ஓடிக்கொண்டிருந்தன. பிரணவனுக்கும் அவள் பார்ப்பது தெரியாமலில்லை. எல்லோரையும் வைத்துக்கொண்டு இப்படிக் குறுகுறுப்பு மூட்டுகிறாளே! அவள் பக்கமே திரும்பவில்லை அவன்.
“பைக் புதுசா பிரணவா?” வீட்டு நிலைக்குப் பொருந்தாமல் வண்டி பளிச்சென்று நிற்கவும் விசாரித்தார் சுந்தரேசன்.
“ஓம் மாமா! என்ர கம்பனில கட்டாயம் பைக் வச்சிருக்க வேணும். இல்லாட்டி, கம்பனியே புது பைக் தரும். அதுக்கு நாங்க மாதம் மாதம் வாடகை ஆறாயிரம் குடுக்கோணும். ஆனா, பைக் எங்களுக்குச் சொந்தமில்லை. அப்ப வருசம் குடுக்கிற எழுபத்திரெண்டாயிரமும் அநியாயம். அத யோசிச்சிட்டு, அம்மா சேர்த்து வச்சிருந்த ஒரு லட்சம் குடுத்து இந்த பைக்கை வாங்கிட்டேன். லீஸுக்குத்தான் எடுத்தனான். ஆனா, இன்னும் ஒரு வருசத்தில லீசும் முடிஞ்சிடும். பைக்கும் எனக்குச் சொந்தமாகிடும்.” என்றான் அவன்.
“கெட்டிக்காரன்தான். எல்லாம் யோசிச்சுச் செய்யிறாய்.” என்று மெச்சினார் சுந்தரேசன்.
“என்ன கெட்டிக்காரன் எண்டு சொல்லுறீங்கள்? பொறுப்பில்லாத குணம். சும்மா ஊர் சுத்துறதுக்கு ஒரு காரணம். வீடு இருக்கிற நிலைல இந்த பைக் தேவையே? அந்தக் காசைச் சேர்த்துவச்சு நகை வாங்கியிருக்கலாம். இந்த ஜன்னலைப் போட்டிருக்கலாம். தமயந்திக்குக் கலியாணத்தைச் செய்திருக்கலாம். இப்ப பாருங்கோ, தாய் சேர்த்த காசையும் செலவு செய்தாச்சு. தமயந்தி வயசு வந்தும் வீட்டுல இருக்கிறாள்.” என்றார் லலிதா.
சட்டென்று மூண்ட கோபத்தோடு அன்னையை முறைத்தான் பிரணவன். அவர் அமைதியாக இரு என்று கண்களால் கெஞ்சினார்.
ஆனாலும் லலிதாவின் பக்கம் திரும்பி, “இதுவும் ஒருவகை முதலீடுதான் மாமி. ஒரு வீட்டுல இருந்து திருத்த வரச்சொல்லி ஃபோன் பண்ணினா அடுத்த நிமிசமே போய் நிக்கோணும். அப்பதான் திரும்பவும் கூப்பிடுவீனம். அதவிட, பைக் எண்டால் வேலை கெதியா முடியும், அடுத்த வேலையையும் உடனே பாக்கலாம். அப்ப வருமானமும் கூடும். அதோட, அக்காக்கு இனித்தான் இருபத்தியாறு வயசாகப்போகுது. இன்னும் ஒண்டு ஒண்டரை வருசத்துக்குள்ள கல்யாணம் செய்து வச்சிடுவன்.” என்றான் தெளிவாக.
“என்னவோ சொல்லுற மாதிரி நடந்தாச் சரி! உனக்குக் கீழயும் ரெண்டு பெட்டையள் வரிசைல நிக்கிறாளவை. பொறுப்பா நடக்கப் பார்!” புத்தி சொல்வதுபோலக் குத்தினார்.
சற்றே துளிர்க்கப்பார்த்த சினத்தை அடக்கிக்கொண்டு, பேச்சை வளர்க்க விரும்பாமல், “சரி மாமி!” என்றுவிட்டுத் திரும்பியவனின் விழிகள், எதிர்பாராமல் ஆர்கலியின் விழிகளை மீண்டும் சந்தித்துவிட்டிருந்தது.
அதற்காகவே காத்திருந்தவள் குறும்புச் சிரிப்புடன் புருவங்களை ஏற்றி இறக்க, அவன் உதட்டினில் சட்டென்று சிரிப்பொன்று முளைத்துவிட்டிருந்தது.
எதற்குச் சீண்டுகிறாள்? காரணம் தெரியாதபோதும் இருந்த சினம் மறைந்திருந்தது.
அவனை இன்னுமே சீண்டி விளையாட வேண்டும் போலிருக்க, “சின்ன வயதில நானும் பிர…ண…வனும் சேர்ந்து விளையாடி இருக்கிறோமா அப்பா?” என்று தகப்பனிடம் கேள்வி எழுப்பினாள்.
பார்வை இவனிடம் இருந்தது. அவனுக்கோ அங்கிருக்க முடியவில்லை. எழுந்து ஓடிவிட முடியாமல் தடுமாற, சுந்தரேசனோ வாய்விட்டுப் பெரிதாகச் சிரிக்கத் துவங்கியிருந்தார்.
“விளையாடுறதா? உன்ன விடவே மாட்டான்! நீ இங்கேயே இருந்திருந்தா உன்னக் கல்யாணமே கட்டியிருப்பான்! அவனுக்கு உன்னை அவ்வளவு விருப்பம்.” என்றவருக்கும் பிரணவனைப் பார்த்துச் சிரிப்பு.


