கடவுளே… இந்த மாமா ஏன் மானத்தை வாங்குகிறார் என்பதுபோல் சிரிப்புடன் அவன் பார்க்க,
“என்ன விசர் கதை கதைக்கிறீங்கள்? ஆருக்கு ஆரைக் கட்டிவைக்கிறது எண்டு ஒரு விவஸ்தை இல்லையே? அவளுக்கு சுவிஸ் மாப்பிள்ளை ரெடி. சும்மா கண்டதையும் உளறாதீங்கோ!” என்று பாய்ந்தார் லலிதா.
சுந்தரேசனுக்கே முகம் கறுத்துப்போயிற்று! பதில் சொன்னால் ஆட்கள் இருக்கிற மிதப்பில் லலிதா இன்னுமே துள்ளுவார் என்று தெரியும். வாயை மூடிக்கொண்டார்.
கருப்பனுக்குமே மிகுந்த வருத்தமாய் போயிற்று. அவர்கள் வீட்டின் ஆண்பிள்ளை. அனைத்தையும் எடுத்துச் செய்கிறவன். அவனைப் பற்றி அவர் இப்படிச் சொன்னதும் துடித்துப்போனார். அப்போ பிரணவனின் நிலை?
அவமானமும் ஆத்திரமுமாகக் கோபத்தோடு தாயைப் பார்க்க அவரோ விழிகளால் மீண்டும் கெஞ்சிக்கொண்டிருந்தார். மகனது கோபமும் லலிதாவின் வரைமுறையற்ற பேச்சும் பயத்தைக் கொடுக்க, ஏதும் ஏடாகூடமாகக் கதைகள் வந்துவிடுமோ என்று பயந்துபோனார்.
“அண்ணா, சாப்பிடுவமா? ஆர்கலி, உனக்குப் போடட்டாம்மா? நேரத்துக்குச் சாப்பிட்டாத்தானே செமிக்கும்.” என்று அவர்களிடம் கேட்டுவிட்டு, “தமயா, கறி எல்லாத்தையும் திரும்ப ஒருக்கா சூடாக்கம்மா.” என்று மகளுக்கும் ஏவினார்.
அப்படியே, “தம்பி! ஒருக்கா வாப்பு!” என்று, பிரணவனையும் அழைத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் நகர்ந்தார்.
எப்படியாவது சமாளிக்க வேண்டுமே!
அவனுக்கும் அங்கிருக்கப் பிடிக்காமல் போக, சட்டென்று எழுந்து தாயிடம் சென்றான்.
“சுந்தரண்ணா வா! கையைக் கழுவிக்கொண்டு வருவம்!” கருப்பனும் ஒன்றுமே நடக்காததுபோல எழுந்து நடக்க, சுந்தரேசன்தான் அவர்களின் பெருந்தன்மையில் குன்றிப்போனார்.
அதுவரை பேசாமலிருந்த ஆர்கலி, தாயிடம் பொரியத் துவங்கினாள்.
“உங்களுக்கு எங்க என்ன கதைக்கோணும் எண்டு தெரியாதாம்மா? ஒரு பகிடி அது. ஆரம்பிச்சது நான். அதுக்குப் போய் என்ன கதைக்கிறீங்க? கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம என்னம்மா இது? பாவமெல்லா அவர்?”
“அவன் என்ன பாவம்? அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? திமிர் பிடிச்சவன். நான் புத்திசொல்ல எப்படிக் கதைச்சான் பாத்தியா?”
“அப்பவும் நீங்கதான் பிழையா கதைச்சீங்க. இப்பவும் நீங்க சொன்னதுதான் பிழை. அன்பா சாப்பாட்டுக்குக் கூப்பிட்ட இடத்தில நீங்க இப்பிடிக் கதைச்சா எங்களைப் பற்றி என்ன நினைப்பீனம்?” அவளுக்கு அன்னையின் போக்கு மிகுந்த சினத்தைக் கொடுத்தது.
“நீங்க இப்பிடியெல்லாம் நடப்பீங்க எண்டு சத்தியமா நான் நினைக்கேல்ல!” என்றுவிட்டு, விறுக்கென்று எழுந்து கை கழுவச் சமையலறைக்குப் போனாள்.
அங்கோ, “அப்பாவுக்காகவும் மாமாக்காகவும் பொறுமையா இரு தம்பி! ஒண்டும் கதைக்காத.” என்று புவனா கெஞ்சுவது கேட்டது.
“நான் என்னம்மா கதைச்சனான்? சும்மா ஒருத்தரை கேவலப்படுத்தலாமோ? அது என்ன ஆரை ஆருக்கு எண்டு சொல்லுறா? நாங்க என்ன அவ்வளவு இளக்காரமா?” என்றவனின் பேச்சு வாசலில் நின்ற அவளைக் கண்டதும் நின்றது.
விலகிப்போவதா நிற்பதா என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அப்படியே நின்றுவிட, “வாம்மா” என்று புவனா சமாளித்து அழைத்தார்.
அவளைத் திரும்பியும் பாராது அங்கிருந்து இறுகிய முகத்தோடு வெளியேறினான் பிரணவன்.
மனதுக்குக் கஷ்டமாகப் போயிற்று அவளுக்கு. முதல்நாள் அவ்வளவு கலகலப்பாகக் கதைத்தவன், சற்றுமுதல் அவளைப் பார்த்துத் தடுமாறி ஓடியவன், சீண்டுவதற்காகப் புருவங்களை உயர்த்தியபோது சட்டெனச் சிரித்தவன் என்று இனிமையான அவனுடைய பக்கங்களைக் கண்டவளுக்கு அவனுடைய இந்தப் புறக்கணிப்பு, இந்தக் கோபம் நிறைந்த இறுகிய தோற்றம் பெரும் கவலையைக் கொடுத்தது.
அவர்கள் சாப்பிட்டு முடியும் வரைக்கும் அவன் வரவேயில்லை.
“அப்பா, அவர் எங்க?” தகப்பனின் காதைக் கடித்தாள் ஆர்கலி. சுந்தரேசனும் அவனைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.
“பிரணவன் எங்க புவனா? சாப்பிடேல்லையா?”
“பின்னுக்கு நிக்கிறான் அண்ணா. பசியில்லையாம், பிறகு சாப்பிடுறானாம்.” என்று சொல்ல அவனைத் தேடிப்போனார் சுந்தரேசன்.
பின்னுக்கிருந்த மாமரத்தின் தாழ்வான கிளையில் தாவி ஏறியிருந்தவன், அந்தக் கிளையிலேயே கைகள் இரண்டையும் ஊன்றியபடி இருளை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சுந்தரேசன் போவதால் வீட்டின் பின்பக்க லைட்டை புவனா போட்டுவிட்டார்.
சட்டென்று தாவி இறங்கி, “சாப்பிட்டாச்சா மாமா?” என்று சமாளித்துக் கேட்டான்.
“அவள் கதைச்சதைப் பெருசா எடுக்காத பிரணவா. உன்ர அப்பாவும் நானும் எப்பிடி வளந்தனாங்கள், எங்களுக்குள்ள இருக்கிற பாசம் எவ்வளவு ஆழமானது எண்டு எல்லாம் அவளுக்குத் தெரியாது. சொல்லி விளங்கப்படுத்தவும் ஏலாது. ஆனா, இவ்வளவு நடந்தும் உன்ர அப்பா ஒரு வார்த்தை என்னட்ட கதைக்கவுமில்லை கேட்கவுமில்லை பாத்தியா? அதுதான்டா நட்பு. நான் மட்டும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறன் எண்டு நினைக்கிறியா? எல்லாம் காரணமாத்தான்.” என்றவர், அவனின் தோள்களைப் பற்றிச் சொன்னார்.
“அவன் என்ர கருப்பன். அவனுக்குப் பெயர் வச்சதே நான்தான். அவன்ர குடும்பத்தைச் சும்மா விட்டுட மாட்டன். ஒண்டையும் யோசிச்சுக் கவலைப்படாம போய்ச் சாப்பிடு. நாங்க வெளிக்கிடப்போறம்.” என்றுவிட்டுக் கிளம்பினார்.
வாகனத்தை வரச்சொல்லி அழைத்துவிட்டு, எல்லோருமாகப் படலையடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தனர். மெல்ல நழுவி வீட்டின் பின்புறம் ஓடிவந்தாள் ஆர்கலி.
அங்கே முதல் இருந்த மாதிரியே மரக்கொப்பில் ஏறி அமர்ந்திருந்தான் பிரணவன். இவள் ஓடி வருவதைக் கண்டுவிட்டு முகத்தைத் திருப்ப,
“அம்மா கதைச்சது பிழைதான். அதைப் பெருசா எடுக்காதிங்கோ. ஆனா, நீங்க செய்ததும் பிழைதான்!” என்றாள் அவள்.
‘நான் என்ன செய்தனான்?’ கோபம் நிறைந்திருந்த விழிகளால் கேள்வியாகப் பார்த்தான் பிரணவன்.
“ஒரு பொம்பிள பிள்ளைக்கு கிஸ் பண்ணலாமா? அதுவும் உதட்டில! உங்களை நல்லவன் எண்டு நம்பித்தானே அவள் பழகியிருப்பாள்?” என்று கேட்டுவிட அதிர்ந்துபோய் விழித்தவன், சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரிப்பை அடக்கினான்.
கடவுளே… இவளுக்கும் சொல்லியாச்சா! முகம் சிவந்து போயிற்று அவனுக்கு.
இரவுநேரக் காற்றுவந்து அசைத்த கேசத்தைக் கோதிக்கொடுப்பது போல முகத்தை அவன் மறைக்கப் பார்க்க, “அப்படியே தூக்கிக் கொஞ்சோணும் மாதிரி உங்கட வெக்கம் அவ்வளவு அழகு பிர…ண…வன்!” என்றாள் ஆர்கலி.
‘மானத்த வாங்குறாளே!’ அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அவனை இன்னும் சீண்டவேண்டும் போலிருந்தாலும், நேரமாவதை உணர்ந்து, “ப்ளீஸ்! போய்ச் சாப்பிடுங்கோ!” என்றுவிட்டு ஓடி மறைந்திருந்தாள் அவள்.


