சலிப்பாய்ப் பார்த்தார் சுந்தரேசன். இரவு மகள் சொல்லியும் கேட்காத மனைவியை என்ன செய்ய என்றே தெரியவில்லை.
“தயவுசெய்து கொஞ்சம் பேசாம இரு லலிதா! இஞ்ச இருக்கப்போறது நாலு கிழமை மட்டும்தான். அந்த நாலு கிழமையும் சந்தோசமா இருந்திட்டுப் போவம்!” என்றார் மனம் விட்டுப்போன குரலில்.
அப்படியே நின்றுவிட்டார் லலிதா. கணவரின் சோர்ந்த குரல் மனத்தைத் தைத்தது. அவரும் பதிலுக்குப் பதில் தந்தபோது, கோபத்தோடு திருப்பிக்கொடுக்க முடிந்தது. அதுவே மனம் விட்டதுபோலத் தணிவாகப் பேசியபோது ஒருமாதிரி ஆகிப்போயிற்று!
“ஒருக்கா டொக்டரிட்ட காட்டுவமா? பிள்ளைக்கு உடம்பும் கொதிக்கிற மாதிரி இருக்கு.” ஆர்கலியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோலத் தன்மையாகக் கேட்டார்.
சுந்தரேசனுக்கும் மனைவி விளங்கிக்கொண்டது இதமளித்தது. எனவே தணிவாகவே பதிலும் சொன்னார்.
“காட்டுறதுதான் நல்லது!”
கூட்டிக்கொண்டு போய் மருந்து வாங்கிக்கொண்டு வந்தார்கள். அன்று முழுவதுமே ஆர்கலி எழும்பவில்லை. காய்ச்சலும் நன்றாகவே இருக்கப் படுத்துவிட்டாள்.
அப்போதுதான் லலிதாவின் அண்ணி அழைத்து, யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைத்தார். “திருமணத்துக்கு உடுப்புச் செருப்பு எடுக்கிறதில குழப்பமா இருக்கு லலிதா. நீயும் இருந்தா உதவியா இருக்கும்! வாவன்!”
இங்கிலாந்தில் வாழ்ந்த தன்னால் இன்னுமே நன்றாகத் தெரிவு செய்ய முடியும் என்று நம்பி அழைத்தவரிடம் லலிதாவினால் மறுக்க முடியவில்லை.
லண்டனிலிருந்து வந்ததற்கு கிளிநொச்சியிலேயே நின்றுவிட்டார்கள். அவர்கள் வீட்டுத் திருமணத்துக்கு என்றுதான் வந்ததே. ஆனாலும் இன்னும் போகவில்லை.
அவராக அழைத்தும் போகாமல் விட்டால் குறையாகிப்போகும். அதைவிட, ஆர்கலிக்குப் பார்த்த பெடியனின் வீட்டினரும் அங்குதான் எனும்போது போய்வருவதுதான் சரி என்று நினைத்தார்.
ஆனால், முடியாமல் சோர்ந்து சுருண்டு கிடக்கும் மகளை அலைக்கழிக்கவும் மனமில்லை. மாப்பிள்ளை வீட்டாரும் மாப்பிள்ளையும் பார்க்கையில் மனத்தைக் கவரும் விதமாக அவள் இருக்க வேண்டாமா?
என்ன செய்வது என்று தெரியாமல் விசயத்தைக் கணவரிடம் கொண்டுபோனார். அவரோ, எந்த யோசனையும் இல்லாமல் புவனாவுக்கு அழைத்துக் கேட்டுவிட, அடுத்த கணமே வந்துநின்றார் புவனா.
“நான் பிள்ளையைப் பாக்கிறன் அண்ணா. நீங்க ஒண்டுக்கும் யோசிக்காமப் போயிட்டு வாங்கோ.” எந்த யோசனையும் இல்லாமல் உடனேயே சொன்னார்.
“அங்க ஏசியும் இல்லையாம். அதைவிட, கலியாண வீட்டில வேலைகளுக்கு நடுவில இவளைப் பாக்க நேரம் கிடைக்குமோ தெரியாது. இஞ்ச இருந்தால் கல்யாண நாளுக்கு முதல் சுகமாகிடும். முகமெல்லாம் நுளம்புக்கடி. கலியாணத்துக்குப் பேசின பெடியன் பாக்கேக்க நல்லமாதிரியும் இருக்கோணும் எல்லா.” என்று மெல்லச் சொன்னார் லலிதா.
“உண்மைதான் அக்கா. நீங்க கவலைப்படாம போய் வேலையப் பாருங்கோ, நாங்க எல்லாரும் நல்லா பாப்போம்!” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்த அடுத்த கணமே வந்து நின்றார்கள் துவாரகாவும் திவ்யாவும்.
“ஆரடியப்பா உன்ர முகத்தில இப்பிடிப் புள்ளி வச்சுக் கோலம் போட்டது?” துவாரகா கேட்க, முறைத்தாள் ஆர்கலி.
“எனக்குக் காய்ச்சலே வந்திட்டுது. உனக்கு நக்கல்!”
“ஹாஹா அக்கா! கையப்பாரு சிக்கன் குனியா வந்த மாதிரி இருக்கு!” என்று திவ்யா ஆரம்பிக்க,
“அது என்னடி சிக்கன் குனியா?” என்று தெரியாமல் கேட்டாள் ஆர்கலி.
“நீங்க ஐ படம் பாக்கேல்லையா? அதுல வாற விக்ரம் மாதிரி!” என்று திவ்யா சொல்ல, “என்னது? அப்பிடியா இருக்கிறன்?” என்று ஓடிப்போய்க் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.
விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினர் சகோதரிகள் இருவரும்.
“எதுக்கும் நாங்க தள்ளி இருப்பம். தொத்து வியாதியோ ஆருக்குத் தெரியும்?” அக்காளும் தங்கையுமாக அவளை ஒரு கை பார்த்தனர்.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் இருவருக்கும் முதுகில் இரண்டு போட முனைய, “தொற்று வியாதி நம்மளை துரத்திக்கொண்டு வருது. ஓடு திவ்யா!” என்றபடி ஓடத்துவங்கினாள் துவாரகா.
“மக்களே! ரெண்டு பேரும் மாட்டினீங்க சம்பல் தான்டி!” என்றபடி துரத்தினாள்.
அவர்கள் ஓடிப்போய்ப் புவனாவின் பின் நின்றுகொண்டு விளையாட்டுக்குக் காட்ட, அவள் எட்டிப் பிடிக்க முனைய என்று வீடு முழுக்க ஓடிய மூவரையும் புவனாவால் தடுக்கவே முடியவில்லை.
களைத்து ஓய்ந்து அவர்களாகத்தான் நின்றார்கள்.
“ஓடினது பசிக்குது. ஏதாவது சாப்பிடத் தாங்கம்மா!” என்று குரல் கொடுத்தாள் திவ்யா.
“ஆரு, உனக்கு ரோல்ஸ் செய்து தரட்டா? விருப்பமா?” புவனா ஆர்கலியை விசாரித்தார்.
“கேட்டது நான், கேள்வி அங்க!” என்று நொடித்தாள் அவரின் கடைசி மகள்.
அன்று அவர்களோடு ஆர்கலிக்குப் பொழுது மிகவும் சந்தோசமாகவே கழிந்தது. மருந்து மாத்திரைகள் கொடுத்து, பருக்களுக்கும் எரியும் இடங்களுக்கும் கிறீம் பூசி என்று பார்த்து பார்த்துக் கவனித்துக்கொண்டார் புனிதா.
“வீட்டுல ஆர் மாமி சமைக்கிறது? மாமா பாவம் எல்லோ. நான் இருப்பன். நீங்க போயிட்டு இரவுக்கா வாங்கோ.” என்று சொல்லியும் போகவில்லை.
முடியாமல் இருந்த உடலோடு துவாரகா, திவ்யா இருவரோடும் சேர்ந்து ஆடியதால் நன்றாகக் களைத்துப்போயிருந்தாள். நான்கைந்து ரோல்ஸ் வெட்டியது வேறு கண்களைச் சொக்க வைக்க, மாலை நன்றாக உறங்கி எழுந்திருந்தாள். அதில், இரவு உறக்கம் வருவேனா எண்டு சண்டித்தனம் செய்தது ஆர்கலிக்கு.
இரவு பதினொரு மணியையும் தாண்டிப்போயிற்று. கீழே மெல்லிய பேச்சுக்குரல் கேட்டது. காது கொடுத்துக் கேட்டாள். ஏதோ வீடியோ பார்க்கும் சத்தம். யார் என்று எட்டிப் பார்த்தாள். ஹால் சோபாவில் படுத்திருந்து கைப்பேசி பார்த்துக்கொண்டிருந்தான் பிரணவன்.
‘இவன் எப்ப வந்தான்?’ கேள்வி ஓட மெல்ல இறங்கிவந்தாள்.
காலடிச் சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து அமர்ந்தான் பிரணவன்.
“சொறி, சத்தம் கேட்டு எழும்பிட்டியா?” மெல்லிய குரலில் கேட்டான். அவனும் புது இடத்தில் உறக்கம் வராமல்தான் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.


