அவனுடைய சோபாவை ஆர்கலி ஆக்கிரமித்துக்கொண்டதில், அவன் அமர்ந்திருந்த சின்ன சோபா பிரணவனின் ஒற்றைக் காலுக்கே போதாமலிருந்து. எதிரில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தது வேறு ஆழ்ந்த உறக்கத்தை வரவிடவில்லை. அதிகாலையிலேயே விழித்துவிட்டான்.
எதிரில் கருவுக்குள் இருக்கும் குழந்தையைப் போலக் கால்களைக் குறுக்கிக்கொண்டு, அவனுடைய பெட்ஷீட்டால் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு, கன்னத்துக்குக் கீழே கைகளைக் கொடுத்தபடி உறக்கத்தில் இருந்தவளின் முகம் கண்டு அவன் உதட்டினில் புன்னகை முளைத்தது.
கூடவே மனத்தில் ஒரு புதுவிதக் கிளர்ச்சியும். முதல் நாளிரவு அவன் பற்றி வருடிய விரல்களின் மென்மையை இப்போதும் உணர்வது போலிருக்க அவளையே பார்த்திருந்தான்.
உற்சாகமே உருவான பெண். தேவையில்லாத அலட்டலும் இல்லை. அதிகப்படியான கூச்சமும் இல்லை. சில நேரங்களில் அவனைத்தான் முகம் சிவக்கச் செய்கிறாள்.
அதிகாலை நேரத்துச் சூரியக் கதிர்கள் அவள் முகத்தை நோக்கிப் பாயத் தொடங்கவும் ஜன்னலின் திரைச்சீலையை இழுத்து மறைத்துவிட்டு, ஓய்விலிருந்த காற்றாடியை மெல்லப் பணியிலமர்த்தினான்.
அப்படியே சத்தமில்லாமல் கைப்பேசியை எட்டி எடுத்தவனுக்கு நேற்றிரவு அவள் செய்த சேட்டைகளை எண்ணிச் சிரிப்பு வந்தது.
துவாரகாவை விடப் பெரியவள். என்றாலும் சரியான சிறுபிள்ளைக் குணம். அவள் தலையில் ஆசையாகத் தட்ட எழுந்த கையை அடக்கி, மூக்கு நுனியைப் பிடித்து ஆட்டினான்.
முகத்தைச் சுளித்துக்கொண்டு அவள் புரண்டு படுக்க, என்ன செய்தோம் என்று உணர்ந்து ஒரு கணம் அதிர்ந்து போனான் பிரணவன்.
அவள் என்று வருகையில் கட்டுப்பாட்டினை இழந்து ஏதோ ஒரு விசையின் உந்துதலின் கீழ் இயங்குகிறோம் என்று உணர்ந்தபடி மெல்ல வெளியே வந்து கதவைச் சாற்றினான். அப்போதுதான் புவனாவும் முகம் கழுவிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.
“தேத்தண்ணி போடவாப்பு?” கேட்டுவிட்டு இரண்டு நிமிடங்களில் அவர் கொண்டுவந்து கொடுத்த தேநீரைப் பருகியபடி கண்களை ஓட்டியவனுக்கு வளர்ந்துவிட்ட புற்கள் கண்ணில் பட்டது.
“அம்மா, ஒருக்கா மண்ணைப் பிரட்டி உழுது விடட்டா? நுளம்பு குறையும். பின்னேரமா வேப்பமிலையைப் புகைய விட்டா சரி.” என்றான், ஆர்கலியின் முகத்தில் தெரிந்த நுளம்புக் கடிகளை எண்ணி.
“ஓமப்பு! ஒருக்காச் செய்துவிடு. ஆர்கலி பாவம், வெளில கூட வரப் பயந்துகொண்டு வீட்டுக்கையே இருக்கிறா.” என்றவர், “இண்டைக்கு ஏதும் வேலையிருக்கா?” என்று விசாரித்தார்.
“இண்டைக்குச் சனிக்கிழமை தானேம்மா. ஆராவது கூப்பிட்டாத்தான் உண்டு.” என்றவன், வீட்டுக்குப் புறப்பட்டான்.
சற்று நேரத்திலேயே மண்ணை உழும் டிராக்டரோடு வந்து முன் பகுதி முழுக்க உழுகிற வரையிலும் எழவேயில்லை ஆர்கலி.
அதன் பிறகுதான் எழுந்து தன் அறைக்குச் சென்று முகத்தைக் கழுவினாள். சத்தம் கேட்டு எட்டிப்பார்க்க, பின்பக்கம் அவன் உழுவது தெரிந்தது.
பார்த்ததுமே அதில் பயணிக்க வேண்டும் போலொரு பேராவல். காரில், பஸ்ஸில், ட்ரெயினில், விமானத்தில் என்று எல்லாவற்றிலும் போயிருக்கிறாள். ஆனால் இதில்?
விடுவிடு என்று படியிறங்கி அவனிடம் ஓடினாள்.
தன்னை நோக்கி ஓடிவந்தவளைக் கண்டு டிராக்டரை அப்படியே நிறுத்திவிட்டு, “இஞ்ச எங்க வாறாய்? உள்ளுக்குப் போ!” என்றான் பிரணவன் அவசரமாக.
“இதுல ஒரு ரவுண்ட் என்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ பிர…ண…வன்.”
தலையைச் சரித்துக்கொண்டு கெஞ்சியவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்பும் கோபமும் ஒன்றாக வந்தன.
“இது என்ன காரா ஒரு ரவுண்ட் போக? அதைவிட இப்பதான் உன்ர முகம் கொஞ்சமாவது நல்லாருக்கு! வெளில நிக்காம ஓடு உள்ளுக்கு!” என்று துரத்தினான்.
புழுதி, மண்ணோடு கலந்து வீசும் காற்று, திரும்பவும் ஏதாவது கடித்து வைக்கப் போகிறது என்கிற அவனின் பயத்தை அவள் சட்டையே செய்யவில்லை.
“பிளீஸ் பிளீஸ் ஒரே ஒரு ரவுண்ட். திரும்பக் கேக்கமாட்டன்!” என்று பரபரப்பாய்த் துள்ளிக்கொண்டு கேட்டவளிடம் அவனுடைய உதடுகள் தானாகவே, “சரி ஏறு!” என்றுவிட்டிருந்தது.
“ஒரே ரவுண்ட்தான்! திரும்பக் கேக்கிறேல்ல!” தன் சறுக்கலை மறைத்துக்கொண்டு அதட்டலாக அவன் சொல்ல முதலே, பட்டென்று ஏறி அவனருகில் அமர்ந்துகொண்டாள் அவள்.
தோளோடு தோள் உரச, “எடுங்க எடுங்க!” என்று பரபரத்தவளைத் தன் படபடப்பைக் காட்டாமல் பார்த்தான்.


