இது நீயிருக்கும் நெஞ்சமடி 7 – 3

“நித்திரையே வருது இல்ல. எட்டிப்பாத்தா நீங்களும் படுக்கேல்ல. அதுதான் வந்தனான்.” என்றாள் ரகசியக் குரலில்.

அவள் சொன்னவிதம் அவன் உதட்டினில் மெல்லிய முறுவலை வரவைத்தது. “ஏன் இந்த ரகசியக் குரல்?” என்று அவனும் ரகசியமாகவே கேட்டான்.

“மாமி நித்திரை எல்லா. அவா பாவம், என்னால இஞ்ச வந்து இருக்கிறா. சொறி.” என்றபடி அவனருகில் அவள் அமர, அவனுக்குத்தான் கலவரமாகிப் போனது.

எழுந்துபோய் அடுத்த சோபாவில் அமர்வதும் ஒருமாதிரி இருக்க அவளைப் பார்த்தான். இவனைப் பார்ப்பதுபோல திரும்பி, கால்களைத் தூக்கிச் சப்பாணி கட்டி அமர்ந்துகொண்டிருந்தாள்.

“நீங்க இஞ்ச என்ன செய்யுறீங்க?” கையைக் கேள்வியாக ஆட்டி அபிநயித்துக் கேட்டாள்.

ரகசியமாகக் கதைக்கிறாளாம்! சிரிப்போடு, “எவனாவது வெளில இருந்து வந்து உன்ர கழுத்தை நெரிச்சாலும் எண்டு காவலுக்கு இருக்கிறன்.” என்று அவனும் அவளைப் போலவே அபிநயித்தான்.

“உங்கட அம்மாவுக்காக மெதுவா கதைச்சா நக்கலா?” என்று அருகிலிருந்த குஷனை எடுத்து அவன் மீது எறிந்தாள் ஆர்கலி.

அதை லாவகமாகப் பிடித்து, முதுகுக்குக் கொடுத்தபடி இலகுவாக அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தான் பிரணவன்.

முழு நீள பைஜாமா செட், காலுக்கு சொக்ஸ் என்று அந்த நாட்டுக்கே பொருந்தாமல் இருந்தாள். கலைந்துகிடந்த தலைமுடியோடு உறக்கத்தைத் துறந்த பளிச்சிடும் விழிகள். முகம் மட்டும் ஜன்னலினூடு கசிந்துகொண்டிருந்த நிலவொளியில் தங்கமென மின்னியது.

ஏகாந்தமான இரவு. அமைதியான பொழுது. அதை அழகாக்கிக்கொண்டு ஒரு பெண்.

உள்ளம் ஏதோ ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சரிவதுபோலிருக்க பார்வையை அவளிடமிருந்து அகற்றினான். பார்வையில் அவனது கைப்பேசியைப் பற்றியிருந்த கரங்கள் பட்டன.

அவன் கைப்பேசியின் மீது நீண்ட மெல்லிய விரல்கள் நர்த்தனமாடிக்கொண்டிருந்தன. தடுக்கும் வலுவற்றுச் சமைந்திருந்தான்.

அளவாக வளர்த்து அவள் தீற்றியிருந்த றோஸ் வண்ண நகச்சாயத்துக்கும் அந்த விரல்களின் நிறத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

எந்த விசை உந்தியது என்று தெரியாமலேயே அவனது ஒற்றைக்கரம் நீண்டு சென்று அவளது கையைப் பற்றியது. அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, மெல்லிய நீண்ட விரல்களை நீவிக்கொடுத்தான்.

புறங்கையில் நீர் கோர்த்து இப்போது உடைந்து சின்ன சின்னக் காயங்களாக மாறியிருந்த இடத்தை வருடிக்கொடுத்தான். “இப்ப வலி பரவாயில்லையா பொம்மா?”

அவளின் விழிகள் வியப்பால் விரிந்தன. சில கணங்களுக்கு அவனையே பார்த்துவிட்டு, “ம்ம்… முகம்தான் எரியுது.” என்று அப்போதும் ரகசியமாகத்தான் வந்தது பதில்.

மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஆங்காங்கே நுளம்பு கடித்த தடம் சிவப்பாய்த் தெரிந்தது.

“மாறிடும்! வெயிலுக்க திரியாத என்ன?” பட்டுப் போன்ற மென்மையோடு சொன்னான்.

“ம்ம்!” கவ்வி நின்ற விழிகளின் வீச்சில் இமைகளைத் தாழ்த்தியவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.

என்னவென்று பார்த்த பிரணவனுக்கு மானமே போயிற்று! சேலை அணிந்து, பூச்சூடி, பொட்டு வைத்து, ஜிமிக்கி அணிந்து, உதட்டுக்கு இரத்தக் கலரில் சாயம் பூசி, முக்கியமாக பெண்ணுக்கான அத்தனை எடுப்பான வளைவு நெளிவுகளோடும் முழுமையான பெண்ணாக மாறிக் காட்சி தந்துகொண்டிருந்தான் அவன்.

‘எல்லாம் இவளிட்டத்தான் மாட்டுது!’ பட்டென்று கைப்பேசியை எட்டிப் பறிக்கப் பார்த்தான்.

கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, “பக்கா செக்ஸி பிர…ண…வன் நீங்க!” என்றவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அவனுக்கு முகம் சிவந்து போயிற்று! வெட்கமே இல்லாமல் கதைக்கிறாளே!

“இதெல்லாம் எப்படி பிர…ண…வன்?” ஃபோட்டோவை ஸூம் பண்ணி அவள் காட்டிக்கேட்ட அவனுடைய வளைவு நெளிவு சுளிவுகளைக் கண்டு அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அடி வாங்கப் போறாய்! மரியாதையா தா!” மிரட்ட முடியாமல் சிரித்துத் தொலைத்தன அவனுடைய உதடுகள்.

“ஹாஹா! அந்த ஃபோட்டோ ஆல்பத்தைக் காட்டுங்கோ நான் இதத் தாறன்!” பேரம் பேசினாள் அவள்.

ஏற்கனவே போன மானம் காணாதா?

“கடைசி வந்தாலும் தரமாட்டன்! நீ ஃபோன தா!” அவன் கேட்டும் தராமல் கொண்டு ஓடப்போனவளை எட்டிப் பிடித்துப் பறித்தான் பிரணவன்.

“நீங்க என்ன மாதிரியான ஆள்? இல்ல தெரியாமத்தான் கேக்கிறன், அந்த வயசில அப்பிடி நடக்கிறீங்க, இந்த வயசில இப்பிடி நடக்கிறீங்க?” அவளுக்குச் சிரிப்பு நிற்பதாய் இல்லை.

எப்போதும்போல அவன் சின்ன வெட்கமும் சிரிப்புமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு கேசத்தைக் கோதிக்கொடுத்தான். அவளால் விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியவில்லை.

அவனின் அந்த உடல்மொழி கவிதையாய் மனத்தையும் கண்களையும் கவர்ந்துபோயிற்று.

“அது நடந்ததே எனக்குத் தெரியாது. இது பழைய மாணவர்கள் நடத்தின மாறுவேடப் போட்டிக்கு அக்கா போட்டுவிட்ட வேசம்!” சிரிப்புடன் சொன்னவனின் கைகள் அடுத்ததாய் என்ன செய்யும் என்று உணர்ந்து, அவளின் கையும் ஆவலாய் அவனது கேசத்துக்குள் நுழையப்போனது.

அதிர்ந்து, அவளைப் பார்த்து விழிகளை விரித்து, சட்டென்று பின் பக்கமாகச் சரிந்து தடுத்தான் அவன். “முடியில மட்டும் கை வைக்காத!” என்றபடி இரு கையாளும் கோதிச் சரி செய்தான்.

“பார்றா! நடுச் சாமத்தில் போடுற மேக்கப்ப!” அப்படியே எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் என்றே தெரியாமல் நேரம் போனது. மெல்ல மெல்லச் சுருண்டு அப்படியே அந்த சோபாவிலேயே உறங்கிப்போனாள் ஆர்கலி.

“உனக்கு நித்திரை வந்திட்டுது, போய்ப் படு!” என்று அவன் சொல்லியும் போகவில்லை.

“எனக்கு நித்திரை வருதா இல்லையா எண்டு எனக்குத்தான் தெரியும்!” என்றபடி அதிலேயே தூங்கி வழிந்தாள்.

உதட்டினில் மின்னிய சிரிப்போடு நேரெதிரில் இருந்த சோபாவில் இலகுவாகச் சாய்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரணவன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock